Home Blog Page 59

மன்னார் காற்றாலை கனிய வளம் தொடர்பில் இன்று கலந்துரையாடல்

மன்னார் காற்றாலை திட்டம் மற்றும் இல்மனைட் கனிய வளம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினை குறித்து பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் வியாழக்கிழமை (7) விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

இந்த கலந்துரையாடலில் வன்னி மாவட்ட பிரதிநிதிகள்,சிவில் சமூக பிரதிநிதிகள் மற்றும் மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு உட்பட பல்வேறு தரப்பினர்கள் கலந்துக் கொள்ளவுள்ளனர்.

இந்த பிரச்சினைக்கு சிறந்த தீர்வை மக்களின் அபிலாஷைக்கு அமைய செயற்படுத்துவோம் என தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். ஜெகதீஸ்வரன்  தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (6) நடைபெற்ற இலங்கை மின்சாரம் (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

மன்னார் மாவட்டத்தில் தற்போது காற்றாலை மின்திட்டம் மற்றும் இல்மனைட் விவகாரம் பிரதான பேசுபொருளாக காணப்பட்டு  மிக மோசமான  நிலைக்கு இந்த பிரச்சினை இன்று தள்ளப்பட்டுள்ளது. மன்னார் மாவட்டத்தில் காற்றாலை அமைக்கும் திட்டத்தை எமது அரசாங்கம் எந்த நிறுவனத்துக்கும் வழங்கவில்லை.

கடந்த கால அரசாங்கம் எவ்விதமாக திட்டமிடலும் மன்னார் மாவட்ட மக்கள் மற்றும் துறைசார் நிபுணர்களுடன் கலந்துரையாடாமல் காற்றாலை திட்டத்துக்கான அனுமதியை வழங்கியுள்ளது.அதறன் தொடர்ச்சியாகவே தற்போது குறித்த  தரப்பினர்செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளனர். கடந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளின் பலாபலன்களை தற்போது அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த அரசாங்கம் முறையற்ற  வகையில் கொண்டு வந்த திட்டங்களுக்கு  எமது அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதுவொரு துர்பாக்கிய நிலையாகும்.காற்றாலை  பிரச்சினை குறித்து மன்னார் மாவட்ட மக்களுடன் கலந்துரையாடி மக்கள் சார்ந்த தீர்வினை எடுப்பதற்கு தயாராகவுள்ளோம்.

மன்னார் காற்றாலை திட்டம் மற்றும் இல்மனைட் கனிய வளம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினை குறித்து பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.இந்த கலந்துரையாடலில் வன்னி மாவட்ட பிரதிநிதிகள், சிவில் சமூக பிரதிநிதிகள் மற்றும் மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு உட்பட பல்வேறு தரப்பினர்கள் கலந்துக் கொள்ளவுள்ளனர்.இந்த பிரச்சினைக்கு சிறந்த தீர்வை மக்களின் அபிலாசைக்கு அமைய செயற்படுத்துவோம் என்றார்.

செம்மணி புதைகுழி: இதுவரை 133 மனித எலும்புக்கூடுகள் மீட்பு – சட்டத்தரணி வி.எஸ்.நிரைஞ்சன்

செம்மணி மனித புதைகுழியில் 147 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டு இலக்கமிடப்பட்டதுடன் 133 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டது என சட்டத்தரணி வி.எஸ்.நிரைஞ்சன் தெரிவித்தார்.

செம்மணி அகழ்வுப்பணிகள் இரண்டாம் கட்டத்தின் 32 ஆவது நாள் யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவின் மேற்பார்வையில் புதன்கிழமை (6) முன்னெடுக்கப்பட்டது.

அகழ்வு பணிக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே சட்டத்தரணி வி.எஸ்.நிரைஞ்சன் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், புதிதாக ஆறு மனித எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டு இலக்கமிடப்பட்டுள்ளது.

