பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்துச் செய்வது தொடர்பாக, தற்போதைய அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்துடன் உடன்பாட்டை எட்டியுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
அத்துடன், நிகழ்நிலை காப்புச்சட்டத்தை மாற்றம் செய்வது குறித்து இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அதேபோல் ஜி.எஸ்.பி பிளஸ் வசதி குறித்து அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்துடன் கலந்துரையாடி வருவதாகவும், அதில் அரசாங்கம் பல விடயங்களில் உடன்பாட்டிற்கு வந்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
பயங்கரவாதத் தடைச் சட்டம் இரத்து செய்யப்பட வேண்டும் என்றும் நிகழ்நிலை காப்புச்சட்டம் மாற்றப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே அரசாங்கம் உள்ளதாகவும் ஜனாதிபதி கூறினார்.
ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதும் மனித உரிமைகளை உறுதி செய்வதும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பொறுப்பு என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குதல்: அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணக்கப்பாடு
தமிழ் அரசியல் கைதிகள் குறித்து அவதானம் செலுத்தி உள்ளதாக நீதி அமைச்சர் அறிவிப்பு
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் சிறைச்சாலையில் உள்ள தமிழர்களின் உறவினர்கள் தம்மிடம் விடுத்த கோரிக்கை தொடர்பில் தாம் அவதானம் செலுத்தியுள்ளதாக நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலை புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் நால்வரும், தமிழீழ விடுதலை புலிகள் அமைப்புடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 8 பேரும் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் முன்வைத்த கேள்விக்கு பதிலளித்த போதே நீதி அமைச்சர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அத்துடன் வாழ்நாள் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ள 3 பேர் உள்ளதாகவும் அவர்களில் இருவர் மேன்முறையீடு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மரண தண்டை விதிக்கப்பட்ட 2 கைதிகளும் உள்ளனர். அவர்கள் அனைவரும் வெலிகடை சிறைச்சாலை, மெகசின் சிறைச்சாலை, கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலை, மஹர சிறைச்சாலை மற்றும் பூசா உள்ளிட்ட சிறைச்சாலைகளில் உள்ளதாகவும் நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அவர்களின் தண்டனை காலம் நிறைவடைந்ததன் பின்னர் அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதனையடுத்து கேள்வி எழுப்பிய பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன், குறித்த கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும் என்று நம்புவதாகவும், அதற்கான பதிலை எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.
இதற்கு பதிலளித்த நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார, அரசியலமைப்பின்படி, பொது மன்னிப்பு தொடர்பில் தீர்மானிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கே உள்ளதாகவும் மாறாக நீதி அமைச்சருக்கு அவ்வாறான அதிகாரம் எதுவும் இல்லை என்றும் சுட்டிக்காட்டினார்.
எவ்வாறாயினும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் சிறைச்சாலையில் உள்ள சில கைதிகளின் உறவினர்கள் அண்மையில் தம்மை சந்தித்ததாகவும் அவர்கள் தொடர்பில் தாம் அவதானம் செலுத்தியுள்ளதாகவும் நீதி அமைச்சர் தெரிவித்தார்.
அவர்களால் வழங்கப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பெயர்கள் தொடர்பில் என்ன செய்ய முடியும் என்பது தொடர்பில் தற்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இதற்கு புறம்பாக தம்மால் எந்த வாக்குறுதியையும் வழங்க முடியாது என்றும் நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார பதிலளித்தார்.
