இலங்கையின் ஏற்றுமதி பொருட்களுக்கு அமெரிக்காவால் விதிக்கப்பட்டுள்ள பரஸ்பர வரியை குறைப்பது தொடர்பான மற்றொரு கலந்துரையாடல் இந்த வாரம் இடம்பெறவுள்ளது.
நிதியமைச்சின் அதிகாரிகள் மற்றும் அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகளிடையே இந்த கலந்துரையாடல் நிகழ்நிலை ஊடாக இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய எதிர்வரும் முதலாம் திகதிக்கு முன்னர் கலந்துரையாடல்களில் முன்னேற்றம் ஏற்படும் என இலங்கை பிரதிநிதிகள் குழு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
வரிக்குறைப்பு தொடர்பாக ஜனாதிபதிக்கும் அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகத்தின் தூதுவருக்கும் இடையே நிகழ்நிலை ஊடாக கடந்த 25 ஆம் திகதி கலந்துரையாடல் இடம்பெற்றது. ஒகஸ்ட் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 30 வீத தீர்வை வரியை அமெரிக்கா அறிவித்தது.
இந்த வரி வீதத்தை மேலும் குறைக்க அரசாங்கம், அமெரிக்காவுடன் தொடர்ச்சியான கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேற்கத்திய நாடுகள் அல்லாத நாடுகள் அதிக அழுத்தம் கொடுக்க அழைப்பு விடுக்கும் அதே சமயம், இஸ்ரேல் காசாவில் “இனப்படுகொலை” செய்வதாக சர்வதேச நீதிமன்றத்தில் (ICJ) தென்னாப்பிரிக்கா தொடர்ந்துள்ள வழக்கில் தலையிடப் போவதாக பிரேசில் கடந்த புதன்கிழமை (23) தெரிவித்துள்ளது.
தொடர்ந்து நடைபெறும் அட்டூழியங்களை பார்த்துக் கொண்டிருக்க, சர்வதேச சமூகம் செயலற்ற நிலையில் இருக்க முடியாது. தார்மீக குழப்பம் அல்லது அரசியல் புறக்கணிப்புக்கு இனி இடமில்லை என்று பிரேசில் நம்புகிறது. தண்டனையிலிருந்து விலக்கு என்பது, சர்வதேச சட்ட பூர்வமான அமைப்புகளின் நம்பகத் தன்மையையும் மதிப் பையும் குறைக்கும்.
இனப்படுகொலை குற்றத்தைத் தடுப்பதற் கும் தண்டிப்பதற்கும் உள்ள ஐ.நா. சரத்துக்களின் கீழ், தென்னாப்பிரிக்காவால் தொடுக்கப்பட்டு சர்வதேச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக் கில் தமது தலையீட்டை சமர்ப்பிப்பதற்கான இறுதி கட்டத்தில் இருப்பதாக பிரேசில் அரசாங் கம் தெரிவித்துள்ளது. பாலஸ்தீனத்தில் பொது மக்களுக்கு எதிரான தொடர்ச்சியான வன்முறை நிகழ்வுகள், காசா பகுதிக்குப் மட்டு மல்ல, மேற்குக் கரை வரை நீட்டிக்கப்படுவது குறித்து பிரேசில் அரசாங்கம் ஆழ்ந்த கோபத்தை வெளிப் படுத்துகிறது.
