Home Blog Page 3034

சவேந்திர சில்வாவுக்கு எதிராக நம்பகமான முறைப்பாடுகள் இருக்கின்றன – அமெரிக்க தூதுவர் செவ்வி

இலங்கையின் புதிய இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா விடயத்தில் நம்பகமான முறைப்பாடுகள் இருக்கின்றன.

நீதிமன்ற விசாரணையின் மூலமாக நல்லதொரு முடிவு வரக்கூடியதாக இருக்க வேண்டும். நீதிமன்றம் தீர்மானத்தை எடுக்க வேண்டும். ஆனால் அது சவேந்திர சில்வா விடயத்தில் நடக்கவில்லை என்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் கூறியிருக்கிறார்.

கொழும்பு டெய்லி மிரர் பத்திரிகைக்கு நேற்று வியாழக்கிழமை நேர்காணல் ஒன்றை வழங்கியிருக்கும் தூதுவர் அலைனா, தற்சமயம் முறைப்பாடுகளே இருக்கின்றன. அவை பாரதூரமானவையா? நம்பகத்தன்மையானவையா? அல்லது இல்லையா என்பது வேறு விடயம். சவேந்திர சில்வா விடயத்தில் பெருமளவு ஆவணப்படுத்தல்கள் இடம்பெற்றிருக்கின்றன. ஐக்கிய நாடுகளினாலும், ஏனைய அமைப்புக்களினாலும் அவை தொகுக்கப்பட்டிருக்கின்றன.

முப்பது வருடகால யுத்தத்தின் போது அதில் சம்பந்தப்பட்ட தரப்பினராலும் கொடூரங்கள் இழைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றை முழுமையாக அடிவரை விசாரித்தறிய வேண்டிய தேவையிருக்கிறது, அதுவே இப்போதிருக்கம் சவால்களில் ஒன்று. உண்மையைக் கண்டறிந்து, நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதுடன் பொறுப்புக்கூறலையும் உறுதிப்படுத்துவதாக இலங்கை அரசாங்கம் உறுதியளித்திருக்கிறது. ஆனால் இந்த விவகாரத்தை முழுமையாகக் கையாள்வதற்கு செயன்முறையொன்று தேவை என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

ஜெனரல் சில்வாவின் நியமனம் தொடர்பில் அமெரிக்காவினால் வெளிப்படுத்தப்பட்ட அக்கறை இலங்கையின் இறைமையை மீறுவதாக மக்கள் அர்த்தப்படுத்திக் கொள்கிறார்கள். அதுபற்றி என்ன கூறவிரும்புகிறீர்கள் என்று அமெரிக்கத் தூதுவரிடம் கேட்கப்பட்ட போது அவர் பின்வருமாறு பதிலளித்தார்:

‘அமெரிக்காவின் கொள்கைகளையும், தீர்மானங்களையும் பகிர்ந்து கொள்வதே எனது கடமை. புதிய இராணுவத் தளபதி நியமனம் தொடர்பில் அமெரிக்காவினால் வெளிப்படுத்தப்பட்ட கருத்து தொடர்பிலும் இதையே நாம் செய்தோம். இலங்கையின் நற்பெயர், நீதி மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பில் அரசாங்கத்திற்கு இருக்கும் கடப்பாடு ஆகியவை குறித்து நாம் அக்கறையை வெளிப்படுத்தியிருக்கின்றோம். அவரை நியமியுங்கள், இவரை நியமியுங்கள் என்று நாம் கூறவில்லை. இந்த விடயத்தில் எனது நிலைப்பாட்டை மாத்திரம் நாங்கள் வெளிப்படுத்தியிருக்கிறோம்.

‘எதைச் செய்ய வேண்டுமென்று ஒரு நாட்டிற்குக் கூறுவதற்கும், அந்த நாட்டின் நடவடிக்கைகள் குறித்து எமது நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதற்கும் இடையில் ஒரு அடிப்படை வேறுபாடு இருக்கிறது. இலங்கை அரசாங்கம் என்ன செய்ய வேண்டுமென்று நாங்கள் கூறுவதாக மக்கள் வியாக்கியானப்படுத்திக் கொள்வார்கள் என்று நீங்கள் கூறுவது சரியானதே. என்ன செய்ய வேண்டுமென்று நாங்கள் இலங்கை அரசாங்கத்திற்குக் கூறவில்லை. தாம் என்ன செய்யப்போகிறோம் என்பதை இங்குள்ள அரசாங்கமும், மக்களும் தான் தீர்மானிக்க முடியும். எமது அக்கறைகளையும், ஏனைய நாடுகளின் அக்கறைகளையும் இலங்கை அரசாங்கமும், மக்களும் கருத்தில் எடுப்பார்களெ நிச்சயமாக நம்புகின்றேன்’

கோத்தபாயவின் குடியுரிமை விவகாரம்

கேள்வி : ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, தனது அமெரிக்கக் குடியுரிமையைக் கைவிட்டுவிட்டதாக ஊடக செய்திகள் வெளியாகியுள்ளன. அவர் இப்போது ஒரு அமெரிக்கப் பிரஜை இல்லையா?