செம்மணி விடயத்தில் இந்தியா தலையீட்டை செய்ய வேண்டும் வலியுறுத்தல்
செம்மணி மனித புதைகுழி குறித்து சுயாதீன சர்வதேச கண்காணிப்புடனான விசாரணைக்கு இந்தியா பரப்புரை செய்ய வேண்டும் என்று இந்திய பாராளுமன்ற உறுப்பினர் சசிகாந் செந்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
செம்மணி மனித புதைகுழி குறித்து இந்திய பாராளுமன்றத்தில் உரையாற்றுவதற்கு அனுமதி கோரி பாராளுமன்றத்தின் கீழ்சபையின் செயலாளர் நாயகத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் வடபகுதியில் யாழ்ப்பாணத்தில் உள்ள செம்மணியில் சமீபத்தில் மனித புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறித்த தமிழ்நாட்டின் வேதனையை தெரிவிப்பதற்கு தாம் விளைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மீட்கப்பட்ட மனித எச்சங்கள், இலங்கையின் தமிழ் சமூகத்தின் நீண்டகாயங்களை மீண்டும் கிளறியுள்ளன.
இவற்றில் சில மோதல்களின் போது பலவந்தமாக காணாமலாக்கப்பட்டவர்களின் மனித எச்சங்கள் என்ற கருதப்படுகின்றன.
பல தசாப்தங்களாக இலங்கை தமிழர்கள் திட்டமிடப்பட்ட வன்முறைகள், பலவந்தமாக காணாமலாக்கப்படுதல், போன்றவற்றை எதிர்கொண்டுள்ளனர்.
அவர்களுக்கு நீதி மறுக்கப்பட்டுள்ளது என்று இந்திய பாராளுமன்ற உறுப்பினர் சசிகாந் செந்தில் தெரிவித்துள்ளார்.
மனித புதைகுழி என்பது வெறுமனே ஒரு தடயவியல் இடம் மாத்திரமில்லை. இது மறைக்கப்பட்ட உண்மை தாமதிக்கப்பட்ட நீதிக்கான ஒரு குறியீடு.
ஈழத்தமிழர்களுடன் கலாச்சார, மொழி உறவுகளை பகிர்ந்துகொண்டுள்ள தமிழக மக்கள் தொடர்ந்தும் அலட்சியமாக இருக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்திய அரசாங்கம் உடனடியாக இந்த விடயத்தை இராஜதந்திர வட்டாரங்கள் ஊடாக அணுகவேண்டும்.
இந்த விடயத்தில் இலங்கை அரசாங்கத்திடமிருந்து முழுமையான வெளிப்படை தன்மையை கோர வேண்டும்.
செம்மணி மனித புதைகுழி குறித்து சுயாதீன சர்வதேச கண்காணிப்புடனான விசாரணைக்கு இந்தியா பரப்புரை செய்ய வேண்டும் என்றும் இந்திய பாராளுமன்ற உறுப்பினர் சசிகாந் செந்தில் தெரிவித்துள்ளார்.
பாடசாலை மாணவர்களிடையே உளவியல் ரீதியான பாதிப்பு அதிகரிப்பு
பல்வேறு சமூக காரணிகளால் பாடசாலை மாணவர்கள் தற்போது குறிப்பிடத்தக்களவு உளவியல் ரீதியான பாதிப்புக்கு உள்ளாவதாக தெரியவந்துள்ளது.
2024 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட பாடசாலை சுகாதாரக் கணக்கெடுப்பின் இந்த வியடம் தெரியவந்துள்ளதாக சுகாதார அமைச்சின் உளவியல் செயற்பாட்டு பணியகத்தின் பிரதி பணிப்பாளரும் விசேட வைத்திய நிபுணருமான லக்மினி மகோதரத்ன தெரிவித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி,
- 22.4 சதவீதமான மாணவர்கள் தனிமையை உணர்ந்துள்ளனர்.
- 11.9 சதவீதமான 13–17 வயதுடைய மாணவர்கள் கவலையின் காரணமாக தூக்கமின்மையை எதிர்கொள்கின்றனர்.
- 18 சதவீதமான மாணவர்களுக்கு உளச்சோர்வு (Depression) அறிகுறிகள் காணப்படுகின்றன.
- 7.5 சதவீதமான மாணவர்களுக்கு நெருக்கமான நண்பர்கள் இல்லை.