காசா மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள பொதுமக்கள் தொடர்ச்சியான வன்முறைக்கு ஆளாகி வருகின்றனர். மேலும், போர் ஆயுதமாக பட்டினியை வெட்கமின்றிப் பயன்படுத்துவது உள்ளிட்ட கடுமையான மனித உரிமை மீறல்களுக்கு அவர்கள் ஆளாகியுள்ளனர் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கிளிநொச்சி காவல் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் உயிரை மாய்த்து கொண்டதாக கூறப்படும் சம்பவத்தையடுத்து, இரு காவல்துறை உத்தியோகத்தர்கள் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவத்தின்போது, காவல் நிலையத்தில் கடமையில் இருந்ததாக கூறப்படும், உப காவல் பரிசோதகர் ஒருவரும் காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவருமே பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
தாக்குதல் சம்பவமொன்று தொடர்பாக நேற்று முன்தினம் (25) கிளிநொச்சி காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த 66 வயதுடைய ஒருவர் சிறைக்கூடத்தில் உயிரை மாய்த்துக் கொண்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரினால் முன்னெடுக்கப்பட்ட முதற்கட்ட விசாரணைகளையடுத்து, குறித்த உத்தியோகத்தர்கள் இருவரும் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
மேற்கத்திய காலனித்துவ சக்திகளால் கைப்பற்றப்பட்ட அனைத்தையும் ஆப்பிரிக்கா மீட்டெடுக்க வேண்டும். திருடப்பட்டவை கலாச்சார கலைப்பொருட்கள் மட்டு மன்றி, எமது கண்ணியம், சுதந்திரம் மற்றும் பொருளாதார கட்டமைப் பும் ஆகும் என்று மொசாம்பிக் வெளியுறவு அமைச்சர் மரியா மானுவேலா லூகாஸ் செவ்வாய ன்று (22) கூறினார்.
மாஸ்கோவில் ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லாவ் ரோவுடன் பேசிய அவர், வரலாற்று அநீதிகளை மேற்கத்திய சக்திகளின் இழப்பீட்டு நடவடிக்கைகள் மூலமாக மட்டுமல்லாமல், கட்ட மைப்பு சீர்திருத்தங்கள் மூலமும் நிவர்த்தி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள் ளார்.
ஆப்பிரிக்காவின் இறையாண்மை திரும்புவதற்கான முயற்சி, அருங்காட்சியகப் பொருட் களை திருப்பி அனுப்புவதைத் தாண்டி, ஆப்பிரிக்க கண்டம் உலகப் பொருளாதாரத்தில் எவ்வாறு பங்கேற்கிறது என்பதைப் பொறுத்தது. இதில் மூலப்பொருட்கள் ஏற்றுமதியைச் சார்ந்திருப்பதை முடிவுக்குக் கொண்டுவருவது, மற்றும் உள்நாட்டு பங்களிப்பு கூட்டப்பட்ட உற்பத்தியில் முதலீடு செய்வது ஆகியவை அடங்கும்.
“நாங்கள் ஆப்பிரிக்கர்களாக உணர விரு ம்புகிறோம், ஆப்பிரிக்கர்களாக வேலை செய்ய விரும்புகிறோம், ஆப்பிரிக்கர்களாக இருக்க விரும்புகிறோம்” என மேலும் தெரிவித்தார்.
ஐரோப்பிய அருங்காட்சியகங்களில் வைக்கப்பட்டுள்ள சுமார் 800 கலாச்சாரப் பொருட் களை, மே மாதத்தில் மொசாம்பிக் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையைத் தொடர் ந்து அவரது கருத்துக்கள் வெளிவந்தன. இந்த பொருட்களை மீட்டெடுப்பது கலாச்சார அடையாளத்தை மீட்டெடுப்பதற்கு மிக முக்கிய மானது என்று கல்வி மற்றும் கலாச்சார அமைச்சர் சமாரியா டோவேலா தெரிவித்துள்ளார்.
ஜூன் மாதத்தில், நெதர்லாந்து மனித மற்றும் விலங்கு உருவங்கள், தகடுகள், அரச சின்னங்கள் மற்றும் வரலாற்று மணி உள்ளிட்ட 119 கலைப்பொருட்களை நைஜீரியாவிற்கு திருப்பி அனுப்பியது. அவை, ஒரு நூற்றாண்டுக் கும் முன்னர் மேற்கு ஆப்பிரிக்க நாட்டிலிருந்து கொள்ளையடிக்கப்பட்டவை.
யாழ்குடா நாட்டிற்குள் தமிழரசுக் கட்சியை முடக்குவதற்கு முயற்சி செய்கின்றார்கள் என்று மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார்.
சந்திவெளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற கறுப்பு ஜூலை நினைவேந்தல் நிகழ்வில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கறுப்பு ஜீலை நிகழ்வானது வருடந்தோறும் கட்டாயமாக நினைவுகூரப்பட வேண்டிய ஒரு நிகழ்வாகும்.
