பிள்ளையான், டக்ளஸ் போன்ற புல்லுரிவிகளை வைத்து தமிழர் மனங்களை வெல்ல முடியாது-சிவஞானம் சிறீதரன்

பேரினவாத தேசியக் கட்சிகள் தமிழர் மனங்களை எந்த காலத்திலும் வெல்ல முடியாது என்பதால் பிள்ளையான், டக்ளஸ் போன்ற புல்லுரிவிகளை வைத்து தமிழர் மனங்களை வெல்ல நினைப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி – இராமநாதபுரம் வட்டாரத்தில் நேற்று (25.01.2023) நடைபெற்ற உள்ளூர் அதிகாரசபைத் தேர்தல் தொடர்பிலான கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து உரையாற்றுகையில், சிங்கள தேசியக் கட்சியான பொதுஜன பெரமுன கட்சி, வடக்கு கிழக்கில் தேர்தல் கேட்கின்றது. அதாவது டக்ளஸ் தேவானந்தா ஊடாக வீணை சின்னத்தில் வட மாகாணத்திலும் பிள்ளையானின் கட்சியின் கப்பல் சின்னத்தில் கிழக்கு மாகாணத்திலும் தாங்கள் போட்டியிடுவதாக பசில் ராஜபக்ச தெரிவித்திருக்கின்றார்.

சிங்கள பேரினவாதிகளின் அடிவருடிகளாக இருக்கும் பிள்ளையானும் டக்ளஸ் தேவானந்தாவும் தங்களது சுய கௌரவத்தை இழந்த நிலையிலும் தங்களை திருத்தி கொள்ள இன்னும் தயாரில்லை. மீளவும் இந்த அரசாங்கத்திற்கு கைகழுவுகின்ற அல்லது சேவகம் செய்கின்ற எண்ணங்களில் இருந்து மாற மாட்டார்கள்.

தென்னிலங்கையில் உள்ள தேசிய கட்சிகள் நேரடியாக தேர்தலில் போட்டியிட்டு தமிழர்களிடம் வெல்ல முடியாது என்பதை விளங்கிக் கொண்டு இவர்களை இப்போது முகவர்களாக அனுப்பி இருக்கின்றன.

இந்த கட்சிக்கு முகவர்களாக செயல்படுகின்ற புல்லுருவிகள் தான் இந்தப் பிள்ளையான், டக்லஸ் போன்றவர்கள் இதில் நாங்கள் கவனமாக இருக்க வேண்டும். அத்துடன் டக்ளஸ், பிள்ளையான் தேர்தலில் போட்டியிடுகின்றனர் என்று இருந்து விட முடியாது.

இந்த அரசாங்கத்தில் இருக்கும் பசில் ராஜபக்ச சொல்கின்றார் தங்களுடைய வேட்பாளர்கள் மேற்படி இருவரினதும் கட்சிகள் ஊடாக தேர்தலில் நிற்கின்றனர் என்று.

அதுமட்டுமல்ல, ஐக்கிய தேசிய கட்சி சிறிலங்கா சுதந்திர கட்சி என தெற்கில் உள்ள தேசியக் கட்சிகள் தமிழர் பிரதேசங்களில் போட்டியிடுகின்றன. நாங்கள் தென்பகுதிக்கு சென்று தேர்தல் கேட்கவில்லை.

அவர்கள் தமிழர்களை சிதைக்க வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் தமிழர்பகுதிகளில் போட்டியிட்டு இவ்வாறு வாக்குகளை சிதறடிக்கின்றனர்.

தென்னிலங்கை தேசிய கட்சிகளை புறக்கணிக்க வேண்டியதும் சரியான பதிலை கொடுக்க வேண்டியதும் எங்களது கடமையாகும். நாங்கள் ஒற்றுமையாக இருந்து நாங்கள் எங்களது பலத்தை இந்த தேர்தல் மூலம் நிரூபிக்கின்ற போதுதான் சிறிது சிறிதாக இருக்கின்ற உதிரிகள் இல்லாமல் போய்விடும்.

எல்லோரும் நினைப்பது போல, தலைவர்களாக வர முடியாது, சரியான தலைவர்களை காலமும் மக்களும் தான் தீர்மானிப்பார்கள், தமிழ் தேசியத்தை நேசிக்கும் எல்லா கட்சிகளும் ஓரணியில் சேர்ந்தே தான் ஆக வேண்டும்.

அது ஒரு வரலாற்றுக் கடமையாகும், இந்த குட்டி தேர்தலில் நாங்கள் துண்டு துண்டாகி விட்டோம் என்ற கருத்துக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.