Home Blog Page 31

நாட்டு மக்களுக்கு கச்சத்தீவை பாதுகாக்கும் பொறுப்பை நிறைவேற்றுவேன் – ஜனாதிபதி அநுரகுமார தெரிவிப்பு

நாட்டு மக்களுக்கு கச்சத்தீவை பாதுகாக்கும் பொறுப்பை நிறைவேற்றுவேன். எந்தவொரு அழுத்தத்துக்கும் அடிபணிய போவதில்லை. மக்களின் முன்னேற்றத்துக்காகவே நாட்டின் வளங்கள் பயன்படுத்தப்படும், பாதுகாக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

யுத்தத்தை காரணியாக கொண்டு பெருமளவிலான காணிகள் கைப்பற்றப்பட்டு இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டன. நாட்டில் யுத்த அச்சுறுத்தல் ஏதும் இனி கிடையாது. விடுவிக்க கூடிய சகல காணிகளையும் விடுவிப்பேன். வடக்கு மக்களுக்கு அவரவரின் காணி உரிமை வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணம் மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தின் அபிவிருத்தி பணிகளை திங்கட்கிழமை (01)ஆரம்பித்து வைத்ததன் பின்னர் அங்கு உரையாற்றுகையில் ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஜனாதிபதி அங்கு மேலும் உரையாற்றியதாவது,

விலகி மற்றும் பிரிந்திருந்த என்மை ஒன்றிணைத்த தீர்மானமிக்க தேர்தலாகவே நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தல் அமைந்திருந்தது. எமக்கு முன்னால் உள்ள சவால்கள்  அனைத்துக்கும் ஒன்றிணைந்தே நாம் முகங்கொடுக்க வேண்டும்.

எமது பிள்ளைகள் பிளவுப்பட்டிருக்கும் வகையிலான நாட்டை மீண்டும் உருவாக்க கூடாது. வடக்கு,கிழக்கு மற்றும் தெற்கு என்ற வேறுபாடில்லாமல் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவதற்கும், மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கும் விசேட கவனம் செலுத்தியுள்ளோம்.

வடக்கு மக்கள் எதிர்கொண்டுள்ள பொருளாதார பிரச்சினைகள் குறித்து விசேட கவனம் செலுத்தியுள்ளோம். வடக்கு மாகாணத்தில் பெரும்பாலானோர் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். ஆகவே அவர்களுக்கான காணி உரிமையை வழங்க வேண்டும்.

யுத்தத்தை காரணியாக கொண்டு பெருமளவிலான காணிகள் கைப்பற்றப்பட்டு இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டன. நாட்டில் யுத்த அச்சுறுத்தல் ஏதும் கிடையாது.

யுத்தம் என்பதொன்று மீண்டும் தோற்றம் பெறும் என்ற நிலைப்பாட்டில் இருந்துக் கொண்டு பொதுமக்களின் காணிகளை தொடர்ந்து கையகப்படுத்திக் கொண்டிருக்க முடியாது. யுத்தம் தோற்றம்பெறுவதை தடுக்கும் வகையில் தான் எமது அரசாங்கம் செயற்பட வேண்டும்.

ஒருசில அரசாங்கங்கள் யுத்தம் மீண்டும் தோற்றம் பெறும் என்ஞ நினைத்துக் கொண்டு காணிகளை தொடர்ந்து கட்டுப்பாட்டில் வைத்திருந்தன.விடுவிக்க கூடிய காணிகள் மற்றும் திறக்க கூடிய வீதிகள் அனைத்தையும் மக்களுக்கு வழங்குவோம்.

வடக்கு மாகாண மக்களின் பிறிதொரு ஜீவனோபாயமாக கடற்றொழில் காணப்படுகிறது.மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.அதற்காகவே மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தின் மூன்றாம் கட்ட பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

எதிர்வரும் காலங்களில் மேலும் பல மீன்பிடி துறைமுகங்கள் அபிவிருத்தி செய்யப்படும். நாட்டு மக்களுக்கு கச்சத்தீவை பாதுகாக்கும் பொறுப்பை நிறைவேற்றுவேன். எந்தவொரு அழுத்தத்துக்கும் அடிபணிய போவதில்லை. மக்களின் முன்னேற்றத்துக்காகவே நாட்டின் வளங்கள் பயன்படுத்தப்படும்,பாதுகாக்கப்படும் என்றார்.

சூடானில் ஒரு கிராமத்தையே சூறையாடிய பாரிய நிலச்சரிவு : ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

சூடானில் ஏற்பட்ட நிலச்சரிவில் கிராமத்தில் வசித்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில்,  ஒரே ஒருவர் மாத்திரமே உயிர்தப்பி இருக்கிறார்.