எமது இளைஞர்களுக்கு இவ்வாறான கொடூரமான சம்பவங்கள் நடைபெற்றமையினை தெளிவாக எடுத்துக்கூற வேண்டும். இதனூடாக இளைஞர்கள் எமது இனத்திற்கு நடைபெற்ற கொடூரமான படுகொலைகளை அறிந்து கொள்வார்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும் 2009ம் ஆண்டுவரை நடைபெற்ற அனைத்து படுகொலைகளுக்கும் துரதிஸ்டவசமாக நீதி கேட்பது இலங்கை அரசாங்கத்திடம் தான். எத்தனை முறை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்தாலும் இலங்கை அரசு ரோம் சட்டத்தில் கைச்சாத்திடவில்லை என்பதை கூறி சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு செல்ல முடியாது என்பதை தொடர்ச்சியாக கூறிக்கொண்டு வருகின்றார்கள்.
தமிழரசுக் கட்சியானது தொடர்ந்தும் சர்வதேச விசாரணையினை கோரினாலும் இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக மறுத்து வருகின்றது என்று பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார்.
முன்னர் இருந்த அரசாங்கங்கள் இந்த படுகொலைகளுக்கான நீதியை பெற்றுக்கொடுப்பதில் பின்னின்றன.
நாடு சுதந்திரமடைந்ததன் பின்னர் நடைபெற்ற படுகொலைகள் அனைத்தும் மாறி மாறி அரசாங்கங்களினால் மேற்கொள்ளப்பட்டன. தற்போது ஆட்சிக்கு வந்துள்ள ஜே.வி.பி கட்சி 2024ம் ஆண்டு வரை எந்தக்காலப்பகுதியிலும் ஆட்சி செய்யாமையின் காரணமாக நடைபெற்ற படுகொலைகளுக்கு நீதி வழங்கப்படும் என்ற நம்பிக்கை பல தமிழர்களுக்கு நம்பிக்கை இருந்தது. ஆனால் அவர்களும் தமிழ் மக்களுக்கு நீதியை வழங்குவதற்கான முதலாவது சந்தர்ப்பத்தை தவறவிட்டுள்ளார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கம் உள்நாட்டு பொறிமுறையினூடாக மாத்திரம் தான் தமிழ் மக்களுக்கான நீதியை பெற்றுக்கொடுப்பதில் கையாளப்போகின்றோம் என்பதை மிகத்தெளிவாக கூறியுள்ளார்கள் என்று பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, தமிழரசுக் கட்சியை உடைக்க வேண்டூம் என்றும், பலவீனமாக்க வேண்டும் என்றும் சில தமிழ் கட்சிகள் உழைக்கின்றனர். யாழ்குடா நாட்டுக்குள் மட்டும் மட்டுப்படுத்தப்பட்ட கட்சிகள் வடக்கு கிழக்கு மக்களின் தேசியப் பிரச்சினை தொடர்பாக எப்படி பேச முடியும். தமிழரசுக் கட்சியை விமர்சிப்பதை மாத்திரமே இவர்களின் கொள்கையாக கொண்டிருக்கின்றார்கள் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார்.
புது தில்லிக்கும் பெய்ஜிங் கிற்கும் இடையிலான உறவு கள் முன் னேற்றம் அடைவதற்கான அடையாளமாக, ஐந்து ஆண்டு இடைநிறுத்தத்திற்குப் பிறகு சீன மக்களுக்கு சுற்றுலா விசா வழங்கு வதை மீண்டும் ஆரம்பிப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது.
கோவிட்-19 தொற்றுநோ யின் ஆரம்பக் கட்டங்களில் இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட் டன. மேலும், 2020 இல் இமய மலையில் ஏற்பட்ட ஒரு கொடிய எல்லை மோதலால் நாடுகளுக் கிடையேயான உறவுகள் பாதிக் கப்பட்ட பின்னரும், இந்த கட்டுப் பாடுகள் தொடர்ந்தன.
