Home Blog Page 86

காணாமல் ஆக்கப்பட்ட அனைவருக்கும் நீதி கோரி மன்னாரில் கையொப்பம் சேகரிப்பு!

‘சம உரிமைகளை வெல்வோம் இனவாதத்தை முடிவுக்கு கொண்டு வருவோம்’ எனும் தொனிப்பொருளில் சம உரிமை இயக்கம் ஏற்பாடு செய்த எதிர்ப்பு பதாகையில் கையொப்பமிடும் நிகழ்வு இன்று (16)   மன்னார் பஜார் பகுதியில் இடம்பெற்றது.

இதன்போது காணாமல் ஆக்கப்பட்ட அனைவருக்கும் நீதி வழங்கு, இன்னொரு அடக்குமுறைச் சட்டங்கள் வேண்டாம், பயங்கரவாத தடைச் சட்டத்தை உடனடியாக ரத்து செய், அனைத்து தேசிய இனங்களுக்கு சம உரிமைகளை உறுதி செய்யும் அரசியல் அமைப்பிற்காக போராடுவோம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து எதிர்ப்பு பதாகையில் கையொப்பம் சேகரிக்கப்பட்டது.

இதன்போது பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்து கையொப்பத்தை பதிவு செய்தனர்.

பிரேசில், சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு நேட்டோ எச்சரிக்கை

பிரேசில், சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் ரஷ்யாவுடன் தொடர்ந்து வணிகம் செய்தால் கடுமையான பொருளாதாரத் தடைகளை சந்திக்க நேரிடும் என்று நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ரூட்டே எச்சரித்துள்ளார்.

அமெரிக்க செனட்டர்களைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ரூட்டே, “ சீனா, இந்தியா, பிரேசில் ஆகிய நாடுகளின் தலைவர்கள் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினிடம் உக்ரைன் போர் நிறுத்தத்துக்கான சமாதானப் பேச்சுவார்த்தைகளை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டுமென வலியுறுத்த வேண்டும். பேச்சுவார்த்தையை தீவிரமாக எடுத்துக்கொள்ளாத ரஷ்யாவுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்து அவர்களின் எண்ணெய் மற்றும் எரிவாயுவை வாங்கினால், உங்களுக்கு 100 சதவீதம் வரி விதிக்கப்படும். இந்த மூன்று நாடுகளும் இதனை முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டும். ஏனெனில் இந்த வரிகள் உங்களை மிகவும் கடுமையாக பாதிக்கும்.

எனவே இந்த மூன்று நாடுகளின் தலைவர்களும் விளாடிமிர் புதினுக்கு தொலைபேசி அழைப்பு விடுத்து, அமைதிப் பேச்சுவார்த்தைகளில் தீவிரமாக இருக்க வேண்டும் என்று அவரிடம் சொல்லுங்கள். இல்லையெனில் பிரேசில், இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் மீது மிகப்பெரிய பொருளாதார தடைகள் விதிக்கப்படும்” என்றார்

ட்ரம்பின் அச்சுறுத்தல்களுக்கு பதிலளிக்கும் விதமாக பேசிய ரஷ்ய துணை வெளியுறவு அமைச்சர் செர்ஜி ரியாப்கோவ், “ ட்ரம்ப்புடன் பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா தயாராக உள்ளது. ஆனால் இறுதி எச்சரிக்கைகள் விடுப்பது ஏற்றுக்கொள்ள முடியாதவை. இது எந்த பலனையும் தராது.” என்றார்.

கடந்த 6 மாதங்களில் 144,000 பேர் தொழிலுக்காக வெளிநாட்டுக்கு பயணம்!

2025 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலான ஆறு மாத காலப்பகுதியில், 1,44,379 இலங்கையர்கள் வேலைவாய்ப்பிற்காக வெளிநாடுகளுக்குப் பயணித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

பெண் தொழிலாளர்களுடன் ஒப்பிடுகையில், ஆண் தொழிலாளர்கள் இந்த காலப்பகுதியில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு செல்லும் அளவு குறிப்பிடக்களவில் அதிகரித்துள்ளதுடன் இந்த காலப்பகுதியில் 88,684  ஆண் தொழிலாளர்கள் வெளிநாட்டு வேலைக்காக சென்றுள்ளனர்.

