அதிசக்தி வாய்ந்த அரசியற் கட்சியை எதிர்த்துப் போராடிய இந்திய விவசாயிகள் – தமிழில்: ஜெயந்திரன்

646 Views

பாஜகவை எதிர்த்துப் போராடிய இந்திய விவசாயிகள்

தமிழில்: ஜெயந்திரன்

அதிசக்தி வாய்ந்த அரசியற் கட்சியான பாஜகவை எதிர்த்துப் போராடிய இந்திய விவசாயிகள்: தலைமை அமைச்சர் நரேந்திர மோடியும், ஆட்சியிலுள்ள பாரதீய ஜனதாக்கட்சியுமே கடந்த ஏழு வருடங்களாக இந்திய அரசியலை ஆக்கிரமித்து வந்திருக்கின்றனர். இக்காலப் பகுதியில் நாட்டில் சனநாயகம் மிகப் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்திருக்கிறது. மக்களின் உரிமைகளும், சுதந்திரங்களும் பறிக்கப்பட்டு, நாடு பூராகவும் முஸ்லிம் மக்கள் ஓரங்கட்டப்பட்டிருக்கின்றனர்.

பாஜகவை எதிர்த்துப் போராடிய இந்திய விவசாயிகள்ஆனால் இந்திய நாட்டைப் பொறுத்தவரையில், சனநாயகம் மேலும் அழிவுப் பாதையை நோக்கிச் செல்லவிடாது தடுத்து, தாம் மேற்கொண்டு வரும் போராட்டத்தின் மூலம் விவசாயிகள் நாட்டின் சனநாயகத்தைப் பாதுகாத்து வருகிறார்கள். ஒரு தாராளச் சனநாயகத்தின் விழுமியங்களையும், நடைமுறைகளையும் எப்படிப் பாதுகாக்கலாம் என்பதைச் சமூக நீதிக்காகப் போராடும் இந்த இயக்கங்கள் உலகத்துக்கு நிரூபித்து வருகின்றன.

எந்தச் சட்டங்களுக்கு எதிராக இந்திய நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் ஒரு வருடத்துக்கு மேலாகப் போராடி வந்தார்களோ, அந்த மூன்று சட்டங்களையும் தான் மீளப்பெறுவதாக தனது நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கிய நரேந்திர மோடி, கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தார். விவசாயப் பொருட்களின் விலைமதிப்பு, விற்பனை, களஞ்சியப்படுத்தல் போன்ற விடயங்கள் தொடர்பான இந்த மூன்று விவசாயச் சீர்திருத்தச் சட்டங்களும், 2020ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் இந்திய நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொண்டன. இந்திய நாட்டின் விவசாயப் பொருண்மியத்தை மீள ஒழுங்குபடுத்தி, அவற்றைத் தனியார்மயப்படுத்தும் நோக்குடன் இச்சட்டங்கள் இயற்றப்பட்டன.  இந்தியாவின் பாரம்பரிய மொத்த விற்பனைச் சந்தைகளின் பிடியிலிருந்து விவசாயிகளை மீட்டு, தமது உற்பத்திப் பொருட்களை நேரடியாகவே தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய குறிப்பட்ட சீர்திருத்தங்கள் வழிவகுக்கும் என்று பாரதிய ஜனதாக் கட்சி நியாயம் கற்பித்தது.

தமது பொருட்களுக்கான ஆகக்குறைந்த ஆதரவு விலைக்கு உத்தரவாதத்தைத் தருகின்ற மொத்த விற்பனைக்குப் பொறுப்பான இந்த ‘மண்டி’ (Mandi) நடைமுறையை இச்சீர்திருத்தங்கள் முற்றாகச் சீர்குலைத்து, தனியார் வியாபாரிகள் தமது பொருட்களுக்கு குறைந்த விலைகளை நிர்ணயிக்கும் ஆபத்து இருக்கிறது என்பதை இந்த விவசாயிகள் கண்டுணர்ந்தார்கள். இரண்டு ஹெக்டேயர்களுக்கும் குறைவான நிலத்தைக் கொண்ட 85 வீதமான சிறு விவசாயிகளுக்கு இந்த மாற்றங்கள் பாரிய சேதங்களை விளைவிக்கக்கூடியன. ஆகவே இந்தியாவின் மிகச் சக்திவாய்ந்த அரசியற்கட்சியை விவசாயிகள் எப்படி எதிர்கொண்டார்கள் என்பதை இக்கட்டுரை ஆய்வு செய்கிறது.

இந்த எதிர்ப்புப் போராட்டம் 2020ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. ஏறத்தாழ 250 மில்லியன் மக்கள் பங்குகொண்ட, வரலாறு காணாத வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்பட்டதுடன், வடமாநிலங்களான பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேஷ், மத்திய பிரதேஷ், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் ஒரு அமைதியான ஊர்வலத்தை தலைநகர் டெல்லியை நோக்கி முன்னெடுத்தனர்.

