Home Blog Page 88

இலங்கையின் உயர்மட்ட குழு அமெரிக்காவுக்கு பயணம்!

இலங்கை ஏற்றுமதிகள் மீது விதிக்கப்பட்டுள்ள 30வீத வரியைக் குறைக்கும் நோக்கத்தை மையப்படுத்தி, இலங்கையின் உயர்மட்ட குழு ஒன்று அமெரிக்காவுக்கு புறப்படவுள்ளது.

முக்கிய அரசாங்க அதிகாரிகள் மற்றும் பொருளாதார நிபுணர்களை உள்ளடக்கிய இந்தக் குழு ஓகஸ்ட் 1ஆம் திகதிக்கு முன்னர் நாட்டில் இருந்து புறப்பட திட்டமிட்டுள்ளது. வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவதற்கும் அமெரிக்க சந்தைக்கு செல்லும் இலங்கைப் பொருட்களுக்கு மிகவும் சாதகமான விதிமுறைகளை கொண்டு வருவதற்குமான, இராஜதந்திர முயற்சியின் ஒரு பகுதியாக இந்தப் பயணம் அமைகிறது.

மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க, வர்த்தகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சின் செயலாளர் ஆகியோர் இந்தக் குழுவில் உள்ளடங்குகின்றனர். அத்துடன் அமெரிக்க வரி நிவாரணத்தைப் பெறுவதற்கான சாத்தியக்கூறுகளை மதிப்பிடுவதற்காக நியமிக்கப்பட்ட சிறப்பு நிபுணர் குழுவின் உறுப்பினர்களும் இந்தக் குழுவில் அடங்குகின்றனர்.இதற்கிடையில் அமெரிக்காவின் திருத்தப்பட்ட வரிக்கொள்கை ஓகஸ்ட் முதலாம் திகதியில் இருந்துஅமுலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய மீனவர்களின் குற்றச்சாட்டை இலங்கை கடற்படை நிராகரிப்பு

இலங்கையில் கைது செய்யப்பட்ட தமிழக கடற்றொழிலாளர்கள் 7 பேரையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் கோரியுள்ளார்.

குறித்த 7 பேரும், இலங்கையின் கடற்படையினரால் நேற்று (13) கைது செய்யப்பட்டனர்.
தற்போது, 232 தமிழக மீன்பிடி படகுகளும் 50 தமிழக கடற்றொழிலாளர்களும், இலங்கை அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ஸ்டாலின் தமது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த கடற்றொழிலாளர்களையும் அவர்களது படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். இதேவேளை, நேற்று கைது செய்யப்பட்ட தமிழக கடற்றொழிலாளர்கள் யாழ், நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை, எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே, கச்சதீவு பகுதியில் பிரச்சினை இன்றி கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு, மத்திய மற்றும் மாநில அரசுகள்,இலங்கை அரசுடன் கலந்துரையாட வேண்டும் என இந்திய கடற்றொழிலாளர்களினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  அதேபோன்று, இலங்கையினால் கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிப்பதற்கு, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதேவேளை, இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசிப்போரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்று, இலங்கை கடற்படையின் பேச்சாளர் தெரிவித்தார்.
அத்துடன், இந்திய கடற்றொழிலாளர்கள் கூறுவதைப் போல, கடல் எல்லையை மீறி அவர்களுடைய படகுகள் மீது தாக்குதல் மேற்கொள்ளவில்லை என்றும் அவர் கூறினார்.  அந்தவகையில், இந்திய கடற்றொழிலாளர்களின் குற்றச்சாட்டை முழுமையாக மறுப்பதாகவும், இலங்கை கடற்படையின் பேச்சாளர் குறிப்பிட்டார்.

திருச்சி சிறப்பு முகாமில் உள்ள இலங்கைத் தமிழர் ஒருவர் உணவு தவிர்ப்பு போராட்டம்!

தமிழகத்தின் திருச்சி சிறப்பு முகாமில் உள்ள நவநாதன் என்ற இலங்கைத் தமிழர் ஒருவர் உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகிறார். ஈழத்தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்கள் அனைத்தும் இனப்படுகொலை என்பதனை தமிழக மற்றும் இந்திய மத்திய அரசுகள் ஆதாரப்படுத்த வேண்டும் உள்ளிட்ட ஐந்தம்ச கோரிக்கையை முன்வைத்துக் அவர் உணவு தவிர்ப்பு போராட்டத்தை நடத்தி வருகிறார்.
இதனிடையே அவரது உடல் உறுப்புகள் செயல் இழக்கும் அபாயத்தை எட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தமிழக மக்களின் மௌனம் கலையவேண்டும் என்றும் அவர் ஒரு கடிதத்தை எழுதியுள்ளார்.

இதனிடையே, நவநாதனின் உணர்வுகளையும், கோரிக்கைகளையும் தமிழக அரசும் இந்திய மத்திய அரசும் மதிக்க வேண்டும் என்று தென்னிந்திய திரைப்பட இயக்குனரும் தமிழ்ப் பேரரசு கட்சியின் நிறுவனருமாகிய வ.கௌதமன் வலியுறுத்தியுள்ளார்.

நவநாதன் முன்வைத்துள்ள கோரிக்கைகளானது நிறைவேற்ற முடியாதவை அல்ல என்றும் அத்தனை கோரிக்கைகளும் நிறைவேற்றக்கூடிய கோரிக்கைகள் என்பதுடன் நியாயமான கோரிக்கைகளும்கூட என்றும் கௌதமன் குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு வீதி அபிவிருத்தி அதிகாரசபை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்!