“ஜூலை 24, 2025 முதல் சீன குடிமக்கள் இந்தியாவுக்கு வருகை தர சுற்றுலா விசாவிற்கு விண்ணப்பிக்கலாம்” என்று இந்திய தூதரகம் சீன சமூக ஊடக தளமான வெய்போவில் தெரிவித்துள்ளது. 2020 இல் இடைநிறுத்தப்பட்ட இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான நேரடி விமானங் களை மீண்டும் தொடங்குவதோடு, அதன் குடிமக்களுக்கு விசா வழங்குவதை மீண்டும் தொடங்குமாறு பெய்ஜிங் நீண்ட காலமாகக் கோரியுள்ளது.
“எல்லை தாண்டிய பயணத்தை எளி தாக்குவது பரவலாக நன்மை பயக்கும்” என்று சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. கசானில் நடைபெற்ற 2024 பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் போது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, இரு நாடு களுக்கும் இடையிலான உறவுகளை இயல் பாக்குவதற்கான முயற்சிகள் கடந்த ஆண்டு அக்டோபரில் ஆரம்பித்தன. பதற்றமான பகுதி களிலிருந்து விலகுவதற்கும், உறவுகளை மீட் டெடுப்பதற்கான உறுதிப்பாட்டிற்கும் இரு தலைவர்களும் ஒப்புதல் அளித்தனர்.
பல சுற்று இராணுவ மற்றும் இராஜ தந்திர பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீட்டு கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கான சில திட்டங்கள், வர்த்தகத் துறையின் அழுத்தங்களினால் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளன.
இந்த மாத தொடக்கத்தில், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, பெய்ஜிங்கில் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கருடன் நடந்த சந்திப்பில், “2024 அக்டோபரில் எங்கள் தலைவர்கள் சந்தித்ததிலிருந்து உறவு படிப்படியாக நேர்மறையான திசையில் நகர்ந்து வருகிறது” என்று தெரிவித்திருந்தார்.
ஜூன் மாதம், இந்து மதத்தின் புனித யாத்திரைகளில் ஒன்றான கைலாஷ்-மானசரோவர் யாத்திரைக்காக, இந்தியர்கள் குழு திபெத்திற்குச் சென்றது. இரண்டு புனித தலங்களைக் கடந்து செல்லும் இந்த யாத்திரை, ஐந்து வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தொடங்கப்பட்டது.
தமிழர்கள் புலம் பெயர்ந்து செல்லும் நிலைமை அதிகரித்து செல்கிறது என்றும் அதனூடாக இனத்தின் அளவு குறைந்து செல்கிறது என்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
நிலம் வெறுமையாக இருப்பது அதிகரித்து செல்கிறது. இது ஆபத்தானது. வடக்கு கிழக்கில் நிலங்கள் வெறுமையாக உள்ளமை சிங்கள குடியேற்றங்களை உள் இழுப்பதற்கு வழி கோலுகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
1983 கறுப்பு ஜூலையில் வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவேந்தல் நிகழ்வில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். வடக்கு கிழக்கில் தமிழர் தாயகத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஒன்று சேர்ந்த பல இயக்கங்களாக போராட்டத்தை முன்னெடுத்தனர். ஆனால் துரதிஸ்டவசம் இந்த போராட்டம் 2009 இல் மௌனித்துவிட்டது என்று அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
தமிழ் தரப்பின் பலவீனத்தால் தென்னிலங்கையில் ஆட்சிக்கு வருகின்றவர்கள் மிகவும் உற்சாகமாக இருக்கின்றார்கள். ‘நாம் ஒரு போதும் ஒத்த கருத்துடன் நிற்கபோவதில்லை என்பது அவர்களுக்கு நன்கு தெரியும்’ என்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
இனத்தின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்திய எல்லோருக்கும் சுயநிர்ணய அடிப்படையில் இணைந்த வடக்கு கிழக்கில் சுயாட்சி அமைய வேண்டும் என்ற விருப்பம் இருக்கிறது.ஆனால் ஆயுத போராட்டத்தில் ஒரு சிறு கீறலை கூட சந்திக்காதவர்கள் இன்று மற்றவர்களை துரோகி என்றார்கள்.ஏமாற்று அரசியலை செய்கின்றார்கள். இது தமிழ் மக்களுக்கு எந்தவித்திலும் விமோசனத்தை ஏற்படுத்தி தரப்போவதில்லை என்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய சூத்திரதாரிகள் விரைவில் சமூகத்துக்கு வெளிப்படுத்தப்படுவர்கள் என்று பெருந்தோட்ட அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தற்போது விசாரணைகள் நியாயமாக முன்னெடுக்கப்பட்டு வருவதை பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் உள்ளிட்ட அனைவரும் அறிவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும், சட்ட ரீதியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆனால் இன்று சட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்படுகிறது என்ற நம்பிக்கை அனைவர் மத்தியிலும் ஏற்பட்டுள்ளதாகவும் பெருந்தோட்ட அமைச்சர் கூறியுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரிகள் யார் என்பதை வெளிப்படுத்த நீண்ட காலம் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது என்றும் பெருந்தோட்ட அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.