சூடானில் அல் புர்ஹான் தலைமையிலான இராணுவத்திற்கும், முகமது ஹம்தான் டகாலோ தலைமையிலான ஆர்எஸ்எப் துணை இராணுவ படைக்கும் இடையே அதிகாரப் போட்டி நிலவுகிறது.

2023ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி முதல் இரு தரப்பினர் இடையே கடும் யுத்தம் இடம்பெற்று வருகிறது.

இந்த யுத்தத்தில் அப்பாவி மக்கள் உள்பட இலட்சக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

மோதலை முடிவுக்கு கொண்டு வர சர்வதேச நாடுகள் எடுத்து வரும் முயற்சிகளுக்கு பலன் எதுவும் கிடைக்கவில்லை.

உள்நாட்டு போரால் கோடிக்கணக்கான மக்கள் புலம்பெயர்ந்து உள்ளனர். இந் நிலையில், சூடான் விடுதலை இயக்கம் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள மர்ரா மலையில் உள்ள டார்பர் என்ற பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இந்த பகுதியில் திடீரென பாரிய நிலச்சரிவும் ஏற்பட்டது. இதில் சிக்கி, 1000 பேர் பலியாகி இருக்கின்றனர். ஒரே ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்துள்ளார்.

இந்த தகவலை சூடான் விடுதலை இயக்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் கடும் சேதத்தை சந்தித்துள்ள இப்பகுதியில் சடலங்களை மீட்கவும், நிவாரண பணிகளை மேற்கொள்ளவும் ஐ.நா. சபை மற்றும் சர்வதேச தொண்டு நிறுவனங்கள் உதவ வேண்டும் என்று சூடான் விடுதலை இயக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

கிராமமே முற்றிலும் தரைமட்டமாகி விட்டதாக சூடான் விடுதலை இயக்கத்தை முன்னின்று நடத்தி வரும் அப்டேல்வாஹித் முகமது நூர் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நிலச்சரிவில் கிராமமும், அங்குள்ள வீடுகளும் மண்ணில் புதைந்துள்ளன. ஏராளமான பெண்கள், குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். கிராமமே முற்றிலும் அழிந்துவிட்டது. இவ்வாறு அப்டேல்வாஹித் முகமது நூர் கூறி உள்ளார்.

செம்மணி – சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் மேலும் 9 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு

செம்மணி – சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் திங்கட்கிழமை (1) மேலும் 9 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் இதுவரை 218 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இதில் 198 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் – செம்மணி – அரியாலை சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் 40வது நாளாக இன்றும் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜாவின் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

யாழில் ஜனாதிபதியை சந்திக்க முயன்ற பொதுமக்கள் காவல்துறையினரால் துரத்தப்பட்டதாக தகவல்!

யாழ்ப்பாணம் – மயிலிட்டி துறைமுகத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை சந்திக்கச் சென்ற பொதுமக்கள் காவல்துறையினரால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம், மயிலிட்டி பகுதியில் இன்று காலை (01) ஒன்று கூடிய காணி உரிமையாளர்களே திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

அத்துடன், மயிலிட்டி துறைமுக அபிவிருத்தி பணிகளை ஆரம்பித்து வைக்கும் சந்தர்ப்பத்தில், சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் தையிட்டி திஸ்ஸ விகாரையின் பிக்கு வருகை தந்தமைக்கு எதிராகவே குறித்த காணி உரிமையாளர்களால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
அதேவேளை குறித்த சம்பவத்தை செய்தி சேகரிக்க முயன்ற ஊடகவியலாளர்களையும் பொலிஸார் மிரட்டி தகாத வார்த்தைகளால் தூற்றி துரத்தியுள்ளனர்.

கடந்த 35 வருட காலங்களுக்கு மேலாக தமது சொந்த இடங்களில் இருந்து வெளியேறி தற்காலிக இடங்களில் வசிக்கும் மக்கள் தமது காணிகளை விடுவிக்குமாறு கடந்த பல வருடங்களாக கோரி வருகின்றனர்.

இந்நிலையில் இன்னமும் காணிகள் விடுவிக்கப்படாமல் உள்ள காணிகளின் உரிமையாளர்கள் , ஜனாதிபதியின் கவனத்தினை ஈர்க்கும் முகமாக , மயிலிட்டி பகுதியில் வீதியோரமாக அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டத்தினை நடாத்த முயன்றிருந்தனர்.

