Home Blog Page 47

சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம், இலங்கைக்கு பல பரிந்துரைகள் முன்மொழிவு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான தீர்மானம் புதுப்பிக்கப்பட வேண்டும் என்று சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.

இலங்கையில் மனித உரிமைகள் நிலைமைகள் தொடர்பில் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளது.

அத்துடன் மனித உரிமைகளை பாதுகாப்பதற்காக அரசாங்கத்துக்கு சில பரிந்துரைகளையும் குறித்த அமைப்பு முன்மொழிந்துள்ளது. ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க பதவியேற்று ஒரு வருடம் கழிந்துள்ள போதிலும், மனித உரிமைகள் பிரச்சினையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்று சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாறாக கடுமையான உரிமை மீறல்களும், போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ளவர்களை அச்சுறுத்தும் செயற்பாடுகளும் தொடர்வதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாடாளுமன்றில் பெரும்பான்மையை கொண்டுள்ள புதிய அரசாங்கம் நல்லிணக்கம் குறித்து கருத்துரைக்கின்ற போதிலும் போர் கால குற்றங்களை சரியான முறையில் நிவர்த்திப்பதற்கு எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என்றும் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் இலங்கை அரசாங்கத்துக்கு சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் சில பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. இதன்படி, சர்வதேச சட்டத்தின் கீழ் விசாரணைகளை மேற்கொள்ளவும், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குற்றங்களின் சாட்சியங்களை சந்திக்கவும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் அரசாங்கம், தேர்தல் காலத்தில் உறுதியளித்தப்படி, சட்டமா அதிபர் அலுவலகத்தில் இருந்து தனியாக விலகி பொது வழக்கு விசாரணைக்கான வழக்கு தொடுநர் அலுவலகத்தை உருவாக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

நீதி மற்றும் பொறுப்புக்கூறலை நிலைநாட்டுவதற்கு முந்தைய உள்நாட்டு விசாரணை ஆணைக்குழுக்களால் சேகரிக்கப்பட்ட ஆதாரங்களை பயன்படுத்த வேண்டும். ஏப்ரல் 21 தாக்குதல் உள்ளிட்ட குண்டு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் நியாயமானதும் முழுமையானதுமான விசாரணையை உறுதி செய்ய வேண்டும் என்று சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம்; வலியுறுத்தியுள்ளது.

அத்துடன் உண்மை மற்றும் நீதிக்காக போராடும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மீதான பாதுகாப்பு படைகளின் துன்புறுத்தல்கள் மற்றும் அச்சுறுத்தல்களை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் அரசாங்கத்துக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியாக உள்ள மனித புதைகுழிகள் தொடர்பான விசாரணைகளுக்கு சர்வதேச தொழில்நுட்பகளை ஏற்றுக் கொள்வதுடன் மரபணு பரிசோதனையை நடத்தி, மனித எச்சங்களை அடையாளம் காண வேண்டும்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களுக்கு பொறுப்பானவர்கள் என்று கூறப்படும் நபர்கள் மீது வலுவானதும் சுயாதீமானதுமான குற்றவியல் வழக்குகளை தொடர வேண்டும் என்று சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.

இவை தவிர, பயங்கரவாத தடைச்சட்டத்தின் பயன்பாட்டை உடனடியாக நிறுத்தி, உறுதியளித்தவாறு அதனை ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் புதிய பயங்கரவாத எதிர்ப்;புச் சட்டம், மனித உரிமைகள் தொடர்பான சர்வதேச தரநிலைகளுக்கு இணங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் பரிந்துரைத்துள்ளது.

ஆட்சி கவிழும் என வங்குரோத்து அடைந்த அரசியல்வாதிகள் பிரச்சாரம்: அமைச்சர் சந்திரசேகர்

இந்த ஆட்சி கவிழும் என வங்குரோத்து அடைந்த அரசியல்வாதிகள் பிரச்சாரம் முன்னெடுத்து வருகின்றனர். இந்த போலி பரப்புரைக்கு வடக்கில் மக்களால் நிராகரிக்கப்பட்ட அரசியல்வாதிகளும் உயிர்கொடுக்க முற்படுகின்றனர்  என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

இலங்கை ஐயப்ப சுவாமிமார்களின் யாத்திரையினை புனித யாத்திரையாக பிரகடனப்படுத்தியதன் பின்னர் அது தொடர்பான விசேட கலந்துரையாடல் திங்கட்கிழமை (18) கொழும்பு செட்டியார் தெரு கல்யாண முருகன் மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது.