அதே நேரம் இந்த 6மாத  காலத்துக்குள்  55,695 பெண் தொழிலாளர்களும் வேலைவாய்ப்பிற்காக வெளிநாடு சென்றுள்ளனர்.

இலங்கை தொழிலாளர்கள் பெரும்பாலானோர் வேலைவாய்ப்பிற்காக குவைட் நாட்டுக்கே சென்றுள்ளதுடன் அதன் எண்ணிக்கை 38,806 ஆகும்.

அதற்குப் பின்னர், 28,973 தொழிலாளர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டிற்கும், 21,958 பேர் கட்டார் நாட்டிற்கும் வேலைவாய்ப்பிற்காக இந்த காலப்பகுதியில் சென்றுள்ளனர்.

சம்பிரதாய மத்திய கிழக்கு நாடுகளை தவிர்ந்து கிழக்கு ஆசிய நாடுகளுக்கு இலங்கை தொழிலாளர்கள் அனுப்பப்டுவதில் அதிக முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

அதன் பிரகாரம் ஜப்பான் நாட்டுக்கு 6073 பேரும் தென்கொரியாவுக்கு 3134 பெரும் தொழில் நிமித்தம் வெளிநாட்டுக்கு சென்றுள்ளனர்.

இதேவேளை, 2025 ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்பில் இருந்துவரும் இலங்கையர்கள் 3.73 பில்லியன் டொலர்களை நாட்டுக்கு அனுப்பியுள்ளனர்.

கடந்த  வருடத்தில் முதல் 6 மாதங்களில் வெளிநாட்டு தொழிலாளர்கள் நாட்டுக்கு அனுப்பிய வெளிநாட்டு செலாவணியின் அளவு 3.14 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.

இதனுடன் ஒப்பிட்டால், 2025 ஆம் ஆண்டு வெளிநாட்டு செலாவணி கிடைப்பது  18.9வீதம்  அதிகரித்துள்ளது. மேலும், 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் மாத்திரம்  635.7 மில்லியன் அமெரிக்க டொலர் பணப்பரிமாற்றம் இலங்கை தொழிலாளர்களால் நாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதனை அடிப்படையாகக் கொண்டு, 2025 ஆம் ஆண்டில் மொத்தமாக 7 பில்லியன் அமெரிக்க டொலர் பணப்பரிமாற்ற வருவாயை நாடு பெற்றுக்கொள்ளும் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

அமெரிக்கா விதித்துள்ள வரியால் இலங்கைக்கு பாதிப்பு: ஆடைத் துறை வல்லுநர்கள் எச்சரிக்கை

“பரஸ்பர வரி” முறையின் கீழ் அமெரிக்கா இலங்கை மீது விதித்துள்ள 30 வீத வரியை இலங்கை குறைக்கத் தவறினால், அமெரிக்க ஆடை வாங்குபவர்கள் குறைந்த வரிச் சலுகைகளைக் கொண்ட பிற நாடுகளை நோக்கித் திரும்பும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஆடைத் துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த 30 வீத வரி ஓகஸ்ட் முதலாம் திகதி முதல் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. வியட்நாமிற்கு தற்போது 20 வீத வரி விதிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்தியாவிற்கு 20 வீதத்திற்கு குறைவான வரி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்படி, இலங்கை மீது விதிக்கப்பட்ட 30 வீத வரியைக் குறைக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட வேண்டும் என்று ஆடைத் துறை வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர்.

இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வரவிருக்கும் வர்த்தக ஒப்பந்தம் காரணமாக இந்தியா மீது 20 வீதத்திற்கு குறைவான வரி விதிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அத்தகைய சூழ்நிலையில், இலங்கையின் ஆடைத் தொழிலுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் இந்தியாவிலிருந்து வரக்கூடும் என்று ஆடை தொழில்துறை வல்லுநர்கள் கூறுகின்றனர்.

