Home Blog Page 57

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்! ஐ.நா. எச்சரிக்கை

காசா நகரை முழுமையாகக் கைப்பற்றும் திட்டத்துக்கு இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் அறிவித்துள்ளது.

நெதன்யாகுவின் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையின் படி, ஹமாஸை முற்றிலும் தோற்கடிப்பது அல்லது கடத்தப்பட்டவர்களை மீட்பது தற்போதைய இராணுவ நடவடிக்கைகளால் சாத்தியமில்லையென அமைச்சரவையில் பெரும்பாலான அமைச்சர்கள் கருதினர். இதையடுத்து, காசா நகரை முழுமையாகக் கைப்பற்றும் திட்டத்தை முன்னெடுக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அமெரிக்கா மற்றும் சில மேற்கத்திய நாடுகள், இஸ்ரேலின் திட்டம் பிராந்தியத்தில் நடைபெற்று வரும் இராணுவ மோதல்களை மேலும் தீவிரப்படுத்தக்கூடும் என எச்சரித்துள்ளன. இதே நேரத்தில், பாலஸ்தீன சுகாதார அதிகாரிகள், காசா நகரில் கடும் தாக்குதல்கள் நடைபெறுமானால், பொதுமக்கள் உயிரிழப்புகள் கணிசமாக அதிகரித்து, மனிதாபிமான நெருக்கடி கடுமையாகும் என்ற அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில், இஸ்ரேலின்  திட்டம் ‘பேரழிவு விளைவுகளை’ ஏற்படுத்தக்கூடும் என ஐக்கிய நாடுகள் சபையும்  (UN) , கடுமையாக எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக ஐ.நா.வின் மனிதாபிமான விவகாரங்கள் தொடர்பான ஒருங்கிணைப்பாளர், முஹன்னத் ஹடி (Muhannad Hadi) கருத்துத் தெரிவிக்கையில் ” காசா நகரில் ஏற்கனவே உணவு, தண்ணீர், மருத்துவப் பொருட்கள் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் கடுமையாக தட்டுப்பாடு நிலையில் உள்ளன.

இதற்கிடையில் இத்தகைய பெரிய அளவிலான இராணுவ நடவடிக்கை, ஆயிரக்கணக்கான பொதுமக்களின் உயிர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும்  எனத்  தெரிவித்துள்ளார்.

இராணுவ முகாமிற்கு அழைக்கப்பட்ட இளைஞர்கள் மீது தாக்குதல்! ஒருவர் உயிரிழப்பு

முத்தையன்கட்டுகுளம் இடதுகரை இராணுவ முகாமிலுள்ள இராணுவத்தினரால் இராணுவ முகாமிற்கு அழைக்கப்பட்ட ஐந்து இளைஞர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஒருவர்  உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளதுடன் தாக்குதலில் 32வயதுடைய குடும்பஸ்தரொருவரே  உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

முத்தையன்கட்டுகுளம் இடதுகரை இராணுவ முகாமிலுள்ள இராணுவத்தினரால் இராணுவ முகாமிற்கு வாருங்கள் தகரங்கள் கழற்ற வேண்டும் என குறித்த பகுதி இளைஞர் ஒருவருக்கு ஒரு தொலைபேசி இலக்கத்தில் இருந்து  கடந்த 07ம் திகதி இரவு 7.30 மணியளவில் அழைப்பு ஏற்படுத்தப்பட்டிருந்ததாகவும் அதனையடுத்தே நேற்றையதினம் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இராணுவ முகாம் ஒரு சில நாட்களில் விடுவிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் அவ் இராணுவ முகாமிலுள்ள கட்டிடங்களை அகற்றும் நடவடிக்கையை இராணுவத்தினர் மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்நிலையில் தகரங்கள் தருவதாக கூறி அப்பகுதியில் இளம் குடும்பஸ்தருக்கு இராணுதினர் ஒருவரால்  கூறப்பட்டுள்ளது.