- 75 சதவீதமான மாணவர்கள் உளநலப் பிரச்சனைகளைப் பகிர்வதற்காக நெருங்கிய நபர்கள் இல்லையென தெரிவித்துள்ளனர்.
இது குறித்து விசேட வைத்திய நிபுணருமான லக்மினி மகோதரத்ன தெரிவிக்கையில்,
இலங்கையில் ஏன் இவ்வாறான நிலைமை ஏற்படுகிறது என எனக்கு ஆச்சரியமாக உள்ளது. இன்றைய காலகட்டத்தில் சிறுவர்கள் அதிக மன அழுத்தத்தில் உள்ளனர்.
அதேவேளை, பெரியோரும் மன அழுத்தத்தை எதிர்கொள்கிறார்கள். பல்வேறு சமூக காரணிகள் மற்றும் அழுத்தங்கள் இந்த நிலைமைக்கு பங்களிக்கின்றன என தெரிவித்துள்ளார்.
தேசிய மனநல சுகாதார நிறுவனத்தின் உளவியலாளர் வைத்திய நிபுணர் சஜீவன அமரசிங்க தெரிவிக்கையில்,
நாட்டில் நாளொன்றுக்கு சுமார் 08 உயிர் மாய்க்கும் சம்பவங்கள் பதிவாகின்றன. 1996 ஆம் ஆண்டு வெளியான உலகளாவிய ரீதயிலான தற்கொலை பட்டியலில் இலங்கை இரண்டாம் இடத்தில் இருந்தது. அந்த காலப்பகுதியில், 100,000 பேருக்கு 47 பேர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். ஜனாதிபதி ஆணைக்குழு எடுத்த தீர்மானங்களை அடுத்து அந்த விகிதம் கணிசமாகக் குறைந்தது.
தற்போது, 100,000 பேரில் 15 பேர் உயிரை மாய்த்துக் கொள்கின்றனர். வருடத்திற்கு சுமார் 3,500 பேர் உயிரை மாய்த்துக் கொள்கின்றனர். கடந்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை நிலையானதாக உள்ளது.”
அத்துடன், நாளொன்றுக்கு சுமார் எட்டு உயிர்மாய்க்கும் சம்பவங்கள் இடம்பெற்றாலும், ஊடகங்களில் உயிர்மாய்ப்பு சம்பவம் ஒன்று மட்டுமே பதிவாகக்கூடும் எனவும், பல சம்பவங்கள் பதிவு செய்யப்படாமல் போகலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒட்டுமொத்த உயிர்மாய்ப்பு சம்பவங்களின் விகிதம் கணிசமான அளவு குறையவில்லை என்றாலும், அண்மையில் பல சர்ச்சைக்குரிய சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
“இருப்பினும், கடந்த காலங்களைப் போலல்லாமல், ஊடகங்கள் இதுபோன்ற அனைத்து சம்பவங்களையும் வெளியிடுவதில்லை. இது ஒரு பாரிய முன்னேற்றம் எனத் தெரிவித்துள்ளார்.
நீங்களோ அல்லது உங்களுக்குத் தெரிந்த ஒருவரோ நெருக்கடியில் சிக்கி உதவி தேவைப்பட்டால், உடனடியாக உதவிகளை பெற வழிமுறைகள் உள்ளன:
– அவசரமான சூழ்நிலைகளில், தேசிய மனநல உதவி எண்ணைத் தொடர்பு கொள்ளவும்: 1926
– சுமித்ரயோ: +94 11 2 682535/+94 11 2 682570
– லங்கா லைஃப் லைன்: 1375
– CCCline : 1333 (இலவச சேவை)
அம்பாறை: திராய்க்கேணிப் படுகொலை நினைவேந்தல்…
அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனை பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட பழம்பெரும் தமிழ் கிராமமான திராய்க்கேணி எனும் தமிழர் பூர்வீகக் கிராமத்தில் 1990 ஆகஸ்ட் ஆறாம் திகதி காலை 7:00 மணி முதல் இரவு வரைக்கும் இலங்கை இராணுவமும், முஸ்லிம் ஊர்காவல் படையும், தோழமையோடும் நட்புறவோடு வாழ்ந்த அயல் கிராமத்து முஸ்லிம்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில காடையர்களும் இணைந்து கூரிய வாள், கத்தி ,கோடரி போன்ற ஆயுதங்களோடு வருகை தந்து படையினரின் அறிவுறுத்தலுக்கு அமைய திராய்க்கேணி பெரிய தம்பிரான் ஆலயத்திற்குள் ஒன்று கூடிய பொது மக்களை இளைஞர்கள், பெரியவர்கள், சிறுவர்கள் என்று வயது வித்தியாசமின்றி மிலேச்சத் தனம் மிக்கதான கொடூரத் தாக்குதலை மேற்கொண்டு சுமார் 54 உறவுகளை குற்றுயிரும் கொலையுயிருமாய் கொன்று ஒழித்தனர்.
