Home Blog Page 87

இலங்கை – இந்திய ஊடக நட்புறவு சங்கத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் திறப்பு

இலங்கை – இந்திய ஊடக நட்புறவு சங்கத்தின் https://slimfa.lk/ எனும் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை திங்கட்கிழமை (14) இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆரம்பித்து வைத்தார்.

இலங்கை – இந்திய ஊடக நட்புறவு சங்கத்தின் பொதுக்கூட்டம் கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் சுவாமி விவேகானந்தா கலாசார நிலையத்தில் நடைபெற்றது.

இந்த பொதுக்கூட்டத்தில் புதிய உறுப்பினர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டதோடு,  இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கிடையேயான ஊடக ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் பற்றி கலந்துரையாடப்பட்டன.

2024 ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் திகதி இலங்கை – இந்திய ஊடக நட்புறவு சங்கம் ஸ்தாபிக்கப்பட்டது.

இலங்கை இந்திய ஊடக நட்புறவு சங்கம் இரு நாடுகளுக்கும் இடையிலான ஊடகத்துறை சார்ந்த  உறவுகளை வலுப்படுத்தும் நோக்கத்துடன் இது உருவாக்கப்பட்டது.

செம்மணியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் ஒரு பார்வை – தாமோதரம் பிரதீவன்