147 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டு இலக்கமிடப்பட்டதுடன் 133 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டு நீதிமன்ற கட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளது. எலும்புக்கூடொன்று நேற்று முன்தினம் செருப்புடன் அடையாளம் காணப்பட்ட நிலையில் குறித்த எலும்புக்கூடு அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன், இடுப்பில் தாயம் ஒன்றுடன் எலும்புக்கூடொன்று அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. அதேவேளை செருப்பு , தாயம் , காசு, உள்ளிட்ட சான்று பொருட்கள் புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட நிலையில் அவை நீதிமன்ற கட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளன. இன்றுடன் தற்காலிகமாக அகழ்வு பணிகள் நிறுத்தப்படுவதால் அடையாளம் காணப்பட்ட மேலும் எழு எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.

செம்மணியில் காட்சிப்படுத்தப்பட்ட சான்று பொருட்களை யாரும் அடையாளம் காட்டவில்லை

யாழ்ப்பாணம் – செம்மணி, சித்துப்பாத்தி மனித புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட சான்றுப் பொருட்களை நேற்றைய தினம் (05) சுமார் 200 பேர் வரையில் பார்வையிட்டனர்.

செம்மணி புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட சான்று பொருட்கள், நேற்று பிற்பகல் 1.30 முதல் மாலை 5 மணி வரையில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றியிருந்தனர். அதில் தனி மனிதர்களுடன் தொடர்புடைய 43 சான்றுப் பொருட்கள் மாத்திரமே காட்சிப்படுத்தப்பட்டிருந்ததாக பாதிக்கப்பட்டோர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி ரணிதா ஞானராஜ் தெரிவித்தார்.

தனி மனிதர்களுடன் தொடர்புப்படாத மேலும் சில சான்றுப் பொருட்கள் நேற்றைய தினம் காட்சிப்படுத்தப்படவில்லை. எவ்வாறாயினும் நேற்றைய தினம் காட்சிப்படுத்தப்பட்ட சான்று பொருட்களை எவரும் அடையாளம் காட்டவில்லை என்றும் சட்டத்தரணி ரணிதா ஞானராஜ் தெரிவித்தார்.

அதிகாரப் பகிர்வை கோரி கல்முனையில் கவனயீர்ப்பு போராட்டம்

நிலையான அரசியல் தீர்வுக்கான 100நாட்கள் செயல்முனையின் 3வது வருடம் நிறைவினை முன்னிட்டு அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் இன்று (6) காலை அமைதி வழி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீளப்பெறமுடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை வலியுறுத்தி இப்போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது மக்கள் பதாதைகளை ஏந்தி அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இதன்போது நிலையான அரசியல் தீர்வுக்கான 100 நாட்கள் செயல்முனையின் 3வது வருடம் குறித்து வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினால் அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டது.  இலங்கையின் இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீளப் பெறமுடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வே அவசியம் என்று அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

1948ஆம் ஆண்டுக்கு பின்னரான இலங்கையின் 75 வருடகால அரசியல் வரலாற்றில், இனத்துவ அரசியலே மேலோங்கி காணப்படுகிறது. இலங்கை அரசானது சிங்கள பெரும்பான்மை இனத்தைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற அரசாங்கங்களாலும் தலைவர்களாலும் இருந்து வருகின்றன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

1948 முதற்கொண்டு ஏனைய தேசிய இனங்களான வடக்கு கிழக்கு தமிழ் மக்கள், முஸ்லிம் மக்கள், மலையகத் தமிழ் மக்கள் ஆகியோருக்கு அரச அதிகாரத்தில் உரிய பங்கு வழங்கப்படவில்லை.
அரசியல் அதிகாரம் உரிய முறையில் பகிர்ந்துகொள்ளப்பட வில்லை. மாறாக மொழிரீதியான, மத ரீதியான அடக்குமுறைகள் மேலோங்கின என்றும் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பூரில் மனித எலும்பு எச்சங்கள் – அகழ்வுப் பணிகளைத் தொடருமாறு நீதிமன்றம் உத்தரவு

மனித எலும்பு எச்சங்கள் காணப்பட்ட சம்பூர் காணியில் மேலும் மனித எலும்புக்கூடுகள், மற்றும் எச்சங்கள் உள்ளனவா என்பதை அறிய, கிழக்கு பிராந்திய இராணுவ கட்டளைத்தளபதியின் ஆலோசனையைப் பெற்று இராணுவ பாதுகாப்பு ஆளணியின் உதவியுடன் முறைப்படி அகழ்வு நடத்தப்பட வேண்டும் என்று மூதூர் நீதவான் தஸ்னீம் பெளஸான் இன்று (6) உத்தரவிட்டார்.