எஞ்சிய உறவுகள் உயிரை காத்துக் கொள்ளக் காரைதீவு மண்ணை நோக்கி ஒடித் தப்பினர், சில பெண்கள் இந்த காடையர்களின் காமவெறி ஆட்டத்திற்கும் உள்ளானார்கள்.
இப்படியொரு மனித பேரவலத்தை நிகழ்த்திய நாளின் 35 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு 06.08.2025 பிற்பகல் ஐந்து முப்பது மணி அளவில் இப்ப படுகொலை இடம்பெற்ற (இப்போது மாரியம்மன் ஆலயமாக காணப்படுகின்ற) ஆலய முன்றலில் அந்த உறவுகளில் 33 பேர் புதைக்கப்பட்ட இடத்தில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தி அந்த உறவுகளுக்காகப் பிராத்தித்ததோடு அவர்களுக்கான நீதிக்காகவும் குரல் கொடுத்தனர்.
இங்கு கலந்து கொண்டிருந்த ஏற்பாட்டாளர்கள் சார்பில் செயற்பாட்டாளர் காந்தன், மனித உரிமை செயற்பாட்டாளர் தாமோதரம் பிரதீபன், ஆலய நிருவாகத்தினர்,படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவுகள்,திராய்க்கேணி எழுச்சி ஒன்றிய உறுப்பினர்கள்,இளைஞர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது கருத்துத் தெரிவித்த மனித உரிமை செயற்பாட்டாளர் தாமோதரம் பிரதீபன் செம்மணியில் கொன்று புதைக்கப்பட்ட எங்கள் கண்மணிகளின் எலும்புக்கூடுகள் எழுந்து எமக்கும் சேர்த்து நீதி கேட்பது போல் திராய்க்கேணி படுகொலையில் கொன்று புதைக்கப்பட்ட எங்கள் உறவுகளும் எலும்புக்கூடுகளாய் எழுந்து விரைவில் நீதி கேட்க வேண்டும் என்ற பிரார்த்தனைகளோடு இந்த நினைவேந்தல் நிகழ்வில் ஈடுபட்டிருந்தோம் எனவும் நீதிக்கான முயற்சிகளையும், பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணத்தையும் பெற்றுக் கொடுக்கத் தாம் முயற்சிப்பதாகவும் கூறியதோடு 35 ஆண்டுகள் கடந்து வாலியோடும் வேதனையோடும் வாழும் இந்த மக்கள் தமக்கு நடந்த அநீதிகளை இன்றுவரையும் வெளியில் சொல்ல அச்சப்படுவதையும் சுட்டிக்காட்டியதோடு இவ்வாறு அந்த மக்கள் இன்றும் அச்சப்படக் காரணமான பாதுகாப்புத் தரப்பு, இப்படுகொலையைப் புரிந்த காடையர்கள், புலனாய்வாளர்கள் தொடர்பிலும் அரசும் மனித உரிமையகமும்,சர்வதேசமும் அவதானிக்க வேண்டும் எனவும் கூறினார்.