செம்மணி மனிதப் புதைக்குழி அடையாளம்  காணப்பட்ட பிரதேசத்தில் இடம்பெற்று வரும் அகழ்வுப் பணிகளின் முதல் கட்ட அகழ்வுப் பணிகள் 9 வது நாளின் பின்னர்   இடைநிறுத்தப்பட்டு மீண்டும் 26-05-2025 காலை 8 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டது. இவ் இரண் டாம் கட்ட அகழ்வுப் பணிகளின் முதல் நாள் அகழ்வுப் பணியின் போது ஒரு குழந்தையின் அல்லது சிறுவரின்  மண்டையோடு உள்ளிட்ட சிதைவடைந்த எலும்பு கூட்டுத் தொகுதியோடு இன்னும் இருவரது எலும்புக் கூட்டுத் தொகுதிகள் உள்ளடங்கலாக மூன்று எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த இரண்டாம் கட்ட பணிகள் ஆரம்பமாகி முதல் கண்டுபிடிக்கப்பட்ட சிறுவருடையது என சந்தேகிக்கப்பட்ட என்புக்கூட்டுத் தொகுதி முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டு ஏனைய இரண்டும் அடுத்து நாட்க ளில் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டிருந்த நிலையில் அகழ்வுப் பணிகள் தொடர்ந்தன.
இதேவேளை இவ்வாறு இரண்டாம் கட்ட அகழ்வின்போது முதல் நாளில் கண்டு பிடிக்கப்பட்ட சிறுவரின் எலும்புத் தொகுதி தொடர்பிலும் இங்கு தொடர்ந்தும் வெளிவரும் உறவுகளின் எலும்புக்கூடுகள் தொடர்பிலும், ஆடைகள்,பாடசாலைப் புத்தகப் பை. காலணி,வளையல்கள்,பொம்மைகள் என்பன தொடர்பிலும் தமிழர்கள் மத்தியில் பெரும் கவலையும்,சோகமும் ஏற்பட்டிருந்தது.  இந்நிலை யில் இவ்விடயம் பல சமூக ஆர்வலர்கள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்களினதும்  மனிதாபிமானம் கொண்டவர்களினதும் பார்வையினை யும் அங்கு திருப்பியதோடு, தொடர்ந்த அகழ்வுப் பணிகள் தொடர்பில் உள்நாட்டு வெளிநாட்டு ஊகங்களினதும், ஊடகவியலாளர்களினதும் கவ னத்தைத் திருப்பி இவ்விவகாரம் பெருமளவில் பேசுபொருளாக மாறியது.
இந்த அகழ்வுப் பணிகளானது யாழ் நீதி மன்றத்தின் BR 433 PC 2025 எனும் வழக்கிற்கு அமைவாக கௌரவ.நீதிபதி திரு.ஏ.ஏ. ஆனந்தராஜா அவர்களின் கட்டளைக்கு அமைவாக அவரது மேற்பார்வையுடன் தொல்லியல் துறை பேராசிரி யர் திரு.ராஜ் சோமதேவா அவர்களுடைய தலைமையில் அவர்களின் குழுவினர், தொல்லியல்துறை மாணவர்கள், மற்றும் டாக்டர் பிரணவன் செல்லையா மற்றும் பல சட்ட வைத்திய அதிகாரிகள், சட்டத்தரணிகள் போலீசார், யாழ் பல்கலைக்கழக வைத்திய பீட மாணவர்கள் சோகோ (Sogo) போலீசார் (seen of crime officers ) யாழ் குற்றத் தடுப்பு பொலீஸ் பிரிவினர் என பலரது பிரசன்னத்துடனும் கண்காணிப்புடனும் இந்த அகழ்வுப் பணிகள் தொடர்ந்தன.
இந்த அகழ்வுப் பணிகள் பாதிக்கப்பட்ட தரப்பு அல்லது முறைப்பாட்டாளர்கள் சார்பாக சொல்லப்பட்ட பிரதேசங்களில் இரு பிரிவுகளாக Site 01 Site 02 என வகைப்படுத்தப்பட்டு இந்த அகழ்வு பணிகள் நடந்திருந்தது.
மனிதப் பேரவலத்தின் அடையாளமாகக் காணப்படுகின்ற செம்மணி சிந்துபாத்தி மயான மனிதப்புதைகுழி அகழ்வுப் பணிகளின் போது தொடர்ந்தும் பல உறவுகளுடைய எலும்புக் கூட்டுத் தொகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுக் கொண்டிருந்தன, அவற்றில் பல குழந்தைகள், சிறுவர்களுடையதும்,  தாயும் பிள்ளையுமாகவும், குடும்பமாகவும் ஈவு இரக்கமற்றுக் கொன்று கொத்துக் கொத்தாகப் புதைக்கப்பட்டிருக்கலாம் எனும் பலத்த சந்தேகத்தின் வெளிப்பாடாகவே  பலரது எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அங்கே கண் டெடுக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றது.
அந்த இடத்தில் இடம்பெறுகின்ற அகழ்வு பணிகளின் அடிப்படையில் பார்க்கிறபோது இங்கு மீட்கப்படுகின்ற இந்த எலும்புக்கூட்டுத் தொகுதிகள் உரிய முறைப்படி அடக்கம் செய் யப்படாதது போன்றும் அவசர அவசரமாகப்  புதைக்கப்பட்டது போன்றுமே காணப்படுகிறது, இந்த எலும்புக்கூட்டுத் தொகுதிகள் ஒவ்வொன்றும் சுமார்  ஒரு அடி அல்லது ஒன்றரை அடி அளவு ஆழத்திலே இருந்து தான் அகழ்வுப் பணிகளில் மீட்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
எனவே இவைகளைப்  பார்க்கின்றபோது இங்கு நிச்சயமாக ஒரு மனிதப் பேரவலம் இடம்பெற்றிருக்கிறது எனும் சந்தேகத்தை வலுக் கச் செய்கிறது.தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்ற அகழ்வுப் பணிகளின் போது கிடைக்கின்ற எமது உறவுகளின் எலும்புக் கூட்டுத் தொகுதிகள் ஒவ்வொன்றும் மிகவும் பாதுகாப்பாகவும், நுட்பமாகவும் அகழ்ந்து முழுமையாக வெளியில் எடுக்கப்பட்டு அவைகள் நீதிமன்றக் கட்டு காவ லில் வைக்கப்படுவதோடு அங்கு கிடைக்கப் பெறுகின்ற ஏனைய சான்றுப் பொருட்களும் மிகவும் பாதுகாப்பாகவும், நுட்பமாகவும் அகழப்பட்டு நீதிமன்றக் கட்டுக்காவலில் வைக்கப்படுகி றது.
இதேவேளை தொடர்ந்தும் இடம்பெற்று வந்த அகழ்வுப் பணிகளின் போது காலநிலையில் மாற்றங்கள் ஏற்பட்டு முதலாம் கட்ட அகழ்வுப் பணிகளின் மூன்றாம் நாளில் மழை குறுக்கிட்டது போன்று ஏற்பட்டு விடலாம் எனும் கணிப்பின் அடிப்படையில் மழை பெய்தால் வெள்ள நீர் தேங்காமல் வழிந்து ஓடும் வகையிலே JCB இயந்திரம் மூலம் கான் வெட்டும் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது, அவ்வாறு JCB இயந்திரம் மூலமாக கான் வெட்டுகின்ற போது அகழப்பட்ட பகுதிகளிலும் கூட சில மனித எலும்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டதனால் அந்த கான் வெட்டும் பணி நிறுத்தப்பட்டதோடு அந்த இடங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு அகழ்வுப் பணிகளுக்காகக் காத்திருக்கிறது.