பாஜகவை எதிர்த்துப் போராடிய இந்திய விவசாயிகள்பொல்லுகள், கண்ணீர்ப்புகை, தண்ணீர்ப் பீரங்கிகள் போன்றவை சகிதம் இராணுவ மயமாக்கப்பட்டிருந்த ஒரு காவல்துறையை இந்தப் போராட்டக்காரர்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது மட்டுமன்றி, நகரத்துக்குள் அவர்கள் நுழைய முடியாதபடி அமைக்கப்பட்ட பதுங்கு குழிகள், முட்கம்பி வேலிகள், தடைகள் என்பவற்றையும் அவர்கள் கடந்து செல்ல வேண்டியிருந்தது. இரண்டு நாட்களின் பின்னர், திக்கிரி (Tikri), சிங்கு (Singhu),  காசிப்பூர் (Ghazipur) போன்ற நகரங்கள் தலைநகர் டெல்கியுடன் எல்லையைப் பகிர்ந்த இடங்களில் இப்போராட்டக்காரர்கள் எதிர்ப்பு முகாம்களை நிறுவினார்கள். ஏறத்தாழ மூன்று இலட்சம் எண்ணிக்கையைக் கொண்ட மக்கள் ஒரு அறவழிப் போராட்டத்தை நடத்தினார்கள். தொடர்வண்டிப் பாதைகளைத் தடைசெய்தல், அரச கட்டடங்களை மூடுதல், வரி அறவிடும் தெருக்களைத் திறக்க வைத்தல் போன்ற வன்முறையற்ற செயற்பாடுகளை அவர்கள் முன்னெடுத்தார்கள்.

தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருந்த இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் பங்கு கொண்டவர்களைப் ‘பயங்கரவாதிகளாக’ சித்தரித்து, பிரிவினைவாதிகளாக அவர்களை நடத்திய பாரதிய ஜனதாக்கட்சி அரசு, எதிர்ப்பு முகாம்களைச் சுற்றி பாதுகாப்பு அரண்களை எழுப்பியதுடன், அந்த முகாம்களுக்கான நீர் விநியோகம், மின் விநியோகம் போன்றவற்றையும் துண்டித்தது. ஆர்ப்பாட்டத்தில் பங்குகொண்ட நூற்றுக்கணக்கான விவசாயிகளை அரசு கைதுசெய்து, தடுத்து வைத்தது. இந்த ஆர்ப்பாட்டங்கள் தொடர்பான செய்திகளை வழங்கிய ஊடகவியலாளர் மீது தேசத்துரோகக் குற்றம் சுமத்தப்பட்டது. டெல்கியிலும் ஹரியானாவிலும் இணையச் சேவைகள் மூடப்பட்டு, செய்தி நிறுவனங்களின் கணக்குகளை மூடும்படி ருவிற்றர் நிறுவனம் பணிக்கப்பட்டது.

பாஜகவை எதிர்த்துப் போராடிய இந்திய விவசாயிகள்அரசு எடுத்த இந்த நடவடிக்கைகளுக்குப் பதிலாக ‘அனைவரையும் உள்வாங்கும் சனநாயக அணுகுமுறையை’ விவசாயிகள் எதிர்ப்பு முகாம்களில் நடைமுறைப்படுத்தினர். இசை, கலை என்பவற்றுடன் அத்தியாவசியப் பொதுச்சேவைகளான பாடசாலைகள், மருத்துவ முகாம்கள், போன்றவற்றை அனைத்து மக்களும் பெற்றுக்கொள்ள வழிவகைகள் செய்யப்பட்டன.

பொதுச் சமையற்கூடங்கள் மூலம் எதிர்ப்பு இயக்கத்துடன் எந்தவொரு தொடர்பும் இல்லாத குடிபெயர்ந்த தொழிலாளர்கள், வறியவர்கள் உட்பட ஆயிரக்கணக்கான மக்களுக்கு நாளாந்தம் உணவு வழங்கப்பட்டது. இந்த முகாம்களுக்குள்ளே ஒன்றாக வாழ்ந்து, உணவு அருந்தி, ஆர்ப்பாட்டங்களுக்குத் தேவையான ஒழுங்கமைப்புகளை மேற்கொண்டதன் மூலம், வெவ்வேறு சாதி, பாலினம், சமயம், வயது, மொழி வேறுபாடுகளைக் கொண்ட மக்களிடையே ஒன்றுபட்டு இயங்கும் தன்மை ஏற்படுத்தப்பட்டது. சுகாதாரப் பொருட்களை விநியோகித்தல், பொது அமர்வுகளில் உரையாற்றுபவர்கள் போன்றவற்றைத் தீர்மானிப்பது போன்ற அனைத்துத் தீர்மானங்களும் நாளாந்த சந்திப்புகளில் கூட்டாகவே மேற்கொள்ளப்பட்டன.

