அமெரிக்காவுடனான ஒப்பந்தம்! அரசுக்குள் வலுவடையும் எதிர்ப்பு: இலங்கை கைச்சாத்திட்ட இரண்டு ஒப்பந்தங்கள் கடந்த சில நாட்களாக பேசுபொருளாகி இருக்கின்றன. ஒன்று – கெரவலப்பிட்ட மின் நிலையத்தை அமெரிக்காவுக்குக் கொடுப்பதற்கான உடன்படிக்கை. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அமெரிக்கா புறப்படுவதற்கு முன்னர் அவசர அவசரமாக இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. இரண்டு கொழும்பு துறைமுக மேற்கு முனையத்தை இந்தியாவுக்குக் கொடுப்பதற்கான உடன்படிக்கை, கடந்த வியாழக்கிழமை இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நெருக்கத்தை சமப்படுத்துவதற்கான ஒரு முயற்சியாகத்தான் இந்த உடன்படிக்கைகள் கைச்சாத்திடப் பட்டுள்ளன.
பங்காளிக் கட்சிகளின் எதிர்ப்புக்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ச சில தினங்களுக்கு முன்னர் அதிரடியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். “பங்காளிக் கட்சிகள் எவையும் விம்பினால் அரசிலிருந்து வெளியேறலாம்.” என்பதுதான் அவரது அறிவிப்பு. பங்காளிகளைப் பொறுத்தவரையில் அரசுக்குள் இருந்துகொண்டு குடைசல் கொடுத்துக் கொண்டிருப்பார்களே தவிர, அதிலிருந்து வெளியேறுவதற்கான துணிச்சல் அவர்களுக்கு இல்லை. தனியாகப் போனால் ஒரு ஆசனம் கூட கிடைக்காது என்பது அவர்களுக்குத் தெரியும். அதனால்தான், “கதவு திறந்திருக்கு போறதென்றால் போங்கோ” என்ற பாணியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச அவர்களுக்கு ஒரு அறிவித்தலைக் கொடுத்திருக்கின்றார்.
கெரவலப்பிட்டி விவகாரத்தில் எதிர்க்கட்சிகளும், அரசின் பங்காளிகளும் கிளர்ந்தெழுந்திருப்பதற்கு பிரதானமாக மூன்று காரணங்கள் சொல்லப்படுகின்றன. இந்த உடன்படிக்கை அமைச்சரவையின் அங்கீகாரத்தைக் கூடப் பெற்றுக்கொள்ளாமல், இரகசியமாகக் கைச்சாத்திடப்பட்டதாக அவர்கள் தெரிவிக்கும் குற்றச்சாட்டு முதலாவது. இரண்டாவது, 40 வீதமான பங்குகளை அமெரிக்காவுக்கு வழங்கியமை பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்ற குற்றச்சாட்டு. இந்த இரண்டையும்விட அமைச்சர் பஸில் ராஜபக்ச இதில் நேரடியாகச் சம்பந்தப்பட்டுள்ளதாகப் பங்காளிக் கட்சிகள் கருதுகின்றன. பஸிலின் வருகையை ஆரம்பத்திலிருந்தே விரும்பாத இந்தக் கட்சிகள், இந்த விவகாரத்த தமக்குக் கிடைத்த ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்ள முற்படுகின்றன.