26.06.2025 முதல் 10.07.2025 வரையான இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளுக்கான 15 நாட்கள் முடிவில் இதுவரை 65 எலும்புக் கூட்டுத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப் பட்டிருக்கின்றன, இவைகளில் பாதிக்கப்பட்ட தரப்பு அல்லது முறைப்பாட்டாளர் கள் சார்பாக சொல்லப்பட்ட பிரதேசங்களில் இருந்து 63 முழுமையான மண்டையோடுகள் சகிதமான எலும்பு கூட்டுத் தொகுதிகளும், பேராசிரியர் ராஜ் சோமதேவா அவர்களினால் சற்றலைட் மூலமாக அடையாளப்படுத்தப்பட்ட இடத்தில் இருந்து இரண்டு முழுமையான மண்டையோடு சகிதமான எலும்புக் கூட்டுத் தொகுதிகள் உள்ளடங்கலாகவே இந்த 65 எலும்புக்க்கூட்டுத் தொகுதிகளும் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டு சட்ட வைத்திய அதிகாரிகள் மூலமாக நீதிமன்றக் கட்டுக்காவலில் வைக்கப்பட்டிருக்கிறது. அத்து டன் அங்கு பெறப்பட்ட ஏனைய சான்றுப் பொருட்களும் நீதிமன்றக் கட்டுக்காவலுக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது.
எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர் பேராசிரியர் திரு.ராஜ்  சோமதேவா  அவர்களினால் யாழ் நீதிமன்றில் இந்த இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் தொடர்பான செயற்பாட்டு அறிக்கை தொடர்பிலான தகவல்களை வழங்குமாறு கௌரவ நீதிமன்றினால் பணிக்கப்பட்டுள் ளது. அதேபோன்று மனித என்பு எச்சம் 25 மற்றும் பாடசாலைப் புத்தகப் பையுடன் அகழ்ந்து எடுக்கப்பட்ட வேறு பல சான்றுப் பொருட்களுடனும் எடுக்கப்பட்ட என்புகள்  தொடர்பான மனித  என்பு ஆய்வு தொடர்பிலான அறிக்கைகளையும் சட்ட வைத்தியர் திரு. பிரணவன் செல்லையா அவர்களினால் வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர் நீதிமன்றில் தாக்கல் செய்யுமா றும் கட்டளை ஒன்று உள்ளது.
இதேவேளை அகழ்வுப் பிரதேசம் இலக்கம் இரண்டில் ஒரு இடத்தில் ஒரு பொலித்தின் பையில் கட்டி வைக்கப்பட்ட நிலையில் சில என்புக் குவியல்களும் காணப்பட்டுள்ளன என்பதும் குறிப் பிடத்தக்கது.
அதில் சிறிய மற்றும் பெரிய எலும்புகளும் காணப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக மன்றில் தோன்றும் சட்டத்தரணிகளால் நீதவா னின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டு அந்த என்புகளும் ஆய்வுகள் செய்யப்பட்டு அதன் அறிக்கைகளும் மன்றிற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் விண்ணப்பம் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் கௌரவ நீதவான் அவர்கள் சட்ட வைத்திய அதிகாரி திரு செ.பிரணவன் தலைமையில் ஒரு குழு அமைத்து அது தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறும் கூறப் பட்டுள்ளது.
செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளுக்கான இரண்டாம் கட்டத்திற்கு மொத் தமாக 45 நாட்கள் தீர்மானிக்கப்பட்டு அந்த தீர் மானத்திற்கு அமைவாக நீதி அமைச்சினால் நிதி தொடர்பான விடயம் பாராளுமன்றத்தில்  அங்கீகரிக்கப்பட்டு   நீதி அமைச்சால் கூறப்பட்ட நிதி முழுவதும் யாழ்ப்பாண மேல் நீதிமன்ற கணக்காய்வுப் பகுதிக்கு கையளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 45 நாளில் முதல் கட்டமாக 15 நாட்கள் அகழ்வுப் பணிகள் காலை 07.30 முதல் இரவு சுமார் பத்து மணி வரையும் நீடிக்கும் வகையிலாக தொடர்ச்சியாக இடம்பெற்று வந்திருந்தது.
இறுதி நாளில் (10.07.2025) பேராசிரியர் ராஜ் சோ மதேவா மற்றும் அவரது குழுவினர் டாக்டர் பிரணவன் செல்லையா மற்றும் பல சட்ட வைத்திய அதிகாரிகளும் தென்னிலங்கையைச் சேர்ந்த மேலும் ஆறு சட்ட வைத்திய அதிகாரிகள், தொல்லியல் துறை மாணவர்கள் 14 பேர் யாழ் வைத்திய பீட மாணவர்கள் மற்றும் ஆரம்பத்தில் குறிப்பிட்டது போன்று  பணியாளர்களும்,நீதிபதி,  சட்டத்தரணிகள், வைத்தியர்கள், சட்ட வைத்திய அதிகாரிகள், காவல் துறையினர் பணியாளர்கள் அதிகாரிகள் தொல்லியல் துறையினர் பல்கலைக் கழக மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டு இடம்பெற்றிருந்தது.
இப்பணியில் ஈடுபட்ட இவர்களுக்கான ஓய்வும் தேவை என்ற அடிப்படையில் பத்தாம் திகதி (10.07.2025) முதல் 10 நாட்கள் ஓய்வு வழங்கப்பட்டு எதிர் வருகின்ற 21 ஆம் திகதி (21.07.2025) முதல் மீண்டும் அடுத்த கட்டப் பணிகள் ஆரம்பமாகும் என்பதோடு அதுவரையும் இந்த இடம் வழமை போன்று பாதுகாக்கப்பட்ட இடமாகப் பாதுகாக்கப்படுவதோடு ஏற்கனவே அங்கே பொருத்தப்பட்டிருக்கின்ற இரண்டு சிசிடிவி கேமராக்களுக்கு மேலதிகமாக இன்னும் இரண்டு சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தொடர்ந்தும் கண்காணிப்பு பணிகள் இடம்பெறுவதோடு மீண்டும் அடுத்த கட்ட அகழ்வு பணிகள் தொடரும் என்று கூறப்பட்டிருக்கிறது.