மேலும், இது தொடர்பான வழக்கு விசாரணையை எதிர்வரும் 26ஆம் திகதி எடுத்துக்கொள்வதாகவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

அத்துடன், இதுவரை அங்கு கண்டெடுக்கப்பட்ட மூன்று எலும்புக்கூடுகளில் ஒன்று, 25 வயதிற்கு குறைந்த ஆண் ஒருவருடையது; மற்றையது, 25 – 40 வயதுக்குட்பட்ட ஒருவருடையது; அடுத்தது 40 – 60 வயதுக்குட்பட்ட ஒருவருடையது என்றும் இன்றைய வழக்கு மாநாட்டின்போது மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி அறிக்கை முன்வைத்தார்.

அதனைத் தொடர்ந்து பேசிய சட்ட வைத்திய அதிகாரி,

இந்த இடம் மயானம் என்பதற்கு இதுவரை ஆதாரங்கள் முன்வைக்கப்படவில்லை. மேலும் ஒன்றுக்கு மேற்பட்ட எலும்பு எச்சங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த எச்சங்களுக்குரியவர்கள் இயற்கையாக மரணம் அடைந்தார்களா?அல்லது ஏதேனும் குற்றச்செயல்கள் மூலம் மரணம் நிகழ்ந்ததா? என்பதை கண்டறிய மேலும் ஆய்வுகள் செய்யப்பட வேண்டும் என்று கூறினார்.

இக்காணி அரச காணியாக உள்ளபோதும் இங்கு ஒரு மயானம் இருந்ததற்குரிய ஆதாரங்கள் ஏதும் இல்லை என்று இந்த வழக்கு மாநாட்டில் தொல்பொருள் திணைக்களம், பிரதேச செயலக செயலாளர் மற்றும் பிரதேச சபை செயலாளர் ஆகியோரால் அறிக்கை முன்வைக்கப்பட்டது. இந்த அறிக்கைகளை ஆராய்ந்த பின்னரே நீதிமன்று அகழ்வு நடத்தப்பட வேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்துள்ளது.

இன்றைய வழக்கு மாநாட்டில் மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி, தொல்பொருள் திணைக்கள அதிகாரி, புவிச்சரிதவியல் துறை அதிகாரி, பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவினர், தேசிய கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்தினர், மெக் மிதி வெடி அகற்றும் நிறுவனத்தினர், பிரதேச செயலாளர், பிரதேச சபைச் செயலாளர், காணாமல் ஆக்கப்பட்டோர் தேசிய செயலகத்தின் சட்டத்தரணி, பிரதேச காணி உத்தியோகத்தர், பிரிவிற்கான கிராம சேவை அலுவலர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கடந்த ஜூலை 19ஆம் திகதி மிதிவெடி அகற்றும் பணிகள் அப்பகுதியில் செயற்படுத்தப்பட்டபோது, மனித மண்டையோடு, கால் எலும்பு என்பன கண்டுபிடிக்கப்பட்டன. இதனையடுத்து, கடந்த 23ஆம் திகதி சம்பவ இடத்தை மூதூர் நீதிவான் நேரில் சென்று பார்வையிட்டார்.

அதனையடுத்து, கடந்த 30ஆம் திகதி இவ்விடயம் தொடர்பில் மூதூர் நீதிமன்றில் விசாரணைகள் நடைபெற்றது. அன்றைய தினம் நீதிபதி விடுத்த அறிவிப்பின்படி, புதன்கிழமை (6) நீதிமன்ற கூட்டம் நீதிபதி தலைமையில் நடைபெறும் எனவும், இக்கூட்டத்தின் பின்னர் இந்த மனித எச்சங்கள் தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உத்தராகண்ட் மேக வெடிப்பு: 100க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக தகவல்

இந்தியாவுன் உத்தராகண்ட் மாநிலத்தில் நேற்று (ஆகஸ்ட் 5) மேக வெடிப்பு காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர், 100க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.

தேசிய பேரிடர் மீட்புக் குழுவின் டிஐஜி மோஹ்சென் ஷாஹிதி ஏஎன்ஐ செய்தி முகமையிடம், ” 40 முதல் 50 வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. இதில் 100க்கும் மேற்பட்டோரை காணவில்லை” என்று கூறினார்.

