‘மேதகு’ படத்தின் இரண்டாம் பாக முன்னோட்டத்தை வெளியிடுவதில் அளவற்ற பெருமை – கவிஞர் தாமரை

'மேதகு' படத்தின் இரண்டாம் பாக முன்னோட்டத்தை

தமிழீழத் தேசியத்தலைவரின் பிறந்தநாளன்று, தமிழீழ விடுதலைக்கான போராட்டத்தைக் காட்சிப்படுத்தும் ‘மேதகு’ படத்தின் இரண்டாம் பாக முன்னோட்டத்தை வெளியிடுவதில் அளவற்ற பெருமை கொள்கிறேன் என கவிஞர் தாமரை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தமிழீழ விடுதலைப் போராட்டமே படத்தின் கருப்பொருள். எனினும் மேதகு என்று தலைவரின் பெயரில் தவணைகளாக வெளிவருவதன் காரணம் என்ன ??

தன் நாட்டின் விடுதலைப் போராட்டம் வேறு, தன் வாழ்க்கை வேறு என்று வாழ்ந்தவனல்லன் அவன். இரண்டுமே ஒன்றுதான் என வாழ்ந்தவன். இரண்டில் எந்த ஒன்றைச் சொல்லப் புகுந்தாலும் அது மற்றொன்றாகி நிற்கும் என்பதே உள்ளடக்கம் !

நான் கண்ட ஈடுயிணையற்ற பெருந்தலைவன், இவன் வாழ்காலத்தில் நானும் வாழ்ந்தேன் என்னும் பெருமை கொண்டேன். உலகமெங்கும் பரவி வாழும் தமிழீழ மக்களின் உள்ளத்தில் ஓயாது எரியும் விடுதலைப் பெருந்தீயை ஒரு சுடராகப் பற்ற வைத்துத் தொடங்கி, தானே அந்த நெருப்பாகி, பின்னம் தன்னையே அந்த நெருப்பின் அவிப்பாகமாக அர்ப்பணித்துக் கொண்டவன். அதனால்தான் அந்தத் தீ இன்னும் கொழுந்து விட்டெரிந்து கொண்டிருக்கிறது.

உலகின் எந்த விடுதலைப் போராட்டத்திற்கும் குறைந்ததல்ல ஈழத்தமிழரின் இந்தப் போராட்டம்!. அண்ணன்பின் அணிவகுத்து நின்ற ஆயிரமாயிரம் போராளிகளின் வீரக்கதை, சதைகள் அல்ல விதைகள்  என உலகுக்கு எடுத்துக்காட்டும் தீர வரலாறு…

இளைய தலைமுறையினருக்கு தங்கள் வரலாறு சொல்லப்பட வேண்டும் எனும் நோக்கில் முறையாகப் பதிவு செய்யத் தொடங்கியிருக்கிறார்கள். ஈழத்தமிழருக்கு மட்டுமல்ல, தொப்புள்கொடித் தமிழர்க்குமானதுதான் !

வாழிய தமிழர் ! வாழ்க வெல்க தமிழினம் !”  என்றார்.

ilakku Weekly Epaper 157 November 21 2021 Ad 1 'மேதகு' படத்தின் இரண்டாம் பாக முன்னோட்டத்தை வெளியிடுவதில் அளவற்ற பெருமை - கவிஞர் தாமரை