ரவி குருசாமி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சிறப்பு அதிதியாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் பிரதம அதிதியாகவும், இந்து சமய அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் வை.அனிருத்தன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கெளரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.

நாடளாவிய ரீதியில் உள்ள ஐயப்ப நாமத்தில் இயங்கும் அமைப்புக்கள், குரு சுவாமிகள் மற்றும் ஐயப்பன் தொடர்புடைய அமைப்புக்களின் உறுப்பினர்கள் என பெரும் எண்ணிக்கையிலானவர்கள் இதில் கலந்து கொண்டனர்.

இதன்போது சுவாமிமார்களால் பரிந்துரைக்கப்பட்ட ஐயப்ப மாலை அணிந்த சுவாமிமார்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் மற்றும் நெறிமுறைகள் அடங்கிய அறிக்கை சமர்ப்பிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

நாடளாவிய ரீதியில் இருந்து வருகைதந்த ஐயப்பசாமி குருமார்கள் தங்களது கருத்துக்களையும் முன்வைத்தனர். அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் ஆகியோர்களை குருசுவாமிகள் பொன்னாடை போர்த்தி கெளரவித்தனர்.

இதன்போது அமைச்சர் மேலும் கூறியவை வருமாறு,

ஐயப்பன் யாத்திரை கடந்த காலங்களில் புனித யாத்திரையாக பிரகடனப்படுத்தப்படவில்லை. இதற்குரிய முயற்சி முன்னெடுக்கப்பட்டும் ஏன் அத்தனை வருடங்கள் நடக்கவில்லை? இனவாத ஆட்சியாளர்கள், இனவாத அமைச்சரவை இருந்ததால்தான் நடக்கவில்லை.

ஆனால் எமது சமதர்ம ஆட்சியில் இனவாதம் இல்லை. மக்கள் நலனுக்கே முக்கியத்துவம், முன்னுரிமை வழங்கப்படுகின்றது.

அந்தவகையில் புனித யாத்திரை தொடர்பான அமைச்சரவை பத்திரம் வந்தபோது அதற்கு ஏகமனதாக ஆதரவளிக்கப்பட்டு, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதற்கு முழுமையாக முன்னின்று செயற்பட்ட பிரதி அமைச்சர் தோழர் பிரதீப்புக்கு நன்றிகள். இளைஞர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகி வருகின்றனர்.

சமூக சீர்கேட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. எனவே, சமூக மாற்றத்துக்கு ஆன்மீகவாதிகளின் பங்களிப்பும் மிக முக்கியம்.

அதேவேளை, வறுமை ஒழிப்புக்குரிய நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது. மறுபுறத்தல் வரி வருமானம் அதிகரித்துள்ளது. பொருளாதார இலக்குகளை அடைந்து வருகின்றோம்.

இந்நிலையில் ஆட்சி மாற்றம் பற்றி வங்குரோத்து அரசியல்வாதிகள் கருத்து வெளியிட்டு வருகின்றனர். இதற்கு உயிர்கொடுக்கும் வகையில் வடக்கில் தோல்விகண்ட, மக்களால் நிராகரிக்கப்பட்ட அரசியல்வாதிகள் முயற்சித்து வருகின்றனர் என்றார்.

காற்றாலை திட்டத்திற்கு எதிராக மன்னாரில் தொடரும் போராட்டம்

மன்னாரில் (Mannar) காற்றாலை கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிராக 16 ஆவது நாளாக நேற்றும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் குறித்த போராட்டம் மன்னார் நகர சுற்றுவட்ட பகுதியில் நேற்று (18) இடம்பெற்றுள்ளது.