கடந்த ஆண்டு, இலங்கையின் ஆடை ஏற்றுமதி வருவாய் 4.7 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது, அதில் 40.04 வீதம் அல்லது 1.9 பில்லியன் அமெரிக்க டொலர்கள் அமெரிக்காவிற்கான ஏற்றுமதிகள் மூலம் ஈட்டப்பட்டது.

இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில், ஆடை ஏற்றுமதி வருவாய் இரண்டு பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது, அதில் 746.53 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அமெரிக்க சந்தைக்கான ஏற்றுமதிகள் மூலம் ஈட்டப்பட்டது.

இலங்கையின் முக்கிய ஆடை ஏற்றுமதி சந்தை அமெரிக்கா என்பதுடன் இரண்டாவது பெரிய சந்தை இங்கிலாந்து ஆகும். கடந்த ஆண்டு, ஆடை ஏற்றுமதியில் அமெரிக்கா 40.04 வீத பங்கைக் கொண்டிருந்தது, அதே நேரத்தில் இங்கிலாந்து 14.17 வீத பங்கைக் கொண்டிருந்தது.

ஜனாதிபதியின் மூத்த பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவா சமீபத்திய செய்தியாளர் கூட்டத்தில், அமெரிக்கா நாட்டின் முக்கிய ஆடை சந்தை என்றும் அதை ஒரே இரவில் மாற்ற முடியாது என்றும் கூறினார்.

ஜனாதிபதி டிரம்ப் விதித்த 30 வீத வரி ஓகஸ்ட் முதலாம் திகதிக்கு முன்னர் குறைக்கப்படும் என்றும், அவ்வாறு செய்ய முடியாவிட்டால், ஆடைத் தொழில் ஆபத்தில் சிக்கக்கூடும் என்றும் ஆடை தொழில்துறை வல்லுநர்கள் கூறுகின்றனர்.

வெளிநாட்டு தூதரகங்கள் மூலம் கடவுச்சீட்டு விண்ணப்பத்திற்கு நிகழ்நிலை முறைமை – அமைச்சரவை ஒப்புதல்

உலகளாவிய ரீதியில் உள்ள 20 இலங்கைக்கான வெளிநாட்டு தூதுப்பணிக் குழுக்கள், அலுவலகங்கள் மூலம் நிகழ்நிலை முறைமை ஊடாக கடவுச்சீட்டுக்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கருத்திட்டத்தை இவ்வாண்டு தொடக்கம் அமுல்படுத்துவதற்காக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும், சுற்றுலாத்துறை அமைச்சர் மற்றும்  பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆகியோர் சமர்ப்பித்த ஒருங்கிணைந்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இலங்கையர்கள் வெளிநாடுகளில் உள்ள வெளிநாடுகளில் அமைந்துள்ள இலங்கை தூதுப்பணிக் குழுக்கள், அலுவலகங்கள் மூலம் நிகழ்நிலை முறைமை ஊடாக கடவுச்சீட்டுக்களை விண்ணப்பிப்பதற்கான முறைமையை துரிதப்படுத்துவதற்காக குறித்த செயற்பாடுகளை நிகழ்நிலையாக மேற்கொள்வதற்கு ஒத்துழைப்பு பெறுதல் தொடர்பான முன்மொழிவு புலம்பெயர்ந்தோருக்கான சர்வதேச அமைப்புக்கு  சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய 20 தூதுப்பணிக் குழுக்கள், அலுவலகங்கள் உள்ளடங்கும் வகையில் உயிர்க்குறிகள் சேரிப்பு நிலையம் மற்றும் அதற்குத் தேவையான உபகரணங்களை வழங்குதல், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்துடன் நிகழ்நிலையில் தொடர்பு கொள்வதற்கான வசதிப்படுத்தல் மற்றும் ஒருங்கிணைவதற்கு உரிய முறைமைகள்,மென்பொருட்களின் அபிவிருத்தி மற்றும் தேவையான தொழிநுட்ப உதவிகளை வழங்குவதற்கான கருத்திட்டத்தை அமுல்படுத்துவதற்கு புலம்பெயர்ந்தோருக்கான சர்வதேச அமைப்பு தேவையான நிதியுதவியை வழங்குவதற்கு இணங்கியுள்ளது.