உக்ரைன் போர் : ரஷ்யாவுக்கு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை

அடுத்த 50 நாட்களுக்குள் உக்ரைனுடன் போர் நிறுத்தத்திற்கு விளாடிமிர் புதின் ஒப்புக் கொள்ளாவிட்டால், ரஷ்யா மீது கடுமையான வரிகள் விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து வெள்ளை மாளிகையில் நிருபர்களிடம் பேசிய அவர், “நாங்கள் இரண்டாம் நிலை வரிகளை அமல்படுத்த இருக்கிறோம். 50 நாட்களில் ரஷ்யா – உக்ரைன் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படவில்லை என்றால், ரஷ்யா மீது 100 சதவீத வரிகள் விதிக்கப்படும். அதிபர் புதின் மீது நான் மிகவும் அதிருப்தியில் இருக்கிறேன். தான் சொல்லும் விஷயங்களை செய்யக்கூடிய நபராக நான் அவரை நினைத்திருந்தேன். அவர் மிகவும் அழகாக பேசுவார். ஆனால் இரவில் மக்கள் மீது குண்டுகளை வீசுவார். ரஷ்யாவிற்கு எதிரான போரில் உக்ரைனுக்கு ஆதரவாக நேட்டோ படைகளுக்கு அமெரிக்கா அனுப்பும் ஆயுதங்களில் பேட்ரியாட் ஏவுகணைகள் மற்றும் பேட்டரிகள் இடம்பெறும்” இவ்வாறு ட்ரம்ப் தெரிவித்தார்.

கடந்த வாரம் செய்திகயாளர்களிடம் பேசும்போதும் கூட புதின் மீதான அதிருப்தியை ட்ரம்ப் வெளிப்படுத்தியிருந்தார். “புதின் நிறைய மக்களை கொல்வதால் நான் அவர் மீது அதிருப்தியில் இருக்கிறேன்” என்று அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

திருகோணமலையில் சட்டவிரோத கட்டடத்தை அகற்றுவகதற்கு உத்தரவு!

