சர்வதேச நாணய நிதிய அறிக்கையை நாட்டுக்கு தெரியப்படுத்துங்கள் -ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்து

சர்வதேச நாணய நிதிய அறிக்கை தொடர்பிலான நிலைப்பாட்டை நிதி அமைச்சர் நாட்டுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று ஊடகங்களுக்குக் கருத்துரைக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது தொடர்ந்துரைத்த அவர்,

சர்வதேச நாணயம் நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையானது தற்போது பிரசித்தி பெற்றுள்ளது. இது இன்னமும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை. அதற்கான கால அவகாசம் இல்லை. எனினும், அதனை அவர்கள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். ஏனெனில், பாராளுமன்றத்துக்கே நிதி பலம் இருக்கின்றது.

அரசாங்கம் எவ்வாறான ஒப்பந்தங்களுக்கு செல்லப்போகின்றது. எவ்வாறு சர்வதேச நாணய நிதியத்தின் நிதியை பெறப்போகின்றது என்ற விடயங்களை தெளிவுபடுத்த வேண்டும்.

நாட்டில் நிதி நெருக்கடி ஏற்பட்டமைக்கு நிதி அமைச்சர் மட்டும் பொறுப்புக்கூற முடியாது. ஜனாதிபதி தலைமையிலான ஒட்டுமொத்த அரசாங்கமும் பொறுப்புக்கூற வேண்டும்.

நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்படும்போது அதிலிருந்து எவ்வாறு மீள்வது என்பதை அரசாங்கம் தெரியப்படுத்தியிருக்க வேண்டும்.

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான திட்டமிடல், வேலைத்திட்டங்களை எவற்றையும் முன்வைக்காது கவனத்தில்கொள்ளாது செயல்பட்டதன் காரணமாகவே நாட்டில் இவ்வாறானதொரு நிலைமை ஏற்பட்டுள்ளது.

எனவே, நாட்டின் இன்றைய நிலைமைக்கு ஒட்டுமொத்த அரசாங்கமும் பொறுப்புக் கூற வேண்டும் என்றார்.

Tamil News