“எமது நிலம் எமக்கு வேண்டும்” என தமிழீழம் கேட்டு, அகிம்சை ரீதியாகவும், ஆயுத ரீதியாகவும் தொடர்ந்து 76 வருடங்களாகப் போராடியும் போராடிக்கொண்டுள்ள தமிழ் இனம், தற்போது மன்னார் காற்றாலையைத் தடுக்கக் கோரியும் இதே சுலோகத்தை முன்நிறுத்தி “எமது நிலம் எமக்கு வேண்டும்” எனப் போராடும் நிலைமை இன்று ஏற்பட்டுள்ளது.
வடகிழக்கில் உள்ள தமிழர்களின் நிலைமை, எல்லா விடயத்திற்கும் போராடியே ஆளும் தரப்புக்கு அழுத்தம் கொடுக்க வேண்டியவர்களாக எமது வாழ்க்கை முறை மாறிவிட்டது. கடந்த பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்து, வடகிழக்கில் இருந்து தெரிவான ஆளும் தரப்பு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும், இனம் சார்ந்தோ, நிலம் சார்ந்தோ, ஆக்கிரமிப்பு சார்ந்தோ குரல் கொடுக்க முடியாத பேசா மடந்தைகளாக உள்ளனர்.
இலங்கையின் பல்வேறு பகுதிகளில் காற்றாலை மின் உற்பத்திக் கோபுரங்கள் நிறுவப்பட்டுள்ள போதிலும், மன்னார் தீவுப் பகுதியில் நிறுவப்பட்டுள்ள மற்றும் நிறுவ உத்தேசிக்கப்பட்டுள்ள காற்றாலை மின் உற்பத்திக் கோபுரங்கள் குறித்து தொடர்ந்து சர்ச்சை நிலவி வருகின்றது.
இலங்கை மின்சார வாரியத்திற்குச் சொந்தமான 30 காற்றாலை மின் உற்பத்திக் கோபுரங்கள்நி றுவப்பட்டுள்ளதுடன், மேலும் சில காற்றாலைக் கோபுரங்கள் தற்போது நிறுவப்பட்டு வருகின்றன. அத்துடன், இந்தியாவின் அதானி நிறுவனம் மன்னார் பகுதியில் காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்த சூழ் நிலையில், அந்தத் திட்டத்திலிருந்து தாம் வெளி யேறுவதாக அண்மையில் அறிவித்திருந்தது.
மன்னாரில் அமைக்கப்படவுள்ள இலங்கையின் முதலாவது பெரிய அளவிலான காற்றாலைப் பண்ணை, மன்னார் தீவின் தெற்குக் கரையில் அமைந்துள்ள மன்னார் காற்றாலை மின்வலுப் பண்ணையாகும். முதலாவது படியாக, 100 மெகாவாட் காற்றாலை மின்சக்தி வளர்ச்சி செய்யப்படும் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
அங்குள்ள மக்களின் விருப்பம், புவியியல் இயற்கைச் சூழல், காலநிலை என்பவற்றைக் கணக்கில் எடுத்து, மன்னார் மாவட்ட மக்களின் ஆதரவு இன்றி இந்தத் திட்டம் ஏற்படுவதை முழுமையாக மக்கள் எதிர்க்கின்றனர்.
இது தொடர்பாக, மன்னார் மாவட்ட மக்களின் கருத்து: “மன்னார் தீவில் ஏற்கனவே பொருத்தப்பட்டுள்ள காற்றாலைகளால் நாம் பல்வேறு இன்னல்களுக்கும் முகங்கொடுத்து வருகின்றோம். வெள்ளத்தால் பெண்களின் வீட்டுத் தோட்டங்கள் நாசமடைந்து போனது. அபிவிருத்தித் திட்டங்கள் எமது சமூக, பொருளாதார, மனித உரிமைகளைப் பாதிக்கும் விதத்தில் இருக்கின்றன” எனக் கூறுவதில் உண்மை இல்லாமல் இல்லை.
ஐக்கிய நாடுகள் புலம்பெயர் உயிரினங்க ளைப் பாதுகாப்பது தொடர்பான பேரவையின் பிரதான நாடாக இலங்கை விளங்கு கிறது. இதற்கான காரணம், ஆண்டுதோறும் 30க்கு மேற்பட்ட நாடுகளில் இருந்து 250க்கும் அதிகமான பறவை இனங்கள் இலங்கைக்குப் புலம்பெயர்வதனாலாகும். வருடந்தோறும் இலங்கைக்கு 15 இலட்சம் பறவைகள் வருவதாகக் கணிக்கப்பட்டுள்ள நிலையில், மன்னார் பிரதேசத் திற்கு மாத்திரம் 10 இலட்சம் பறவைகள் வருகை தருகின்றன.
இவ்வாறு வருகின்ற பறவைகளின் பயணப் பாதையும் இருப்பிடங்களும் பாதிப் படைவதாகவும், காற்றாலைகளின் இயக்கத் தால் பறவைகள் உயிரிழப்பதாகவும், சூழலியல் நீதிக் கான நிலையத்தின் நிறை வேற்றுப் பணிப்பாளர் ஹேமந்த விதானகே ஏற்கனவே தெரிவித்திருந்தார். இந்தியா வின் அதானி நிறுவனத்தின் திட்டத்தில் பறவைகளுக்கான தாழ்வாரப் பகுதிகள் ஒதுக் கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டாலும், அவை பெயர ளவிலானதுமட்டுமே.
