Home Blog Page 46

இராமேஸ்வர கடற்றொழிலாளர்களின் போராட்டம் தொடர்கிறது…

எல்லைத் தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ள தமிழக கடற்றொழிலாளர்களை விடுவிக்க கோரி 8வது நாளாக இன்றும் (19) இராமேஸ்வர கடற்றொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், இன்று மாலை 4 மணியளவில் இராமேஸ்வரத்தில் இருந்து புறப்படும் தாம்பரம் விரைவு இரயிலை தங்கச்சிமடத்தில் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது, தங்கச்சிமடத்தில் 859 பொலிஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடற்றொழிலாளர்கள் விடயத்தில் மத்திய அரசு அசமந்த போக்கை காட்டுவதாக போராட்டத்தில் ஈடுபட்டோர் குற்றம் சுமத்தினர்.அத்துடன், இன்று வரை முன்னெடுத்துள்ள போராட்டங்களுக்கு தீர்வு கிடைக்காவிட்டால் அனைத்து கடற்றொழிலாளர்களையும், ஒன்றிணைத்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் பாரியளவான போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி, மன்னார் மறைமாவட்ட ஆயருடன் கலந்துரையாடல்

மன்னார் காற்றாலை திட்டம் மற்றும் கனியமணல் அகழ்வு உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுக்கும், மன்னார் மறைமாவட்ட ஆயர் அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசத்துக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி மாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக மறைமாவட்ட ஆயர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரியவந்துள்ளது. இதன்போது, மறைமாவட்ட ஆயரினால் முன்வைக்கப்பட்ட விடயங்களுக்கு பதிலளித்த ஜனாதிபதி அவை தொடர்பில் உரிய அமைச்சர்களுடன் பேசி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.
இதனிடையே, மன்னாரில் காற்றாலை மற்றும் கனிய மணல் அகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து  நேற்று (19) 17ஆவது நாளாகவும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மன்னார் காற்றாலை திட்டம் தொடர்பில் கடந்த 13ஆம் திகதி ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல் இடம்பெற்றதுடன் அதன்போது எதிர்வரும் ஒரு மாத காலத்துக்கு குறித்த திட்டத்தை நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது. எனினும், தமக்கான உரிய தீர்வு கிடைக்கப்பெறும் வரையில் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்து, மன்னார் மக்கள் தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வடக்கு கிழக்கு நிர்வாக முடக்கல் போராட்டத்தால் பாதிப்பில்லை: அரசாங்கம் கருத்து

இலங்கை தமிழரசுக் கட்சியினால் அழைப்பு விடுக்கப்பட்டு, வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட நிர்வாக முடக்கல் நடவடிக்கை, அரசுக்கு எவ்விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது.

வடக்கு, கிழக்கில்   முன்னெடுக்கப்பட்ட நிர்வாக முடக்கல் குறித்து கருத்துரைத்த பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இதனைத் தெரிவித்தார். இதன்படி, வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட நிர்வாக முடக்கல் போராட்டம் தோல்வியடைந்துள்ளதாகவும் அவர் கூறினார். இந்த நடவடிக்கை அரசுக்கும் அரசாங்கத்துக்கும் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என தமக்கு தகவல்கள் கிடைத்தாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இதனால், வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட நிர்வாக முடக்கல் குறித்து நேற்றைய அமைச்சரவையில் பேச வேண்டிய தேவை இருக்கவில்லை என்றும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

மனித உரிமை விவகாரம்: ஆதாரங்களைத் திரட்டும் பொறிமுறையின் அதிகாரிகளை நாட்டுக்குள் அனுமதியுங்கள் – மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தல்

பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆசனங்களை தம்வசம் வைத்திருக்கும் ஜனாதிபதி  அநுரகுமார திஸாநாயக்காவின் அரசாங்கம், யுத்தகாலப்பகுதியில் இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உத்தரவாதத்தை வெளிக்காட்டும் வகையில் எந்தவொரு நகர்வையும் மேற்கொள்ளவில்லை எனக்கூறியிருக்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகம், இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்ட அதிகாரிகள் நாட்டுக்குள் பிரவேசிப்பதற்கும், விசாரணைகளை முன்னெடுப்பதற்கும், பாதிக்கப்பட்ட தரப்பினர் மற்றும் சாட்சியங்களைச் சந்திப்பதற்கும் அரசாங்கம் இடமளிக்கவேண்டும் என  வலியுறுத்தியுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 8 ஆம் திகதி ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில், இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

