இலங்கையின் தற்போதைய அரசியல் சூழலில், அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கம், ஒரு புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான பணிகளை முன்னெடுத் துள்ளதாக அறிவித்துள்ளது.
பிரதமர் கலாநிதி.ஹரிணி அமரசூரிய பாராளுமன்றில் முதன்முதலாக புதிய அரசியல மைப்பு சீர்திருத்தப் பணிகள் ஆரம்பிக்கப் பட்டதாக அறிவித்தார். அதில் கூட மயக்கமான நிலைமை தான். புதிய அரசியலமைப்பு பணியா அல்லது அரசியலமைப்பு சீர்திருத்தமான என்பதில் தெளி வில்லை.
இந்த விடயத்தினை மையப்படுத்தி ஜே.வி.பி.தலைமையிலான அரசாங்கம் புதிய அரசியமைப்புக்கான பணிகளையோ அல் லது, சீர்திருத்தத்துக்கான பணிகளையோ முன் னெடுக்குமாக இருந்தால் அதற்கான திரை மறைவு நோக்கங்களை இம்மாதத்தின் 2ஆம் திகதியன்று வெளியான இலக்கு வாரஇதழ் ‘மீண்டும் அரசியலமைப்பு’ என்ற தலைப்பில் வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது நீதி அமைச்சர் ஹர்ஷ நாணயக்கார அரசியலமைப்பு பணிகள் வினைத்திறனாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறிவித்துள்ளார். ஆனால் அந்தப் பணிகள் எங்கு நடைபெறுகின்றது என்பதை கூறுவதற்கு அவர் மறுத்துள்ளார்.
எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத் தெரிவுக் குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வரும் நிலையில், அரசாங்கம் அதனை ஏற்றுக்கொள்வதற்கு மாறாக ‘மக்களின் அபிலாசைகளை’ நிறைவேற்றுவதாகவும், ‘யாப்புருவாக்கப் பணிகள் வினைத்திறனான முறை யில் மேற்கொள்ளப்படுவதாகவும்’ கூறுகிறது.
அரசாங்கத்தின் இத்தகைய இரகசியத் தன்மை, அதன் நோக்கம் குறித்து பல சந்தேகங்களை எழுப்புகிறது. புதிய அரசியலமைப்பொன்றின் உருவாக்கத்தில் வெளிப்படைத்தன்மை ஏன் அவசியம் என்பதையும், சிறுபான்மை மக்களின் உரிமைகளை உள்ளடக்குவதில் உலக நாடுகள் எவ்வாறு வெற்றிகரமாகச் செயற்பட்டுள்ளன என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
ஒரு நாட்டின் அரசியலமைப்பு என்பது அதன் சட்டங்களுக்கு எல்லாம் மேலான உயர்ந்த சட்டம். அது மக்களின் அரசியல், சமூக மற்றும் பொருளாதார உரிமைகளை வரையறுக்கிறது. எனவே, அத்தகையதொரு ஆவணத்தை உருவாக்கு வது என்பது ஒரு சிலரின் அல்லது குழுவொன்றின் தனிப்பட்ட விருப்பங்களுக்கு உட்பட்டதாக இருக் கக்கூடாது. அவ்வாறு இருக்கவும் முடியாது.
அரசியலமைப்பு உருவாக்கம் என்பது பொது விவாதங்களுக்கும், அனைத்துத் தரப்பி னரின் பங்களிப்புக்கும் உட்பட்டதாக இருக்க வேண்டும். ஆனால் அநுர அரசாங்கம் புதிய அரசியலமைப்புருவாக்கப் பணிகளை இரகசிய மாக வைத்திருப்பது, மக்களின் நம்பிக்கையைக் குறைப்பதுடன், அதன் உண்மையான நோக்கங்கள் குறித்து சந்தேகங்களை வலுவாக ஏற்படுத்துகிறது.
புதிய அரசியலமைப்பு உருவாக்கச் செயற்பாடுகள் சட்டவாக்க சபையான பாராளு மன்றத்தில் அனைத்து தரப்புக்களையும் உள்ளடக்கியதாக உரிய நடவடிக்கைகள் மூலமாக முன்னெடுக்கப்
படாமையானது, ஜனநாயக மரபுகளுக்கு முரணா னது.