மட்டக்களப்பு மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகாரசபை அலுவலகத்தினை முற்றுகையிட்டு வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் தற்காலிக நிலைய ஊழியர்கள் போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

கடந்த 10 வருடத்திற்கும் மேலாக வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் வீதி சீரமைப்பு ஊழியர்களாக பணியாற்றும் தற்காலிக நிலை ஊழியர்களே இந்த போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

வீதி அபிவிருத்தி அதிகாரசபையில் தங்களை இணைத்துக்கொள்ளும்போது எந்த கல்வித்தகமையும் கோராத நிலையில் இன்று கா.பொ.த.சாதாரண தரம் கற்றிருந்தால் மட்டுமே தமது தொழிலை நிரந்தர நியமனத்திற்குள் உள்வாங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் மட்டக்களப்பு மாவட்ட தலைமைக்காரியாலயத்தில் கா.பொ.த.சாதாரண தரம் உள்ள வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் தற்காலிக கடமையாற்றும் ஊழியர்களுக்கான நேர்முகதேர்வு நடைபெற்றுவரும் நிலையிலேயே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வீதிகளில் நெருப்பு வெயிலுக்கும் மத்தியிலும் மழைகாலத்திலும் கடுமையான பணிகளை முன்னெடுத்துவரும் தமக்கான நிரந்தர நியமனத்தினை வழங்குவதற்கு கல்வி சான்றிதழ் என்ற விடயத்தினைக்கொண்டுவந்து தமது உரிமையினை பறிக்கும் முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் இதன்போது ஊழியர்களினால் குற்றஞ்சாட்டப்பட்டது.

30 ஆயிரும் ரூபா சம்பளமே மாதந்தம் பெற்றுவருவதாகவும் பொருளாதார நெருக்கடி நேரத்திலும் தாங்கள் பல கஸ்டங்களுக்கு மத்தியிலேயே குடும்பத்தினை நடாத்திவரும் நிலையில் தமக்கான நிரந்தர நியமனத்தினை வழங்குவதற்கு பின்னடிக்கும் செயற்பாடுகளை கைவிட்டு அனைவரையும் நிரந்தர நியமனத்திற்குள் உள்ளீர்ப்பதற்கான செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும் எனவும் ஊழியர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வருகைதந்த வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் உயர் அதிகாரிகள் ஊழியர்களின் இந்த கோரிக்கை தொடர்பில் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் மற்றும் அமைச்சின் கவனத்திற்கு கொண்டுசெல்வதாக தெரிவித்தனர்.

சம உரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் திருகோணமலையில் கையெழுத்து போராட்டம்

சம உரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் திருகோணமலை பஸ்தரிப்பு நிலையம் முன்பாக இன்று திங்கட்கிழமை (14) கையெழுத்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது “இன்னொரு அடக்குமுறை சட்டம் வேண்டாம், பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்”, “காணாமல் ஆக்கப்பட்ட அனைவருக்கும் இப்போதாவது நீதி வழங்கு”, “அனைத்து தேசிய இனத்தவர்களுக்கும் சம உரிமைகளை உறுதிசெய்யும் புதிய அரசியலமைப்புக்காகப் போராடுவோம்” உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து குறித்த கையெழுத்திடும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் முகமாக இவ் கையெழுத்துப் போராட்டத்தில் அனைத்து இன மக்களும் அதிகளவில் கலந்து கொண்டு ஆர்வத்துடன் கையெழுத்து இட்டிருந்தார்கள்.

இதன்போது கருத்து தெரிவித்த ஏற்பாட்டாளர்கள்,

யுத்தம் முடிவடைந்து 16 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்ட நிலையில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கும், அரசியல் படுகொலைகளுக்கு உள்ளானவர்களுக்கும் இன்னும் நீதி கிடைக்கவில்லை. அரசியல் கைதிகள், அரச படையினரால் கைப்பற்றப்பட்ட காணிகள் மற்றும் யுத்தத்தினால் ஏற்பட்ட சேதங்களுக்கான இழப்பீடு தொடர்பான பிரச்சனைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை. இனவாதத்தை முடிவுக்கு கொண்டு வருதல், பயங்கரவாத தடைச் சட்டம் போன்ற அடக்குமுறை சட்டங்களை ரத்து செய்தல் மற்றும் தேசிய பிரச்சனைக்கு அரசியல் தீர்வை வழங்குதல் உள்ளிட்டவற்றை மேற்கொண்டு இந்த பிரச்சனைகளை தீர்ப்பதாக தற்போதைய அரசாங்கம் தேர்தல் மேடையில் உறுதி அளித்தது ஆனால் அந்த வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை.

பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்வதாக உறுதியளித்து ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று அந்த அடக்குமுறை சட்டத்தை பயன்படுத்துகிறார்கள். இதற்கிடையில் வடக்கில் உள்ள மனிதப் புதைகுழிகளில் சிறு குழந்தைகளின் எலும்புக்கூடுகள்கூட கண்டுபிடிக்கப்படுகின்றன. இவர்கள் அனைவருக்கும் நீதி வழங்கப்பட வேண்டும். எனவே இதற்கு பரந்த அளவிலான பொதுமக்களின் ஈடுபாடு தேவைப்படுகின்ற நிலையில் சம உரிமை இயக்கம் அதற்கு அரசியல் தலைமையை வழங்க தயாராக உள்ளது. சம உரிமை இயக்கத்தின் தொடக்கத்தில் இருந்தே இனவாதம் மற்றும் தேசிய ஒடுக்கு முறையை ஒழித்து அனைத்து இனத்தவர்களுக்கும் சம உரிமைகளை வழங்கும் அரசியல் தீர்வை அடைவதே எங்கள் குறிக்கோளாக இருந்து வருகிறது இந்த முயற்சியில் எங்களுடன் இணையுமாறு உங்களை கேட்டுக் கொள்கின்றோம். எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

 

தண்ணீர் சேகரிக்க சென்ற குழந்தைகளை தாக்கிய இஸ்ரேல்!