கடந்த வாரத்தில் உலகின் கூட்டாண்மை பங்காண்மை அரசியல் மாற்றங்கள் இதுவரை இருந்து வந்த உலகின் அரசியல் நிலைப்பாடுகளில் தலைகீழ் மாற்றங்கள் தொடங்கிவிட்டதை உலகுக்கு தெளிவாக்கியுள்ளன.
இவற்றில் ஒன்றாக பலஸ்தீனிய தேசத்திற்கான அங்கீகாரம் முதன்முதலில் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையின் உறுப்பு நாடான பிரான்சால் வெளியிடப்பட்டமை அமைகிறது. பலஸ்தீனத்தில் ஆறாயிரம் குழந்தைகள் செத்த உடம்பில் உயிர்வாழும் நிலையில் இஸ்ரேலின் உணவை ஆயுதமாக்கிப் பட்டினிச்சாவால் பலஸ்தீனியக் குழந்தைகளின் உயிரை உடலைச் செயலிழக்க வைக்கும் இனஅழிப்புத் திட்டத்தின் வெற்றிகரமான நடைமுறைக்கு உலகின் வல்லாண்மைகள் நவீன போர்க்கருவிகள் வழங்கலால் ஆக்கமும் ஊக்கமும் அளிக்கும் எதார்த்த நிலையில் பிரான்சின் அரசத்தலைவர் பெருமதிப்புக்குரிய மாக்ரோன் அவர்கள் பலஸ்தீனிய மக்களைக் காக்கும் மனிதாபிமானப் பிரகடனமாக பலஸ்தீனிய தேச அங்கீகாரத்தை வெளியிட்டுள்ளமையை இலக்கு நெஞ்சாரப் பாராட்டுகிறது.
அதே வேளை தன்னுடைய நாட்டின் மக்கள் என்று பலஸ்தீனியரை அனைத்துலக வல்லாண்மைகளின் துணையுடன் கூறிக்கொண்டு பலஸ்தீனியர்கள் இஸ்ரேலின் இறைமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் எதிராக செயற்படுவதைத் தடுக்கும் தேசிய பாதுகாப்புச் செயற்பாடுகளே என்று இஸ்ரேல் தனது இனஅழிப்பை மனிதப்படுகொலைகளைச் சிறுவர் வதைகளை நியாயப்படுத்துவதில் இதுவே பலஸ்தீனியரைப் பாதுகாப்பதென்றால் பலஸ்தீனியமும் தேசம் என்ற அங்கீகாரமே உடன் தேவையென்ற பிரான்சிய அரசத்தலைவரின் செயலின் நேர்மையையும் உண்மையையும் பிரான்சுக்கு முன்பே கடந்த வருடங்களில் பலஸ்தீனிய தேசத்தை அங்கீகரித்த ஸ்பெயின் நோர்வே அயர்லாந்து போன்ற நாடுகளையும் இலக்கு நன்றியுடன் பாராட்டுகிறது. கூடவே பிரித்தானியப் பிரதமர் இடம் இன்று பிரித்தானியாவின் நூறு பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டனுப்பிய பலஸ்தீனிய தேசத்துக்கான பிரித்தானியாவின் அங்கீகாரக் கோரிக்கை மனுவையும் இலக்கு பாராட்டுகிறது.
