இன்று இந்தியாவின் குடியரசுத் தினம்-எகிப்து அதிபர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்

இந்தியாவின் 74வது குடியரசுத் தினத்தையொட்டி டெல்லி கர்தவ்ய(கடமை) பாதையில்  குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மூ தேசிய கொடியை ஏற்றினார்.

ஒவ்வொரு ஆண்டும் குடியரசுத் தினத்தையொட்டி வெளிநாட்டு தலைவர் ஒருவர் சிறப்பு விருந்தினராக அழைக்கப்படுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா எல்-சிசி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.  பிரதமர் நரேந்திர மோடி,  மத்திய அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான மக்கள் இதில் பங்கேற்றனர்.

காலை 10 மணியளவில் போர் தியாகிகள் நினைவுச் சின்னத்திற்கு வருகைபுரிந்த பிரதமர் நரேந்திர மோடி, மறைந்த வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதை தொடர்ந்து குடியரசுத் தின நிகழ்ச்சி நடைபெறும் கர்தவ்ய பாதைக்கு அவர் வந்தார். காலை 10.30 மணியளவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தேசிய கொடியை ஏற்றினார். அதைத் தொடர்ந்து பல நிகழ்வுகள் நடைபெற்றது.

குடியரசுத் தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “குடியரசு தின வாழ்த்துகள். சுதந்திர தினத்தின் அமிர்த மஹோத்சவின் போது நாம் கொண்டாடுவதால் இம்முறை குடியரசுத் தின விழா சிறப்பு வாய்ந்தது. நாட்டின் மகத்தான சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவுகளை நனவாக்க நாம் ஒற்றுமையாக முன்னேற விரும்புகிறோம். சக இந்தியர்கள் அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்!” என குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல், பல்வேறு நாட்டு தலைவர்களும் இந்திய குடியரசுத் தினத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.