யாழ்ப்பாணம் – மயிலிட்டி துறைமுகத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை சந்திக்கச் சென்ற பொதுமக்கள் காவல்துறையினரால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம், மயிலிட்டி பகுதியில் இன்று காலை (01) ஒன்று கூடிய காணி உரிமையாளர்களே திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
அத்துடன், மயிலிட்டி துறைமுக அபிவிருத்தி பணிகளை ஆரம்பித்து வைக்கும் சந்தர்ப்பத்தில், சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் தையிட்டி திஸ்ஸ விகாரையின் பிக்கு வருகை தந்தமைக்கு எதிராகவே குறித்த காணி உரிமையாளர்களால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
அதேவேளை குறித்த சம்பவத்தை செய்தி சேகரிக்க முயன்ற ஊடகவியலாளர்களையும் பொலிஸார் மிரட்டி தகாத வார்த்தைகளால் தூற்றி துரத்தியுள்ளனர்.
கடந்த 35 வருட காலங்களுக்கு மேலாக தமது சொந்த இடங்களில் இருந்து வெளியேறி தற்காலிக இடங்களில் வசிக்கும் மக்கள் தமது காணிகளை விடுவிக்குமாறு கடந்த பல வருடங்களாக கோரி வருகின்றனர்.
இந்நிலையில் இன்னமும் காணிகள் விடுவிக்கப்படாமல் உள்ள காணிகளின் உரிமையாளர்கள் , ஜனாதிபதியின் கவனத்தினை ஈர்க்கும் முகமாக , மயிலிட்டி பகுதியில் வீதியோரமாக அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டத்தினை நடாத்த முயன்றிருந்தனர்.
இந்நிலையில் காவல்துறையினர் வயோதிபர்கள் பெண்கள் என்ற வேறுபாடுகள் இன்றி , அவர்களை மிக மோசமான வார்த்தைகளால் தூற்றி , அவர்களை தமது பலத்தினை பயன்படுத்தி அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.