இலங்கையில் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், மிகமோசமான சர்வதேசக் குற்றங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதற்கும், நம்பகரமான உள்ளக பொறுப்புக்கூறல் பொறிமுறை எதுவும் அமுலில் இல்லாத நிலையில் நீதியை அடைந்துகொள்வதற்குப் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழிகாட்டுவதற்கும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடரின்போது இலங்கை விடயத்தில் பேரவைக்கும், ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கும் வழங்கப்பட்டிருக்கும் ஆணை மேலும் இரு வருடங்களுக்குப் புதுப்பிக்கப்படவேண்டும்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆட்சிபீடமேறி சுமார் ஒரு வருடம் பூர்த்தியடைந்திருக்கிறது. இலங்கையின் மனித உரிமைகள்சார் கடப்பாடுகளை உரியவாறு நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்திருக்கின்ற போதிலும், கரிசனைக்குரிய முக்கிய மனித உரிமைகள் விவகாரங்களில் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான முன்னேற்றமே எட்டப்பட்டுள்ளது. அதேபோன்று மிகப்பாரதூரமான அட்டூழியங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களைப் பொறுத்தமட்டில் தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கு இன்னமும் தொடர்கிறது.

ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரை நாட்டுக்கு வருகைதருமாறு கடந்த ஜுன் மாதம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் அழைப்புவிடுத்திருந்தது. இருப்பினும் உயர்ஸ்தானிகருடனான சந்திப்பின்போது தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்தை உறுதிசெய்வதிலும், பொருளாதார சவால்களை எதிர்கொள்வதிலும் தாம் கொண்டிருக்கும் கடப்பாடு கு;திரம் ஜனாதிபதி உரையாடினாரே தவிர, பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையினால் முன்னெடுக்கப்பட்டுவரும் முயற்சிகளை வெளிப்படையாக ஆதரிப்பதற்குத் தவறியிருந்தார்.

அதேவேளை உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் நாட்டுக்கு வருகைதந்திருந்தபோது, இலங்கையில் தொடரும் ‘தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கு’ எனும் பொறி குறித்து எச்சரித்ததுடன் நீதியை நிலைநாட்டப்படாமையானது வலுவான சமாதானத்தில் சீர்குலைவை ஏற்படுத்தும் என சுட்டிக்காட்டியிருந்தார். இலங்கையில் ஆட்சிபீடமேறிய அரசாங்கங்கள் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதில் தடையேற்படுத்தியதன் மூலம் பாதிக்கப்பட்டோரின் துன்பத்தை மேலும் ஆழப்படுத்தின. அவ்வரசாங்கங்கள் தாம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்குத் தவறியதன் காரணமாக உண்மை, நீதி மற்றும் இழப்பீடு வழங்கலை உறுதிப்படுத்தவேண்டிய நிலை மனித உரிமைகள் பேரவைக்கு ஏற்பட்டது. அதுமாத்திரமன்றி நீண்டகாலக் காத்திருப்பும், அக்காலப்பகுதியில் முகங்கொடுத்த கசப்பான அனுபவங்களும் பாதிக்கப்பட்ட தரப்பினர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் உள்ளகக் கட்டமைப்புக்களிலும், பொறிமுறைகளிலும் நம்பிக்கை இழப்பதற்கு வழிகோலியிருக்கின்றன. எனவே தற்போதைய அரசாங்கத்தின்கீழும் தொடரும் ஒடுக்குமுறை அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினர் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டத்துடன் தொடர்புகளைப் பேணிவருகின்றனர்.

ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டது முதல் ‘நல்லிணக்கம்’ தொடர்பில் அநுரகுமார திஸாநாயக்க பலமுறை பேசியிருந்தார். ஆனல் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆசனங்களை தம்வசம் வைத்திருக்கும் அவரது அரசாங்கம் யுத்தகாலப்பகுதியில் இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உத்தரவாதத்தை வெளிக்காட்டும் வகையில் எந்தவொரு நகர்வையும் மேற்கொள்ளவில்லை.

இவ்வாறானதொரு பின்னணியில் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்ட அதிகாரிகள் நாட்டுக்குள் பிரவேசிப்பதற்கும், விசாரணைகளை முன்னெடுப்பதற்கும், பாதிக்கப்பட்ட தரப்பினர் மற்றும் சாட்சியங்களைச் சந்திப்பதற்கும் அரசாங்கம் இடமளிக்கவேண்டும். அத்தோடு ஜனாதிபதித்தேர்தல் விஞ்ஞாபனத்தில் வாக்குறுதியளிக்கப்பட்டவாறு சட்டமா அதிபர் திணைக்களத்திலிருந்து வேறுபட்டவகையில் பொதுக் குற்றவியல் தாக்கல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குரிய செயன்முறை அறிமுகப்படுத்தப்படவேண்டும்.