கெரவலப்பிட்டிய விவகாரம் சிக்கலானதையடுத்து அவசர கூட்டம் ஒன்றுக்கு இந்தக் கட்சிகள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவை அழைத்தன. கடந்த வாரம் அலரிமாளிகையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பிரதமர் மௌனமாக இருக்க, குற்றச்சாட்டுக்கள் அனைத்துக்கும் பஸில் ராஜபக்ச தான் பதிலளித்துக் கொண்டிருந்தார். இறுதியில் இணக்கம் எதுவும் இன்றி குழப்பமான சூழ்நிலையில் கூட்டம் முடிவுக்கு வந்தது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கொழும்பு திரும்பிய பின்னர் மீண்டும் சந்திப்பு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்துக்கூறிய அமைச்சர் உதய கம்மன்பில, “தற்போது செய்யப்பட்டுள்ள உடன்படிக்கையின்படி அமெரிக்காவின் நியூபோட்ரஸ் என்ற நிறுவனத்திற்கு 2,023 இலிருந்து 5 ஆண்டுகளுக்கு இலங்கையிலிருந்து எரிவாயு உற்பத்தி செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 2028 இல்தான் அவர்களுடைய ஒப்பந்தம் முடிவுக்கு வரும். இப்போது நாம் கேள்வி மனுக்கள் மூலமாக ஏலம் அறிவித்தல் விடுத்தால், அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் எரிவாயுவைப் பெற்றுக்கொள்ள முடியும். அதாவது இந்தத் திட்டங்களை 2022 இல் ஆரம்பித்தாலும் கூட, 2025 இல் எமக்கு இலங்கையில் எரிவாயுவை உற்பத்தி செய்துகொள்ள முடியும்.
அவ்வாறு இருக்கையில், எமது மின் உற்பத்தி நிலையங்களுக்கான எரிவாயுவை 2028 வரையில் அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்குக் கொடுப்பதன் மூலமாக எமக்கான எரிவாயு உற்பத்தியைப் பெற்றுக்கொள்ள வெளிநாட்டு முதலீட்டாளர்களை வரவழைக்கும் நடவடிக்கைகளுக்கு பாதகமாக அமையும் என்பதே எனது நிலைப்பாடு” எனத் தெரிவித்தார்.
எரிவாயு குறித்த அறிவும், விடயப்பரப்பும் தெரிந்த பலர் தமது அமைச்சுக்குள் இருக்கின்ற போதிலும், அவர்களுடைய கருத்துக்கள் புறக்கணக்கப் பட்டிருப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டுகின்றார். நிதி அமைச்சின் மூலமாக முன்னெடுக்கப்பட்ட இந்த திட்டம் குறித்து போதிய தகவல்கள் தம்மிடம் இல்லை எனவும், நாட்டுக்குப் பாதகமான இந்தத் திட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் கூறியிருக்கின்றார்.
அரசுக்குள் இருந்து கொண்டே இதனை எதிர்க்கும் பங்காளிக் கட்சிகள் அனைத்தும் சிங்களத் தேசியவாதக் கட்சிகள், மற்றும் இடதுசாரிக் கட்சிகள் என்பது கவனிக்கத்தக்கது. அதாவது உதய கம்மன்பில, விமல் வீரவன்ச, தினேஷ் குணவர்த்தன, வாசுதேச நாணக்கார, திஸ்ஸ விதாரண போன்றவர்களே இதனை எதிர்க்கின்றார்கள். அதேவேளையில், அரசுக்கு வெளியே ஐக்கிய மக்கள் சக்தியும், ஜே.வி.பி.யும் இதனை எதிர்க்கின்றன. சர்வதேச அரங்குகளில் உருவாகியிருக்கும் அழுத்தங்களை எதிர்கொள்வதற்கு மட்டுமன்றி, தற்போது எதிர்கொண்டுள்ள டொலர் பிரச்சினைளைச் சமாளிப்பதற்கும் கெரவலப்பிட்டியவை அமெரிக்காவுக்குக் கொடுப்பது தவிக்க்க முடியாதது. அதனால், எதிர்ப்புக்களை ராஜபக்சக்கள் சமாளித்து விடுவார்கள் என்று கூறுகின்றார்கள் கொழும்பு அரசியல் விமர்சகர்கள்.
- பெருந்தொற்றாக மாறியுள்ள நில ஆக்கிரமிப்பு; எமது இருப்பு, அடையாளத்தை இல்லாமல் செய்யும் ஆபத்து! – சி.வி.விக்னேஸ்வரன்
- AUKUS கூட்டமைப்பு போருக்கான வியூகம் அல்ல – வேல் தர்மா
- போரிலே பிள்ளைகளை இழந்த பெற்றோர்கள் பராமரிக்க எவரும் இன்றி கஸ்டப்படுகிறார்கள் – கலாநிதி ஆறு திருமுகன்