மக்கள் குறித்த போராட்டத்தில் இணைந்து கொண்டு தமது ஆதரவை தெரிவித்துள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் மன்னாரில் புதிதாக முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலை மின் கோபுரம் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவை முழுமையாக நிறுத்தும் வரை தமது போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆளுநர்களின் கீழ் மாகாண சபைகள் செயல்படுவது குறித்து பொதுஜன பெரமுன கருத்து

ஜனாதிபதியின் நேரடி பிரதிநிதியான ஆளுநர்களின் நிர்வாகத்தின் கீழ் மாகாண சபைகள் இயங்குவது சட்டவிரோதமானது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

மேலும்  மாகாண சபைத் தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளமைக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும், இந்நாள் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் பொறுப்புக்கூற வேண்டும். மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்றும் அவர் கூறியுள்ளார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில்  திங்கட்கிழமை (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தவறுகளைச் சுட்டிக்காட்டுவது ஊடகங்களின் கடமை : அமைச்சர் முனீர் முளப்பர்

தவறுகள் இருக்குமானால் ஊடகங்கள் அதனை சுட்டிக்காட்டுவதில் எந்த தவறும் இல்லை. அதன் மூலம்  தவறுகளை திருத்திக்கொள்ள முடியும். மாறாக நிலைமையை அறியாமல்  ஒருவரை பற்றி தவறான செய்திகளை பரப்புவது ஒரு சிறந்த ஊடகவியலாளருக்கு பொறுத்தமில்லை என தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் கம்பஹா மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கு ஏற்பாடு செய்திருந்த  ஊடக கருத்தரங்கு 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நீர்கொழும்பு போரத்தொட்ட அல் பலாஹ் கல்லூரியில் இடம்பெற்றது.இதில் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவிதார்.

”21ஆம் நூற்றாண்டில் ஊடகம் சமூகத்திலும்  நாட்டின் ஆட்சியின் போக்கில் தாக்கத்தை செலுத்துகின்ற முக்கிய துறையாகும். ஒரு சந்தர்ப்பத்தில் மலேசியாவின் முன்னாள் பிரதமர் மஹதீர் மொஹமட் கூறுகையில், 19ஆம் நூற்றாண்டில் கப்பல் வசம் யாரின் கைகளில் இருக்குமோ அவர்கள் நாட்டை ஆள்வார்கள். 20ஆம் நூற்றாண்டில் யார் வான்படையை கையில் வைத்திருக்கிறார்களோ அவர்கள் உலகை ஆள்வார்கள். அதேபோன்று 21ஆம் நூற்றாண்டில் யார்வசம் ஊடகம் இருக்கிறதோ அவர்கள் நாட்டை ஆள்வார்கள் என தெரிவித்திருந்தார். தற்போது அதுவே இடம்பெறுகிறது.

அதனால் சிறந்த ஊடகவியலாளர்களுக்கு உள்நாட்டிலும்  சர்வதேசத்திலும் பாரியதொரு பங்களிப்பை செய்ய முடியும். சமூகம் சார்ந்த பல பிரச்சினைகள் எமது நாட்டில் இருக்கின்றன. அதனை வெளியில் கொண்டுவரும் பாரிய பொறுப்பு ஊடகங்களுக்கே இருக்கின்றன. அதனால் ஊடகவியலாளர்கள் குப்பைகளை தேடக்கூடியவர்களாக இல்லாமல் சத்தியத்தை தேடிச்சென்று அதனை மக்கள் மயமாக்கும் ஊடகவியலாளர்களாக இருக்க வேண்டும்.

ஒருசில ஊடகங்கள் குப்பைகளை கழறிக்கொண்டு, அதில் இன்பம் கண்டுவருவதை காணக்கூடியதாக இருக்கின்றன. இதனால் அந்த சமூகம் பாதிக்கப்படுகின்றன. போலி செய்திகள் மூலம் சமூகத்தை பிழையான வழிக்கு கொண்டுசெல்லலாம். பிழையான ஊடக செய்திகளால் ஒரு சமூகமாக நாங்கள் எந்தளவு பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்பது எங்களுக்கு தெரியும்.

அதனால் ஊடகத்துறையில் இருப்பவர்கள் தனிப்பட்ட விடயங்களை மறந்து,  நடுநிலையாக இருந்து செயற்படக்கூடியவராக இருந்தால், அவருக்கும் சமூகத்தில்  நல்ல மதிப்பு இருக்கும். எங்களின் தவறுகள் இருக்குமானால் ஊடகங்கள் அதனை சுட்டிக்காட்டுவதில் எந்த தவறும் இல்லை. அதன் மூலம் எங்களுக்கு எமது தவறை திருத்திக்கொள்ள முடியும்.