திருகோணமலை உட்துறைமுக வீதியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டடத்தினை அகற்றக்கோரி கட்டளை இடப்பட்டுள்ளது.

கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்கள அதிகாரிகளினால் ஆணையாளர் நாயகத்தினால் ஒப்பமிடப்பட்டு கட்டளை ஒன்று குறித்த பகுதியில் இன்று ஒட்டப்பட்டுள்ளது.

திருகோணமலை உட்துறைமுக வீதியில் மீன்பிடி படகுத்துறை பகுதியில் கட்டப்பட்டுள்ள 28.20 அடி நீளம் மற்றும் 09.10 அடி அகலத்தைக் கொண்ட கட்டடம், 44.7 அடி நீளம், 09.10 அடி அகலம் கொண்ட கழிப்பறை மற்றும் 17.5 அடி அகலம் கொண்ட கட்டிடம் ஆகியவற்றை அறிவிப்பு வெளியிடப்பட்ட திகதியில் இருந்து 07 நாட்களுக்குள் அகற்றுமாறும், குறித்த அறிவிப்பால் பாதிக்கப்பட்ட நபர் 3 நாட்களுக்குள் கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்களம் பொறுப்பான அமைச்சின் செயலாளரிடம் அதற்கு எதிராக மேன்முறையீடு செய்யலாம் எனவும் குறித்த கட்டளையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

1988 ஆம் ஆண்டின் 64 ஆம் எண் மற்றும் 2011 ஆம் ஆண்டின் 49 ஆம் எண் சட்டங்களால் திருத்தப்பட்ட, 1981 ஆம் ஆண்டின் 57 ஆம் எண் கடலோர பாதுகாப்பு மற்றும் கடலோர வள மேலாண்மைச் சட்டத்தின் பிரிவு 31 (2) இன் கீழ் வெளியிடப்பட்ட உத்தரவின் பிரகாரம் குறித்த அறிவிப்பை வெளியிடுவதாகவும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான குறித்த பகுதியில் சில மீனவர்கள் மீன் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டுவந்த நிலையில் சில வருடங்களுக்கு முன்னர் அவர்கள் வெளியேற்றப்பட்டு சுற்றுலாத்துறையினரால் குத்தகைக்கு எடுக்கப்பட்டு தனியார் ஒருவருக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், இதில் உரிய அரச திணைக்களங்களில் சட்ட அனுமதி பெறப்படாத உணவு விடுதி ஒன்று இயங்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்ட நிலையில் குறித்த கட்டளை ஒட்டப்பட்டுள்ளது.

விசா விதிமுறைகளை மீறிய 10 வெளிநாட்டவர்கள் கைது

சுற்றுலா விசாவில் நாட்டிற்குள் நுழைந்து தொழில் ஈடுபட்டதற்காக மொத்தம் 10 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு – 03 பகுதியில் அமைந்துள்ள ஒரு மசாஜ் நிலையத்தில் குடிவரவு மற்றும் குடியல்வுத் திணைக்கள அதிகாரிகள் நேற்று (14) மாலை நடத்திய சிறப்பு சோதனையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மீனவர் பிரச்சினை: இந்திய உயர்ஸ்தானிகருடன் கடற்றொழில் அமைச்சர் சந்திப்பு

கொழும்பு, ஜூலை 14, 2025 – கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகருக்கும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அவர்களுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு திங்கட்கிழமை (14) கடற்றொழில் அமைச்சில் நடைபெற்றது. இச்சந்திப்பில் மீனவர் நலன், கடல்வள பாதுகாப்பு, கடற்றொழில் துறை அபிவிருத்தி மற்றும் இருதரப்பு ஒத்துழைப்புக்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

வடக்கு மீனவர்கள் கடந்த மூன்று தசாப்த கால யுத்தத்திற்குப் பிறகு பெரும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் மீன்பிடித்தொழிலை மேற்கொண்டு வருவதாகவும், அவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சந்திரசேகர் சுட்டிக்காட்டினார். இதற்கிடையில், தமிழ்நாட்டு மீனவர்களின் சட்டவிரோத ‘Bottom trawling’ மீன்பிடிப் படகுகளால் கடல்வளம் பெரிதும் பாதிக்கப்படுவதால், அதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு உயர்ஸ்தானிகரிடம் கேட்டுக்கொண்டார்.