கடந்த சில வாரங்களாக உத்தராகண்ட் மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், கங்கோத்ரி பகுதியில் நேற்று பிற்பகலில் மேகவெடிப்பு ஏற்பட்டது. இதனால் கீர் கங்கா நதியில் திடீரென பெருவெள்ளம் ஏற்பட்டு தரளி கிராமத்தை நோக்கி சீறிப் பாய்ந்தது. இதில் ஒட்டுமொத்த கிராமமும் பெருவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இராணுவம், விமானப்படை, தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை, தீயணைப்பு படை மற்றும் காவல் துறையை சேர்ந்த நூற்றுக்கணக்கான வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதி மக்களை ஏமாற்றமடைய வைத்துள்ளது – செ. கஜேந்திரன்

ஜனாதிபதி தேர்தலின்போது வேட்பாளராக மன்னார் மாவட்டத்திற்கு வருகை தந்த அநுரகுமார திஸாநாயக்க  தனது உரையில் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய காற்றாலை திட்டம் மன்னாரில் நடைமுறைப்படுத்தப்படாது என்கிற  விடையத்தை கூறி இருந்த நிலையில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்ற குறித்த திட்டம் நம்பிய மக்களை ஏமாற்றமடைய வைத்துள்ளது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்  செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்தார்.

மன்னாரில் சுற்றுச் சூழலுக்கும்  மக்களது இயல்பு வாழ்க்கைக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் நடைமுறைப்படுத்தப்படும் காற்றாலை திட்டத்தை நிறுத்த வலியுறுத்தி மக்களும் சிவில் அமைப்புக்களும் இணைந்து முன்னெடுக்கும்  போராட்டம் செவ்வாய்க்கிழமை (5) இரவு மன்னார் தள்ளாடி பகுதியில்  அமைதியாக முன்னெடுத்து வரும்  நிலையில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மன்னார் மாவட்டத்தில் மக்களின் வாழ்வியலையும், இயற்கைக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை மின் உற்பத்தி வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற சூழ்நிலையில் குறித்த திட்டத்தை மன்னார் மாவட்டத்தில் முன்னெடுக்க வேண்டாம் என மக்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர்.

எனினும் மக்களினுடைய கருத்தை கருத்தில் கொள்ளாது மன்னார் தீவில் 2 ஆம் கட்ட காற்றாலை திட்டத்தை முன்னெடுக்கும் வகையில் பாரிய காற்றாடிகள் மன்னாரை நோக்கி எடுத்து வரப்பட்டு கொண்டிருக்கும் சூழ்நிலையில், மக்கள் அதனை அறித்து தற்போது இரவு பகல் பாராது வீதியில் இறங்கி போராடி வருகின்றனர்.

ஏற்கனவே ஒரு சில வருடங்களுக்கு முன்னர் மஹிந்த ராஜபக்ஷ் பதவியில் இருந்த போது மன்னாரின் சில பகுதிகளில் காற்றாலைகள் நிர்மானிக்கப்பட்ட நிலையில் சுற்றுச் சூழலுக்கும் மக்களுக்கும் பாரிய பாதிப்புகளை ஏற்படுத்தி இருந்தது. அதன் பிற்பாடு  அடுத்த கட்டமாக காற்றாலைகள் நிர்மானிக்க நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்ட போது மக்கள் அதனை முற்று முழுதாக எதிர்த்து இருந்தார்கள்.

இந்த நிலையில் தற்போது நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது வேட்பாளராக மன்னார் மாவட்டத்திற்கு வருகை தந்த அநுரகுமார திஸாநாயக்க மக்களினால் குறித்த பிரச்சினை அவருடைய கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில்,தனது உரையில் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய இந்த காற்றாலை திட்டம் மன்னாரிலே நடை முறைப் படுத்தப்படாது என்கிற விடையத்தை கூறி இருக்கிறார்.