காஸாவில் உள்ள நீர் விநியோக மையத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் தண்ணீர் சேகரிக்க வரிசையில் காத்திருந்த குழந்தைகள் உட்பட குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 17 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு வருத்தம் தெரிவித்துள்ள இஸ்ரேல் இராணுவம், தங்களது ஏவுகணை ஒரு இஸ்லாமிய ஜிஹாத் போராளியைத் தாக்கும் நோக்கில் ஏவப்பட்டதாகவும், ஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தவறுதலாக சில மீட்டர்கள் கடந்து விழுந்ததாகவும் விளக்கமளித்துள்ளது.

ஐக்கிய இராட்சியத்தில்  அமைப்பு தடை போர் வியாபாரிகளுக்கு எதிரான சனநாயகப் போராட்டம் –  B A காதர் 

ஐக்கிய இராட்சியத்தில் Palestine Action அமைப்புக்கு தடை ஏன்?
இஸ்ரேல் பாலஸ்தீன மக்களுடைய நிலப்பகுதியை தொடர்ந்து அபகரித்து வருகின்றது. இதற்கு எதிராக அம்மக்கள் நீண்ட காலமாக போராட்டங்களை நடத்தி வருகின்றார்கள். இதில் பாலஸ்தீனர்கள் கைது செய்யப்பட்டும், கொல்லப்பட்டும், நூற்றுக்கணக்கானவர்கள் காணாமல் போயும் உள்ளனர்.
இந்த செயற்பாடு தொடரும் நிலையில்,இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தியதில் பலர் உயிரிழந்தனர். அதே நேரம் நூற்றுக்கும் மேற்பட்டவர்களை ஹமாஸ் பணயக்கைதிகளாக பிடித்து சென்றிருந்தனர். இந்த சூழலில் ஹமாஸுக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் இஸ்ரேல் காஸா பகுதியை மனிதப் புதை குழியாக மாற்றி வருகின்றது. இதை யடுத்து உலகெங்கிலும் இஸ்ரேலுக்கு எதிராக போராட்டங்கள் நடந்துவருகின்றன. இந்த சூழலில், Palestine Action அமைப்பை பிரித்தானியா தடை செய்துள்ளது. இதையடுத்து பல மனித உரிமை அமைப்புக்கள் பல கலாச்சார அமைப்புகள் இந்த தடைக்குஎதிராக போராட்டங்கள் செய்து
வருகின்றன. இந்த நிலையில், காதர் மாஸ்டர் ஐக்கிய இராட்சியத்தில் Palestine Action அமைப்பு தடை செய்யப்பட்டமை குறித்து கூறுகையில்…
இந்த Palestine Action அமைப்பு தடை செய்யப்பட்டமைக்கு எதிராக  லண்டனிலே பல பகுதிகளிலே போராட்டங்கள் நடைபெற்றன. Palestine Action என்ற அமைப்புக்கு எதிராக கொண்டுவரப்பட்டிருக்கின்ற தடையானது ஜூன் 30 ஆம்திகதி ஹோம் செக்ரட்டரி கூப்பர்  அவர் தான் இன்டீரியர் மினிஸ்டரும் ஒரு பில்லை அவசரமாக கொண்டு வந்தார். அதிலே (Palestine Action) அமைப்பை பிரதானப் படுத்திக்கொண்டு அதை பேசினாலும் அதை தனியாக முன்வைத்தால்அந்த மசோதா தோற்கடிக்கப்படும் என்பதற்காக ஒரு கபடத்தனமாக அவர் வேறு சில இரண்டு அமைப்புகளை கொண்டு வந்தார். அது எம்.எம்.சி முனாக்ஸ் மேடகால்ட் (MMC :Munax Metacald) என்ற ஒரு வலது சாரி வெள்ளை  இனவாத அமைப்பு. அடுத்தது ஆர் ஐ எம் ரஷ்யன் இம்பீரியல் மூவ்மென்ட்.( Russian Imperial Movement) இதையும் பின்னிணைப்பாக சேர்த்து கொண்டு    இவர்களை தடை செய்ய வேண்டும் என்பதுதான் அவருடைய நோக்கமாக இருந்தது.  இந்த இரு தடை செய்யப்பட வேண்டிய அமைப்புகளையும் கொண்டு வந்து அந்த மசோதாவைநிறைவேற்றினார். இது ஒரு கள்ளத்தனமாக நிறைவேற்றப்பட்ட ஒரு மசோதா. வேடிக்கை என்னவென்றால், யூன் 30ஆம் திகதி கொண்டுவரப்பட்ட இந்த மசோதா, இரண்டாம் திகதி நிறைவேற்றப்பட்டது. அதாவது ஒரு     385 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாகவும் 26 பேர் மாத்திரமே எதிர்ப்பும் தெரிவித்திருக்கிறார்கள்.