மாறாக நிலைமையை அறியாமல்  ஒருவரை பற்றி தவறான செய்திகளை பரப்புவது ஒரு சிறந்த ஊடகவியலாளருக்கு அலகல்ல. உங்களுக்கு ஒரு செய்தி கிடைத்தால், அது எந்தளவு உண்மை என்பதை ஆராய்ந்து  பார்க்க வேண்டும் என எமது மார்க்கம் சொல்லித்தருகிறது. அதனால் ஊடகவியலாளர்கள் எப்போதும் சமூகத்தை நல்வழிப்படுத்தக்கூடிய விடயங்களை பரப்பவேண்டும தவிர  சமூகத்தில் பிளவை, இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தக்கூடிய செய்திகளை பரப்ப மாட்டார்கள்.

எனது அமைச்சான தேசிய ஒருமைப்பாட்டுக்கு ஊடகங்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமாகும். இன ஐக்கியத்தை ஊடகங்கள் மூலமே ஏற்படுத்தலாம். ஒரு நாட்டின் ஆட்சியை சிறப்பாக முன்னெடுத்துச்செல்லவும்  ஆட்சியின் பாேக்கில் மாற்றத்தை ஏற்படுத்தவும் ஊடங்களுக்கு முடியும். அதனால் ஊடகவியலாளர்களுக்கு பாரிய பொறுப்பு இருக்கிறது. அதனால் ஊடக கல்வியை கற்கும் மாணவர்கள் அதனை உணர்ந்து, ஊடக தர்மத்தை பேணி செயற்பட பழகிக்கொள்ள வேண்டும்” என்றார்.

கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு செல்பவர்களுக்கு கட்டுப்பாடு!

கட்டுநாயக்க – பண்டாரநாயக்க விமான நிலையத்தின் புறப்பாடு முனையத்துக்குள் பயணிகளுடன் வருபவர்கள் பிரவேசிப்பதனை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய மற்றும் விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை ஆகிய நாட்களில் இரவு 10 மணிமுதல் நள்ளிரவு வரையான காலப்பகுதியினுள், பயணிகளுடன் வருபவர்கள், விமான நிலையத்தின் புறப்பாடு முனையத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், வேலைபளுமிக்க நேரங்களில், பயணிகளுக்கு தாமதமின்றி சேவையை வழங்குவதற்கும், சனநெரிசலை முகாமை செய்வதற்கும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, விமான பயணிகள் மற்றும் விமான நிலையத்தை பயன்படுத்துபவர்களின் வசதி கருதி இந்த நடவடிக்கைக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என விமான சேவை நிறுவனம் கோரியுள்ளது.

உக்ரைன் அதிபருக்கு நிபந்தனை விதித்த ட்ரம்ப்!

ரஷ்யாவிடமிருந்து கிரிமியாவை திரும்பப் பெறுவது, நேட்டோவில் உறுப்பு நாடாவது போன்ற எண்ணங்களை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கைவிட்டுவிட்டால், போர் நிறுத்தம் உடனடியாக சாத்தியப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்​பும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் அமெரிக்​கா​வின் அலாஸ்கா மாகாணம், ஆங்கரேஜ் நகரில் சமீபத்தில் சந்​தித்​துப் பேசினர். அப்​போது ரஷ்​யா – உக்​ரைன் இடையி​லான போரை நிறுத்​து​வது தொடர்​பாக விரி​வாக ஆலோ​சனை நடத்​தப்​பட்​டது. தொடர்ந்து, டொனால்டு ட்ரம்​ப்பை, உக்​ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வாஷிங்​டனில் இன்று சந்​தித்​துப் பேசுகிறார். இந்தச் சந்திப்புக்கு முன்னதாக ‘கிரிமியா, நேட்டோவை மறந்துவிட்டால் போர் நிறுத்தம் உடனடியாக சாத்தியம்’ என்று ஜெலன்ஸ்கிக்கு ‘செக்’ வைத்துள்ளார் ட்ரம்ப்

