Home Blog Page 60

செம்மணி மனித புதைகுழி: விசாரணை நடைபெறுவதை உறுதி செய்ய சர்வதேச சமூகம் ஒன்றுபட வேண்டும்-உமா குமரன்

செம்மணி மனித புதைகுழி தொடர்பில்சர்வதேச மனித உரிமைகள் சட்டம் மற்றும் தரநிலைகளுக்கு இணங்க விசாரணை நடைபெறுவதை உறுதி செய்ய சர்வதேச சமூகம் ஒன்றுபட வேண்டும். என பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது

செம்மணியில் உள்ள மனிதப் புதைகுழியின் அளவு பெரும்பேரழிவு.அகழப்படும் ஒவ்வொரு புதைகுழிக்கு பின்னாலும் துயரத்தில் சிக்குண்ட உண்மை மற்றும் நீதியை தேடும் ஒரு குடும்பம் உள்ளது. சர்வதேச மனித உரிமைகள் சட்டம் மற்றும் தரநிலைகளுக்கு இணங்க விசாரணை நடைபெறுவதை உறுதி செய்ய சர்வதேச சமூகம் ஒன்றுபட வேண்டும்.பிரிட்டன் மனித புதைகுழிதொடர்பான விசாரணைக்கு தொழில்நுட்ப உதவியை வழங்குமா என கேள்வியெழுப்பியிருந்தேன்.

இந்த விஷயம் குறித்து சமீபத்தில் பிரிட்டனின் வெளியுறவுச் செயலாளருக்கு நான் கடிதம் எழுதினேன்

அதனை வாசித்துக்கொண்டிருப்பதை அவர் உறுதி செய்தார்.. சர்வதேச நட்பு நாடுகளுடன் இணைந்து இங்கிலாந்து நமது பங்கை முழுமையாக ஆற்ற வேண்டும். நாடாளுமன்றம் திரும்பியதும் நான் அவரைத் தொடர்புகொள்வேன்

செம்மணியில் மீட்கப்பட்ட சான்று பொருட்கள் காட்சிப்படுத்தல்: இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபை கருத்து

செம்மணி மற்றும் கொக்குத்தொடுவாய் புதைகுழி தளங்களில் இருந்து மீட்கப்பட்ட தனிப்பட்ட உடைமைகளை அடையாளம் காண்பதில் பொதுமக்களின் உதவியை நாடும் குறித்த தீர்மானமானது இலங்கையின் உண்மை, நீதி மற்றும் நல்லிணக்கத்தை நோக்கிய ஒரு குறிப்பிடத்தக்க மற்றும் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட ஒரு விடயம் என இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

அறிக்கையொன்றின் ஊடாகவே இதனை தெரிவித்துள்ளது.

மேலும், பல தசாப்தங்களாக தங்கள் அன்புக்குரியவர்களின் நிலை குறித்து அயராது திடமாக பதில்களை தேடி வரும் குடும்பங்களுடன் இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபை உறுதியாக நிற்பதாகவும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நீதி மற்றும் உண்மையை பின்தொடர்வதில் அவர்களின் தாங்குதன்மை ஒரு தார்மீக வழிகாட்டியாக தொடர்ந்து செயல்படுகிறது எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், இலங்கை அரசாங்கம் குறிப்பாக காணாமல்போனோர் அலுவலகம் தங்கள் பணியை வெளிப்படை தண்மையுடனும் விரைவாகவும், காணாமல் போனவர்களின் குடும்பங்களுடன் அர்த்தமுள்ள ஆலோசனையுடனும் நிறைவேற்ற வேண்டும் எனவும் இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது.

செம்மணியில் மீட்கப்பட்ட சான்று பொருட்களை மக்கள் பார்ப்பதற்கான சந்தர்ப்பம் நிறைவு

செம்மணி மனித புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட சான்று பொருட்களை சுமார் 200 பேர் வரையில் பார்வையிட்டருந்தனர்.

புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட சான்று பொருட்கள் இன்றைய தினம் மதியம் 1.30 மணி முதல் மாலை 05 மணி வரையில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.