மன்னார் மாவட்ட மக்கள் அவரது கருத்தில் நம்பிக்கை கொண்டு இருந்தார்கள்.ஆனால் இன்று அவர் அறுதி பெரும்பான்மை ஆசனங்களை பெற்று ஜனாதிபதியாகவும் இருந்து கொண்டு பாராளுமன்றத்திலும் அறுதி பெரும்பான்மை யாக இருக்கும் நிலையிலே இன்று மன்னாரில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப் படுகின்ற நிலையில் இதனை நடைமுறைப்படுத்தாமல் இருப்பதற்கு மக்களினால் எடுக்கப்படுகின்ற அனைத்து முயற்சிகளும் தோல்வி அடைந்துள்ள நிலையிலே மக்களின் விருப்பத்திற்கு மாறாக காற்றாலைகள் எடுத்து வரப்படுகின்ற நிலையில் மக்கள் வழிமறித்து போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த போராட்டத்திற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி,தமிழ் தேசிய பேரவை முழுமையான ஆதரவை வழங்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.

செம்மணி மனித புதை குழி ஸ்கான் முடிவுகள் : 3 வாரங்களில் அறிக்கை!

செம்மணி சித்துப்பாத்தி மயானத்தில் நேற்று இடம்பெற்ற ஸ்கான் பரிசோதனைகள் தொடர்பான இறுதி அறிக்கை, எதிர்வரும் மூன்று வாரங்களுக்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று சட்டத்தரணி ரணித்தா ஞானராஜா தெரிவித்துள்ளார்.

சித்துப்பாத்தி இந்துமயானத்தில் மேலதிகமாக புதைகுழிகள் இருக்கின்றனவா என்று அறிவதற்காக தரையை ஊடுருவும் ராடர் அமைப்பின் மூலம் (ஜி.பி. ஆர்.) ஸ்கான் செய்யும் நடவடிக்கைகள் நேற்றும், நேற்றுமுன்தினமும் இடம்பெற்றன.

இந்தப் பணிகள் நேற்றுடன் முடிவுக்கு வந்துள்ள நிலையிலேயே, அது தொடர்பான அறிக்கைகள் எதிர்வரும் மூன்று வாரங்களுக்குள் நீதிமன்றத்தில் முன்வைக்கப்படும் என்று சட்டத்தரணி ரணித்தா ஞானராஜா தெரிவித்துள்ளார்.

தமிழ் அரசியல்வாதிகள், சிவில் சமூகத்தினரின் கடிதத்திற்கு ஐநா மனித உரிமை ஆணையாளர் பதில் கடிதம்

தமிழ் அரசியல் கட்சிகளும் தமிழ் சிவில்சமூகத்தினரும் மதத்தலைவர்களும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளருக்கும்,மனித உரிமை பேரவையின் உறுப்பு நாடுகளிற்கும் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்திற்கும் அனுப்பிவைத்த கடிதத்திற்கு பதில் கடிதத்தை எழுதியுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் வோல்க்கெர் டேர்க் தனக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் முன்வைக்கப்பட்டுள்ள கரிசனைகளை பிரதிபலிக்கும் விதத்தில்  ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கான தனது அறிக்கை இடம்பெற்றிருக்கும் என தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான தனது விஜயத்தின் போது பாதிக்கப்பட்டவர்கள் உயிர்பிழைத்தவர்கள் பலருடனான தனது சந்திப்பு மிகவும் உணர்வூர்வமானதாக காணப்பட்டது என தெரிவித்துள்ள ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் செம்மணி மனித புதைகுழிக்கான எனது விஜயமும் பாதிக்கப்பட்டவர்கள் சட்டத்தரணிகளை சந்தித்தமை அந்த பகுதியில் இடம்பெற்ற பெரும் நினைவுகூரலை பார்வையிட்டமையும்  மிகவும் உணர்வுபூர்வமானதாக காணப்பட்டது என  தெரிவித்துள்ளார்.

என்னுடைய இந்த விஜயங்கள் ஆதாரங்களை பாதுகாக்கவேண்டியதன் அவசியத்திற்கும் முழுமையான சுயாதீன விசாரணைக்குமான காண்புநிலையையும் அவசரத்தையும் வழங்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் தொடர்ந்து வந்த ஆட்சியாளர்கள் இதுவரை சுயாதீனமான வலுவான நியாயமான பொறுப்புக்கூறும் பொறிமுறைகளை ஏற்படுத்த தவறிவிட்டனர் என தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் வோல்க்கெர் டேக்கர் முழுமையான சர்வதே தராதரங்களை எட்டுவதற்கு தவறிவிட்டனர் எனவும் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் ‘கருநிலம் பாதுகாப்பு’ மண் மீட்பு போராட்டம்