குறித்த கருத்திட்டத்தை அமுல்படுத்துவதன் மூலம், வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் டிஜிட்டல் தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி துரிதமாகவும்,இலகுவாகவும் கடவுச்சீட்டுகளை பெற்றுக் கொள்வதற்கான வசதிகளை வழங்குவதை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.

அதற்கமைய, அடையாளங் கண்டுள்ள 20 இலங்கைக்கான வெளிநாட்டு தூதுப்பணிக் குழுக்கள்,அலுவலகங்கள் மூலம் நிகழ்நிலை முறைமை ஊடாக கடவுச்சீட்டுக்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கருத்திட்டத்தை இவ்வாண்டு தொடக்கம் அமுல்படுத்துவதற்காக வெளிவிவகார,வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும், சுற்றுலாத்துறை அமைச்சர் மற்றும்  பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆகியோர் சமர்ப்பித்த ஒருங்கிணைந்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

செம்மணி மனித புதைகுழி அகழ்வு- 21ம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படும்!

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகளை எதிர்வரும்  21 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

செம்மணி மனித புதைகுழி அகழ்வு வழக்கு செவ்வாய்க்கிழமை (15) யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

வழக்கு தொடர்பான விடயங்களை காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி ஜெகநாதன் தற்பரன் தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்;

தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவாவின் இரண்டாம் கட்ட செயற்பாடுகள் தொடர்பிலான அறிக்கையும் சட்ட வைத்திய அதிகாரி பிரணவனின் அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டது. அது தொடர்பான சுருக்கமான விவரங்கள் மன்றுக்கு சமர்ப்பிக்கப்பட்டது. இதன்போது மூன்று விடயங்களை கோடிட்டு காட்டியுள்ளனர்.

மனித புதைகுழியில் குற்றவியல் சம்பவம் நடந்ததற்கான தடயங்கள் இருப்பதாக தாங்கள் கருதுவதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

வழமையான சடலங்கள் தகனம் செய்யப்பட்ட தோற்றுவாய்கள் அங்கே காணப்படவில்லை என்ற விடயமும் மூன்றாவது இது சம்பந்தமாக மேலதிகமான ஆய்வுகள் தேவை என்ற விடயமும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எஸ் 25 ,எஸ் 48 , எஸ் 56 என அடையாளப்படுத்தப்பட்ட சிறுவர்களது என நம்பப்படும் எலும்புக்கூடுகள் தொடர்பான ஆய்வின் முடிவுகள் மிக முக்கியமானதாக காணப்பட்டது. உடுப்பு உடைகள், எலும்பியல் சம்பந்தமான விடயங்களில் ஒருமித்த தன்மை இருந்ததாக கூறப்பட்டது.

அதிலும் குறிப்பாக நான்கு தொடக்கம் 5 உத்தேச வயதை கொண்ட சிறுமியின் உடைய எலும்புக்கூடாக இருக்கலாம் என்ற சந்தேகத்தினை பேராசிரியர் வெளியிட்டு இருந்தார்.

அதனை தொடர்ந்து  சட்டத்தரணிகள், பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் ஆகியோர் தமது பிரசன்னம் இந்த மனிதப் புதைகுழி அகழ்வு பிரதேசத்தில் கட்டாயம் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்தக் கோரிக்கையை மன்ற பரிசீலனைக்கு எடுத்தது.

அடுத்த அகழ்வு பணிகளை 21 ஆம் திகதி ஆரம்பிப்பதாக சட்ட வைத்திய அதிகாரி மன்றுக்கு அறிவித்திருக்கிறார். ஆகவே 21ம் திகதி அகழ்வு பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் – என்றார்.

