செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினம் (01) புதிதாக 07 என்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன் மேலும் 09 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் இன்றைய தினம் 08ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டன.
கட்டம் கட்டமாக இதுவரையில் 49 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணிகளின் போது, 198 என்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் இதுவரையில் 218 எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதேவேளை, யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பிலும் கருத்துரைத்துள்ளார். செம்மணியில் தோண்டப்படும் மனித எச்சங்கள் தொடர்பாக நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.