இதில்  ஒரு அதிர்ச்சிகரமான விஷயம் என்ன வென்றால், எப்படி அந்த பாராளுமன்றத்தை திசை திருப்பி இவர்கள் கள்ளத்தனமாக இந்த வாக்கைப் பெற்றார்கள் என்பதுதான்.  தனியாக இந்த Palestine Action என்ற அமைப்புக்கு எதிராக மாத்திரம் அந்த மசோதா கொண்டுவரப்பட்டிருந்தால் அது தோற்கடிக்கப் பட்டிருக்கும். அங்கு இருக்கின்றவர்களுக்கு கொடுக்கப்பட்டது இந்த நாசி அமைப்புகளான மேற் குறிப்பிட்ட  இரு அமைப்பையும்  தடை செய்வதற் காககொண்டுவரப்படுகின்ற ஒரு மசோதா என்ற விம்பத்தை கொடுத்து  இதனை நிறைவேற்றி இருக்கிறார்கள்.
எதற்காக இந்த Palestine Action-னுக்கு   தடையை கொண்டு வந்திருக்கிறார்கள். அவர்கள் செய்த அப்படி பாரதூரமான குற்றம் என்ன? இந்த மசோதாவை அவர்கள் Palestine Action – னுக்கு எதிராக கொண்டு வந்ததற்கு, அண்மையிலே பிரித்தானியாவின் மிகப்பெரிய  ரோயல் ஏர்போர்ஸ் பேஸ் -சுக்குள் புகுந்த (Royal Air Force (RAF))     இரண்டு பேர் விமானத்திலே சிவப்பு நிறத்திலே பாலஸ்தீனுக்கு ஆதரவான  வாசகங்களை வர்ணம் பூசினார்கள். அதை அவர்கள் தகர்க்கவில்லை. குண்டு வைக்கவில்லை. வர்ணம் பூசிவிட்டு வந்தார்கள். அது அவர்களுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. ஆனாலும் பிரித்தானியா சட்டத்தின் படி இது ஒரு சட்ட விரோதமான நடவடிக்கை கிடையாது.
அடுத்த ஒரு சம்பவம்,  எல்பிட் சிஸ்டம் யுகே (Elbit Systems UK Israeli Arms Company or Principal Supplier of Military hardware to the IDF) என்று  இஸ்ரேலுக்கு ஆயுதம் தயாரிக்கின்ற ஒரு தொழிற்சாலை Bristol –  என்ற இடத்தில் இருக்கிறது. அதற்கு முன்னால் நின்று ஒரு பெண்ணும்   ஒரு இளைஞரும் அந்த வாசலை மறித்தார்கள்.
அந்த தொழிற்சாலைக்கு  தங்களுடைய ஆட்சேபனையைத்  தெரிவித்தார்கள். அதே நேரம்  வேறு சில இடங்களில்  போராட்டக்காரர்கள்  போராட்டம் செய்தார்கள்.  இந்த சம்பவங்களோடு  உலகம் முழுவதும்  இன்று பிரபலமாக இருக்கின்ற XR – என்ற எக்ஸ்டின்ஷன் ரெபலியன் ( Extinction Rebellion)    அமைப்புடைய செயல்பாடுகளை நீங்கள் ஒப்பிடலாம். அவர்கள் மிக தீவிரமான ஆனால் வெகு ஜன போராட்டத்திலே இருக்கின்ற சுற்றாடல் ஆர்வலர்கள். இவர்கள் ராணியின் மாளிகைக்கு முன்னால்  சென்று அந்த கேட்டை மறைத்து கொண்டு  அங்கு  ராணியுடைய  கொடும்பாவியை  ஊர்வலமாக கொண்டு சென்றார்கள்.  இப்படியான பல போராட்டங்களை செய்திருந்தார்கள்.
இப்படியான போராட்டங்கள் எல்லாம் இவர்களுடைய கண்ணை உறுத்தவில்லை. ஆனால் ஏன் பாலஸ்தீனியர்களுடைய போராட்டம் இவர்களுடைய கண்ணை உறுத்துகிறது. இங்கே பல கேள்விகள் வருகிறன. பாலஸ்தீனிய மக்க ளுக்கு அவர்களுடைய மண்ணிலே வாழ்கின்ற உரிமை இல்லை. அவர்கள் இன்று  உணவுக்காக  காத்துக்கிடக்கிறார்கள். அவர்களை இஸ்ரேல் சுட்டுக்கொல்கிறது. அந்த அநியாயத்தை கண்டிப் பதற்கு அந்த மக்களுக்கு அந்த நாட்டிலும் உரிமை இல்லை. இன்று அவர்களுக்காக குரல் கொடுக்கின்ற ஏனையவர்களுக்கும்  இன்று தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
பாலஸ்தீன மக்களை நசுக்குகின்ற, அவர் களை என்னவும் செய்யலாம், அவர்களை குண்டு போட்டு கொல்லலாம்., பச்சை குழந்தைகளை கொல்லலாம். பெண்களைக் கொல்லலாம். இப்படி அந்த ஆக்கிரமிப்பாளருக்கு சாதகமாக இருக்கின்ற இந்த அமைப்பு முறை அதாவது, பாலஸ்தீனியர்களுக்கு அவர்களுடைய  நாட்டிலே குரல் கொடுக்க முடியவில்லை. அதே நேரம் அவர்களுக்கு ஆதரவாக வெளிநாட்டிலும் குரல்கொடுக்க முடியவில்லை என்றால், நாங்கள் ஒரு விடயத்தை பார்க்க வேண்டும். ஏன் அந்த   இஸ்ரேல் மக்கள் மீதுள்ள அனுதாபத்தினால் தான்   இவர்கள் இந்த காரியத்தை செய்கிறார்கள் என்றால் அது அப்பட்டமான பொய்.
இஸ்ரேல் மக்களுக்கு உண்மையான பாதுகாப்பு எங்கே இருக்கிறது என்றால், அவர்களுடைய Iron Dome-மில் இல்லை. அமெரிக் காவுடைய ஆதரவிலில்லை. அவர்கள் அயலவர் களோடு ஒற்றுமையாக வாழ்வதில் தான் இருக் கிறது.
