கொழும்பு வந்தார் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர்-கூட்டமைப்பினருடன் இன்று பேசுவார்

கொழும்பு வந்தார் இந்திய வெளிவிவகார அமைச்சர்

கொழும்பை நேற்றிரவு வந்தடைந்த இந்திய வெளி விவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், இன்று மாலையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சந்தித்துப் பேசுவார் என்று அறிய வருகின்றது.

பிம்ஸ்ரெக் மாநாடு நாளை கொழும்பில் ஆரம்பமாகிறது. இந்த மாநாட்டுக்காகவே இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் மூன்றுநாள் பயணமாக இலங்கை வந்துள்ளார். இந்த நிலையில், தமிழ்த் தேசியக் கூட் டமைப்பினரை நாளை மாலை 4.30 மணிக்கு சந்தித்துப் பேசுவார் என்று கூட் டமைப்பின் பேச்சாளரான பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

இதேவேளை இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியில் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணப் பண்பாட்டு மையத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கரும் இணைந்து திறந்துவைப்பர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று திங்கட்கிழமை திறப்பு நிகழ்வு நடைபெறும் என்று ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். மெய் நிகர் நிகழ்வாக இடம்பெறும் இதற்கான ஒத்திகை நிகழ்வுகள் இன்று இடம்பெற்றன.

யாழ்ப்பாண கலாசார நிலையம் என்று முன்னர் பெயர் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், யாழ்ப்பாணத்தில் உள்ள மொழி ஆர்வலர்கள் யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் ஊடாக யாழ்ப்பாணப் பண்பாட்டு மையம் என்ற பெயரை பயன்படுத்துமாறு முன்வைத்த கோரிக்கைக்கு அமைய யாழ்ப்பாணப் பண்பாட்டு மையம் என்ற பெயர் நடைமுறைக்கு வந்துள்ளதாகத் தெரிய வருகின்றது.

Tamil News