இந்நேரத்தில் சிறிலங்கா அரசாங்கம் 1983ம் ஆண்டு யூலை ஈழத்தமிழின அழிப்பினை அடுத்து இஸ்ரேலுடன் இணைந்து தனக்கான போர்க்கருவிகளையும் புலனாய்வுப் பலத்தையும் பெருக்கிய பொழுது, இஸ்ரேல் புலனாய்வுத்துறை ஈழத்தமிழர்களைச் சிறிலங்கா இனஅழிப்பு செய்வதற்கு எத்தகைய மனிதவதைகளை சிறிலங்கா கையாள நெறிப்படுத்த உதவியதோ அத்தகைய மனிதவதைகளினையே காசாவில் தற்போது கையாண்டு வருகிறது என்பதையும் இதன் உச்சமாக சிறிலங்காவின் முள்ளிவாய்க்கால் ஈழத்தமிழினத் தேச இனஅழிப்பு அமைந்தது என்பதையும் உலக மக்களுக்கு ஈழத்தமிழர்கள் கவனப்படுத்தப்பட வேண்டிய நேரமிது என்பது இலக்கின் எண்ணம்.
அவ்வாறே சிறிலங்காவும் 1983 முதல் இன்று வரை தொடர்ச்சியாகத் தான் ஈழத்தமிழினத்தின் மேல் மேற்கொண்டு வரும் அனைத்து இனஅழிப்பு இனத்துடைப்பு பண்பாட்டு இனஅழிப்பு என்பனவற்றையும் தன்னுடைய நாட்டின் குடிகள் என ஈழத்தமிழர்களை உலகுக்கு வெளிப்படுத்தி அவர்களின் அனைத்து அரசியல் நடவடிக்கைகளையும் சிறிலங்காவின் தேசிய பாதுகாப்புக்கும் ஒருமைப்பாட்டுக்கும் எதிரான நடவடிக்கையெனத் திரிபுவாதம் செய்து தான் தனது தேசிய பாதுகாப்பை நிலைப்படுத்துவதற்கான படை நடவடிக்கைகளைச் செய்வதாகவே நியாயப்படுத்தி வருகிறது. இதனை ஈழத்தமிழர் பிரான்சிய அரசத்தலைவருக்கும் மற்றைய உலக நாடுகளுக்கும் தெளிவுபடுத்தி பிரான்சிய அரசத்தலைவர் எவ்வாறு பலஸ்தீனிய தேசத்தை அங்கீகரித்து பலஸ்தீனியர்களை இனஅழிப்பில் இருந்து காக்க முயற்சிக்கின்றாரோ அவ்வாறு ஈழத்தமிழர்களது யாழ்ப்பாண வன்னியரசாக பிரித்தானியா ஆட்சிப்படுத்திய இலங்கைத் தீவின் வடக்கு மற்றும் கிழக்கு ஈழத்தமிழர் தாயகத்தை ஈழத்தமிழர்களின் நாடாக அங்கீகரிக்குமாறு வேண்டுகோள் விடுக்க வேண்டிய நேரமிது என்பது இலக்கின் எண்ணமாக உள்ளது.
அதே நேரம் பிரித்தானியாவின் நிதி உதவியால் இந்தியா வளம் பெற்ற வரலாறு மாறி இந்தியா பிரித்தானியாவில் 6 பில்லியன் பவுண்சை முதலிட்டுப் பிரித்தானிய பொருளாதாரத்துக்கு உதவும் ஒப்பந்தத்தில் இந்தியப்பிரதமர் இலண்டன் வந்து கையொப்பமிட்டுச் சென்றமை மற்றொரு வரலாற்று மாற்றமாக உள்ளது. இந்த மாற்றம் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது ஸ்கொட்லாந்தில் உள்ள கோல்வ் விளையாட்டு மைதானத்துக்கு யூலை 25 வந்து அங்கு மைதானத்தில் விளையாட்டினை ஆரம்பிப்பதற்கு இருதினங்களுக்கு முன்னர் நிகழ்ந்துள்ளது. இந்நேரத்தில் அமெரிக்க அரசத்தலைவர் ட்ரம்ப் தனது வர்த்தகப் போரில் தான் இந்தியச் சந்தையை இழக்காது ஏற்புடைய வரிக்குறைப்பைச் செய்ய வேண்டிய தேவையை அவருக்கு இம்மாற்றம் உணர்த்தியுள்ளது. இவ்வாறு இந்திய-பிரித்தானிய-அமெரிக்க கூட்டு என்பது பசுபிக் இந்து மாக்கடல் பகுதியில் சீன மேலாதிக்கத்தை மட்டுப்படுத்தும் தேவையாகவும் யப்பான் அவுஸ்திரேலியா மற்றும் இந்துமாக்கடல் கரையோர நாடுகள் இணைப்பு வழி பலமடையும் என்பதும் இந்தியப் பிரதமரின் மாலைதீவு விஜயம் இதற்கான தன்மைகளை மேலும் பலப்படுத்தும் என்பதும் எதிர்பார்ப்பாகவுள்ளது.