இஸ்ரேலியர்கள்  பாலஸ்தீனர்களுடைய நிலத்தை ஆக்கிரமித்து, இருக்கிறார்கள். ஆனாலும் ‘நீங்கள் இருங்கள், எங்களையும் இருக்க விடுங்கள்’ என்பதுதான் பாலஸ்தீனர்களுடைய கோரிக்கை யாக இருக்கிறது. அதையும் கொடுக்க மறுத்து ‘பக்கத்து நாடுகளை நாங்கள் ஆக்கிரமிப்போம்,  எங்கெங்கு நம்மவர்கள் வாழ்ந்தார்களோ அந்த இடமெல்லாம் எங்களுக்கு சொந்தம் என்று கூறி வாழ முடியாது.
ஆகவே  இஸ்ரேலுக்கு ஆயுதம் தயாரிக் கின்ற ஆயுத தொழிற்சாலைகளை   சரியாக குறி வைத்து போராட்டம்  செய்தார்கள். அவர் கள்   பிரயாணிகளுடைய விமானத்துக்கு வர்ணம் பூசவில்லை. அவர்கள் குண்டு போடுகின்றவி மானத்திற்கு தான் அவர்கள் வர்ணம் தீட்டினார்கள். இந்த செயலுக்கு தடை விதித்தால்  கொலைகாரனை நீ கொலைகாரன் என்று சொல்வது குற்றம் என்பது போல ஆகிவிடும்.
அதே நேரம் பிரித்தானியாவின் இந்த  கபட நாடகத்தை நாங்கள் பார்க்கலாம். 2000 ஆண்டில் கொண்டுவரப்பட்ட பயங்கரவாத சட்டத்துக்கு கீழ்தான்  இந்த இரு அமைப்புக்களும் தடை செய்யப்பட்டிருக்கிறது. இவர்களுடைய செயல்பாடுகள் எதுவுமே  பயங்கரவாத செயலுக் குள் வராது.  ஏனென்றால் இதனை ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு குழு கொண்டு வந்த ஒரு தீர்மானத்திலே  கூறப்பட்டுள்ளவை என்னவென்றால்,   உடைமைகளுக்கு  சேதம் விளைவிப்பது   பயங்கரவாத செயலாக ஆகிவிட முடியாது. அது உயிர்களுக்கும் சேதம் ஏற்படுத்தி இருந்தால் தவிர என்று ஒரு சரத்து வருகிறது.   ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் 1566ம்தீர்மானம் 2004ல் கொண்டு வரப்பட்டது.  இந்த தீர்மானத்தை வலுவாக ஆதரித்த நாடு பிரித்தானியா, இன்று அதே பிரித்தானியா,  அதாவது எந்த ஒரு போராட்டத்திலும் சில வேளை சில உடைமைகளுக்கு சேதம் ஏற்படத்தான் செய்யும். ஏனென்றால் மக்கள் கொதித்தெழும்போது என்ன செய்வார்கள் என்று சொல்ல முடியாது. போராட்டங்களை ஒழுங்கு செய்த  அமைப்பை தடை செய்ய முடியாது.  ஏனென்றால் எல்லோரையும் கட்டுக்கோப்பாக வைத்திருக்க முடியாது.(Royal Air Force (RAF))  என்ற  அமைப்பு சட்டரீதியாக பதிவு செய்யப்பட்டது.
ராணியுடைய மாளிகைக்கு  சென்று ராணியுடைய  கொடும்பாவியை  சவப்பெட்டியாக சுமந்து கொண்டு சென்றார்கள். அவர்களுடைய கேட்டைதிறக்கவிடாமல் அங்கே தமக்கு விலங்கிட்டுக் கொண்டு நிற்கிறார்கள்.  இந்த போராட்டத் தில்   உயிர் சேதம் ஏற்படவில்லை என்பதனால் தான் அது ஒரு பயங்கரவாத தடை செயலாக  கருதப்படவில்லை. ஆனால் தனிப்பட்ட யாராவது ஒரு சொத்துக்கு உடைமைகளுக்கு சேதம் ஏற் படுத்தினால் அவரைப் பிடித்து தண்டனை கொடுக்கலாம் அதுக்கு வேற சட்டம் இருக்கிறது. ஆனால் இந்த பயங்கரவாத தடை சட்டத்தை அதுக்குள்ளே கொண்டு வர முடியாது என்பது உலகறிந்த ஒரு உண்மை.  அப்படியானால் இப் பொழுது இருக்கின்ற பிரச்சினை என்னவென்றால்   பாலஸ்தீனுக்கு ஆதரவாக அல்லது இந்த அரசாங் கத்துக்கு பிடிக்காத யாருக்காவது ஒரு எதிராக ஒரு வர்ணம் தீட்டினால் அதை தற்கொலை குண்டுதாரி ஒருவர் சென்று பாராளுமன்றத்தை தாக்கியது போல ஒரு பயங்கரவாத குற்றமாக பார்க்கப்படும்.  இது பாலஸ்தீனர்களுக்கு மாத்திரமல்ல சாதாரண போராட்டங்கள் அனைத்துக்குமே இது ஒரு ஆபத்தான  அச்சுறுத்தல். இதற்கு எதிராக மக்கள் வெகுண்டெழுந்திருக்கிறார்கள்.   இப்பொழுது இந்த தடை சட்டத்திற்கு எதிராக  குறித்த அமைப்பு நீதிமன்றம்போயிருக்கிறார்கள். அவசரமாக கூடிய நீதிமன்றம் தடை உத்தரவை பிறப்பிக்கவில்லை. ஆனால் 21 ஆம் திகதி மீண்டும் அந்த வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப் படும். அதனுடைய முடிவு எப்படி இருக்கும் என்று சொல்லி தெரியாது. ஆனால் பிரித்தானிய அரசாங்கத்துடைய கபட நாடகத்தை தான் நாங்கள் பார்க்கிறோம்.