மேலும் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விவகாரத்தைப் பொறுத்தமட்டில், நாடளாவிய ரீதியில் மனிதப்புதைகுழிகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு சர்வதேச தொழில்நுட்ப உதவிகளை அனுமதிக்கவேண்டும். அத்தோடு பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களின் நம்பிக்கையை வென்றெடுக்கக்கூடியவகையில் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தை மறுசீரமைக்கவோ அல்லது பதிலீடு செய்யவோ வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு CID அழைப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கே எதிர்வரும் 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை குற்றப் புலனாய்வுத் துறைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

இது அரசாங்க நிதி தனியார் வெளிநாட்டு பயணத்திற்கு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணை ஆகும்.

இந்தப் பயணம் 2023 ஆண்டு, செப்டம்பர் 22 மற்றும் 23 ஆகிய திகதிகளில் நடந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தப் பயணத்தில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் பத்து பேர் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்குறித்த விசாரணை தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் தனிப்பட்ட செயலாளர் சாண்ட்ரா பெரேரா ஆகியோரிடமிருந்து வாக்குமூலங்களைப் பதிவு செய்ய குற்றப் புலனாய்வுத் துறை முன்னர் நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் இருந்து இலங்கையின் அகதிகளை திருப்பியனுப்பும் செயற்பாடுகள் தொடர்பில் விசேட அவதானம்

தமிழகத்தில் இருந்து இலங்கையின் அகதிகளை திருப்பியனுப்பும் செயற்பாடுகள் தொடர்பில் இராஜதந்திர முனைப்புக்களுக்கு, ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகரகம் தயாராகி வருகிறது.

தமிழகத்தில் இருந்து அகதிகளை திருப்பியனுப்பும் செயற்பாடுகளை நிறுத்தி வைப்பதாக ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகரகம் முன்னதாக அறிவித்திருந்தது.

தாம் இலங்கைக்குத் திரும்பிச் சென்றால், கைது செய்யப்படும் அபாயம் இருப்பதாகக் கூறுகின்றவர்கள் மீண்டும் நாடு திரும்புவதற்கான வசதியே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அந்த உயர்ஸ்தானிகரகம் தெரிவித்திருந்தது.

இந்தநிலையில் இலங்கைக்குத் திரும்பிச் சென்ற நிலையில் குடிவரவுச் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் குறைந்தது நான்கு அகதிகள், அண்மைக்காலங்களில் தடுத்து வைக்கப்பட்டதாக வெளியான செய்திகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : மேலும் பல தகவல்கள் தெரியவந்துள்ளதாக அரசாங்கம் தெரிவிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான மேலும் பல தகவல்கள் தற்போது தெரியவந்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய (19) ஊடக சந்திப்பில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.  பிரதி அமைச்சர் அருண ஜெயசேகரவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளால் முன்வைக்கப்பட்டுள்ள அவநம்பிக்கை பிரேரணை தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து இதன்போது வினவப்பட்டது.
இதற்கு பதிலளித்த அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் குறித்த அவநம்பிக்கை பிரேரணையை கொண்டு வந்து, விவாதம் நடத்தப்படுமாயின் அது குறித்து மகிழ்ச்சியடைவதாக தெரிவித்தார்.

பாராளுமன்ற விதிகளுக்கு அமைய, முதலில் குறித்த அவநம்பிக்கை பிரேரணை பாராளுமன்றுக்கு கொண்டு வரப்பட வேண்டும். அவ்வாறானதொரு விவாதம் இடம்பெறுமாயின் அதன்போது வெளிப்படுத்துவதற்கு பல விடயங்கள் உள்ளன.

குறிப்பாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் முன்னோக்கி சென்றுள்ளன என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். முன்னதாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பாராளுமன்றில் வெளிப்படுத்தப்பட்ட தகவல்களுக்கும் மேலதிகமாக தற்போது பல தகவல்களை வெளிப்படுத்த முடியும் என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அத்துடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் அப்போதைய அரசாங்கத்தின் மூன்றாவது முக்கிய நபராக சஜித் பிரேமதாசவும் சிறிது காலம் பொலிஸாருக்கு பொறுப்பான அமைச்சராக ரஞ்சித் மத்தும பண்டாரவும் இருந்தனர் என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ சுட்டிக்காட்டியுள்ளார்.  அவ்வாறான குழுக்கள் தொடர்பில் கருத்துக்களை முன்வைப்பதற்கான தகவல்களும் உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தநிலையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் இந்திய தரப்பினரின் தலையீடு உள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ ஏற்கனவே குறிப்பிட்ட நிலையில் தொடர்ந்தும் அதே நிலைப்பாட்டில் உள்ளீர்களா? என்றும் அவரிடம் வினவப்பட்டது.