இந்நிலையில் இந்தப்புதிய சூழலில் இந்தியா ஈழத்தமிழர்கள் உடனான கூட்டாண்மையைப் பங்காண்மையை முற்றிலும் கைவிட்டுச் சிறிலங்காவுடனான முழு அளவிலான கூட்டாண்மையை ஏற்படுத்துவதற்கு ஈழத்தமிழரின் தாயக தேசிய தன்னாட்சி எழுச்சி நிலை தடையாக உள்ளது. இதனால் இந்த ஈழத்தமிழரின் தேசிய விழிப்பின் மூச்சாகப் பேச்சாக ஒவ்வொரு ஈழத்தமிழரிலும் ஆற்றலாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கும் தேசியத் தலைவரின் வாழுகின்ற இருப்புநிலையைக் கடந்த காலமாக்கும் எந்த முயற்சியிலும் ஈழத்தமிழர்களே ஈடுபட்டு தங்கள் தங்கள் தலையில் தாங்களே மண் அள்ளிப் போடக் கூடாதென்பது இன்றைய காலத்தின் தேவையாக உள்ளதென்பதை இலக்கு வலியுறுத்திக் கூறவிரும்புகிறது.
ஒருவர் தான் என்ற தனித்துவத்தில் இருந்து தன்னை விடுவித்து உலக மக்களின் விடுதலைக்காகத் தேசமக்களின் சுதந்திரத்திற்காக மக்களாகவே தன்னை மாற்றுகின்ற பொழுது தோன்றுகின்ற மக்கள் சக்தி அவரைத் தலைமையாகக் கொண்டு கட்டமைந்து விடுதலைப் பேரொளியாக முன்னுள்ள அடக்குமுறை ஒடுக்குமுறை வரலாற்றை மாற்றும் என்பது உலக வரலாறு. மக்களோடு மக்களின் சுதந்திரத்தை மக்களே பெறுவதற்கான தலைமையாக மாறும் எவரும் தனியான தலைவராக உலகில் பார்க்கப்படுவதோ பேசப்படுவதோ இல்லை. நாங்களாகி விட்ட தலைமைக்குச் சாவில்லை. “நான் சாகலாம் நீங்கள் சாகலாம் நாங்கள் சாகக் கூடாது” என்று ஆணையிட்டுச் சென்ற மாவீரர் மொழியின் பொருளை விடுதலைக்கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்கள் மாவீரர் யாரோ என்றால் மரணத்தை வென்றவர்கள் என்று அழகுதமிழில் எளிய மொழியில் தெளிவுபடுத்தினார். உலகின் வரலாற்றைக் கிறிஸ்துவுக்கு முன் கிறீஸ்துக்கு பின்என்று மாற்றிய இயேசுநாதர் முதல் உலக மக்களின் வரலாற்றை தங்கள் வாழ்வை மக்களுக்காகவும் மண்ணுக்காகவும் அர்ப்பணித்து மக்களின் வாழ்வை மண்ணின் வரலாற்றை மாற்றிய எந்த வரலாற்று மனிதர்களும் மரணித்த மனிதராகக் காலமானவராக உலகில் விளங்கியதில்லை. அதனாலேயே உலக நாடுகள் பலவும் தேசிய நாளாகத் தங்கள் தேசத்திற்காக வாழ்வினை மாவீரர்கள் அர்ப்பணித்தமையை நன்றியுடன் நினைவு கூர்ந்து வருகின்றன. இது ஈழத்தமிழர்களுக்கு கார்த்திகை 27 என்பது உலகறிந்தவொன்று.