அதனையடுத்து  குறித்த ஐவர் சென்றுள்ளனர். இராணுவ முகாமிற்கு சென்ற இளைஞர்களுக்கு தடிகள், கம்பிகளால் இராணுவத்தினர் துரத்தி துரத்தி குறித்த இராணுவ முகாமிற்கு பின்பகுதியாக உள்ள குளம் வரை தாக்கியுள்ளதாக பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தாக்குதலால் என்ன செய்வதென்று தெரியாது இராணுவ முகாமிற்கு பின்பகுதியாக ஓடி தப்பி வந்ததாகவும் 20 ற்கு மேற்பட்ட இராணுவத்தினர் தம்மை தாக்கியதாக தாக்குதலுக்கு இலக்காகிய இளைஞன் ஒருவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இராணுவ முகாமிற்கு சென்ற ஐந்து நபர்களில் நால்வர் திரும்பி வந்துள்ள நிலையில் ஒருவர் மாயமாகிய நிலையில், அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் முத்தையன்கட்டில் வசிக்கும் எதிர்மன்னசிங்கம் கபில்ராஜ் என்ற 32 வயதுடைய ஏழு மாத குழந்தையின் தந்தையே  உயிரிழந்துள்ளமை  குறிப்பிடதக்கது.

‘இன பேதமில்லை’ என்ற கோஷத்தின் பின்னால் சமஷ்டியை மறைக்க முடியாது

வடக்கு கிழக்கு தமிழ்மக்கள் எழுபது ஆண்டுகளுக்கு மேலாக முன்வைத்து வரும் சமஷ்டி முறையிலான அரசியல் அதிகாரப் பகிர்வுக்கான கோரிக்கையை “இன மத பேதமின்மை” எனும் கோஷத்தின் பின்னால் மறைக்கமுடியாது என வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு தெரிவித்துள்ளது.

நிலையான அரசியல் தீர்விற்கான 100 நாட்கள் செயல்முனைவின் மூன்றாம் வருடத்தை முன்னிட்டு வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவால் வவுனியாவில் நேற்று (08) போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது கருத்து தெரிவித்த அந்த குழுவினர் 1948இற்குப் பின்னரான இலங்கையின் 75வருடகால அரசியல் வரலாற்றில், இனத்துவ அரசியலே மேலோங்கி காணப்படுகிறது என்று சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஏனைய தேசிய இனங்களான வடக்கு கிழக்கு தமிழ் மக்கள், முஸ்லிம் மக்கள், மலையகத் தமிழ் மக்கள் ஆகியோருக்கு அரச அதிகாரத்தில் உரிய பங்கு வழங்கப்படவில்லை.

அரசியல் அதிகாரம் உரிய முறையில் பகிர்ந்துகொள்ளப்படவில்லை. மாறாக மொழிரீதியான, மத ரீதியான அடக்குமுறைகள் மேலோங்கின என்று வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு தெரிவித்துள்ளது.
இந்த அடக்குமுறைகள் அனைத்தையும் வைத்துக்கொண்டு “இன மத பேதமின்மை” குறித்து அரசு கதைப்பது நேர்மையின்மையாகும்.

அந்தவகையில் வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் எழுபது ஆண்டுகளுக்கு மேலாக முன்வைத்து வரும் சமஷ்டி முறையிலான அரசியல் அதிகாரப் பகிர்வுக்கான கோரிக்கையை “இன மத பேதமின்மை” எனும் கோஷத்தின் பின்னால் மறைக்கவோ மறுதலிக்கவோ முடியாது என்று அந்த குழுவினர் வலியுறுத்தியுள்ளனர்.

மனித புதைகுழி விடயத்தில் சட்ட மற்றும் கட்டமைப்பு மறுசீரமைப்பை கோரி நீதி அமைச்சருக்கு கடிதம்

மனிதப்புதைகுழி விவகாரம் தொடர்பில் சுயாதீனமானதும், பக்கச்சார்பற்றதும், பாதிக்கப்பட்ட தரப்பினரை மையப்படுத்தியதுமான செயன்முறைக்குத் துணையளிக்கக்கூடிய சட்ட மற்றும் கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்புக்களை மேற்கொள்ளுமாறும், அவற்றின் இயலுமையை வலுப்படுத்துமாறும் நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவிடம் மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் வலியுறுத்தியுள்ளது.

மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரினால் நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் இந்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
‘இலங்கையில் உண்மை மற்றும் நீதியை உறுதி செய்வதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய முக்கிய மறுசீரமைப்புகள் தொடர்பில் நாம் பல தசாப்த காலமாக வலியுறுத்தி வருகின்றோம்’.

அந்த வகையில் மனிதப்புதைகுழிகள் தொடர்பில் சமகாலத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் மற்றும் இலங்கையின் கடந்தகால வன்முறைகளுடன் தொடர்புடைய விவகாரங்கள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

மனிதப்புதைகுழி விவகாரத்தில் தடயவியல் ஆய்வு உள்ளடங்கலாக அரசினால் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளைப் பாராட்டும் அதேவேளை, இவ்விடயத்தில் உண்மையைக் கண்டறிவதற்கும், நீதியைப் பெற்றுக்கொள்வதற்கும் உரியவாறான நிபுணத்துவம் மற்றும் வளங்கள் என்பன உடனடியாகத் தேவைப்படுகின்றன.

அதற்கமைய மனிதப்புதைகுழி விவகாரம் தொடர்பில் சுயாதீனமானதும், பக்கச்சார்பற்றதும், பாதிக்கப்பட்ட தரப்பினரை மையப்படுத்தியதுமான செயன்முறைக்குத் துணையளிக்கக்கூடிய சட்ட மற்றும் கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்புக்களை மேற்கொள்ளுமாறும், அவற்றின் இயலுமையை வலுப்படுத்துமாறும் கோருகின்றோம் என்றும் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் வலியுறுத்தியுள்ளது.

பொறுப்புக்கூறலில் ஐ.நா.வின் அணுகுமுறை அதிருப்தி : ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகருக்கு பா. அரியநேத்திரன் கடிதம்

இலங்கையின் பொறுப்புக்கூறல் விடயத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அணுகுமுறை தொடர்பில் தீவிர கரிசனையை வெளிப்படுத்தி கடந்த ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித்தேர்தலில் வட, கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி தமிழ் பொதுவேட்பாளராகப் போட்டியிட்ட பாக்கியசெல்வம் அரியநேத்திரன் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்குக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.

வட, கிழக்கு மாகாணங்களில் இயங்கிவரும் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் இணைந்து எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவிருக்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்படவிருக்கும் அறிக்கை குறித்த தமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தி கடந்த வாரம் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் மற்றும் பேரவையில் அங்கம்வகிக்கும் உறுப்புநாடுகளின் பிரதிநிதிகளுக்குக் கடிதமொன்றை அனுப்பிவைத்திருந்தனர்.

அதன் தொடர்ச்சியாக இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழ்மக்களுக்கான பொறுப்புக்கூறலை வலியுறுத்தி பாக்கியசெல்வம் அரியநேத்திரன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்குக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.

அக்கடிதத்தில்,

இலங்கையின் பொறுப்புக்கூறல் விடயத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அணுகுமுறை தொடர்பில் தீவிர கரிசனை வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக இவ்விடயத்தில் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு வழங்கப்பட்டுள்ள ஆணையின் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான தன்மை, பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதில் தொடரும் பேரவையின் தாமதம், சுயாதீனமானதும், நியாயமானதும், செயற்திறன்மிக்கதுமான செயன்முறையொன்றை ஸ்தாபிப்பதற்குப் பதிலாக இலங்கை அரசாங்கத்தில் தங்கியிருத்தல் என்பன தொடர்பில் அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேவேளை இலங்கையில் இடம்பெற்ற இனவழிப்பு உள்ளிட்ட குற்றங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறல் உறுதிப்படுத்தப்படவேண்டும், ஐக்கிய நாடுகள் கட்டமைப்புக்குள் நடைமுறைச்சாத்தியமான வேறு வழிமுறைகளைப் பரிந்துரைத்தல், உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டத்தை முற்றுமுழுதாக சர்வதேசமயப்படுத்தி விரிவுபடுத்தல், சுயாதீனமானதும் பக்கச்சார்பற்றதுமான பொறிமுறையொன்றைப் பரிந்துரைத்தல் ஆகிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