குறித்த செம்மணி புதைகுழி அகழ்வு வழக்கு ஆகஸ்ட் மாதம் 6ம் திகதி திறந்த நீதிமன்றத்தில் அழைக்கப்படவுள்ளது.

இந்திய மீனவர்களின் அத்துமீறலை கட்டுப்படுத்த முடியவில்லையெனில், மீனவர்களிடம் பொறுப்பை ஒப்படையுங்கள் – ரவிகரன்

தற்போது வடபகுதி கடற்பரப்பில் அதிகரித்துள்ள இந்திய மீனவர்களின் அத்துமீறலையும், சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளையும் கடற்படையால் கட்டுப்படுத்த முடியவில்லையெனில், முதல்வன் திரைப்பட பாணியில் அந்தப் பொறுப்புக்களை ஒரு மாதகாலத்திற்கு வடபகுதி மீனவர்களிடம் ஒப்படைக்குமாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.

மன்னார் – முசலி பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை (15) நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல் மற்றும் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பில் பேசப்பட்டது.

இந்நிலையில் கருத்துத் தெரிவிக்கும்போதே ரவிகரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்திய இழுவைப்படகுகள் எமது வடபகுதி கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து எமது மீனவர்களது வாழ்வாதாரங்களைச் சூறையாடிச்செல்கின்றன.

இந்நிலையில் இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகையினைத் தடுக்கவேண்டிய கடற்படையினரும், ஆட்சியாளர்களும் தொடர்ச்சியாக காரணங்களை மாத்திரம் சொல்கின்ற நிலையே காணப்படுகிறது.

இந்த அரசாங்கம் இந்த விடயத்தில் கூடிய கரிசனையுடன் செயற்பட்டு இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.

அத்தோடு கடற்படையினர் இந்திய மீனவர்களின் இந்த அத்துமீறலைத் தடுப்பதற்கு டோறா படகுகள் வேண்டுமென காரணங்களை இங்கு கூறிக்கொண்டிருக்கமுடியாது.

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி உள்நுழைந்து திருட்டு வேலைகளில் ஈடுபடும் இந்திய இழுவைப்படகுகளுக்கு எதிராக மிகக் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும்.

இந்திய மீனவர்களுடைய இத்தகைய அத்துமீறிய செயற்பாடுகளுக்கு இந்திய அரசும், இலங்கை அரசும் ஆதரவளிப்பதாகவே எம்மால் பார்க்கமுடிகிறது. இந்த விடயத்தில் கடற்படையினர் மீது மீனவ மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர்.

இவ்வாறாக இந்திய மீனவர்கள், எமது மீனவ மக்களின் வாழ்வாதாரங்களைச் சூறையாடி எமது மக்களை வறுமைக்கு உட்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்த அத்துமீறிய செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தவேண்டிய முழுப்பொறுப்பும் கடற்படையினருக்கு இருக்கின்றது. எமது மக்களைக் காப்பாற்ற முடியவில்லை எனில் எமது பகுதிகளில் படையினர் எதற்கு இருக்கின்றனர்.

படையினரால் இந்த அத்துமீறல் செயற்பாட்டைக் கட்டுப்படுத்த முடியவில்லையெனில் எமது மக்களிடம் அந்தப் பொறுப்பினை வழங்குங்கள்.

கடற்படையினர் முள்ளிக்குளம் கிராமத்தையும் முற்றாக அபகரித்து வைத்துக்கொண்டு, அந்த கிராமத்திற்குரிய மக்கள் மீள்குடியேறுவதற்கு தடையாக இருக்கின்றனர். எமது மக்களுடைய வீடுகளையும் கடற்படையினர் அடாத்தாக கைப்பற்றிவைத்திருக்கின்றனர்.