பதில் : முதலில் நாம் ஒரு விடயத்தைக் கவனிக்க வேண்டும். அமெரிக்காவில் நாம் குறிப்பிட்ட சில அந்தரங்கச் சட்டங்களைக் கொண்டிருக்கிறோம். தனிப்பட்டவர்களின் விவகாரம் குறித்து நாம் கருத்துச்சொல்ல முடியாது. கோத்தபாய ராஜபக்ஷவின் குடியுரிமை விவகாரம் குறித்து ஊர்ஜிதப்படுத்திக் கொள்வதற்கு ஊடகங்கள் தடுமாறிக்கொண்டிருக்கின்றன. குடியுரிமையைக் கைவிடுவதென்பது ஒரு நிர்வாகச் செயன்முறை ஆகும். சில நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். இறுதியில் குடியுரிமையைக் கைவிடலாம்.

இறுதியாக வெளியிடப்பட்ட பதிவேட்டில் கோத்தபாயவின் பெயர் இருக்கவில்லை என்பது தொடர்பில் கருத்துக்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன என்பதை நான் அறிவேன். குடியுரிமை இழப்புத் தொடர்பில் பெயரைப் பட்டியலிடும் விடயத்தில் சமஷ்டிப் பதிவேடு பல மாதங்கள் பிந்திய நிலைவரத்தைக் கொண்டதாக இருக்க முடியும். இந்த விடயத்தில் திட்டவட்டமான ஒரு செயன்முறை இருக்கிறது என்பது தெளிவானது.

அமெரிக்கக் குடியுரிமையைத் துறக்க விரும்புகின்ற ஒருவர் விண்ணப்பப்படிவங்களைப் பூர்த்திசெய்ய வேண்டும். அவற்றைப் பெறும் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நபர் கிரிமினல் குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டிருக்கிறாரா, இல்லையா, வரிக்கொடுப்பனவுகளை முறையாகச் செலுத்தியிருக்கிறாரா, இல்லையா என்ற பரிசீலனைகளை மேற்கொள்வர். அதன் பின்னர் அந்த நபர் அமெரிக்கக் குடியுரிமையை இழப்பது தொடர்பில் சத்தியப்பிரமாணத்தைச் செய்துகொள்ள வேண்டும்.

சமஷ்டிப் பதிவேடு பல மாதங்கள் பிந்திய தகவல்களைத் தருவதாகவும் இருக்கலாம். அதனால் அடுத்த காலாண்டுக்கு அல்லது அதையும்விடப் பின்னரும் நீங்கள் காத்திருக்க வேண்டியிருக்கும்.

கேள்வி : அமெரிக்காவில் கோத்தபாய ராஜபக்ஷவிற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள் பற்றி என்ன கூறுகின்றீர்கள்?

பதில் : வழக்குகள் கிரிமினல் வழக்குகளா? சிவில் வழக்குகளா? என்பதைக் குறித்ததே இந்த விடயம். குடியுரிமையைத் துறப்பதற்கு சம்பந்தப்பட்ட நபருக்கெதிராக கிரிமினல் முறைப்பாடுகள் இருக்கக்கூடாது. முன்னர் பாதுகாப்புச் செயலாளருக்கு எதிராக கலிபோர்னியாவில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளையே நீங்கள் குறிப்பிடுகின்றீர்கள் என்று நினைக்கிறேன். அவை சிவில் வழக்குகளே.

கேள்வி : கடந்த தேர்தலின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேவை அமெரிக்கா ஆதரித்ததாக முறைப்பாடுகள் இருந்தன. இத்தடவை கோத்தபாய ராஜபக்ஷவை அமெரிக்கா ஆதரிப்பதாக ஒரு கதை உலவுகிறது. இது குறித்து என்ன கூறுகின்றீர்கள்?