உலகம் முழுவதும் பல நாடுகள் புதிய அரசியலமைப்பை உருவாக்கும்போது வெளிப் படைத்தன்மைக்கு அதிக முக்கியத்துவம் அளித் துள்ளன. உதாரணமாக, தென்னாப்பிரிக்காவின் அரசியலமைப்பு உருவாக்கமொரு சிறந்த உதாரண மாகும்.
நிறவெறிக் கொள்கை முடிவுக்கு வந்த பின்னர், ஜனநாயக அரசியலமைப்பை உரு வாக்குவதற்கு பரந்த மக்கள் பங்களிப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இதற்காக, ஒரு அரசியலமைப்பு சபை அமைக்கப்பட்டு, அது நாட்டின் அனைத்து சமூகங்களையும், கட்சிகளை யும், தொழிற்சங்கங்களையும், சிவில் சமூக அமைப்புகளையும் உள்ளடக்கியிருந்தது.
பொதுமக்கள் கருத்துக்களைக் கேட்பதற் காக நாடு முழுவதும் பொது விவாதங்கள், கருத்
தரங்குகள் மற்றும் ஊடகக் கலந்து ரையாடல்கள் நடத்தப்பட்டன. இதன் விளைவாக, தென்னாப் பிரிக்காவின் அரசி யலமைப்பு அனைத்து சமூகத் தினராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட, வலுவான மற்றும் நிலைத்தன்மையுள்ளதொரு ஆவணமாக உருவெடுத்தது.
இவ்வாறான நிலையில் இரண்டாவது முக்கியமான விடயம் இலங்கையில் உள்ள சிறு பான்மை தமிழ் மக்களின் நீண்டகால தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வாகும். இலங்கையைப் பொறுத்தவரை, சமஸ்டி முறைமைக்கான கோரிக்கை என்பது தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் அபிலாசையாக உள்ளமை வரலாறு. ஆனால், இந்த கோரிக்கை தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது. சமஸ்டி என்பது அதிக செறிவு நிறைந்த விடயமாகவே இன்னமும் பார்க்கப்படுகின்றது. அவ்வாறான நிலையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப் பணிகளில் தமிழ் மக்களின் அபிலாசைகளை எவ்வாறு உட்புகுத்துவது என்பதற்கு அப்பால் அதுபற்றிய உரையாடலை எவ்வாறு ஆரம்பிப்பது என்பதே தற்போது பெருங்கேள்வியாக மாறியுள்ளது.
சிறுபான்மை மக்களின் உரிமைகளைப் பாதுகாத்து, தேசிய ஒருமைப்பாட்டை உறுதி செய்துள்ள பல உலக உதாரணங்கள் உள்ளன. கனடா ஒரு சிறந்த உதாரணமாகும். கியூபெக் மாகாணத்தில் உள்ள பிரெஞ்சு மொழி பேசும் மக்கள், தமது மொழி மற்றும் கலாசார உரிமைகளைப் பாது காப்பதற்காக ஒரு தனித்துவமான நிலையை அனு பவிக்கின்றனர். கனடாவின் அரசியலமைப்பு, மொழி உரிமைகளையும், மாகாணங்களுக்கு பரந்த அதிகாரங்களையும் வழங்கியுள்ளது.
இது கனடாவை ஒரு பலமான மற்றும் பன்முகத்தன்மை கொண்ட நாடாக நிலை நிறுத்தியுள்ளது. அதேபோல, சுவிட்சர்லாந்து ஒரு கூட்டாட்சி முறைமையைக் கொண்டுள்ளது. அங்கு ஒவ்வொரு மாகாணமும் தமது சொந்த சட்டங் களையும், நிர்வாகத்தையும் கொண்டுள்ளன. அங்கு ஜேர்மன், பிரான்ஸ் மற்றும் இத்தாலிய மொழி பேசும் சமூகங்கள் அமைதியான முறையில் ஒன்றாக வாழ்வதற்கு உதவியுள்ளது.