1991-ல் சோவியத் யூனியன் உடைந்தபோது உருவான நாடுதான் உக்ரைன். இதில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு இருப்புக்கள் அதிகமாக உள்ள கிரிமியா    ஒரு தீபகற்ப பகுதியானது. எல்லை ரீதியாக உக்ரைனுடன் இருந்தாலும், அங்கே ரஷ்யர்களே அதிகமாக இருந்தனர். அதனால் ரஷ்ய இனக் குழுக்களுக்கும், உக்ரைன் இனக் குழுக்களுக்கும் இடையே புகைச்சல் இருந்தது.

மேலும், ரஷ்ய ஆட்சியாளர்களும் கிரிமியா ரஷ்யாவுடைய பிராந்தியம் என்று தொடர்ச்சியாகக் கூறி அந்தப் புகைச்சலுக்கு வலு சேர்த்துக் கொண்டே இருந்தனர். இந்த நிலையில், ரஷ்யா கடந்த 2014-ம் ஆண்டு கிரிமியாவை தன்னுடன் இணைத்துக் கொண்டது. இது உக்ரைனுக்கு பேரிழப்பானது.

கிரிமியாவை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்ததன் மூலம், ரஷ்யா கருங்கடலில் தனது ராணுவ இருப்பை பலப்படுத்தியுள்ளது. அதேவேளையில் இயற்கை வளங்கள், ராணுவ முக்கியத்துவம், சுற்றுலா வருமானம் என மூன்று விஷயங்கள் உக்ரைனுக்கு பறிபோனது. அது மட்டுமல்லாது இன, கலாச்சார ரீதியாகவும் கிரிமியா உக்ரைன் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது. அதனாலேயே, “கிரிமியா எங்களின் பிராந்தியம். அதை மீட்டெடுக்க வேண்டும்,” என்று உக்ரைன் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

 

வர்த்தக நிலையங்களை மூடுமாறு கட்டாயப்படுத்தியதாக மட்டு. மாநகர முதல்வருக்கு எதிராக முறைப்பாடு!

ஹர்த்தாலையிட்டு மட்டு நகரில் திறந்திருந்த சில வர்த்தக நிலையங்களை மாநகரசபை முதல்வர் மூடுமாறும் கோரியதையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டதுடன் முதல்வருக்கு எதிராக இன்று (18) பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழரசு கட்சி ஆட்சி செய்யும் மாநகரசபை மற்றும் பிரதேச சபை தவிசாளர்கள் ஹர்த்தாலுக்கு ஆதரவு கோரி அழைப்பு விடுத்தனர். இதனையடுத்து நேற்று (18) காலையில் கொக்கட்டிச்சோலை, காத்தான்குடி, செங்கலடி, ஓட்டுமாவடி, மற்றும் மட்டக்களப்பு நகரை தவிர ஏனைய பிரதேசங்களில் வழமைபோல வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டன.

அத்துடன் பேருந்துகள் சேவையில் ஈடுபட்டதுடன் அரச திணைக்களங்கள், வங்கிகள், பாடசாலைகள் இயங்கின. மட்டக்களப்பு நகரில் உணவகங்களை தவிர எனைய அனைத்து வர்த்தக நிலையங்களும் முற்பகல் 10 மணிக்கு திறப்பது வழைமையானது.

இந்த நிலையில் நகரில் காலையில் சில வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்ட போது மட்டு மாநகரசபை முதல்வர் சிவம் பாக்கியநாதன்  சென்று அவற்றை மூடுமாறு தெரிவித்தார். அதேவேளை தேசிய மக்கள் சக்தியின் மாநகரசபை உறுப்பினர்கள் சென்று வர்த்தக நிலையங்களை மூடவேண்டாம் திறக்குமாறு தெரிவித்தனர்.