கடற்படையினரால் இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாட்டைக் கட்டுப்படுத்த முடியவில்லையெனில் முதல்வன் திரைப்படத்தில் ஒருநாள் முதலமைச்சரைப் போன்று இந்திய மீனவர்களைக் கட்டுப்படுத்தும் பொறுப்பையும், சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தும் பொறுப்பையும் எமது மீனவ மக்களிடம் ஒரு மாதத்திற்கு ஒப்படையுங்கள்.

எமது மீனவர்கள் இந்த அத்துமீறிய இந்திய மீனவர்களின் செயற்பாட்டையும் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளையும் கட்டுப்படுத்துவார்கள் என்றார்.

பல்வேறு காரணங்களுக்காக வெளிநாடுகளுக்குச் சென்ற 7,735 இலங்கையர்கள் உயிரிழப்பு

பல்வேறு காரணங்களுக்காக வெளிநாடுகளுக்குச் சென்ற 7,735 இலங்கையர்கள் கடந்த 15 வருடங்களில் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

எனினும் உயிரிழந்தவர்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்குச் சென்றவர்கள் தொடர்பான தகவல்கள் தங்களுடைய கட்டுப்பாட்டில் இல்லையெனவும் அமைச்சு தெரிவித்துள்ளது. தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கைக்கு பதிலளிக்கையிலேயே அந்த அமைச்சு இவ்வாறு தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில் கடந்த 15 வருடங்களில் பல்வேறு காரணங்களுக்காக வெளிநாடுகளுக்குச் சென்ற 7,735 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாகவும் அவர்களில் 4,769 பேரின் உடல்கள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ள போதும், 2,966 உடல்கள் இன்னும் நாட்டுக்கு கொண்டவரப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கொண்டு வரப்பட்ட ஒரு உடல் இன்னும் உறவினர்களால் அடையாளம் காணப்படவில்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு: உள்ளூராட்சி மன்றங்களை நிர்வகிப்பது தொடர்பில் தமிழரசுக் கட்சி கவனம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தங்களது நிர்வாகத்திற்குட்பட்ட, உள்ளூராட்சி மன்றங்களை நிர்வகிப்பது தொடர்பில் இலங்கை தமிழரசு கட்சி கவனம் செலுத்தியுள்ளது.

இதற்கமைய, மட்டக்களப்பு – கோறளைப்பற்று பிரதேச சபைக்கு இலங்கை தமிழரசு கட்சியின் குழுவொன்று விஜயம் மேற்கொண்டது.பிரதேச சபையினை எவ்வாறு நிர்வகிப்பது மற்றும் நிதி வருமானங்களை எவ்வாறு அதிகரிப்பது என்பது தொடர்பில் இந்த விஜயத்தின்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கை தமிழரசு கட்சி நிர்வாகத்துக்குட்பட்ட ஏழு உள்ளுராட்சி மன்றங்களில் நடைபெறும் விடயங்களையும் நிர்வகிப்பது தொடர்பிலும், இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

அதேநேரம், உள்ளூராட்சி மன்றங்களின் வருமானங்களை அதிகரிப்பதனை மேற்பார்வை செய்வதற்காக, மட்டக்களப்பு மாநகரசபையின் முன்னாள் முதல்வர் சரவணபவன் தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய விசேட குழு ஒன்றும் இலங்கை தமிழரசு கட்சியினால் நியமிக்கப்பட்டுள்ளது.

மக்களின் காணிகளை அரசு விடுவிக்காது இருப்பது குற்றம்: கஜேந்திரகுமார் சாடல்

518395799 1065642762340814 7246670094577682304 n மக்களின் காணிகளை அரசு விடுவிக்காது இருப்பது குற்றம்: கஜேந்திரகுமார் சாடல்

போர் முடிந்து பதினாறு வருடங்களான பின்னரும் அதிஉயர் பாதுகாப்பு வலயம் என்ற போலியான சட்டவிரோதமான கட்டமைப்புகளை தொடர்ந்தும் தக்கவைத்து பாதிக்கப்பட்ட சாதாரண தமிழ் மக்கள் தங்களின் சொந்த காணி நிலைக்கு திரும்பி போகமுடியாத நிலைக்கு இந்த அரசும் இதற்கு முதல் இருந்த அரசுகளும் , வைத்திருப்பது உண்மையில் ஏற்றுக்கொள்ள முடியாத பாரிய குற்றம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்