வரி குறித்து அமெரிக்காவுடன் ஒப்பந்தம் எதுவும் எட்டப்படவில்லை: ஜனாதிபதி

இலங்கை மீது அமெரிக்கா விதித்த வரியை 20 சதவீதமாக குறைப்பதற்கான எந்த ஒப்பந்தமும் இறுதி செய்யப்படவில்லை என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
அமெரிக்கா விதித்த வரியை, மேலும் குறைப்பது தொடர்பான கலந்துரையாடல்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் பாராளுமன்றில் இன்று (07) விசேட உரையொன்றை ஆற்றிய போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
இதுவரை இடம்பெற்ற கலந்துரையாடல்களில் சில உடன்பாடுகள் எட்டப்பட்டதன் விளைவாக தீர்வை வரி 20 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அத்துடன், இந்த வரி விதிப்பினால் பாதிக்கப்பட்ட தொழிலதிபர்கள் மற்றும் தொழில்முனைவோருடன் தாங்கள் கலந்துரையாடியதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்
அத்துடன், நாட்டின் பொருளாதாரம் பேரழிவை சந்திக்கும் என்று எதிர்க்கட்சியினர் கொடூரமான கனவை காண்பதாகவும் ஜனாதிபதி குற்றம் சாட்டினார்
ஆனால், இந்த கனவு நனவாகாது என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குதல்: அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணக்கப்பாடு

பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்துச் செய்வது தொடர்பாக, தற்போதைய அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்துடன் உடன்பாட்டை எட்டியுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
அத்துடன், நிகழ்நிலை காப்புச்சட்டத்தை மாற்றம் செய்வது குறித்து இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அதேபோல் ஜி.எஸ்.பி பிளஸ் வசதி குறித்து அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்துடன் கலந்துரையாடி வருவதாகவும், அதில் அரசாங்கம் பல விடயங்களில் உடன்பாட்டிற்கு வந்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
பயங்கரவாதத் தடைச் சட்டம் இரத்து செய்யப்பட வேண்டும் என்றும் நிகழ்நிலை காப்புச்சட்டம் மாற்றப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே அரசாங்கம் உள்ளதாகவும் ஜனாதிபதி கூறினார்.
ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதும் மனித உரிமைகளை உறுதி செய்வதும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பொறுப்பு என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

தமிழ் அரசியல் கைதிகள் குறித்து அவதானம் செலுத்தி உள்ளதாக நீதி அமைச்சர் அறிவிப்பு

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் சிறைச்சாலையில் உள்ள தமிழர்களின் உறவினர்கள் தம்மிடம் விடுத்த கோரிக்கை தொடர்பில் தாம் அவதானம் செலுத்தியுள்ளதாக நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலை புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் நால்வரும், தமிழீழ விடுதலை புலிகள் அமைப்புடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 8 பேரும் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் முன்வைத்த கேள்விக்கு பதிலளித்த போதே நீதி அமைச்சர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அத்துடன் வாழ்நாள் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ள 3 பேர் உள்ளதாகவும் அவர்களில் இருவர் மேன்முறையீடு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மரண தண்டை விதிக்கப்பட்ட 2 கைதிகளும் உள்ளனர். அவர்கள் அனைவரும் வெலிகடை சிறைச்சாலை, மெகசின் சிறைச்சாலை, கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலை, மஹர சிறைச்சாலை மற்றும் பூசா உள்ளிட்ட சிறைச்சாலைகளில் உள்ளதாகவும் நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அவர்களின் தண்டனை காலம் நிறைவடைந்ததன் பின்னர் அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதனையடுத்து கேள்வி எழுப்பிய பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன், குறித்த கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும் என்று நம்புவதாகவும், அதற்கான பதிலை எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.
இதற்கு பதிலளித்த நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார, அரசியலமைப்பின்படி, பொது மன்னிப்பு தொடர்பில் தீர்மானிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கே உள்ளதாகவும் மாறாக நீதி அமைச்சருக்கு அவ்வாறான அதிகாரம் எதுவும் இல்லை என்றும் சுட்டிக்காட்டினார்.
எவ்வாறாயினும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் சிறைச்சாலையில் உள்ள சில கைதிகளின் உறவினர்கள் அண்மையில் தம்மை சந்தித்ததாகவும் அவர்கள் தொடர்பில் தாம் அவதானம் செலுத்தியுள்ளதாகவும் நீதி அமைச்சர் தெரிவித்தார்.
அவர்களால் வழங்கப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பெயர்கள் தொடர்பில் என்ன செய்ய முடியும் என்பது தொடர்பில் தற்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இதற்கு புறம்பாக தம்மால் எந்த வாக்குறுதியையும் வழங்க முடியாது என்றும் நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார பதிலளித்தார்.