இதற்கு பதிலளித்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இந்த தாக்குதலின் பின்னணியில் இந்திய அரசு உள்ளதாக தாம் ஒருபோதும் கூறவில்லை என்று குறிப்பிட்டார். எனினும் அங்குள்ள சில பயங்கரவாத குழுக்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் இருந்திருக்க கூடும் என்றும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம், இலங்கைக்கு பல பரிந்துரைகள் முன்மொழிவு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான தீர்மானம் புதுப்பிக்கப்பட வேண்டும் என்று சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.

இலங்கையில் மனித உரிமைகள் நிலைமைகள் தொடர்பில் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளது.

அத்துடன் மனித உரிமைகளை பாதுகாப்பதற்காக அரசாங்கத்துக்கு சில பரிந்துரைகளையும் குறித்த அமைப்பு முன்மொழிந்துள்ளது. ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க பதவியேற்று ஒரு வருடம் கழிந்துள்ள போதிலும், மனித உரிமைகள் பிரச்சினையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்று சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாறாக கடுமையான உரிமை மீறல்களும், போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ளவர்களை அச்சுறுத்தும் செயற்பாடுகளும் தொடர்வதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாடாளுமன்றில் பெரும்பான்மையை கொண்டுள்ள புதிய அரசாங்கம் நல்லிணக்கம் குறித்து கருத்துரைக்கின்ற போதிலும் போர் கால குற்றங்களை சரியான முறையில் நிவர்த்திப்பதற்கு எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என்றும் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் இலங்கை அரசாங்கத்துக்கு சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் சில பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. இதன்படி, சர்வதேச சட்டத்தின் கீழ் விசாரணைகளை மேற்கொள்ளவும், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குற்றங்களின் சாட்சியங்களை சந்திக்கவும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் அரசாங்கம், தேர்தல் காலத்தில் உறுதியளித்தப்படி, சட்டமா அதிபர் அலுவலகத்தில் இருந்து தனியாக விலகி பொது வழக்கு விசாரணைக்கான வழக்கு தொடுநர் அலுவலகத்தை உருவாக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

நீதி மற்றும் பொறுப்புக்கூறலை நிலைநாட்டுவதற்கு முந்தைய உள்நாட்டு விசாரணை ஆணைக்குழுக்களால் சேகரிக்கப்பட்ட ஆதாரங்களை பயன்படுத்த வேண்டும். ஏப்ரல் 21 தாக்குதல் உள்ளிட்ட குண்டு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் நியாயமானதும் முழுமையானதுமான விசாரணையை உறுதி செய்ய வேண்டும் என்று சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம்; வலியுறுத்தியுள்ளது.

அத்துடன் உண்மை மற்றும் நீதிக்காக போராடும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மீதான பாதுகாப்பு படைகளின் துன்புறுத்தல்கள் மற்றும் அச்சுறுத்தல்களை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் அரசாங்கத்துக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியாக உள்ள மனித புதைகுழிகள் தொடர்பான விசாரணைகளுக்கு சர்வதேச தொழில்நுட்பகளை ஏற்றுக் கொள்வதுடன் மரபணு பரிசோதனையை நடத்தி, மனித எச்சங்களை அடையாளம் காண வேண்டும்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களுக்கு பொறுப்பானவர்கள் என்று கூறப்படும் நபர்கள் மீது வலுவானதும் சுயாதீமானதுமான குற்றவியல் வழக்குகளை தொடர வேண்டும் என்று சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.

இவை தவிர, பயங்கரவாத தடைச்சட்டத்தின் பயன்பாட்டை உடனடியாக நிறுத்தி, உறுதியளித்தவாறு அதனை ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் புதிய பயங்கரவாத எதிர்ப்;புச் சட்டம், மனித உரிமைகள் தொடர்பான சர்வதேச தரநிலைகளுக்கு இணங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் பரிந்துரைத்துள்ளது.

