யாழ். மாநகர சபையின் 2022 ஆம் ஆண்டிற்கான பாதீடு மேலதிக மூன்று வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வரவு செலவுத் திட்டம் மாநரக முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனினால் சபையில் இன்றைய தினம் முன்வைக்கப்பட்ட நிலையில், வாத பிரதிவாதங்கள் இடம்பெற்றன. இதன்போது வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 24 வாக்குகளும் எதிராக 21 வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 10 உறுப்பினர்களும், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் 10 உறுப்பினர்களும், சிறிலங்கா சுதந்திர கட்சியின் 2 உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலா ஒரு உறுப்பினர் என 24 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 16 உறுப்பினர்களும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 3 உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக் கட்சியின் 2 உறுப்பினர்கள் என 21 உறுப்பினர்கள் எதிராக வாக்களித்துள்ளனர்.
இதனால் யாழ் மாநகர சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 3 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது. 45 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கும் யாழ்ப்பாண மாநகர சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் 16 உறுப்பினர்களும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் 13 உறுப்பினர்களும், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் 10 உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் 3 உறுப்பினர்களும், சிறீலங்கா சுதந்தி கட்சி சார்பில் 2 உறுப்பினர்களும் மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் ஒரு உறுப்பினரும் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.