பசுபிக் பிராந்தியத்தில் உள்ள நாடுகளை சீனாவிடம் இருந்து பாதுகாப்போம் – அமெரிக்கா

பிலிப்பைன்ஸ் மீது சீனா தாக்குதல் மேற்கொண்டால் அமெரிக்கா கடுமையான பதிலடியை வழங்கும் என அமெரிக்காவின் வெளிவிவகாரச் செயலாளர் அந்தோனி பிளிங்டன் தெரிவித்துள்ளார்.

“தென் சீனக்கடல் பகுதியை தனது என உரிமை கொண்டாடுவதை சீனா நிறுத்த வேண்டும். 2016 இல் ஏற்படுத்தப்பட்ட தீர்ப்பாய உடன்பாட்டுக்கு அமைவாக பிலிப்பைன்ஸ் நாட்டுக்கும் அது சொந்தமானது. பிலிப்பைன்ஸ் மீது சீனா ஆயுதப்போரை முன்னெடுத்தால் அமெரிக்கா பதிலடி கொடுக்கும்“ என பிளிங்டன்  தெரிவித்துள்ளதாக  மனிலாவில் உள்ள அமெரிக்கத் தூதரகம்  குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே, பிராந்திய நாடுகளிடம் மோதல்களை ஏற்படுத்த அமெரிக்கா முனைவதாகவும், தென்சீனக் கடல் உடன்பாடு தொடர்பில் அமெரிக்கா கூறுவது சட்டவிரோதமானது எனவும் சீனாவின் வெளிவிவகார அமைச்சக பேச்சாளர் வங் வென்பின் தெரிவித்துள்ளார்.

2016 ஏற்படுத்தப்பட்ட தீர்ப்பாயத்தில் சீனா பங்குபற்றவில்லை, சீனாவின் இறைமையை அமெரிக்கா மதிக்க வேண்டும். தென்சீனக் கடலை பயன்படுத்தி அண்டைய நாடுகளிடம் பதற்றத்தை ஏற்படுத்துவதை அமெரிக்கா நிறுத்த வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தாய்வான், வியட்னாம், புறூனை மற்றும் மலேசியா போன்ற நாடுகளும் தென்சீனக் கடலுக்கு உரிமை கொண்டாடி வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.