அவற்றை சுமார் 200 பேர் வரையில் பார்வையிட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

தனிமனிதனோடு தொடர்புடைய சான்று பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டதுடன் இனிவரும் காலங்களிலும் தனிமனிதனோடு தொடர்புடைய சான்று பொருட்கள் மீட்கப்பட்டால் அவற்றையும் காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

50 மாணவர்களுக்கு குறைவாகவுள்ள பாடசாலைகளை அபிவிருத்தி செய்ய தீர்மானம்!

அரசாங்க பாடசாலைகள் மூடப்பட மாட்டாது என்றும் 50 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும்  கல்வி, உயர்கல்வி பிரதியமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்  செவ்வாய்க்கிழமை (05) வாய்மூல விடை க்கான கேள்வி நேரத்தில், ரவி கருணாநாயக்க எம்பி எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

பாடசாலைகள் தொடர்பில் தீர்மானங்களை மேற்கொள்ளும் போது மக்கள் பிரதிநிதிகள், பிரதேச ஒருங்கிணைப்புக்  குழு, பிரதேச செயலாளர், கிராம சேவை உத்தியோகத்தர்கள் என அனைவரும் ஒன்றிணைந்தே தீர்மானங்கள்  மேற்கொள்ளப்படுகின்றன.

அவ்வாறு தீர்மானங்களை மேற்கொள்ளும் சந்தர்ப்பங்களில் சில வேளைகளில் 50 மாணவர்களுக்கும் குறைவான எண்ணிக்கை உள்ள  பாடசாலைகளை நடத்திச் செல்வது தொடர்பிலும் ஆராயப்படும்.

தற்போதைய அரசாங்கம் கல்விக்கான சந்தர்ப்பங்களை விரிவுபடுத்த வேண்டும் என்ற நோக்கத்திலேயே செயற்படுகிறது.பாடசாலைகளை மூடி விடுவது நோக்கம் அல்ல.

அத்துடன் பாடசாலைகளை நடத்திச் செல்லும் நடவடிக்கைகளை கல்விய மைச்சினால் மட்டும் முன்னெடுத்துச் செல்ல முடியாது.அனைத்து தரப்பினரதும் ஒத்துழைப்பு அவசியமாகும்  என்றார்.

நல்லிணக்கச் செயற்பாட்டுக்கு ஐ.நா.விடமிருந்து உதவி: அமைச்சரவை அனுமதி!

நல்லினம் மற்றும் சகவாழ்வு தொடர்பான தேசிய கொள்கை மற்றும் செயற்பட்டுத் திட்டத்தைத் தயாரிப்பதற்கும், அதற்குத் தேவையான தொழில்நுட்ப, விநியோக, நிதி மற்றும் நிர்வாக ஒத்துழைப்புகளை ஐ.நா.அலுவலகத்தின் மூலம் பெற்றுக்கொள்வதற்கும் அமைச்சரவை அனுமதிவழங்கியுள்ளது.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்தார்.

2024ஆம் ஆண்டின் முதலாம் இலக்க, தேசிய ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலக சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வு தொடர்பான தேசிய கொள்கை மற்றும் தேசிய செயற்பாட்டுத் திட்டத்தை தயாரிப்பதற்கும் அமுல்படுத்துவதற்குமான அதிகாரம், தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்துக்கான அலுவலகத்துக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வு தொடர்பான தேசியகொள்கை மற்றும் செயற்பாட்டுத் திட்டத்தைத் தயாரிப்பதற்கு அடிப்படையாக அமைகின்ற படிமுறைகளைத் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம் தயாரித்துள்ளது.

அதற்கமைய பல்துறைசார் அணுகுமுறை மூலம் 2025-2029 காலப் பகுதிக்கான நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வு தொடர்பான தேசிய கொள்கை மற்றும் செயற்பாட்டுத் திட்டத்தைத் தயாரிப்பதற்கும், அதற்குரிய அமைச்சுகள் மற்றும் நிரல் நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் கூடிய அமைச்சுகளுக்கு இடையிலான செயலணியொன்றை தாபிப்பதற்கும் தேவையான தொழில்நுட்ப, விநியோக, நிதி மற்றும் நிர்வாக ஒத்துழைப்புகளை இலங்கையில் அமைந்துள்ள ஐ.நா. அலுவலகத்தின் மூலம் பெற்றுக்கொள்வதற்கும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது – என்றார்.