ஏழு மாதங்களில் துப்பாக்கிச் சூடு: 37 பேர் உயிரிழப்பு!

இந்த வருடத்தில் கடந்த ஏழு மாதங்களில் நாடு முழுவதும் 68 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், இதில் 37 பேர் உயிரிழந்துள்ளதாகவும்  காவல்துறை தெரிவித்துள்ளனர்.

இன்று (14) காவல்துறை ஊடகப் பிரிவு கேட்போர் கூடத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

இந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் 2025.01.01 முதல் 2025.07.13 வரை பதிவாகியுள்ளதாகவும், அவற்றில் 50 துப்பாக்கிச் சூடுகள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுடன் தொடர்புடையவை என்றும் கூறியுள்ளார்.

ஏனைய 18 துப்பாக்கிச் சூடுகள் மற்ற நபர்களால் நடத்தப்பட்டவை என்றும், தனிப்பட்ட காரணங்களுக்காகவும் நடந்தவை என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

68 துப்பாக்கிச் சூடுகளில் 37 பேர் இறந்துள்ளதாகவும், அவற்றில் 34 பேர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் என்றும், 39 பேர் காயமடைந்துள்ளதாகவும், அவற்றில் 30 பேர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

இதற்கிடையில், இந்த துப்பாக்கிச் சூடுகள் தொடர்பாக பொலிஸார் நடத்திய சிறப்பு நடவடிக்கைகளில் 23 T-56 துப்பாக்கிகள், 46 கைத்துப்பாக்கிகள் மற்றும் 1,165 உள்ளூர் மற்றும் வெளிநாட்டு துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகதெரிவித்தார்.

மேலும், 68 துப்பாக்கிச் சூடுகள் தொடர்பாக 24 பேரும், ஓட்டுநர்களாகச் செயல்பட்ட 15 பேர் மற்றும் அவர்களுக்கு ஆதரவளித்த 150 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

பாடசாலை மாணவர்களிடையே ஸ்மார்ட்போன் பாவனையை தடை செய்வது தொடர்பாக ஜனாதிபதிக்கு கடிதம்!

பாடசாலை மாணவர்களிடையே ஸ்மார்ட்போன் பாவனையை தடை செய்ய  வேண்டும் எனக் கோரி வட பிரதேச நல்லொழுக்க சம்மேளனத்தினரால் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இந்நாட்டில் தற்பொழுது புகைப்பொருள் பாவனை குறைவடைந்திருப்பதை காணக்கூடியதாக உள்ளது. ஆனால், போதைப்பொருள் பாவனை அதிகரித்துச் செல்வதை காணக்கூடியதாக உள்ளது. இதனை கட்டுப்படுத்துவதற்கு நாம் பாடசாலை மட்டத்திலும் கிராமங்களிலும் செயற்பட்டு வருகின்றோம். ஆனால், போதைப்பொருள் பாவனை குறைவடைவதை காணக்கூடியதாக தெரியவில்லை. இதனால் கூடுதலாக பாதிப்படைவது இளம் சந்ததியினர் ஆவர். குறிப்பாக, மாணவர் சமுதாயம்.

இவ்வாறிருக்க, ஒரு படி மேலாக தற்பொழுது மாணவர்களிடையே ஸ்மார்ட்போன் பாவனையும் காணக்கூடியதாக உள்ளது. இந்த பாவனையை பாடசாலை மாணவர்கள் மட்டில் கட்டுப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

தாங்கள் சிறிலங்காவை துப்புரவு செய்ய முன்வந்ததை மனதார பாராட்டுகின்றோம். இதனைப் போல் ஸ்மார்ட்போன் பாவனையை மாணவர்களிடையே துப்புரவு செய்ய வேண்டும். அதற்கான சில ஆலோசனைகளை முன்வைக்கின்றோம்.

அவையாவன :

1. பொது இடங்களில் புகைப்பொருள் பாவித்தால் எவ்வாறு தண்டிக்கப்படுகின்றார்களோ,  அதேபோல் பாடசாலைக்குச் செல்லும் மாணவர்கள், 18 வயதுக்கு உட்பட்டவர்கள் பொது இடங்களில் ஸ்மார்ட்போன் பாவித்தால் தண்டிக்கப்பட வேண்டும்.

2. குறிப்பிட்ட மாணவர்கள் வீட்டில் ஸ்மார்ட்போன் பாவிப்பதைக் கண்டால் மாணவர்களின் பெற்றோர்களை தண்டிக்க வேண்டும்.

3. பிரத்தியேக வகுப்பு நடத்தும் ஆசிரியர்கள் போன் மூலம் வகுப்பு எடுத்தால் அந்த ஆசிரியரை தண்டிக்க வேண்டும்.

ஸ்மார்ட்போன் பாவனையை மாணவர்களிடையே தடை செய்ய வேண்டும். இதற்குக் காரணம், பெற்றோருக்குத் தெரிந்த விடயங்கள் எல்லாம் இந்த போன் மூலம் மாணவர்கள் அறிகின்றார்கள். ஆகவே, போன் பாவனையை தடை செய்ய வேண்டும் என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