போதைப்பொருளுடன் இந்திய பிரஜைகள் கைது!
12 கோடியே 10 இலட்சம் ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் இந்திய பிரஜைகள் மூவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் இன்று வியாழக்கிழமை (07) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்தியா நாட்டைச் சேர்ந்த 42 வயதுடைய ஆணும் 43 மற்றும் 22 வயதுடைய இரண்டு பெண்களுமே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட இந்திய பிரஜைகள் மூவரும் வர்த்தகர்கள் ஆவர்.
தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி அவசரமாக சந்திக்கவுள்ளதாக தகவல்
தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 15 பேரின் எழுத்து மூலமான அவசர வேண்டுகோளின் பெயரில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று அவசரமாகச் சந்திக்கவுள்ளதாக தெரியவருகின்றது.
மன்னார் மாவட்டத்தில் அமைக்கப்படும் காற்றாலை மின் கோபுரங்கள் தொடர்பில் தமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 15 பேர் ஒப்பமிட்டு ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கடிதம் தொடர்பில் ஆராயவே இந்த அவசர சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இன்று 2 மணிக்கு நடைபெறவுள்ள இந்த அவசர சந்திப்புக்குக் கடிதத்தில் ஒப்பமிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கடிதத்தில் ஒப்பமிடாத வடக்கு, கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களும், மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த ஐந்து சிவில் சமூகச் செயற்பாட்டாளர்களும் அழைக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சந்திப்புக்கு மன்னார் காற்றாலையுடன் தொடர்புடைய திணைக்கள அதிகாரிகளும் அழைக்கப்பட்டுள்ளனர்.
பாதுகாப்புப் பிரதியமைச்சர் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை!
பாதுகாப்புப் பிரதியமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவருவதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி திட்டமிட்டுள்ளது.
இதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனக்கட்சி, சர்வஜன அதிகாரம் உள்ளிட்ட எதிரணிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் நடைபெற்ற விசேட கூட்டமொன்றில் இதுதொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறுத்தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகள் சுதந்திரமாக இடம்பெறவேண்டுமானால் பாதுகாப்புப் பிரதி அமைச்சர் பதவி விலக வேண்டும் என எதிரணிகள் வலியுறுத்தின. எனினும், அவர் பதவி விலகவில்லை. இந்நிலையிலேயே அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவருவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் சம்பவம் நடந்தபோது அருண ஜயசேகர, கிழக்கு மாகாணக் கட்டளைத் தளபதியாகச் செயற்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா முழுவதும் விமான சேவையை நிறுத்திய யுனைடெட் ஏர்லைன்ஸ்!
அமெரிக்காவில் பிரபலமான நிறுவனமாக யுனைடெட் ஏர்லைன்ஸ் விளங்குகிறது.
இந்த நிறுவனம் மூலம் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கானோர் விமான பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனம், பல விமானங்களை அவசரமாக தரையிறக்கியது. இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
இதனை தொடர்ந்து டென்வர், நியூயார்க், ஹூஸ்டன் மற்றும் சிகாகோ உள்ளிட்ட விமான நிலையங்களில் விமானங்கள் புறப்படுவதற்கு தாமதம் ஏற்பட்டது.
சமீப காலமாக தொழில்நுட்ப கோளாறு அமெரிக்காவின் விமானப் போக்குவரத்துத் துறையைப் பாதிக்கும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. கடந்த மாதம் அலாஸ்கா ஏர்லைன்ஸ் நிறுவனம் ஒரு தொழில்நுட்ப பிரச்சனையால் பாதிக்கப்பட்டது. இதனால் அதன் விமானங்கள் பல மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது
இஸ்ரேலின் கொலனியாக இலங்கை மாறியுள்ளது!