பொதுமக்கள் ஏன் எதிர்க்கின்றனர். என் பதை ஆராயப்பட வேண்டும். “அபிவிருத்தியின் பெயரால் மக்களின் வாழ்வுரிமையைப் பறிக்கும் இத்திட்டங்களை நிறுத்த வேண்டும்” என்பது அவர்களின் கோரிக்கை. இலங்கையின் மீன்பிடித் தொழில், பறவைகளின் பாதுகாப்பு சரணாலயம், இயற்கைக் காற்றின் வலு முதலானவற்றிற்குப் பெயர் பெற்ற இடமாக மன்னார் விளங்குகிறது. மன்னார் பல பொருளாதார வளங்களைக் கொண்ட ஒரு பிரதேசம்.
இந்த நிலையில், ஏகபோக இராட்சத பன்னாட்டுக் கம்பெனிகளின் இலாப வேட்டை யாலும், இலங்கை அரசாங்கங்களின் கையாலாகாத் தன்மையாலும், அழிவை எதிர்நோக்கி உள்ளது மன்னார் தீவு.
ஏற்கனவே உள்ள காற்றாலைகளால்:
மீன் கரைக்கு வருவது குறைந்துவிட்டது. மீன் இனப்பெருக்கம் குன்றிவிட்டது. காற்றாலைகளின் அமைப்பால் தரையில் ஏற் பட்ட மாறுதல்கள், வடிகால் அமைப்பை மாற்றி வெள்ளப் பெருக்கையும், நிலத்தடி நீர் உவர்ப்புத்தன்மையையும் ஏற்படுத்தியுள்ளது.
காற்றாலைகளின் இரைச்சலால், மன்னாருக்கு வரும் வலசைப் பறவைகளின் வருகையைத் தடுக்கவும், பாதையை மாற்றவும் அவை காற்றாடிகளால் இறக்கும் நிலையையும் ஏற் படுத்தியுள்ளது. மக்களின் வாழ்விலும், காற்றாலைகளின் ஒலி மாசு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், மன்னார் மண்ணின் கீழ் இருக்கும் இல்மனைட், தோரியம் போன்ற கனிம வளங்கள், இன்றைய நவீன விஞ்ஞான உபகரணங்கள் மற்றும் இராணுவத் தேவைகளுக்காக உலக நாடுகளுக்குத் தேவைப்படுகின்றன. இதில் முதலீடு செய்வது பெரும் லாபம் தரும் என்பதால், பன்னாட்டு நிறுவனங்கள் முண்டியடிக்கின்றன. எனவே, மன்னாரில் நடைபெற இருக்கும் இந்த அகழ்வாராய்ச்சி, மன்னார் தீவையே மனித வாழ்வுக்கு உகந்ததாக இல்லாமல் செய்துவிடும் அளவிற்கு ஆபத்தானது. இந்தக் காற்றாலை மற்றும் கனிம அகழ்வு, நாட்டின் தேவைக்கானதன்றி, பன்னாட்டுக் கம்பெனிகளின் இலாபக் குவிப்புக்கா னதே என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும். இத்தனை காரணங்களும் உண்மையா னவை. இதை உணராமல், எங்கள் நிலத்தின் வளங்களை அழிக்கவும், எதிர்காலத்தில் மன்னார் தீவின் இயற்கை எழிலைச் சூறையாடவும் இந்த நாசகாரக் காற்றாலைத் திட்டம் வழிவகுக்கும் என்பதில் மாற்றுக் கருத்துகள் இல்லை.
மன்னாரில் ஆரம்பித்த போராட்டம், வவுனியாவில் மனிதச் சங்கிலிப் போராட்டமாக முன்னெடுக்கப்பட்டது. பொதுமக்கள், அரசியல் வாதிகளுக்கு அப்பால், மதத் தலைவர்களும் இதைத் தடுக்கப் போராடும் நிலையைக் காண முடிகிறது.
“தமிழீழம் கேட்டு அகிம்சையாகவும், ஆயுதமாகவும் போராடி அதைப் பெறவில்லை. இப்போது, தாயக மண்ணில் நடக்கும் அபகரிப்பு, வளங்களை அழிக்கும் நடவடிக்கை, திட்டமிட்ட பௌத்தமயமாக்கல், காணாமல் ஆக்கப்பட்டவர் களுக்கான நீதி வேண்டிய போராட்டங்கள் என, தொடர்கதையாகவே இப்போது தினமும் மாறிவிட்டது.”
தனிமனித இறப்பு: கடந்த வாரம் முல்லைத் தீவு முள்ளிவாய்க்கால குளத்தில் இராணுவம் கொலை செய்ததாகக் கூறி, எதிர்வரும் 18ம் தேதி இலங்கைத் தமிழரசுக் கட்சியால் வடகிழக்கு சார்ந்து முன்னெடுப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
இவ்வாறு, எதற்கும் ஏதோ ஒரு கவன ஈர்ப்புப் போராட்டமே வாழ்க்கையாக மாறியுள் ளது. வடகிழக்கில் தமிழர்கள் போராடியே சகல விடயங்களுக்கும் தீர்வைப் பெற வேண்டும் என்ற நிலைமையே உள்ளதே தவிர, ஆட்சியாளர்களுடன் பேசி எதையும் தீர்க்க முடியாத நிலை, கடந்த 16 வருடங்களாகத் தொடர்வதையே, தற்போதைய மன்னார் காற்றாலையைத் தடுக்கும் போராட்டமும் வெளிப்படுத்தியுள்ளது.
அதற்கு நல்ல உதாரணம்: போராடியதால் தான் தற்போது மன்னார் காற்றாலை அமைக்கும் பணி ஒருமாதம் இடைநிறுத்தப்பட்டுள்ளது என்பதே உண்மை.