செம்மணி இனவழிப்புக்கான ஆதாரம் அடுத்து என்ன? – விதுரன்

செம்மணி மனித புதைகுழி யிலிருந்து இது வரையில் 65 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ள நிலை
யில் அதன் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு, எதிர்வரும் 21ஆம் திகதி முதல் மீண்டும்  அகழ்வுப் பணிகளை முன்னெடுப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள் ளது.
இந்தாண்டின் கடந்த பெப்பர வரி மாதம் 18ஆம் திகதியன்று அவசர நிர்மாணிப்பு பணிகளை முன் னெடுத்த போது முதற்தடவையாக எலும்புக் கூடுகள் இருப்பது அடையாளம் காணப் பட்டது. அந்த நாளில் இருந்து செம்மணி சித்துப்பாத்தி பகுதியில் தொடர்ச்சியாக அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
முதலாம் கட்டத்தில் ஒன்பது நாட்கள் அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இரண்டாம் கட்டத்தில் 15நாட்கள் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. அதில் ‘தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இலக்கம் – 01’  மனித புதைகுழியில் இருந்து 63 எலும்பு கூடுகளும் ,  ‘தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இலக்கம் – 02’  மனித புதைகுழியில் இருந்து இரண்டு எலும்பு கூடுகளும் மீட்கப்பட்டுள்ளன.
அதேவேளை  ‘தடயவியல் அகழ்வாய்வுத் தளம் இலக்கம் – 02’  புதைகுழியில் குழப்பகரமான முறையில் மனித எலும்பு சிதிலங்கள் காணப் படுவதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.அத்துடன் குறித்த  இரு புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட, பை, காலணிகள், கண்ணாடி வளையல்கள், ஆடையை ஒத்த துணிகள், பொம்மை உள்ளிட்ட பொருட்கள் சான்று பொருட் களாக அடையாளப்படுத்தப்பட்டு, நீதிமன்ற கட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளன.
யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஆனந்தராஜா, மேற்பார்வையில் பேராசிரியர் ராஜ் சோமதேவ அகழ்வுப்பணிகளை முன்னெடுத் திருந்ததோடு யாழ்.போதனா வைத்தியசாலையில் சட்ட வைத்திய அதிகாரி பிரதாபனும் எலு ம்புக்கூடுகள் மீட்டு மன்றும் பாதுகாத்தல் செயற்பாடுகளில் கணிசமான வகிபாகத்தினைக் கொண்டிருக்கின்றார்.
அதேவேளை, செம்மணி மனிதப் புதை குழி சம்பந்தமான வழக்கு மீதான விசாரணை எதிர்வரும் 25ஆம் திகதி விசாரணைக்கு எடுத் துக்கொள்ளப்படவுள்ளது. இந்த வழக்கில் நீதி மன்றின் நிலைப்பாடு மிக முக்கியமானதாக உள்ளது.
\ஏனென்றால், தற்போதைய நிலையில், செம்மணி மனிதப் புதைகுழி சம்பந்த மான பல்வேறு தரப்பட்ட பார்வைகள் வெளிப் படுத்தப்பட்டு வருகின்றன. மனிதப்புதைகுழியை மலிப்படுத்து வதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளன.
அவ்வாறான பின்னணியில், செம்மணி மனிதப்புதைகுழி சம்பந்தமாக நீதிமன்றம் தனது நிலைப்பாட்டை உறுதியாக வெளிப்படுத்தும் பட்சத்தில் அடுத்தகட்டச் செயற்பாடுகளுக்கு பேருதவியாக இருக்கும்.
விசேடமாக, ஆட்சிப்பீடத்தில் உள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையி லான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் செம்மணி விடயத்தில் நழுவல் போக்கையே கடைப்பிடிக் கின்றது.
அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவும், நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்காரவும் அகழ்வுப்பணிகளுக்கு அரசாங்கம் முழுமையாக ஒத்துழைக்கும் என்றும், நீதிமன்ற வழக்கு காணப்படுவதால் நீதித்துறையே அவ்விடயத்தின் அடுத்தகட்டம் சம்பந்தமாக தீர்மானிக்கும் என்று கூறி நழுவிக் கொள்கின்றார்கள்.
அகழ்வுப்பணிகளை தொடர்ச்சியாகவும், துரிதமாகவும் முன்கொண்டு செல்வதற்கு நிதி ஒதுக்கீடு உட்பட இதர வசதிகளை வழங்கு வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் என்ற வகையில் முன்னெடுப்பதற்கு தயாராக இல்லை.
வங்குரோத்தான பொருளாதார நிலைமைக ளைக் கொண்ட நாட்டில் ஆட்சியில் உள்ள அரசாங்கத்தினால் செம்மணி மனிதப் புதைகுழி உட்பட நாட்டில் காணப்படும் எந்தவொரு மனித புதைகுழியையும் முழுமையாக அகழ்வாராய்ச்சி செய்வதற்கான இயலுமை இருக்காது என்பது யதார்த்தமானது.
ஆனால், அரசாங்கம் என்ற அடிப்படையில் இத்தகைய மனித புதைகுழிகளை அகழ்வாரய்ச்சி செய்து உண்மைகளைக் கண்டறியச் செய்வதற்கும், பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கும் காணப்படுகின்ற அர்ப்பணிப்பு முக்கியமானது.
அத்தகைய அர்ப்பணிப்பு காணப்படுமாக இருந்தால், அரசாங்கம் இருதரப்பு, பல்தரப்பு ஒத்துழைப்புக்கள் ஊடாக சர்வதேச நாடுகளிட மிருந்து உதவிகளைப் பெற்றுக்கொள்ள முடியும். ஆனால் அரசாங்கம் அந்த விடயத்தில் ஆர்வம் காண்பிக்காதுள்ளது.
இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. சர்வதேச நாடுகளிடத்தில் ஒத்துழைப்புக்களை கோருகின்றபோது, அந்நாடுகள் சர்வதேச தரங்களை உறுதி செய்து அகழ்வாராய்ச்சிகளை முன்னெடுப்பதற்கு அழுத்தங்களை அளிக்கலாம். உண்மைகளை கண்டறிந்து பொறுப்புக்கூறுவதற்கு வலியுறுத்தலாம். அவ்வாறு செய்கின்றபோது, உள்நாட்டில், படையினருக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய நிலைமைகள் நிச்சயமாக உருவாகும். அவ்வாறு உருவாகின்றபோது படை யினரும், தென்னிலங்கை சிங்கள மக்களும் ஆட்சியாளர்களுக்கு எதிராக திரண்டெழுந்து விடுவார்களோ என்ற அச்சம் காணப்படுகின்றது.