DSC 2582 மன்னாரில் 'கருநிலம் பாதுகாப்பு' மண் மீட்பு போராட்டம்

மன்னார் மாவட்டத்தில் பல்தேசிய நிறுவனங்களின் இல்மனைட் கனிய மணல் சுரண்டல்களினால் மக்களின் வாழ்விடங்கள் மற்றும் பூர்வீக நிலங்கள் அழிவடையும் அபாயம்  காணப்படுகின்ற நிலையில் குறித்த நடவடிக்கைகளை கண்டித்து, மன்னார் மாவட்ட இளையோர்  ஏற்பாடு செய்த  விழிப்புணர்வு போராட்டம்  இன்று   மன்னார் பஜார் பகுதியில் இடம்பெற்றது.

‘மன்னார் மாவட்டத்தின் இயற்கை வளங்களில் ஒன்றாக மணல் உள்ளது. இந்த மணல், இல்மனைட் கனிமத்தை கொண்டிருப்பதால் உலகளவில் பெரும் கேள்வி உள்ளது. கடந்த  சில ஆண்டுகளுக்கு மேலாக அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பல்தேசிய நிறுவனம் ஒன்று இல்மனைட் மணல் அகழ முயற்சித்து வருகிறது.

இதற்கான அனுமதிகள் இழுபறியில் இருந்த போதிலும் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் அவை வழங்கப்படுவதற்கான சூழல் உருவாகியுள்ளதாக தெரிய வருகிறது.

குறிப்பாக அவுஸ்திரேலிய நிறுவனம் அகழ்வுக்கு சூழலியல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை ஒன்றை சுற்றுச்சூழல் அதிகார சபையிடம் சமர்ப்பித்திருந்தது. இதற்கு சுற்றுச்சூழல் அதிகார சபை சாதகமான அறிக்கையை வழங்கியுள்ளது.

இதனைத் தொடர்ந்து பல்தேசிய நிறுவனங்களுக்கு மணல் அகழ்வதற்கான அனுமதி வழங்கப்படுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு இல்மனைட் மணல் அகழபட்டால் அடுத்த 10 ஆண்டுகளுக்குள் மன்னார் மாவட்டத்தின் வாழ்நிலங்களுக்குள் கடல் நீர் உட்புகுந்து மக்களின் வாழ்விடங்களையும் பூர்வீக நிலங்களையும் அழித்து விடும் அபாயம் உள்ளது.

இந்த அழிவை தடுக்கவும், எமது பூர்வீக நிலங்களையும் மக்களின் இருப்பையும் பாதுகாக்கவும் ‘கருநிலம் பாதுகாப்பு’ என்ற கருப்பொருளுடன் மக்களை விழிப்புணர்வு செய்யும் போராட்டத்தை முன்னெடுக்க இளையோர் நடவடிக்கைகளை முன்னெடுத்த நிலையில் குறித்த விழிப்புணர்வு போராட்டம் இன்று புதன்கிழமை (6) மன்னார் நகர சுற்றுவட்ட பகுதியில் இடம்பெற்றது.

இதன் போது கலந்து கொண்ட இளையோர் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணி ஒன்றை முன்னெடுத்தனர்.

குறித்த பேரணி மன்னார் நகர சுற்றுவட்ட பகுதியில் ஆரம்பமாகி மன்னார் பொலிஸ் நிலைய வீதியூடாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை வீதியை சென்றடைந்தது.

அங்கிருந்து மன்னார் பொது விளையாட்டு மைதான வீதியூடாக மன்னார் நகர சுற்று வட்ட பகுதியை சென்றடைந்தது.

அதனைத் தொடர்ந்து கணிய மணல் அகழ்வுக்கு எதிராக ஜனாதிபதிக்கு அனுப்பும் வகையில் தபாலட்டையில் கையொப்பம் சேகரிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டத்தின் ஒரு அங்கமாக விழிப்புணர்வு நாடகம், கையெழுத்து பெற்றுக் கொள்ளும் செயற்பாடுகள்   நாளை வியாழக்கிழமை (7) இடம்  பெற்று  இறுதியில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபருக்கு மகஜர் ஒன்று கையளிக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.