கோவிட் கட்டுப்பாடுகளை மீண்டும்  நடைமுறைப்படுத்துமாறு  WHO கோரிக்கை

புதிதாக பிறள்வடைந்த கோவிட்-19 வைரஸ் உலகில்   மிகவேகமாக பரவிவருவதால் மீண்டும் முகக்கவசம் அணிதல் சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், கிருமிகொல்லிகளை உபயோகித்தல் போன்ற நடைமுறைகளை பின்பற்றுமாறு உலக சுகாதார நிறுவனத்தின்(WHO) தலைவர் கலாநிதி ரெட்ரேஸ் கப்ரியஸ் கடந்த  12ம்திகதி   வலியுறுத்தியுள்ளார்.

இந்த மாதத்தின் முதல் வாரத்தில் உலகமெங்கும் 57 இலட்சம் மக்கள் கோவிட்-19   தொற்றுதலுக்கு இலக்காகியுள்ளனர். இது அதற்கு முன்னைய வாரத்தை விட 6 விகிதம் அதிகமாகும்.   இந்த மாதத்தின் முதல் வாரத்தில் உலகமெங்கும் 9,800 பேர் உயிரிழந்துள்ளனர். இது கடந்த வருடத்தின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது ஐந்து மடங்கு குறைவானது.

கோவிட் நோய் தடுப்பு கட்டுப்பாடுகளை பல நாடுகள் இந்த வருடத்தின் முற்பகுதியில் முற்றாக தளர்த்தியுள்ளன. எனினும் சீனாவும், தென் கொரியாவும் முகக்கவசம் அணிவதை தளர்த்தவில்லை. தற்போது கோவிட்-19 நோய் மிக விரைவாக பரவுவதால்  கோவிட் நோய் தடுப்பு கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்குமாறு உலக நாடுகள் தமது மக்களுக்கு அறிவுறுத்த வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.