இந்த உதாரணங்கள் மூலம், அரசியல மைப்பு சீர்திருத்தம் என்பது வெறும் நிர்வாக கட்டமைப்பை மாற்றுவது மட்டுமல்ல, அது நாட்டின் அனைத்து சமூகங்களின் உரிமைகளையும், அபிலாஷைகளையும் அங்கீகரித்து, அவற்றைப் பாதுகாப்பது என்பதற்கு உதாரணமாக உள்ளது.
தமிழ் மக்களின் சமஷ்டிக் கோரிக்கைகளை கவனத்தில் கொள்ளாமல், புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுமானால், அது மீண்டுமொருமுறை அரசியல் ஸ்திரமின்மைக்கும், சமூகப் பிரிவினைக் கும் வழிவகுக்கும். அது அநுர அரசாங்கம் செய்யும் வரலாற்றுத் தவறாகவே அமையும். நீதி அமைச்சர் ஹர்ஷ நாணயக்காரவின் கூற்றுக்கள், அரசாங்கத்தின் நோக்கங்கள் குறித்து பல கேள்விகளை எழுப்புகின்றன. ‘எதிர்க்கட்சிகளின் அரசியல் பேசுபொருளுக்காக அரசியலமைப்புப் பணிகளை முன்னெடுக்க முடியாது’ என்று அவர் கூறுகிறார். ஆனால், அரசியலமைப்பு சீர்திருத்தம் என்பது எதிர்க்கட்சிகளின் பங்களிப்பு இல்லாமல் நிறைவேற்றப்பட முடியாதவொரு விடயம்.
பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அநுர அரசாங்கம் பெற்றுக் கொண்டாலும், அரசியலமைப்பை ஜனநாயக ரீதியில் நிறைவேற்றுவதற்கு அனைத்துத் தரப்பின ரின் ஆதரவும் அவசியம்.
பாராளுமன்றத் தெரிவுக்குழுவை அமைப்பதற்கான கோரிக்கையை நிராகரிப்பது, அரசாங்கம் பேச்சுவார்த்தைகளுக்குத் தயாராக இல்லை என்பதையும், இரகசியமான முறையில் தனது நிகழ்ச்சி நிரலை நிறைவேற்ற முற்படுகிறது என்பதையும் காட்டுகிறது.
‘மக்களின் அபிலாஷைகளை நிறை வேற்றுவோம் ’ என்று அவர் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார். ஆனால், ‘மக்களின் அபிலாஷைகள்’ என்பது யார்? இலங்கையில் உள்ள அனைத்து சமூகங்களையும், குறிப்பாக நீண்டகாலமாக அரசியல் உரிமைகளுக்காகப் போராடிவரும் தமிழ், முஸ்லிம் மற்றும் மலையகத் தமிழ் சமூகங்களின் அபிலாஷைகளையும் இது உள்ளடக்கியுள்ளதா? அல்லது பெரும்பான்மை மக்களின் அபிலாஷைகளை மட்டும் உள்ளடக் கியுள்ளதா? இந்த விடயங்களில் தெளிவின்மை காணப்படுகிறது.
இந்த இரகசியமான அணுகுமுறை, தமிழ் மக்களுக்கு எதிராக மட்டுமல்ல ஒட்டுமொத்தமாக நாட்டின் சிறுபான்மை சமூகங்களுக்கு எதிரான ஒரு நிகழ்ச்சி நிரலை அரசாங்கம் கொண்டிருக்கலாம் என்ற அச்சத்தை வெகுவாகத் தோற்றுவிக்கிறது.
இந்த நிலையில் தமிழினம் இந்த விடயத்தினை தவிர்க்க முடியாது கையாள வேண்டியுள்ளது. முதலில் புதிய அரசியலமைப்புச் செயற்பாடுகள் பற்றிய தகவல்களை திரட்டி அரசாங்கத்துடன் உரையாடல்களை ஆரம்பிப்பதற் காக நகர வேண்டியுள்ளது.