இனமொன்று திட்டமிட்டு கொன்று குவிக்கப்பட்டு புதைக்கப்பட்டிருந்தாலும், அதுபற்றி உண்மைகளை கண்டறிந்து, பொறுப் புக்கூறு வதற்கு அரசாங்கம் தயாரில்லாத நிலையில் தனது வாக்குவங்கியை பாதுகாப்பதற்கு முயற்சிக்கும் மூன்றாந்தர நிலைமையே கடந்த கால அர சாங்கங்களின் காலத்திலும் காணப் பட்டது. அதேநிலைமையே தற்போதும் தொடருகிறது.
1998 ஆம் ஆண்டு கிருசாந்தி குமாரசாமி படுகொலை கொலை வழக்கில் குற்றம்சாட்டப் பட்டு, மரணதண் டனை விதிக்கப்பட்ட, லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ, இராணு வத்தினரால் கொன்று புதைக்கப்பட்ட சுமார் 300 பேர் புதைக்கப்பட்ட இடங்கள் தனக்குத் தெரியும் என்று கூறியிருந்தார்.
அவர் கூறியபடி அகழ்வுப் பணிகள் முறையாக முன்னெடுக்கப்பட்டிருந்தால்,  கூடுத லான தடயங்களுடன், எலும்புக்கூடுகளைக்  கண்டறிவதற்கான வாய்ப்புகள் இருந்தன.
ஆனால், அகழ்வுப்பணிகள் முன்னெடுக் கப்பட வில்லை. ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் அதற்கான ஆர்வத்தைக் காண்பிக்காது, எவ்வாறு மூடி மறைக்கலாம் என்றே சிந்தித்தன. அக்காலத்தில் காணப்பட்ட போர்ச்சுழல் பொதுமக்கள் வீதியிலிறங்கிப் போராடுவதற்கு இடமளித்திருக்கவில்லை. தற்போதைய ‘அணையா விளக்கு’ போராட்டம் போன்ற கவனயீர்ப்பு பற்றி சிந்திப்பதற்கு கிஞ்சித்தும் இடமளித்திருக்கவில்லை.
ஆனால் தற்போதைய சூழல் மாறுபட்டது. செம்மணி சித்துப்பாத்தி பகுதியில், எங்கு தோண்டினாலும் சடலங்கள் அல்லது மனித எச்சங்கள் அல்லது மனித பாவனைப் பொருட்கள் தென்படுகின்ற அளவுக்கு ஒரு மோசமான நிலைமையே காணப்படுகின்றது.
குறித்த மனிதப் புதைகுழியில் இருந்து, தொடர்ச்சியாக மனித எலும்பு எச்சங்கள் மீட்கப் படுகின்ற நிலையில், இந்த புதைகுழி பற்றிய உண்மைகள் வெளிப்படுமா என்ற அச்சம் கூடவே மேலெழவும் ஆரம்பித்துள்ளது.
ஏனென்றால் அரசாங்கத்தின் பிற்போக்குத் தனமான நிலைமை முதற்காரணமாக உள்ளது. அடுத்ததாக, பாதிக்கப்பட்ட தமிழ்த் தரப்புக்குள் காணப்படுகின்ற போட்டிகளும், மாறுபட்ட நிலைமைகளும் வலுவான கோரிக்கைகளை நீர்த்துப்போகச் செய்யும் துர்ப்பாக்கிய நிலை மைகளை தோற்றுவிக்கின்றன.
ஆகவே பாதிக்கப்பட்ட தரப்பான தமிழ்த் தரப்பு செம்மணி மனித புதைகுழி விடயத்தில் தாமதமின்றி தீர்க்கமான முக்கிய சில விடயங்களை கையாள வேண்டியது அவசியமாகின்றது.
அதில் முதலாவது, 1999 இல் அகழப்பட்ட கிருசாந்தி குமாரசுவாமி உள்ளிட்ட 15 உடல் எச்சங்களும், தற்போது அகழப்பட்டுக் கொண்டிருக்கும் எலும்புக்கூடுக ளும் ஒரே குற்றவியல் சூழலுடன் தொடர்புபட்டவை என்ற அடிப்படையில் கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் இருக்கும் முடிவுறா வழக்குடன் தற்போதைய விசாரணைகள் இணைக்கப்பட்டு ஒரே குற்றவியல் நடவடிக்கையின் பகுதிகளாகக் கருதப்பட வேண்டியதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
இரண்டாவதாக, ஏலவே அகழப்பட்டு கிளஸ்கோவில் பாதுகாக்கப்படும் எலும்புக்கூடுகள் பற்றிய விசாரணை அறிக்கைளைப் பெறுவதோடு அவற்றை மீண்டும் இலங்கைக்கு கொண்டுவந்து தற்போது அகழ்வில் கண்டறியப்பட்ட எலும்புக் கூடுகளுடன் ஒன்றிணைத்து உயர் பாதுகாப்பில் வைக்கப்பட்டு ஆய்வுகள் தொடரப்பட வேண்டும்.
மூன்றாவதாக, அகழ்வுப்பணிகள் சர்வதேச தரப்பில் முன்னெடுக்கப்படுவதை உறுதி செய்வதோடு, சர்வதேச சுயாதீன நிபுணர் ஒருவர் அல்லது குழுவினரின் கண்காணிப்பின் கீழ் முன்னெடுப்பதற்கு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
\நான்கவதாக, ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் கீழ் செயற்படுகின்ற சாட்சியங்களை திரட்டும் ‘இலங்கைப் பொறுப்பக்கூறல் செயற் றிட்டம்’ தொடர்ந்தும் செயற்படுவதில் நிதி நிலைமைகள் தாக்கம் செலுத்துகின்ற நிலையில் அதற்கான நிதியுதவிகளைப் பெறுவதற்கும், அச்செயற்றிட்டம் நீடிக்கப்படுவதையும் உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். இதில் புலம்பெயர் அமைப்புக்களுக்கு கணிசமான பங்குள்ளது.
ஐந்தாவதாக, அடுத்து மாரிகாலம் வரவுள்ளதால் அகழ்வுப்பணிகள் பாதிக்கப்படுவதோடு ஏலவே அகழப்பட்ட பகுதிகளும் பாதிப்படை யலாம். ஆகவே உள்நாட்டு, வெளிநாட்டு சுயாதீன தொண்டர்களை உள்வாங்கி அகழ்வுப்பணிகளை வினைத்திறனாக விரைவுபடுத்தவதற்கான நட
வடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். இதற்காக ஐ.நா.அமைப்புக்களை நாடுவது  பொருத்தமான தாக இருக்கும்.
இத்தகைய யதார்த்த நிலைமைகளை நோக்கி தமிழ் தரப்புக்கள் பல்வேறு தளங்களில் ஒன்றிணைந்து பொதுவேலைத்திட்டத்துடன் பய
ணிப்பதன் ஊடாகவே செம்மணியில் நிகழ்ந் தேறியுள்ள இன அழிப்புக்கான ஆதாரங்கள் பாது காப்பாக உறுதிப்படுத்தப்படும். பொறுப்புக் கூற லுக்கான வலுவான அடையாளங்களாக அமையும்.