இதற்குப் பதிலளித்த இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, ‘Bottom trawling’ மீன்பிடி முறை தமிழ்நாட்டிலும் தடை செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போது மீனவர்களை ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபட ஊக்குவித்து வருவதாகவும் தெரிவித்தார். தமிழ்நாட்டு மீனவர்களும் மிகக் குறைந்த நாட் கூலிக்கு வேலை செய்யும் வறிய மக்கள் என்பதை வலியுறுத்திய அவர், கலாச்சார ரீதியாகவும் ஒரே மொழி பேசக்கூடியவர்கள் என்ற அடிப்படையிலும் இருதரப்பு மீனவர்களுடனான கலந்துரையாடல்களை ஊக்குவிப்பதன் மூலம் புரிதலை ஏற்படுத்தவும் பிரச்சினைகளுக்கான தீர்வுகளைக் காண்பதற்கான அடித்தளத்தை உருவாக்க முடியும் என்று தெரிவித்தார்.

கடந்த காலங்களிலும் தமிழ்நாட்டு மீனவர்கள் குழு இலங்கை வந்து சென்றதாகவும், தான் தமிழ்நாடு சென்றபோது அவர்களைச் சந்தித்து சகோதரத்துவத்துடன் சுமூகமான கலந்துரையாடல்களை மேற்கொண்டதாகவும் அமைச்சர் ராமலிங்கம் நினைவுகூர்ந்தார். உயர்ஸ்தானிகரின் கோரிக்கையை ஏற்று, வருங்காலத்திலும் இருநாட்டு மீனவ சமூகங்களுக்கிடையில் சந்திப்புக்களையும் கலந்துரையாடல்களையும் அதிகரித்து புரிதலை வலுப்படுத்த இணக்கம் தெரிவித்தார்.

கடற்றொழில் துறை அபிவிருத்தி குறித்துப் பேசிய அமைச்சர் சந்திரசேகர், வடக்கு மற்றும் கிழக்கில் மீனவத் துறைமுகங்கள் இல்லை எனவும், பேசாலை, குருநகர் மற்றும் பருத்தித்துறை போன்ற இடங்களில் அதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் தெரிவித்தார். ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபடுவதற்கான படகு வசதிகளும், களஞ்சிய வசதிகளும் வடக்கு மீனவர்களிடம் இல்லை என்பதையும், ஒன்றிரண்டு சிறிய படகுத்துறைகளை அமைக்க சர்வதேச உதவிகளையும் எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

மீனவத் துறை சார்ந்த அபிவிருத்திகளுக்கு ஒத்துழைப்பு நல்குவது குறித்து சாதகமான பதிலை வழங்கிய இந்திய உயர்ஸ்தானிகர், விரைவாகப் இந்திய உதவியில் பருத்தித்துறை மீனவத் துறைமுகப் பணிகளை ஆரம்பிப்பது குறித்த ஆர்வத்தை வெளிப்படுத்தினார். அரசாங்கத்துக்குச் சொந்தமான படகு உற்பத்தி நிறுவனமான சீனோர் நிறுவனத்தின் கட்டட நிர்மாணப் பணிகளுக்கும் இந்தியா உதவிகளை வழங்க எதிர்பார்த்துள்ளதாக அவர் மேலும் தெரிவத்தார்.

மேலும், இந்தியா உதவியில் நிர்மாணிக்கப்பட்ட கலாச்சார மத்திய நிலையத்தை ஒரு நம்பிக்கை நிதியத்தின் மூலம் முறையாக முகாமைத்துவம் செய்வது குறித்தும், அச்சுவேலி தொழிற்துறை வலய (Industrial Zone) நிர்மாணம் மற்றும் அதற்கு இந்திய முதலீட்டாளர்களின் ஒத்துழைப்புகள் கோரப்பட்டுள்ளது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன், நாகப்பட்டினம் – காங்கேசன்துறை பயணிகள் கப்பல் சேவை போன்று தலைமன்னார் மற்றும் ராமேஸ்வரம் இடையிலான பயணிகள் கப்பல் சேவை ஆரம்பிப்பது குறித்தும் காங்கேசன்துறை துறைமுகத்தை நவீனமயமாக்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தயாராகிவிட்டதாகவும், விரைவாக சரக்கு சேவைகளை ஆரம்பிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் இந்திய உயர்ஸ்தானிகர் கேட்டறிந்தார்.