காவல்துறையினரின் பாதுகாப்புடன் மன்னாரை சென்றடைந்தது காற்றாலை மின் கோபுரங்களின் பாகங்கள்

மன்னார் – மதவாச்சி பிரதான வீதி,முருங்கன் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காற்றாலை மின் கோபுர பாகங்களுடன் காணப்பட்ட பாரிய வாகனங்கள் இன்று புதன்கிழமை (06) அதிகாலை 2.30 மணியளவில் மக்களின் பாரிய எதிர்ப்புகளுக்கு மத்தியில் நூற்றுக்கணக்கான காவல்துறையினரின் பாதுகாப்புடன் மன்னார் நகரை சென்றடைந்துள்ளது.

குறித்த காற்றாலை மின் கோபுரங்களுக்கான பாகங்களை மன்னார் நகருக்குள் எடுத்து வரக்கூடாது என்ற கோரிக்கையை முன் வைத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை (03) இரவு மன்னார் தள்ளாடி சந்தியில் மக்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

அதனைத்தொடர்ந்து மறு நாள் திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய தினங்களில் மன்னார் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் மக்கள் போராட்டத்தை முன்னெடுத்து வந்த நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை (05) காலை மன்னார் பஜார் பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களை மூடி மன்னாரில் முன்னெடுக்கப்படவுள்ள 2 ஆம் கட்ட காற்றாலை மின் உற்பத்தி வேலைத்திட்டம் மற்றும்,மன்னார் நகருக்குள் கொண்டு வரப்படவுள்ள காற்றாலை மின் கோபுரங்களை கொண்டு வர வேண்டாம் என்ற கோரிக்கையை முன் வைத்து போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

இந்நிலையில் மன்னார் – மதவாச்சி பிரதான வீதி,முருங்கன் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சுமார்  5 இற்கும் மேற்பட்ட காற்றாலை மின் கோரங்களுக்கான காற்றாலைகளை மன்னார் நகருக்குள் எடுத்து வர வேண்டாம் என்ற கோரிக்கையை முன் வைத்து  மன்னார் தள்ளாடி பகுதியில் நேற்றையதினம் இரவு மக்கள் கண்காணிப்பு போராட்டத்தையும் மேற்கொண்டனர்.

குறித்த பகுதியில் நின்ற மக்கள் அவ்விடத்தில் இருந்து சென்ற நிலையில் இன்றைய தினம் அதிகாலை 2.30 மணியளவில் நூற்றுக்கணக்கான காவல்துறையினர் மற்றும் கலகம் அடக்கும் காவல்துறையினரின் பாதுகாப்புடன் காற்றாலை மின் கோபுரங்களை ஏற்றிய வாகனம் மன்னாரை நோக்கிச் சென்றது.

போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அங்கிருந்து சென்ற நிலையில் சிறிய அளவிலான மக்களே குறித்த பகுதியில் நின்ற நிலையில் காவல்துறை அவ்விடத்தில் நின்றவர்களை அச்சுறுத்தி பலத்த பாதுகாப்புடன் மன்னாரை நோக்கி குறித்த வாகனம் சென்றுள்ளது. குறித்த சம்பவம் மன்னார் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிணைக் கைதிகளை மீட்க,காசாவை முழுமையாக ஆக்கிரமிக்க இஸ்ரேல் திட்டம்

பிணைக் கைதிகளை மீட்க, காசா பகுதியை முழுமையாக ஆக்கிரமித்து ஹமாஸ் படையினருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.” என இராணுவத்திற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உத்தரவிட்டுள்ளார்.

ஹமாஸ் இடையே இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக தீவிர போர் நடக்கிறது. ஹமாஸ் படையினர் 250 பேரை பிணைக்கைதிகளாக பிடித்து சென்றனர். இவர்களில் சிலர் இறந்து விட்டனர். பலர் மீட்கப்பட்டனர். இன்னும் 49 பேர் ஹமாஸ் வசம் இருக்கின்றனர்.

அவர்களை மொத்தமாக விடுவித்தால் போரை நிறுத்துவோம் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இந்த சூழலில் பிணைக்கைதி ஒருவர் தனது புதைகுழியை தோண்டும் அதிர்ச்சி காணொளியை ஹமாஸ் வெளியிட்டு இருந்தது.

இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியதாவது,

‘ பிணைக் கைதிகளை மீட்க, காசா பகுதியை முழுமையாக ஆக்கிரமித்து ஹமாஸ் படையினருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். புதிய உத்தரவைப் பின்பற்ற வேண்டும்.

பிணைக்கைதி புதைகுழி தோண்டும் காணொளி வெளியிட்டதை பார்க்கும்போது, ஹமாஸ் என்ன விரும்புகிறது என்பதை நான் சரியாகப் புரிந்துகொள்கிறேன். அவர்கள் ஒரு ஒப்பந்தத்தை விரும்பவில்லை.

இந்த திகில் வீடியோக்களைப் பயன்படுத்தி எங்களை வேதனையடைய செய்ய விரும்புகிறார்கள். இவ்வாறு இஸ்ரேல் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

காசா பகுதியை முழுமையாக ஆக்கிரமிக்க வேண்டும் என இஸ்ரேல் பிரதமர் ராணுவத்திற்கு உத்தரவிட்டு இருப்பது பரபரப்பை கிளப்பி உள்ளது.

அதேவேளை, போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் உடனடியாக உடன்பட வேண்டும் என்று ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்

தேசபந்து தென்னகோனுக்கு எதிராக பாராளுமன்றில் தீர்மானம் நிறைவேற்றம்!

பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து தேசபந்து தென்னகோனை நீக்குவதற்கான யோசனை பாராளுமன்றில் 177 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

2002ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க அதிகாரிகளைப் பதவி நீக்கும் சட்டத்திற்கு அமைய தேசபந்து தென்னகோனை பதவி நீக்குவதற்கான யோசனை சபாநாயகர்களால் முன்வைக்கப்பட்டது.

யோசனைக்கு ஆதரவாக 177 வாக்குகள் பதிவாகியிருந்ததுடன், எதிராக எவரும் வாக்களிக்கவில்லை.
பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை
அதேநேரம் இந்த யோசனை மீதான விவாதத்தின் போது பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தமது பதவியை அதிகார துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் பலரும் கருத்துரைத்திருந்தனர்.

குறிப்பாக ஈஸ்டர் குண்டு தாக்குதல் உள்ளிட்ட பல சம்பவங்களை அவர் முன்கூட்டியே அறிந்து இருந்ததாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால இன்று பாராளுமன்றில் வெளிப்படுத்தினார்.
அத்துடன் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளில் பெரும்பாலான வழக்குகளில் அவர் குற்றவாளியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்தார்.

கண்டறியப்படும் உண்மைகள் முழுமையானதாக இருக்க வேண்டும் : கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

செம்மணி விவகாரம் உட்பட உண்மை கண்டறியப்பட வேண்டுமாயின் அது முழுமையானதாக இருக்க வேண்டும் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தியுள்ளார்.

செம்மணி – சித்துப்பாத்தி மனித புதைகுழி வளாகத்துக்கு, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் குழாம் ஒன்று நேற்று விஜயம் செய்திருந்தமை தொடர்பில் கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, இலங்கை ரோம் சாசனத்தை அங்கீகரிக்காமையால், இனப்படுகொலை, மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர் குற்றம் என்பன தொடர்பில் இலங்கைக்குள் விசாரணை செய்ய முடியாது.
அவ்வாறாயின் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.
எனவே, இந்த உண்மையை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வெளிப்படுத்த வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கிருஷாந்தி குமாரசுவாமி வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சோமரத்ன ராஜபக்ஷவின் உயிருக்கு சிறையில் ஆபத்து ஏற்படுமானால், அதற்கு அரசாங்கமே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் மனங்களில் அழியா இடம் பிடித்திருக்கின்ற செம்மணி மனிதப் புதைகுழி வழக்கில் ஏற்கனவே குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட சோமரத்ன ராஜபக்ஷ சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்.
செம்மணி பகுதியில் சுமார் அறுநூறு உடலங்கள் வரை புதைக்கப்பட்டுள்ளதாக ஏற்கனவே அவரால் வழங்கப்பட்ட வாக்குமூலம் ஒன்று காணப்படுகிறது.