இந்நிலையில் காவல்துறையினர் வயோதிபர்கள் பெண்கள் என்ற வேறுபாடுகள் இன்றி , அவர்களை மிக மோசமான வார்த்தைகளால் தூற்றி , அவர்களை தமது பலத்தினை பயன்படுத்தி அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

செம்மணி விடயத்தில் நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் :ஜனாதிபதி உறுதி

செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினம் (01) புதிதாக 07 என்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன் மேலும் 09 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் இன்றைய தினம் 08ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டன.

கட்டம் கட்டமாக இதுவரையில் 49 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணிகளின் போது, 198 என்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் இதுவரையில் 218 எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதேவேளை, யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பிலும் கருத்துரைத்துள்ளார். செம்மணியில் தோண்டப்படும் மனித எச்சங்கள் தொடர்பாக நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

தாம் கைது செய்யப்படுவதை தடுக்குமாறு உதய கம்மன்பில தாய்லாந்தில் இருந்து மனுதாக்கல்…

தற்போது தாய்லாந்தில் இருக்கும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, தாம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்படுவதைத் தடுக்க உத்தரவிடக் கோரி தமது சட்டத்தரணி மூலம் மேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன கைது செய்யப்பட்டமை தொடர்பாக பத்திரிகையொன்றுக்கு அவர் கருத்து வெளியிட்டிருந்தார். தமது கருத்துக்கள் 2007ஆம் ஆண்டின் 56ஆம் இலக்க சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கை சட்டத்தின் பிரிவு 3(1) மற்றும் தண்டனைச் சட்டக் கோவையின் பிரிவு 120 இன் கீழ் குற்றமாகுமா? என்பதைத் தீர்மானிக்க விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்துக்கு கடந்த ஓகஸ்ட் 27ஆம் திகதி தெரிவித்தமையை ஊடகங்கள் மூலம் அறிந்துகொண்டதாக மனுதாரர் கூறுகிறார்.

விசாரணையின்றி தன்னைத் தடுத்து வைக்க சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
தமது கருத்துக்கள் எந்தவொரு இனக்குழுவையும் இலக்கு வைக்கவில்லை என்றும் விடுதலைப் புலிகளை குறிவைத்து தெரிவிக்கப்பட்டது என்றும் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார். அத்துடன், தமது கருத்துக்கள் தொடர்பான குற்றப்புலனாய்வு திணைக்கள விசாரணைகள் அரசியல் பழிவாங்கலுக்கு சமமானது என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குற்றம் சாட்டியுள்ளார்.

காற்றாலைக்கு எதிரான மன்னர் மக்களின் போராட்டம் நீள்கிறது…

மன்னாரில் காற்றாலை கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்றைய தினம் (01) 30ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக கற்கடந்த குளம் கிராமத்தை சேர்ந்த மக்கள் போராட்டத்தில் கலந்து கொண்டு நீதியை கோரி இருந்தனர். மன்னார் நகர சுற்றுவட்ட பகுதியில் இடம்பெற்று வருகின்ற போராட்டத்துக்கு இன்றும் ஏராளமானோர் ஆதரவை வழங்கியிருந்தனர்.

‘காற்றாலை எம் கண்ணீரின் கதை சொல்லும்’, ‘நாட்டை விற்று அபிவிருத்தி எதற்கு’, ‘அரசே எமது உயிரோடு விளையாடதே’, ‘சொந்த மண்ணிலே அகதியாகும் நிலை வேண்டாம்’ போன்ற பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து மன்னார் பிரதான சுற்று வட்ட பகுதியில் இருந்து மன்னார் மாவட்ட செயலகம் வரை பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறு ஊர்வலமாக சென்று மக்கள் தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தி இருந்தனர்‌.

தமிழின அழிப்புக்கு சுயாதீன விசாரணையை நடாத்தக் கோரி, ஈருருளிப்பயண போராட்டம்!

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 60 வது கூட்டத்தொடர் எதிர்வரும் 08ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இந்த நிலையில், இலங்கையில் திட்டமிட்டு தமிழின அழிப்பு நடத்தப்படுவது தொடர்பில், அனைத்துலக சுயாதீன விசாரணையை நடாத்தக் கோரி, நெதர்லாந்தில் ஈருருளிப்பயண போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, நெதர்லாந்து பிறேடா நகரசபைக்கு முன்பாக குறித்த மனிதநேய ஈருருளிப்பயணம் ஆரம்பிக்கப்பட்டது.