இலங்கையின் இனப்பிரச்சினைக்கான அடிப்படையானது, அதிகாரப் பகிர்வு மறுக் கப்பட்டமையே என்பதை சர்வதேச சமூகத்திற்கும், உள்ளுர் மக்களுக்கும் மீண்டும் எடுத்துரைக்க வேண்டும். சமஷ்டி முறைமை எவ்வாறு தமிழர்களின் சுயநிர்ணய உரிமையையும், தேசிய அடையாளத்தையும் பாதுகாக்கும் என்பதைத் தெளிவாக விளக்க வேண்டும் என்ற வரலாற்றுத் தர்க்கத்தை சுட்டிக்காண்பிக்க வேண்டியுள்ளது.
சமஷ்டி முறைமை ஒரு நாட்டின் ஒருமைப்பாட்டைக் குலைக்காது, மாறாக, பல்வேறு சமூகங்களை உள்ளடக்கி, தேசிய ஒருமைப்பாட்டை வலுப்படுத்தும் கருவி என்பதை கனடா, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளின் உதாரணங்களைக் கொண்டு நிரூபிக்கப்பதற்கான அனைத்துச் சந்தர்ப்பங்களையும் பயன்படுத்த வேண்டும்.
தமிழினத்தின் பிரதிநிதிகள் அனைவரும் ஒருமித்த குரலில் பேசக்கூடிய ஒரு பலம் வாய்ந்த கூட்டமைப்பை உருவாக்குவது மிக அவசியம். தமிழ்த் தேசியக் கட்சிகள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் புலம்பெயர் சமூகத்தின் பிரதிநிதிகள் அனைவரும் பொதுவான நிலைப்பாட்டை எடுத்து, அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் கோரிக்கைகள் குறித்து அனைத்துத் தரப்பினருக்கும் இடையே ஒருமித்த கருத்து இருக்க வேண்டும். இது அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தும் போது, பலவீனமான விடயங்கள் புதிய அரசியல மைப்புக்குள் உள்வாங்கப்படுதலை தடுக்கும்.
புலம்பெயர் சமூகத்தின் உதவியுடன், சர்வதேச நாடுகள், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் மனித உரிமைகள் அமைப்புகளின் ஆதரவைத் திரட்டி, அரசியலமைப்புச் சீர்திருத்தங்களில் வெளிப்படைத்தன்மையையும், தமிழ் மக்களின் உரிமைகளையும் உறுதிப்படுத்த சர்வதேச அழுத்தங்களை உருவாக்க வேண்டும்.
கடந்தகாலங்களில் நடந்த தவறுகளை மீளவும் செய்யாமல் கவனமாகச் செயற்பட வேண்டும் என்பதோடு கடந்த காலங்களில் தனிப்பட்ட தலைவர்கள் அரசாங்கத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தங்கள் தோல்வியடைந் தன. எனவே, முழு தமிழினத்தையும் பிரதிநி தித்துவப்படுத்தும் ஒரு கூட்டமைப்பின் ஊடாக மட்டுமே எந்தவொரு உடன்பாடும் செய்யப்பட வேண்டும்.
வெறுமனே சமஷ்டிக் கோரிக்கையை முன்வைக்காமல், அதிகாரப் பகிர்வுக்கான திட்டவட்டமான நடைமுறையில் சாத்தியப் படக்கூடியவாறான புதிய வரைவை உருவாக்கி அரசாங்கத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். அது, நிதி அதிகாரம், காணி அதிகாரம், சட்டம் ஒழுங்கு போன்ற விடயங்களில் தமிழினத்தின் பாதுகாப்பை எவ்வாறு உறுதிப்படுத்தும் என்பதைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.
ஒட்டுமொத்தமாக புதிய அரசியல மைப்புச் செயற்பாடுகளைத் தமிழினம் கையாள் வது என்பது, கடந்தகால அனுபவங்களில் இருந்து கற்றுக்கொண்டு, ஒற்றுமையுடனும், தந்திரோபா யத்துடனும், வெளிப்படைத்தன்மையுடனும், சர்வதேச ஆதரவுடனும் செயற்படுவதில் தான் தங்கியுள்ளது.