இந்த நிலையில், அவரின்  மனைவியினால் ஜனாதிபதிக்கு எழுதப்பட்டதாக கூறப்படும் கடிதம் தற்போது மற்றுமொரு திருப்பு முனையை ஏற்படுத்தியுள்ளது. செம்ணியில் சுமார் 300 பேர் வரையில் புதைக்கப்பட்டதாகவும், சிறையில் உள்ள தனது கணவருக்கு அதற்கான உத்தரவுகளை பிறப்பித்த நபர்கள் தொடர்பில் சாட்சியமளிக்க தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டு  குறித்த கடிதம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு அனுப்பப்பட்டமை தொடர்பில் ஊடகங்கள் வாயிலாக தாம் அறிந்துகொண்டுள்ளதாகவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறியுள்ளார்.

இந்த நிலையில், சோமரத்ன ராஜபக்ஷ ஒரு குற்றவாளியாக காணப்பட்டாலும், அவர்  சில விடயங்களை கூறப்போவதாக, அவரின் மனைவி கூறுவது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். எனவே, சோமரத்ன ராஜபக்ஷ என்ன கூற போகிறார் என்பதை அறிய வேண்டும் என்றும், சிறையில் உள்ள நிலையில் அவருக்கு ஏதாவது உயிர் ஆபத்துக்கள் ஏற்படுமானால் அதற்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கைக்கு எதிரான தீர்மானங்களை அவுஸ்திரேலியா ஆதரிக்க வேண்டும் : அந்நாட்டு செனட்டர்கள் கோரிக்கை

இலங்கையின் யாழ்ப்பாணத்தில் உள்ள செம்மணிப் புதைகுழிகளில் இருந்து வெளியாகும் தகவல்களைத் தொடர்ந்து, நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்காக அவுஸ்திரேலிய செனட் உறுப்பினர்கள், அழைப்பு விடுத்துள்ளனர்

அந்த நாட்டு பாராளுமன்றத்தில் இது தொடர்பான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. செம்மணியில் மேற்கொள்ளப்படும் தடயவியல் அகழ்வுகளின் போது, சிறுவர்களின் எச்சங்கள், அவர்களின் பாடசாலைப் பைகள் உட்பட அட்டூழியங்களுக்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்த கண்டெடுப்புக்கள், சர்வதேச சமூகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளன. இலங்கையின் உள்நாட்டுப் போரின் போதும் அதற்குப் பிறகும் நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை குறித்து சுயாதீன விசாரணை நடத்த வேண்டும் என்ற அவசர கோரிக்கைகளை மீண்டும் எழுப்பியுள்ளது என்று அவுஸ்திரேலிய செனட் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில், இந்த விடயத்தில், அவுஸ்திரேலிய அரசு, உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று செனட்டர்கள், அவுஸ்திரேலிய பாராளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளனர். அத்துடன், இலங்கையில் உள்ள செம்மணி மற்றும் பிற புதைகுழிகள் குறித்து சர்வதேச அளவில் கண்காணிக்கப்படும் தடயவியல் விசாரணைக்கு உதவ வேண்டும்.

ஐக்கிய நாடுகளின் இலங்கை பொறுப்புக்கூறல் திட்டத்தின் நீடிப்பை ஆதரிக்க வேண்டும். போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்காக நம்பகத்தன்மையுடன் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக இலக்கு வைக்கப்பட்ட தடைகளை செயற்படுத்த வேண்டும்.

அதேநேரம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் ஒரு பார்வையாளராக, இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை மற்றும் பாதுகாப்பு சபைக்கு அனுப்பும் தீர்மானங்களை ஆதரிக்கவேண்டும் என்று செனட்டர்கள் கோரியுள்ளனர்.

இந்தநிலையில் தமிழ் புலம்பெயர்ந்தோர், அவுஸ்திரேலிய சமூகத்துக்கு நிறையவே பங்களித்துள்ளனர்.
எனவே, அவர்களின் நீதிக்கான கோரிக்கைகள் செயல்படுத்தப்படுவதை உறுதிசெய்ய வேண்டியது அவுஸ்திரேலியாவின் பொறுப்பு என்று அந்த நாட்டு செனட்டர்கள் அவுஸ்திரேலிய அரசை வலியுறுத்தியுள்ளனர்.