பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாக IMF எச்சரிக்கை

மத்திய கிழக்கில் தொடரும் மோதல்கள் காரணமாக உலகளாவிய பொருளாதார வளர்ச்சி வேகம் தடைப்பட்டுள்ளதோடு, பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தனது புதிய ஆய்வில் தெரிவித்துள்ளது.

2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உலகப் பொருளாதார வளர்ச்சி 3.4 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டமை மற்றும் எரிசக்தி நிலையங்கள் சேதமடைந்தமை காரணமாக, தற்போதைய கணிப்பின்படி இந்த வளர்ச்சி 3.1 சதவீதமாகக் குறையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மசகு எண்ணெய் மற்றும் எரிபொருட்களின் விலை அதிகரிப்பால் உற்பத்திச் செலவுகள் உயர்ந்து, மக்களின் கொள்வனவு சக்தி குறைந்துள்ளது. 2026 ஆம் ஆண்டில் உலகளாவிய பணவீக்கம் 4.4 சதவீதமாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. போர் நீடித்தால் இது 6 சதவீதம் வரை அதிகரிக்கக்கூடும்.

அத்துடன், வட்டி வீத அதிகரிப்பு மற்றும் முதலீடுகள் வெளியேறுவதால் இலங்கை போன்ற வளர்ந்து வரும் நாடுகளின் நாணயப் பெறுமதி வீழ்ச்சியடையும் அபாயம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருளை இறக்குமதி செய்யும் நாடுகளும், போதிய நிதி கையிருப்பு இல்லாத வளரும் நாடுகளுமே இந்தப் பொருளாதார அதிர்ச்சியால் கடுமையாகப் பாதிக்கப்படும் என சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், மத்திய கிழக்கு நாடுகளில் பணியாற்றும் புலம்பெயர் தொழிலாளர்களின் ஊதியக் குறைவு காரணமாக, அந்த நாடுகளிலிருந்து வரும் பணம் குறையும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

பொருளாதார சேதங்களைக் கட்டுப்படுத்த போரை உடனடியாகவும் ஒழுங்காகவும் முடிவுக்குக் கொண்டு வருவதே மிகச்சிறந்த வழியாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எரிபொருள் விலையைக் குறைக்க மானியம் வழங்குவதை விடுத்து, பாதிக்கப்பட்ட ஏழைக் குடும்பங்களுக்கு நேரடியாக நிதி உதவி வழங்குமாறு நாடுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

எதிர்கால அதிர்ச்சிகளைத் தாங்குவதற்குப் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மாற்றங்களை நாடுகள் விரைவுபடுத்த வேண்டும். கடந்த 2022 ஆம் ஆண்டு ரஷ்யா – யுக்ரைன் போரின் போது ஏற்பட்ட உலகளாவிய பொருளாதார நெருக்கடியைப் போன்றதொரு சூழல் தற்போது மீண்டும் உருவாகியுள்ளது என சர்வதேச நாணய நிதியம் தனது அறிக்கையில் கவலை வெளியிட்டுள்ளது.