பொத்துவில் அருகம்பை பிரதேசத்தில் இருக்கும் காணிகள் இஸ்ரேலுக்கு உரித்தாகி வருவதன் மூலம் இலங்கை இஸ்ரேலின் கொலணியாகியுள்ளது. இஸ்ரேல் இராணுவத்தில் இருக்கும் கொலை குற்றவாளிகள் மன ஆறுதல் பெறுவதற்கு இலங்கைக்கு வருகிறார்கள். இவர்களுக்கு அரசாங்கம் தற்போது இலவச விசா வழங்குகிறது என எஸ்.எம். மரிக்கார் குற்றம்சாட்டினார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (6) இடம்பெற்ற இலங்கை மின்சாரம்(திருத்தம்) சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
மக்கள் விடுதலை முன்னணி எதிர்க்கட்சியில் இருக்கும்போது பலஸ்தீனுக்கு ஆதரவு தெரிவித்து, இஸ்ரேலுக்கு எதிராக அமெரிக்க தூதரகத்துக்கு முன்னாலும் வேறு இடங்களிலும் போராட்டங்களை முன்னெடுத்து வந்தது. ஆனால் இன்று இரண்டு மூன்று கொள்கைகளை கடைப்பிடித்த வருகிறது.
பாெத்துவில் அறுகம்பை பிரதேசத்தில் இருக்கும் காணிகள் இஸ்ரேலுக்கு உரித்தாகி வருகின்றன. அந்த பகுதியில் இஸ்ரேல் இராணுவத்தின் மனித கொலைகாரர்கள், யுத்தக்குற்றம் இளைத்தவர்கள். அவர்கள் மன ஆறுதல் அடைவதற்கு இங்கு வருகிறார்கள். அந்தபகுதியில் ஹோட்டல்களை அமைத்துக்கொண்டு, இலங்கையர்களுக்கு செல்ல முடியாது. வெளிநாட்டவர்களுக்கு மாத்திரம் என தெரிவிக்கப்படுகிறது. ஆனால் அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. நாட்டுப்பற்று தொடர்பில் கதைத்து ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம் தற்போது ஒன்றும் செய்ய முடியாமல் இருக்கிறது.
6 மாதங்களுக்கு முன்னர் இங்குவந்த இஸ்ரேல் இனத்தவர்கள் பாரியளவில் இருக்கின்றனர்.இவ்வாறு இருக்கையில் அரசாங்கம் தற்போது இஸ்ரேலுக்கு இலவச விசா வழங்கி இருக்கிறது. அரசாங்கத்தில் இருக்கும் முஸ்லிம் எம்.பிக்கள் எங்கே என கேட்கிறோம்.
அந்த பிரதேசத்தில் இருக்கும் முஸ்லிம் மக்களைவிட தமிழ், கிறிஸ்தவ பெண்கள் மற்றும் பிள்ளைகள் கையாட்களாகி இருக்கிறார்கள்.அந்த பிரதேசம் எவ்வாறு நிர்வகிக்கப்படுகிறது என்பது இராணுவத்தினருக்கு புரிகிறது. ஆனால் பொலிஸார் எதனையும் கண்டும் காணாமல் போன்று, செயற்படுகிறார்கள். அவர்களுக்கு மேலிடத்தில் இருந்து யாராவது அழுத்தங்களை கொடுக்கிறார்களோ தெரியாது.
இலங்கையில் அறுகம்பை பிரதேசத்தை இஸ்ரேலின் கொலிணியாக்குவதற்கு இந்த அரசாங்கம் இடமளிக்கப்போகிறதா என கேட்கிறோம். அதேபோன்று யுத்தக்குற்றவாளிகளின் அடைக்கலமாக ஏற்படுத்திக்கொள்ள இடமளிக்கப்போகிறதா என்று கேட்கிறோம். இலங்கை ஜனநாயகம் இஸ்ரேலாக்கப்பட்டு வருகிறது. எனவே இதுதொடர்பில் அரசாங்கம் தற்போதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசாங்கத்தில் இருப்பவர்கள் இதுதொடர்பில் அழுத்தங்களை அரசாங்கத்துக்கு கொடுக்க வேண்டும் என்றார்.