இந்தநிலையில் இரு கட்சிகளும் பரஸ்பரம் இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபட்டன. இதனையடுத்து மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தமது உத்தியோகபூர்வ வாகனத்தில் சென்று வர்த்தக நிலையங்களை மூடுமாறு தெரிவித்த போது அங்கு வர்த்தகர்களுக்கும் முதல்வருக்கும் இடையே பெரும் சர்ச்சை ஏற்பட்டது.
வர்த்தகர்கள் மூடுவதா? திறப்பதா? என என்ன செய்வது என தெரியாது திண்டாடிக் கொண்டிருந்தனர்.
எனினும் 10 மணிக்கு  பின்னர் சில வர்த்தகர்கள் தமது வர்த்தக நிலையங்களை திறந்தனர்.

இந்தநிலையில் மாநகரசபை முதல்வர் அரச வாகனத்தை ஹர்த்தாலுக்கு சட்டவிரோதமாக பயன்படுத்தி வர்த்தக நிலையங்களை மூடுமாறும் அவ்வாறு இல்லாவிட்டால் அனுமதி பத்திரம் நிறுத்தப்படும் என வர்த்தகர்களை மிரட்டி அதிகார துஸ்பிரயோகம் மேற்கொண்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
மட்டு தலைமையக  பொலிஸ் நிலையத்தில் மாநகர சபையின் தேசிய மக்கள் கத்தியின் 5 உறுப்பினர்கள் இந்த முறைப்பாட்டை முன்வைத்துள்ளனர்.

அத்துடன் ஈரோஸ் கட்சியின் இரா.பிரபாகரன் வர்த்தகர்களை மிரட்டி வர்த்தக நிலையங்களை முதல்வர் பூட்டியதாக அவருக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளார்.  இதனையடுத்து மாநகர சபை முதல்வர் பொலிஸ் நிலையம் வரவழைக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்றுள்ளன.

ஊடகவியலாளர் குமணன் விசாரணைக்கு அழைக்கப்பட்டமை தனக்கு தெரியாது என அமைச்சர் தெரிவிப்பு

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடு என்றும், அதனை மாற்றுவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில்   இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைக்கும் போது அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

அத்துடன், தமது கட்சியின் அரசியல் எழுச்சியை தடைசெய்ய வேண்டும் எனும் நோக்கிலேயே, நாட்டில் பயங்கரவாத தடைச்சட்டம் உருவாக்கப்பட்டதாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பில் தங்களது தரப்பினர் நன்கு அறிந்துள்ள நிலையில், அந்தச் சட்டத்தை நீக்குவதே அரசின் நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, முல்லைத்தீவு ஊடகவியலாளர் குமணன் விசாரணைக்கு அழைக்கப்பட்டமை தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், அந்த விடயம் தொடர்பில் தாம் எதனையும் அறிந்திருக்கவில்லை எனவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

நல்லூர் கந்தன் ஆலய வளாகத்தில் பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்ட பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அதற்கமைய, ஆலய வளாகத்திலும், அதனை அண்மித்தப் பகுதிகளிலும் சி.சி.ரி.வி காணொளிகள் ஊடாக கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக பொலிஸ் குறிப்பிட்டுள்ளது.
நல்லூர் வருடாந்த மகோற்சவத்தில் நேற்று (18) முதல் எதிர்வரும் ஐந்து நாட்கள் விசேட உற்சவங்கள் இடம்பெறவுள்ளன.

அதற்கமைய நாட்டின் பல பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பெருந்திரளானவர்கள் இதில் கலந்து கொள்கின்றனர். உற்சவத்தில் கலந்துக் கொள்ளும் அடியார்களின் பாதுகாப்பின் நிமித்தம் அதிக பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் அனைத்து பொலிஸ் நிலையங்களில் இருந்தும் சிவில் அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு, கண்காணிப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் ஆலய வளாகத்திற்குள் பிரவேசித்து திருட்டுச் செயல்களில் ஈடுபட வாய்ப்புள்ளதால், அவ்வாறானவர்களை கண்காணிப்பதற்கு விசேட ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்

அத்துடன், கொழும்பிலிருந்து வரவழைக்கப்பட்ட விசேட சி.சி.ரி.வி வாகனம், கண்காணிப்பில் இன்றுமுதல் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கிடமான முறையில் எவரேனும் அடையாளம் காணப்பட்டால் உடனடியாக சீருடையுடன் கடமையில் ஈடுபட்டுள்ள பொலிஸ் அதிகாரிகளுக்கு தகவல்களை வழங்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.