பதில் : நாங்கள் இந்தத் தேர்தலில் சம்பந்தப்படுவதில்லை. தீர்மானத்தை எடுப்பது இலங்கை மக்களைப் பொறுத்தது. நாங்கள் எந்தவொரு வேட்பாளரையும் ஆதரிக்கவில்லை. ஆனால் சுதந்திரமானதும், நீதியானதுமான தேர்தல் செயன்முறையை நாங்கள் ஆதரிக்கின்றோம். கடந்த காலத்தில் நாம் அவ்வாறு ஆதரிக்கின்றோம். ஜனநாயக செயன்முறைகள் முறையாகப் பின்பற்றப்படுவதை உறுதிசெய்ய விரும்புகின்றோம். பலம் பொருந்தியதும், ஆற்றல் மிக்கதுமான தேர்தல் ஆணைக்குழுவொன்று உள்ளது. அதன்மீது நாம் நம்பிக்கை கொண்டிருக்கிறோம்.

கேள்வி : 2015 இல் இலங்கையில் ஏற்பட்ட ஆட்சிமாற்றத்தை நீங்கள் வரவேற்றீர்கள். இத்தடவை?

பதில் : அரசாங்க மாற்றத்தை வரவேற்பதற்கும், கொள்கைகள் மாற்றத்தை வரவேற்பதற்கும் இடையில் வேறுபாடுகள் உள்ளன.

கேள்வி : சவேந்திர சில்வா இராணுவத்தளபதியாக நியமிக்கப்பட்ட போது அமெரிக்கா விசனம் வெளியிட்டது. ஆனால் கோத்தபாய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக நியமித்த போது மௌனம் சாதித்தது. இவ்விருவருக்கும் எதிராக மனித உரிமை மீறல் முறைப்பாடுகள் இருக்கின்றன. விசனத்தை வெளிப்படுத்துவதில் அமெரிக்கா ஏன் இவ்வாறு வித்தியாசமாக நடந்துகொள்கிறது?

பதில் : இராணுவத் தளபதி ஒரு அரசாங்க அதிகாரி. ஜனாதிபதி வேட்பாளர் பதவிக்கு வர ஆசைப்படும் ஒருவர். ஒரு அரசியல் கட்சி வேட்பாளரை நியமிப்பதற்கும், உத்தியோகபூர்வ பதவியில் அரசாங்கம் ஒருவரை நியமிப்பதற்கும் இடையில் வேறுபாடு இருக்கிறது.

கேள்வி : நீங்கள் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தியிருக்கிறீர்கள். அவரது பதவிக்காலத்தில் இருதரப்பு உறவுகள் அவ்வளவு நன்றாக இருக்கவில்லை. அவரைப் பற்றி இப்போது என்ன நினைக்கிறீர்கள்?

பதில் : நான் ஒரு வருடத்திற்கு முன்னரே இலங்கைக்கு வந்தேன். சில தடவைகள் ராஜபக்ஷவை சந்தித்திருக்கிறேன். அரசியல் கட்சிகள், குழுக்களை பரவலாகச் சந்திப்பதன் ஓரங்கமே அதுவாகும். அரசியல் தலைவருடன் தொடர்பில் இருக்க வேண்டியது முக்கியமானது என்று நான் நினைக்கின்றேன். மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர்களையும் நான் சந்தித்தேன். தங்களது தலைவர்களைப் பற்றி இலங்கை மக்கள் தீர்மானமொன்றை எடுக்கப் போகிறார்கள் என்று நாம் நினைக்கிறோம். அரசியல்வாதிகளுடன் ஒன்றாக அமர்ந்திருந்து பேச்சுவார்த்தை நடத்துவது என்றால், இணக்கத்தை நாம் கொண்டிருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. அவர்கள் எமது கொள்ககைளை, எமது நோக்குகளை, உறவு முறைக்கான நம்பிக்கைகளை வழங்கிக் கொள்வது முக்கியமாகும். அதனால்தான் நாம் பல்தரப்பட்டவர்களுடனும் தொடர்பில் இருக்கின்றோம். மஹிந்த ராஜபக்ஷவுடனான பேச்சு மிகவும் சுமூகமானதாக அமைந்திருந்தது.

வேட்பாளராக தெரிவாகும் முன்பேபிரச்சாரத்தை ஆரம்பித்த ரணில் – பூமிகன்

இலங்கையின் சனாதிபதித் தேர்தல் நவம்பர் மாதத்தில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்படும் நிலையில், இலங்கையின் பிரதான கட்சிகளில் ஒன்றான ஐ.தே.க.வுக்குள் பூகம்பம் வெடித்துள்ளது. சனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவா? சஜித் பிரேமதாசவா? என்ற பிரச்சினையில் கட்சி இரண்டாகிப்போயுள்ளது.