திருகோணமலை சேர்ந்த இளைஞருக்கு பயங்கரவாத தடுப்பு பிரிவு விசாரணைக்கு அழைப்பாணை!

IMG 20250714 WA0120 திருகோணமலை சேர்ந்த இளைஞருக்கு பயங்கரவாத தடுப்பு பிரிவு விசாரணைக்கு அழைப்பாணை!

திருகோணமலை தம்பலகாமம் பகுதியை சொந்த இடமாகக் கொண்ட கனேசலிங்கம் சிந்துஜன் (35) என்ற அரசியல் மற்றும் சமூக செயற்பாட்டாளருக்கு இன்று (15.07.2025)  பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு விசாரணைக்கு வரக்கோரி அழைப்பானை  வழங்கப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டு தியாகி திலீபன் அவர்களின் நினைவேந்தல் ஊர்தி திருகோணமலை நகருக்கு வருகை தரும் பொழுது அதன் மீது சர்தாபுரம் என்ற இடத்தில் வைத்து சிங்களக் காடையர்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தின் போது பாதிக்கப்பட்ட குறித்த நபரே விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். மேலும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கடந்த பாராளுமன்றத் தேர்தல் வேட்பாளராகவும் குறித்த நபர் களமிறங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தியாகி திலீபனது ஊர்தி தாக்கப்பட்ட விவகாரத்தில் குறித்த வழக்கு முறையற்ற விதத்தில் இடம்பெற்றிருந்தமையும், தாக்குதல் மேற்கொண்ட நபர்கள் முறையற்ற விதத்தில் விடுதலை செய்யப்பட்டமையும் பல்வேறுபட்ட தரப்புகளாக கண்டிக்கப்பட்ட நிலைமையில், பாதிக்கப்பட்ட தரப்பினரை மீண்டும் துன்புறுத்தும் வகையிலான செயற்பாடுகளை தற்போதைய அரசாங்கம் மேற்கொண்டு வருவது  சமூக செயற்பாட்டாளர்களால் கண்டிக்கப்படுகின்றது.

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி : கண்டறியப்பட்ட பகுப்பாய்வு முடிவு

முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வில் கண்டெடுக்கப்பட்ட 52 மனித என்புத் தொகுதிகளில், உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் இளவயதினர் என்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் பெரும்பாலானவர்கள் வெடிப்புக் காயங்களால் உயிரிழந்துள்ளமையும், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளமையும் பகுப்பாய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி கடந்த ஆண்டு ஜூன் மாதம் 29 ஆம் திகதி அடையாளம் காணப்பட்டது. குழாய் நீர் பொருத்தும் நடவடிக்கைகளுக்காக மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளின்போது முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் பிரதான வீதியோரத்தில் இந்த மனிதப் புதைகுழி அடையாளம் காணப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக அகழ்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

முல்லைத்தீவு நீதிமன்றம், முல்லைத்தீவு சட்ட மருத்துவ அதிகாரி கே.வாசுதேவா மற்றும் யாழ்ப்பாணம் சட்ட மருத்துவ அதிகாரி செ.பிரணவன் ஆகியோரின் கண்காணிப்பு மற்றும் பங்குபற்றுதல்களுடன், தொல்லியல் துறைப் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு நடவடிக்கையில் 52 மனித என்புத் தொகுதிகள் அங்கிருந்து மீட்கப்பட்டன.

அத்துடன் ஆடைகள், துப்பாக்கி ரவைகள் உட்பட வேறு தடயப் பொருள்களும் மீட்கப்பட்டிருந்தன.