மேலும் இயேசு கூறியது போல “நான் சொன்னதைச் செய்யுங்கள்” என்ற தலைமையின் அழைப்பை வாழ்வாக்குவதன் வழியாகவே அந்த தலைமையை உலகம் உள்ளவரை வாழவைப்பது உலக வழமை. இதற்கு ஈழத்தமிழர்கள் விதிவிலக்காகாது தேசிய விடுதலைப்போராட்டத்தில் தங்களை அர்ப்பணித்த அனைவரையும் தலைமையாகக் கொண்டெழுந்து இந்த மரணமற்ற மனிதகுல வாழ்வை வெளிப்படுத்திய முதல்வனை என்றும் வாழும் தலைவன் என தங்களை அர்ப்பணித்த அத்தனை இன்னுயிர்களினதும் குறியீடாகக் கொண்டு உயர்ச்சி பெற இலக்கு வாழ்த்துகிறது. அந்த உயர்ச்சியே சமகாலத்தில் ஈழத்தமிழர்கள் எதிர்கொள்ளப்போகின்ற அத்தனை பிரச்சினைகளிலும் அவர்கள் நிலைத்து நிற்பதற்கான அவர்களின் ஒரேபலமாக அமையும் என்பதையும் இலக்கு தெளிவுபடுத்த விரும்புகிறது.
சீனாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையில் நடந்த தொழில்நுட்ப அறிவியல் எழுச்சிகளின் வளர்ச்சிக்குத் தேவையான கிடைத்தற்கரிய மூலவளங்களை சீனா உலகிற்கு வழங்கி ஏற்பட்டு வரும் மனிதத்துக்கான அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிகளைத் தடைசெய்யாத வகையில் நல்லெண்ணத்தை நடைமுறைப்படுத்தியமைக்குச் சீனாவை இலக்கு வாழ்த்துகிறது. அரசியல் இணக்கப்பாட்டை விட மனித உள்ளங்களின் நல்லெண்ணமே உலகில் மனிதத்துவத்தை முதன்மைப்படுத்தும் என்பதை சீனாவிடம் சிறிலங்கா கற்றுக்கொள்ள வேண்டுமெனவும் இலக்கு வலியுறுத்திக் கூறவிரும்புகிறது.
இலங்கைத் தீவின் பாதுகாப்பான அமைதியும் வளர்ச்சிகளும் பிரான்சின் பலஸ்தீனிய அங்கீகாரம் ஈழத்தமிழர்களின் இறைமையின் அங்கீகாரமாக மாற்றப்பட்டாலே நடைமுறைச்சாத்திமாகும் என்பதை அனைத்துலகிலும் உள்ள ஈழத்தமிழர்கள் உலகிற்கு உரையாடல்கள் வழி தெளிவுபடுத்த வேண்டிய காலமிது என்பது இலக்கின் இவ்வாரக் கருத்தாக உள்ளது.
நீண்ட காலமாக தமிழ் மக்கள் மீது திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் இனஅழிப்பிற்கான சர்வதேச நீதி கோரியும், தமிழருக்கான நீதியை வலியுறுத்தியும் முல்லைத்தீவில் சனிக்கிழமை (26) பாரிய கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது.
குறித்த போராட்டத்தில்,பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன்,கரைதுறைப்பற்று பிரதேச சபை தபிசாளர் லோகேஸ்வரன் , கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் ஜுட்சன்,வடக்கு, கிழக்கு சமூக இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அன்புமணி லவகுசராசா, மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் உறுப்பினர்கள், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தினர், சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
மேலும் யாழ்ப்பாணம் செம்மணி மனித புதை குழிக்கு அண்மித்த பகுதியான, நல்லூர் வீதி வளைவு அமைந்துள்ள பகுதியில் போராட்டம் நடைபெற்றுள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பதாகைகளை ஏந்தி, இனப்படுகொலைக்கு நீதி வேண்டி கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ், குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் செயற்பாட்டாளர் மு.கோமகன், காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள், சமூக மட்ட அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.