செம்மணி விடயத்தில் இந்தியா தலையீட்டை செய்ய வேண்டும் வலியுறுத்தல்

செம்மணி மனித புதைகுழி குறித்து சுயாதீன சர்வதேச கண்காணிப்புடனான விசாரணைக்கு இந்தியா பரப்புரை செய்ய வேண்டும் என்று இந்திய பாராளுமன்ற உறுப்பினர் சசிகாந் செந்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

செம்மணி மனித புதைகுழி குறித்து இந்திய பாராளுமன்றத்தில் உரையாற்றுவதற்கு அனுமதி கோரி பாராளுமன்றத்தின் கீழ்சபையின் செயலாளர் நாயகத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் வடபகுதியில் யாழ்ப்பாணத்தில் உள்ள செம்மணியில் சமீபத்தில் மனித புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறித்த தமிழ்நாட்டின் வேதனையை தெரிவிப்பதற்கு தாம் விளைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மீட்கப்பட்ட மனித எச்சங்கள், இலங்கையின் தமிழ் சமூகத்தின் நீண்டகாயங்களை மீண்டும் கிளறியுள்ளன.

இவற்றில் சில மோதல்களின் போது பலவந்தமாக காணாமலாக்கப்பட்டவர்களின் மனித எச்சங்கள் என்ற கருதப்படுகின்றன.
பல தசாப்தங்களாக இலங்கை தமிழர்கள் திட்டமிடப்பட்ட வன்முறைகள், பலவந்தமாக காணாமலாக்கப்படுதல், போன்றவற்றை எதிர்கொண்டுள்ளனர்.

அவர்களுக்கு நீதி மறுக்கப்பட்டுள்ளது என்று இந்திய பாராளுமன்ற உறுப்பினர் சசிகாந் செந்தில் தெரிவித்துள்ளார்.
மனித புதைகுழி என்பது வெறுமனே ஒரு தடயவியல் இடம் மாத்திரமில்லை. இது மறைக்கப்பட்ட உண்மை தாமதிக்கப்பட்ட நீதிக்கான ஒரு குறியீடு.

ஈழத்தமிழர்களுடன் கலாச்சார, மொழி உறவுகளை பகிர்ந்துகொண்டுள்ள தமிழக மக்கள் தொடர்ந்தும் அலட்சியமாக இருக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்திய அரசாங்கம் உடனடியாக இந்த விடயத்தை இராஜதந்திர வட்டாரங்கள் ஊடாக அணுகவேண்டும்.
இந்த விடயத்தில் இலங்கை அரசாங்கத்திடமிருந்து முழுமையான வெளிப்படை தன்மையை கோர வேண்டும்.

செம்மணி மனித புதைகுழி குறித்து சுயாதீன சர்வதேச கண்காணிப்புடனான விசாரணைக்கு இந்தியா பரப்புரை செய்ய வேண்டும் என்றும் இந்திய பாராளுமன்ற உறுப்பினர் சசிகாந் செந்தில் தெரிவித்துள்ளார்.

பாடசாலை மாணவர்களிடையே உளவியல் ரீதியான பாதிப்பு அதிகரிப்பு

பல்வேறு சமூக காரணிகளால் பாடசாலை மாணவர்கள் தற்போது குறிப்பிடத்தக்களவு உளவியல் ரீதியான பாதிப்புக்கு உள்ளாவதாக தெரியவந்துள்ளது.

2024 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட பாடசாலை சுகாதாரக் கணக்கெடுப்பின் இந்த வியடம் தெரியவந்துள்ளதாக சுகாதார அமைச்சின் உளவியல் செயற்பாட்டு பணியகத்தின் பிரதி பணிப்பாளரும் விசேட வைத்திய நிபுணருமான லக்மினி மகோதரத்ன தெரிவித்துள்ளார்.