யாழ்ப்பாணம் வலிகாமத்தில் அதிஉயர் பாதுகாப்பு வலயம் என தெரிவித்து படையினர் கைப்பற்றிய காணிகளில் இன்னமும் விடுவிக்கப்படாத காணிகளை  விடுவிக்ககோரி ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் இன்று இடம்பெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

அதிஉயர் பாதுகாப்பு வலயம் என தெரிவித்து தனியார் காணிகள் எத்தனையோ ஏக்கர் கணக்கில் பிடிக்கப்பட்டுள்ளது. யாழ்குடாநாட்டை பொறுத்தவரை அதன் 30 வீதமான நிலப்பரப்பு அதி உயர் பாதுகாப்பு வலயம் என தெரிவித்து சட்டவிரோதமாக சட்ட ஏற்பாடுகள் எதுவுமின்றி கைப்பற்றிவைத்துள்ளது.

அரசாங்கம் கைப்பற்றி வைத்திருப்பதற்கான சட்ட ஒழுங்குகள் எதுவுமின்றி தொடர்ந்தும் அந்த நிலங்களை வைத்திருக்கின்றது.

சமாதான முயற்சிகளின் போது இந்த விவகாரம் பெரிய பிரச்சினையாக வெடித்த போது ஸ்ரீலங்கா அரசாங்கம் நம்பியார் என்ற இந்திய இராணுவ அதிகாரியின் ஏற்பாட்டில் – அதிஉயர் பாதுகாப்பு வலயங்கள் தொடர்பில் மாற்றங்களை செய்வதற்கு அவருடைய ஆலோசனைகளை பெற்று  அதன்படி செயற்படப்போவதாக அறிவித்திருந்தது.

நம்பியாருடைய அறிக்கையை எடுத்துபார்த்தால் – அது தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் இருக்கின்ற வரைக்கும் அல்லது  தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு ஆட்டிலறி தாக்குதலை மேற்கொள்வதற்கான திறன் இருக்கின்ற வரைக்கும,; உயர் பாதுகாப்பு வலயங்களில் பெரிய அளவில் மாற்றங்களை செய்ய முடியாது என தெரிவித்துள்ளது.

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் இல்லாமல் போனால் அல்லது இந்த ஆட்டிலறி காரணமாக ஏற்படக்கூடிய அச்சுறுத்தல் இல்லாமல் போனால் அதிஉயர் பாதுகாப்பு வலயங்கள் அனைத்தையும் அகற்றலாம் என்றும் அந்த அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது.

இன்றைக்கு போர் முடிந்து 16 17 வருடங்களாகின்றது ஆனால் இன்றைக்கும் அந்த அதிஉயர் பாதுகாப்பு வலயம் என்ற போலியான சட்டவிரோதமான கட்டமைப்புகளை தொடர்ந்தும் தக்கவைத்து பாதிக்கப்பட்ட சாதாரண தமிழ் மக்களிற்கு தங்களின் சொந்த காணி நிலைக்கு திரும்பி போகமுடியாத நிலைக்கு இந்த அரசும் இதற்கு முதல் இருந்த அரசும், வைத்திருப்பது உண்மையில் ஏற்றுக்கொள்ள முடியாத பாரிய குற்றம்.

எங்களை பொறுத்தவரையிலே தெற்கிலே அவ்வாறான ஒரு மோசமான செயற்பாடு நடைபெற்றதாகயிருந்தால்,இண்டைக்கு அந்த அரசாங்கம் அடித்துரத்தப்பட்டிருக்கும்.

தொடர்ந்தும் வடகிழக்கிலே எந்த விதமான நியாயமும் இல்லாமல் அதிஉயர் பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் பொதுமக்களின் காணிகளை பறித்து வைத்திருப்பது முற்றிலும் தவறான ஒரு செயல்.