ஆட்சி கவிழும் என வங்குரோத்து அடைந்த அரசியல்வாதிகள் பிரச்சாரம்: அமைச்சர் சந்திரசேகர்

இந்த ஆட்சி கவிழும் என வங்குரோத்து அடைந்த அரசியல்வாதிகள் பிரச்சாரம் முன்னெடுத்து வருகின்றனர். இந்த போலி பரப்புரைக்கு வடக்கில் மக்களால் நிராகரிக்கப்பட்ட அரசியல்வாதிகளும் உயிர்கொடுக்க முற்படுகின்றனர்  என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

இலங்கை ஐயப்ப சுவாமிமார்களின் யாத்திரையினை புனித யாத்திரையாக பிரகடனப்படுத்தியதன் பின்னர் அது தொடர்பான விசேட கலந்துரையாடல் திங்கட்கிழமை (18) கொழும்பு செட்டியார் தெரு கல்யாண முருகன் மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது.

ரவி குருசாமி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சிறப்பு அதிதியாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் பிரதம அதிதியாகவும், இந்து சமய அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் வை.அனிருத்தன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கெளரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.

நாடளாவிய ரீதியில் உள்ள ஐயப்ப நாமத்தில் இயங்கும் அமைப்புக்கள், குரு சுவாமிகள் மற்றும் ஐயப்பன் தொடர்புடைய அமைப்புக்களின் உறுப்பினர்கள் என பெரும் எண்ணிக்கையிலானவர்கள் இதில் கலந்து கொண்டனர்.

இதன்போது சுவாமிமார்களால் பரிந்துரைக்கப்பட்ட ஐயப்ப மாலை அணிந்த சுவாமிமார்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் மற்றும் நெறிமுறைகள் அடங்கிய அறிக்கை சமர்ப்பிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

நாடளாவிய ரீதியில் இருந்து வருகைதந்த ஐயப்பசாமி குருமார்கள் தங்களது கருத்துக்களையும் முன்வைத்தனர். அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் ஆகியோர்களை குருசுவாமிகள் பொன்னாடை போர்த்தி கெளரவித்தனர்.

இதன்போது அமைச்சர் மேலும் கூறியவை வருமாறு,

ஐயப்பன் யாத்திரை கடந்த காலங்களில் புனித யாத்திரையாக பிரகடனப்படுத்தப்படவில்லை. இதற்குரிய முயற்சி முன்னெடுக்கப்பட்டும் ஏன் அத்தனை வருடங்கள் நடக்கவில்லை? இனவாத ஆட்சியாளர்கள், இனவாத அமைச்சரவை இருந்ததால்தான் நடக்கவில்லை.

ஆனால் எமது சமதர்ம ஆட்சியில் இனவாதம் இல்லை. மக்கள் நலனுக்கே முக்கியத்துவம், முன்னுரிமை வழங்கப்படுகின்றது.

அந்தவகையில் புனித யாத்திரை தொடர்பான அமைச்சரவை பத்திரம் வந்தபோது அதற்கு ஏகமனதாக ஆதரவளிக்கப்பட்டு, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதற்கு முழுமையாக முன்னின்று செயற்பட்ட பிரதி அமைச்சர் தோழர் பிரதீப்புக்கு நன்றிகள். இளைஞர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகி வருகின்றனர்.

சமூக சீர்கேட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. எனவே, சமூக மாற்றத்துக்கு ஆன்மீகவாதிகளின் பங்களிப்பும் மிக முக்கியம்.

அதேவேளை, வறுமை ஒழிப்புக்குரிய நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது. மறுபுறத்தல் வரி வருமானம் அதிகரித்துள்ளது. பொருளாதார இலக்குகளை அடைந்து வருகின்றோம்.

இந்நிலையில் ஆட்சி மாற்றம் பற்றி வங்குரோத்து அரசியல்வாதிகள் கருத்து வெளியிட்டு வருகின்றனர். இதற்கு உயிர்கொடுக்கும் வகையில் வடக்கில் தோல்விகண்ட, மக்களால் நிராகரிக்கப்பட்ட அரசியல்வாதிகள் முயற்சித்து வருகின்றனர் என்றார்.

காற்றாலை திட்டத்திற்கு எதிராக மன்னாரில் தொடரும் போராட்டம்

மன்னாரில் (Mannar) காற்றாலை கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிராக 16 ஆவது நாளாக நேற்றும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் குறித்த போராட்டம் மன்னார் நகர சுற்றுவட்ட பகுதியில் நேற்று (18) இடம்பெற்றுள்ளது.

மக்கள் குறித்த போராட்டத்தில் இணைந்து கொண்டு தமது ஆதரவை தெரிவித்துள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் மன்னாரில் புதிதாக முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலை மின் கோபுரம் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவை முழுமையாக நிறுத்தும் வரை தமது போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.