2024 ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி,

  • 22.4 சதவீதமான மாணவர்கள் தனிமையை உணர்ந்துள்ளனர்.
  • 11.9 சதவீதமான 13–17 வயதுடைய  மாணவர்கள் கவலையின் காரணமாக தூக்கமின்மையை எதிர்கொள்கின்றனர்.
  • 18 சதவீதமான மாணவர்களுக்கு உளச்சோர்வு (Depression) அறிகுறிகள் காணப்படுகின்றன.
  • 7.5 சதவீதமான மாணவர்களுக்கு நெருக்கமான நண்பர்கள் இல்லை.
  • 75 சதவீதமான மாணவர்கள் உளநலப் பிரச்சனைகளைப் பகிர்வதற்காக நெருங்கிய நபர்கள் இல்லையென தெரிவித்துள்ளனர்.

இது குறித்து விசேட வைத்திய நிபுணருமான லக்மினி மகோதரத்ன தெரிவிக்கையில்,

இலங்கையில் ஏன் இவ்வாறான நிலைமை ஏற்படுகிறது என  எனக்கு ஆச்சரியமாக உள்ளது. இன்றைய காலகட்டத்தில் சிறுவர்கள் அதிக மன அழுத்தத்தில் உள்ளனர்.

அதேவேளை, பெரியோரும் மன அழுத்தத்தை எதிர்கொள்கிறார்கள். பல்வேறு சமூக காரணிகள் மற்றும் அழுத்தங்கள் இந்த நிலைமைக்கு பங்களிக்கின்றன என தெரிவித்துள்ளார்.

தேசிய மனநல சுகாதார நிறுவனத்தின் உளவியலாளர் வைத்திய நிபுணர் சஜீவன அமரசிங்க தெரிவிக்கையில்,

நாட்டில்  நாளொன்றுக்கு சுமார் 08 உயிர் மாய்க்கும் சம்பவங்கள் பதிவாகின்றன. 1996 ஆம் ஆண்டு வெளியான உலகளாவிய ரீதயிலான தற்கொலை பட்டியலில் இலங்கை இரண்டாம் இடத்தில் இருந்தது. அந்த காலப்பகுதியில், 100,000 பேருக்கு 47 பேர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். ஜனாதிபதி ஆணைக்குழு எடுத்த தீர்மானங்களை அடுத்து அந்த விகிதம்  கணிசமாகக் குறைந்தது.

தற்போது, 100,000 பேரில் 15 பேர்  உயிரை மாய்த்துக் கொள்கின்றனர். வருடத்திற்கு சுமார் 3,500 பேர்  உயிரை மாய்த்துக் கொள்கின்றனர். கடந்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை நிலையானதாக உள்ளது.”

அத்துடன், நாளொன்றுக்கு சுமார் எட்டு உயிர்மாய்க்கும் சம்பவங்கள் இடம்பெற்றாலும், ஊடகங்களில் உயிர்மாய்ப்பு சம்பவம் ஒன்று மட்டுமே பதிவாகக்கூடும் எனவும், பல சம்பவங்கள் பதிவு செய்யப்படாமல் போகலாம் எனவும் அவர்  தெரிவித்துள்ளார்.

ஒட்டுமொத்த உயிர்மாய்ப்பு சம்பவங்களின் விகிதம் கணிசமான அளவு குறையவில்லை என்றாலும், அண்மையில் பல சர்ச்சைக்குரிய சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

“இருப்பினும், கடந்த காலங்களைப் போலல்லாமல், ஊடகங்கள்  இதுபோன்ற அனைத்து சம்பவங்களையும் வெளியிடுவதில்லை. இது ஒரு பாரிய முன்னேற்றம் எனத்  தெரிவித்துள்ளார்.

நீங்களோ அல்லது உங்களுக்குத் தெரிந்த ஒருவரோ நெருக்கடியில் சிக்கி உதவி தேவைப்பட்டால், உடனடியாக உதவிகளை பெற வழிமுறைகள் உள்ளன:

– அவசரமான சூழ்நிலைகளில், தேசிய மனநல உதவி எண்ணைத் தொடர்பு கொள்ளவும்: 1926

– சுமித்ரயோ: +94 11 2 682535/+94 11 2 682570

– லங்கா லைஃப் லைன்: 1375

– CCCline : 1333 (இலவச சேவை)