ஈரான் போராட்டக்காரர்களுக்கு மரண தண்டனை – வெடிக்கும் மக்கள் எழுச்சி

266 Views

ஈரானில் சமீபத்தில் நடந்த அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்ட 5 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

“கடவுளுக்கு எதிரான பகைமை” காட்டியதாக அவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டது.

மரண தண்டனை விதிக்கப்பட்ட ஐந்து நபர்களின் அடையாளத்தை நீதித்துறை வெளியிடவில்லை என்றாலும், அவர்களுடைய குற்றச்சாட்டுகள் பற்றிய தகவல்களில், முகமது கோபட்லூ, மனுச்சேர் மெஹ்மான் நவாஸ், மஹான் செதரத் மதனி, முகமது பொரோஹானி, சஹந்த் நூர்முகமது-சாதே ஆகியோராக இருக்கலாம் என்று மனித உரிமை ஆர்வலர்கள் நம்புவதற்கு வழிவகுத்ததாக ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் தெரிவித்துள்ளது.

ஈரானின் ஷரியா அடிப்படையிலான சட்ட அமைப்பின் கீழ், மரண தண்டனை விதிக்கப்படக்கூடிய “கடவுளுக்கு எதிரான பகை” மற்றும் “பூமியில் செய்யும் ஊழல்” போன்றவற்றோடு சேர்த்து பாதுகாப்பு தொடர்பான குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த 21 பேரில் அவர்களும் இருந்துள்ளனர்.

ஈரானின் தலைவர்கள் வெளிநாட்டு ஆதரவு “கலவரங்கள்” என்று சித்தரித்த பாதுகாப்புப் படைகளின் ஒடுக்குமுறையில் குறைந்தது 348 எதிர்ப்பாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்., 15,900 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று ஈரானுக்கு வெளியே செயல்பட்டு வரும் மனித உரிமை ஆர்வலர்கள் செய்தி நிறுவனமான HRANA தெரிவித்துள்ளது.

ஹிஜாப் அணிவது தொடர்பான கடுமையான விதிகளை மீறியதாகக் கூறி அறநெறி காவல்துறையினரால் காவலில் வைக்கப்பட்டிருந்த மாசா அமினி என்ற 22 வயது பெண் மூன்று மாதங்களுக்கு முன்பு காவலில் மரணமடைந்த பின், மதகுரு ஆட்சிக்கு எதிராகப் பெண்கள் தலைமையிலான போராட்டங்கள் ஈரானில் வெடித்து தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply