யாழ். காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு சென்ற ஒருவர் அங்கேயே மயங்கி உயிரிழந்த சம்பவமானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன்போது நாவாந்துறை – யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த பங்கிராசா சுரேஷ்குமார் (வயது 41) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த நபருக்கும் அயல்வீட்டுக்காரருக்கும் இடையே ஒழுங்கை பிரச்சினை காணப்படுகின்ற நிலையில் குறித்த நபர் யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் அது குறித்து முறைப்பாடு பதிவு செய்தார்.
அந்தவகையில் காவல்துறையினர் கடந்த 18ம் திகதி அவர்களை அழைத்து சமாதானப்படுத்தினர். இரு தரப்பும் சமாதானமாக போவதாக கூறிய நிலையில் குறித்த நபர் கதிரையில் இருந்தவாறே மயக்கமுற்றுள்ளார்.
பின்னர் அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். சடலம் மீது உடற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இது குறித்து யாழ்ப்பாணம் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