இந்தநிலையில் கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வில் கண்டுபிடிக்கப்பட்ட எலும்புத் தொகுதிகளின் பகுப்பாய்வு அறிக்கையில் இறந்தவர்கள் ஏன் இறந்தார்கள்? என்ன காரணத்தால் இறந்தார்கள்? அவர்களின் வயது எத்தனை? போன்ற விபரங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

மீட்கப்பட்ட என்புத் தொகுதிகளில் 31 பெண்களுடையவை என்றும், 21 ஆண்களுடையவை என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

இறந்தவர்களின் வயது எல்லை 12 முதல் 53 வயது வரை உள்ளது. அதேநேரம் பெரும்பாலானவர்கள் 13 முதல் 30 வயதுடையவர்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. 32 பேரின் உயிரிழப்புக்கு வெடிப்புச் சம்பவம் அல்லது வெடிப்புக் காயம் காரணமாகவுள்ளது.

துப்பாக்கிச் சூட்டுக் காயத்தால் 7 பேர் உயிரிழந்துள்ளனர். வெடிப்புச் சம்பவம் மற்றும் துப்பாக்கிச் சூடு காரணமாக 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

பெரும்பாலான உயிரிழப்புகள் வெடிப்புக் காயங்களால் ஏற்பட்டுள்ளன என்பது பகுப்பாய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

லண்டனில் இடம்பெற்ற விமான விபத்து – நால்வர் பலி

பிரித்தானியாவில் லண்டன் சவுத்தெண்ட் (Southend) விமான நிலையத்தில் சிறிய ரக விமானமொன்று விபத்துக்குள்ளானதில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.

சவுத்தெண்ட் விமான நிலையத்தில் இருந்து அந்நாட்டு நேரப்படி நேற்று மாலை 04 மணிக்கு சிறிய ரக விமானம் நெதர்லாந்து புறப்பட்டது.

விமானம் புறப்பட்ட சில விநாடிகளில் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதன்போது விமானம் தீப்பற்றி ஏரிந்துள்ளது.

விமான விபத்தில் இரண்டு விமானிகள் மற்றும் இரண்டு பயணிகள் என நால்வர் உயிரிழந்ததாக 24 மணி நேரத்தின் பின்னர் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விபத்துக்கான காரணம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

தமிழர் தரப்பை குற்றவாளியாக காண்பிக்க முயற்சி: தமிழரசுக் கட்சி சாடல்

இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்களில் ஈடுபட்ட படையினர் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் மாறாக தமிழர் தரப்பை குற்றவாளியாக காண்பிக்கும் முயற்சி இடம்பெறுகின்றது என்றும் இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக்குழுத் தலைவர் எஸ். சிறிதரன் தெரிவித்தார்.

மலையகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். ‘உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் உட்பட சில விடயங்களை தமிழ் தரப்புகள்தான் செய்தன என்பதுபோல் வெளியில் ஒரு மாயை காட்டப்படுகின்றது. இதற்கு பின்னால் இருந்து ஆட்சி அமைத்த கோட்டாபய ராஜபக்ச மற்றும் மஹிந்த குடும்பம் மீது இதுவரையில் எந்த பாய்ச்சல்களையும் இந்த அரசாங்கம் செய்யவில்லை’ என்று அவர் கூறியுள்ளார்.

இன அழிப்பு மற்றும் போர்க்குற்றங்களை செய்த  இராணுவத் தளபதிகள் மீதோ அல்லது அதனை மேற்கொண்ட அரசுகள் மீதோ எந்த விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லை. இந்நிலையில் தமிழ் தரப்பை குற்றவாளியாக காண்பிக்கும் முயற்சி இடம்பெறுகின்றது.

இது தொடர்பில் நாம் கூடுதல் அவதானத்துடன் இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வடக்கு, கிழக்கை விடவும் மலையகத்திலேயே காணியில்லாப் பிரச்சினை, வாழ்வியல் பிரச்சினை, எதிர்காலம் பற்றிய நம்பிக்கையின்மை உள்ளிட்டவை அதிகளவு காணப்படுகின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தற்போது வழங்கப்படுகின்ற நாளாந்த சம்பளம் போதுமானது அல்ல.  தற்போதைய சூழ்நிலையில் நாளொன்றுக்கு 5 ஆயிரம் ரூபா கூட போதாது.  நியாயமான மற்றும் நிரந்தர சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்றும் அதற்காக இலங்கை தமிழரசுக் கட்சி தொடர்ந்து குரல் கொடுக்கும் என்றும் இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக்குழுத் தலைவர் எஸ். சிறிதரன் தெரிவித்தார்.