நெதர்லாந்து சர்வதேச நீதிமன்றம், நெதர்லாந்து ரொத்தர்டாம் நகரசபை ஊடாக இந்த மனித நேய ஈருருளிப்பயணம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய குறித்த மனிதநேய ஈருருளிப்பயணம் பெல்ஜியம் எல்லையை சென்றடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு பிரான்ஸ் தலைநகர் பெரிஸில் உள்ள தமிழர்கள் திறந்தவெளி கண்காட்சி ஒன்றை நடத்தியுள்ளனர். காணாமல் ஆக்கப்பட்டோரின் பாரம்பரியத்தை எடுத்துக்காட்டும் வகையில் இந்த கண்காட்சி நடத்தப்பட்டுள்ளது.

பிரான்ஸ் தமிழ் இளைஞர் அமைப்பு மற்றும் பிரான்சில் உள்ள தமிழ் ஒருங்கிணைப்புக் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தக் கண்காட்சி, சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தைக் குறிக்கும் வகையில் நடைபெற்றுள்ளது. இதன்போது காணாமல் ஆக்கப்பட்டதாகக் கூறப்படும் 400 தமிழர்களின் உருவப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

இலங்கையின் இறையாண்மை எவ்வித வெளிப்புற அழுத்தத்தாலும் சமரசம் செய்யப்பட மாட்டாது : ஜனாதிபதி

இலங்கையின் இறையாண்மை எந்த வகையான வெளிப்புற அழுத்தத்தாலும் சமரசம் செய்யப்பட மாட்டாது என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.

யாழ்ப்பாணம் – மயிலிட்டியில் உரையைாற்றியபோதே அவர் இதனை குறிப்பிட்டார்.  இலங்கையின் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதில் அரசாங்கத்தின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை ஜனாதிபதி உறுதியாக மீண்டும் வலியுறுத்தியதுடன், நாட்டின் கடற்றொழில் சமூகங்களுக்கு கச்சதீவின் மூலோபாய மற்றும் உணர்வுபூர்வமான முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

“கச்சதீவு நமது மீன்பிடி சமூகத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. தீவு தொடர்பில் பெரிய பொது விவாதம் எழுந்துள்ளது”. “இலங்கையின் பொறுப்பு அதன் நிலப்பரப்பைத் தாண்டி கடல் எல்லைகள் மற்றும் வான்வெளியை உள்ளடக்கியது”. “நமது தீவுகள், நமது கடல் நமது வானம் அல்லது நமது நிலம், அவை நமது மக்களுக்குச் சொந்தமானவை. எதிர்கால சந்ததியினருக்காக அவற்றைப் பாதுகாக்க நாம் கடமைப்பட்டுள்ளோம்” என்று ஜனாதிபதி கூறியுள்ளார். எனவே, எந்த வகையான வெளிப்புற அழுத்தத்துக்கு நாங்கள் அடிப்பணியமாட்டோம் என்றும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதனிடையே, நாட்டில் யுத்தமொன்று ஏற்படுவதற்கான சூழல் தற்போது இல்லை, எனவே, பாதுகாப்பு காரணங்களுக்காக கையகப்படுத்தப்பட்ட காணிகள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும்.
முன்னைய காலங்களில் கொழும்பில் ஒரு அரசாங்கம் உள்ளது, தமக்கு வேறொரு அரசாங்கம் வேண்டும் என வடக்கில் உள்ளவர்கள் கோரியிருந்தனர்.

தற்போது அனைவருக்குமான அரசாங்கமொன்று அமைய பெற்றுள்ளதால் அவ்வாறான கோரிக்கைகளுக்கு இனி இடமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் இருந்த இனவாதத்தை மையப்படுத்திய அரசியல் முறைமையை இந்த அரசாங்கம் இல்லாமல் செய்துள்ளது என்றும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்து்ள்ளர்.

சர்வதேச நீதி கோரி யாழில் இன்று கையெழுத்து போராட்டம்!

செம்மணி உட்பட  வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள மனிதப் புதைகுழிகள் மற்றும் இனப்படுகொலைகளுக்கு சர்வதேச நீதி கோரி கையெழுத்துப் போராட்டம் இன்று காலை யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது.

அதன்படி தென்மராட்சியின் சாவகச்சேரி, கொடிகாமம் நகரங்களில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஏற்பாட்டில் கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது சாவகச்சேரி நகரசபை தலைவர் வ.ஶ்ரீபிரகாஸ் மற்றும் பிரதேச சபை தவிசாளர் குகன் ஆகியோர் கையெழுத்து போராட்டத்தை ஆரம்பித்து வைத்தனர்.

சாவகச்சேரி வணிகர் கழகத்தினர், முச்சக்கர வண்டிச் சங்கத்தினர், சந்தை வியாபாரிகள் சங்கத்தினர் பொதுமக்கள் எனப்பலரும் கையெழுத்துப் போராட்டத்தில் பங்கெடுத்தனர்.