தமிழ் – சிங்கள மக்களிடையே பரஸ்பர மொழி அறிவு அதிகரிப்பு

இலங்கையில் மலையகத் தமிழரிடையே சிங்கள மொழியறிவு அதிகரித்துள்ள அதேவேளை சிங்களவரிடையேயும் தமிழ் மொழி அறிவு குறிப்பிடத்தக்க அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக தொகைமதிப்பு மற்றம் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2024 ஆம் ஆண்டுக்கான இலங்கையின் மக்கள்தொகை மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்புத் தரவுகளின் அடிப்படையில், இலங்கையின் மொழி அறிவு மற்றும் எழுத்தறிவு நிலை குறித்த தகவல்களிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் 10 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களில், சிங்களம், தமிழ் அல்லது ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் ஏதேனும் ஒன்றில் வாசிக்கவும் எழுதவும் தெரிந்தவர்கள் எழுத்தறிவு உள்ளவர்களாகக் கருதப்படுகின்றனர்.

1881 ஆம் ஆண்டு வெறும் 17.4 வீதமாக இருந்த ஒட்டுமொத்த எழுத்தறிவு விகிதம், 2024 ஆம் ஆண்டில் 97.4 வீதமாக உயர்ந்து ஒரு வரலாற்றுச் சாதனையைக் எட்டியுள்ளது.ஆரம்பக் காலங்களில் ஆண்களுக்கும் பெண்களுக்குமான எழுத்தறிவு இடைவெளி அதிகமாக இருந்த போதிலும், 2024 இல் ஆண்கள் 97.9 வீதம் மற்றும் பெண்கள் 97.0 வீதம் எனப் பாலின சமநிலையை நோக்கி முன்னேறியுள்ளனர்.

குடியிருப்புத் துறைகளின் அடிப்படையில் பார்க்கும்போது, நகர்ப்புறங்களில் உள்ளவர்களிடம் மிக அதிகப்படியான எழுத்தறிவு காணப்படுகிறது.  அதனைத் தொடர்ந்து கிராமப்புறங்களில் 97.6 வீதமாகவும், தோட்டப்புறங்களில் 91.2 வீதமாகவும் எழுத்தறிவு பதிவாகியுள்ளது.

வயதுப் பிரிவுகளின் அடிப்படையில் ஆராயும்போது, இளைய தலைமுறையினரிடையே பன்மொழித் திறன் அதிகரித்து வருவது தெளிவாகிறது.குறிப்பாக 15-19 வயதுப் பிரிவினரிடையே சிங்கள மொழி அறிவு 87.2 வீதமாகவும், ஆங்கில அறிவு 79.1 வீதமாகவும், தமிழ் மொழி அறிவு 62.7 வீதமாகவும் உள்ளது.
வயது அதிகரிக்க அதிகரிக்க தமிழ் மற்றும் ஆங்கில மொழித் தேர்ச்சி விகிதம் குறைந்து செல்வதைக் காணமுடிகிறது.

60 வயதிற்கு மேற்பட்டவர்களில் தமிழ் மொழி அறிவு 30.8 வீதமாகவும், ஆங்கில அறிவு 35.0 வீதமாகவும் மாத்திரமே உள்ளது. தேசிய மட்டத்தில் சிங்கள மொழி எழுத்தறிவு 85.2 வீதமாகவும், ஆங்கில அறிவு 57.3 வீதமாகவும், தமிழ் அறிவு 45.3 வீதமாகவும் உள்ளது.

மாவட்ட ரீதியாகப் பார்க்கும்போது, அதிக எழுத்தறிவு கொண்ட மாவட்டங்களில் கம்பஹா, கொழும்பு, களுத்துறை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்கள் முன்னிலையில் உள்ளன. குறைந்த எழுத்தறிவு கொண்ட மாவட்டங்களில் மட்டக்களப்பு மாவட்டம் 92.7 வீதம் என்ற குறைந்த எழுத்தறிவு விகிதத்தைப் பதிவு செய்துள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் மிக அதிகப்படியானோர் ஆங்கில அறிவை பெற்றுள்ள அதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தில் இது மிகக் குறைவான வீதமாக உள்ளது. யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் தமிழ் மொழி அறிவு தலா 97.9 வீதமாக உச்சத்தில் உள்ளது.

2012 மற்றும் 2024 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் அனைத்து இனத்தவர்களிடையேயும் பன்மொழித் திறன் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளது. இலங்கைத் தமிழர்களிடையே தமிழ் மொழி அறிவு 94 வீதமாகவும், மலையகத் தமிழர்களிடையே 90 வீதமாகவும் உள்ளது.