சனநாயகத் தன்மை வாய்ந்த சமூகங்களைக் கட்டியெழுப்பவும், அடக்குமுறையைக் கைக்கொள்ளும் ஒரு அரசை எதிர்கொள்ளவும், சீக்கிய கொள்கைகளிலும், நடைமுறைகளிலும் உள்ள விடயங்களையே ஆர்ப்பாட்டக்காரர்கள் பின்பற்றினர். இந்த இயக்கத்தில் சமத்துவத்துக்கு முன்னுரிமை வழங்கப்பட்டதுடன் அனைவரையும் உள்வாங்கும் தன்மைக்கும், தொழிலாளர்களின் வாழ்வாதாரங்களைப் பேணுகின்ற தன்மைக்கும் முக்கிய இடம் வழங்கப்பட்டது.

எதிர்த்துப் போராடிய இந்திய விவசாயிகள்6 அதிசக்தி வாய்ந்த அரசியற் கட்சியை எதிர்த்துப் போராடிய இந்திய விவசாயிகள் - தமிழில்: ஜெயந்திரன்பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களின் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் ஒருமித்து இந்த இயக்கத்துக்கு தங்களது ஆதரவை வழங்கியிருந்தார்கள். முகாம்களில் ஆர்ப்பாட்டங்களில் பங்குபற்றும் மக்கள் குழுவை முடிவுசெய்யும் பொறுப்பையும், மேற்படி இயக்கத்துக்கான விநியோகங்களை மேற்கொள்ளும் பொறுப்பையும் கிராமங்களிலுள்ள சீக்கிய ஆலயங்கள் ஏற்றுக்கொண்டதோடு, அறிவூட்டும் இடமாகவும் அவை பணியாற்றின. எதிர்ப்பியக்கத்தை நடத்திக்கொண்டு, தமது விவசாயப் பணிகளான விதைத்தலையும், அறுவடை செய்தலையும் கிராம மக்கள் சமகாலத்தில் மேற்கொண்டு வந்தனர். தமது விவசாய வேலைகளையும், ஆர்ப்பாட்டப் பணிகளையும் மாறி மாறி அவர்கள் முன்னெடுத்துக் கொண்டிருந்தனர்.

இந்த எதிர்ப்பு முகாம்கள் எதிர்காலத்தில் எப்படி இயங்கப் போகின்றன என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் அனைத்து விவசாயிகளையும் வீடு திரும்புமாறு மோடி கேட்டிருக்கிறார். இந்த மூன்று விவசாயச் சட்டங்களும் முறையாக மீளப்பெறப்பட்டு, எல்லா விவசாயப் பொருட்களுக்கும் ஆகக்குறைந்த ஆதரவு விலைகள் நிர்ணயிக்கப்படும் வரை, தாம் திரும்பிச் செல்லப் போவதில்லை என்று விவசாயிகள் திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டனர். அடுத்து எப்படிப்பட்ட நடவடிக்கை எடுப்பது என்பது தொடர்பாக விவசாயத் தொழிற்சங்கங்கள் ஆராய்ந்து கொண்டிருக்கின்றன.

இந்திய அரசு அமுலுக்குக் கொண்டு வந்த சர்ச்சைக்குரிய குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக டெல்கியின் ஷாஹீன் பாக் (Shaheen Bagh) என்ற இடத்தில் 2019 இலிருந்து 2020 வரை முன்னெடுக்கப்பட்ட பல மாதங்களாகத் தொடர்ந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தைப் போல, இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டமும் தமக்கிடையே சனநாயக ரீதியிலான நடைமுறைகளைக் கைக்கொண்டன. இந்திய அரசியலமைப்பிலுள்ள முற்போக்கான விடயங்களை நடைமுறைப்படுத்த இந்த நடைமுறைகள் துணையாக இருந்திருக்கின்றன.

சனநாயகத்தின் வெவ்வேறு சிந்தனைக் கோட்பாடுகளைப் பரீட்சித்துப் பார்ப்பதற்கு, அனைவரையும் உள்வாங்கும் இவ்வாறான நடைமுறைகளை குடிமக்கள் எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை இந்த அணுகுமுறை எடுத்துக் காட்டுகின்றது.

நன்றி: த வோஷிங்டன் போஸ்ட்

2 COMMENTS

  1. […] அதிசக்தி வாய்ந்த அரசியற் கட்சியான பாஜகவை எதிர்த்துப் போராடிய இந்திய விவசாயிகள்: தலைமை அமைச்சர் நரேந்திர மோடியும், ஆட்சியிலுள்ள பாரதீய ஜனதாக்கட்சியுமே கடந்த ஏழு வருடங்களாக  […]

Leave a Reply