மிகப் பெரும் நெருக்கடிக்குள் கட்சி சிக்கித் தவிக்கும் நிலையில், கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் வந்து மூன்று நாட்களாகத் தங்கியிருந்து பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களில் பங்கேற்ற ரணில், அரசியல் தீர்வு குறித்தும் முதல் தடவையாகப் பேசியிருக்கின்றார். கூட்டமைப்பின் பேச்சாளரும், ரணிலின் தீவிர விசுவாசியாகக் கருதப்படுபவருமான சுமந்திரன் இலகுவாகப் பந்தைப் போட்டுக்கொடுக்க ‘ஸிக்ஸர்’ அடிக்க முயன்றுள்ளார் ரணில்.

இன நெருக்கடி விடயத்தில் பிரதான இரண்டு கட்சிகளுமே தமது தீர்வு இதுதான் என்பதைத் திட்டவட்டமாகச் சொல்வதற்கு தயங்கும் நிலைதான் தொடர்கி ன்றது. தீர்வைத் தரக் கூடிய கட்சிகளாகவும், தீர்வைக் குழப்பக் கூடிய கட்சி களாகவும் இரண்டு பிரதான கட்சிகளுமே இருந்தாலும், தமது தீர்வு இதுதான் என்பதை வெளிப்படுத்தும் அரசியல் துணிச்சல் அந்தக் கட்சிகளிடம் இல்லை. இப்போதும், தன்னுடைய தீர்வுத் திட்டம் இதுதான் என்பதை வெளிப்படையாகச் சொல்லாமல், சுற்றிவளைத்து “பாராளுமன்ற வழிநடத்தல் குழுவில் இணக்கம் காணப்பட்ட அம்சங்களே எமது நிலைப்பாடு” என ரணில் கூறியிருக்கின்றார்.

வழிநடத்தல் குழுவில் இணக்கம் காணப்பட்ட விடயம் என்ன என்பதோ, அது தமிழ் மக்களுடைய அபிலாசைகளைத் தீர்க்கக்கூடியவை என்பதோ விவாதத்துக்குரிய விடயங்கள்தான்.

யாழ்ப்பாணத்தில் வைத்து இதனை அறிவிக்கவேண்டிய தேவையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் எழுப்பிய கேள்வி ஒன்றினால்தான் ரணிலுக்கு ஏற்பட்டது. யாழ். குருநகரில் வியாழக்கிழமை இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில், ரணிலின் முன்பாக உரையாற்றிய சுமந்திரன் இந்தக் கேள்வியை எழுப்பினார்.

“உங்களை ஒரு பிரதமராக அல்லாமல், சனாதிபதி வேட்பாளராக அல்லாமல், முக்கியமான கட்சித் தலைவர் என்ற முறையில் ஓர் கேள்வி கேட்க விரும்புகின்றோம். எங்களுடைய அரசியல் அபிலாசைகளுக்கு உங்கள் கட்சியின் நிலைப்பாடு என்ன? அதைத் தெளிவுபடுத்துவீர்களா?” என்பதுதான் சுமந்திரன் எழுப்பிய கேள்வி.

சனாதிபதி வேட்பாளரை ஐ.தே.க. தெரிவு செய்ய முன்னரே ரணிலை சனாதிபதி வேட்பாளர் என சுமந்திரன் அறிவித்துவிட்டார் என்பது கவனிக்கத்தக்கது. இதற்குப் பதிலளித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,

“அதிகாரப் பகிர்வு தொடர்பாக அரசமைப்பு பேரவை தனது அறிக்கையில் வெளிப்படுத்தியுள்ள கொள்கைக், கோட்பாடே தமிழர்களின் எதிர்பார்ப்புத் தொடர்பான ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரே நிலைப்பாடு. இந்த நாட்டில் தமிழினம் இலங்கை சனநாயகக் குடியரசு என்ற கட்டமைப்புக்குள் சமத்துவமாக, கௌரவமாக, சுயமரியாதை யுடன், தங்களின் விடயங்களைத் தாங்களேமுடிவெடுத்துக் கையாண்டு வாழவேண்டும் என்பதே எமது நம்பிக்கை” எனக் குறிப்பிட்டிருக்கின்றார்.

சுமந்திரன் எழுப்பிய கேள்விக்கு பிடி கொடுக்காமல், வழிநடத்தல் குழுவில் எட்டப்பட்ட இணக்கத்தையே தமது தீர்வாக பிரதமர் வெளிப்படுத்தி யிருக்கின்றார்.

அரசியலமைப்பு உருவாக்கத்துக்கான வழிகாட்டல் குழுவின் மூல அறிக்கையில் அதிகாரப் பகிர்வு தொடர்பான கொள்கைகள், கோட்பாடுகள் என்ற தலைப்பில் 16 அம்சத் திட்டம் வரையப்பட்டிருந்தது. பல்வேறு கட்சிகளுடனும் நடந்த கலந்துரையாடல்களின் பின்னர் அரசமைப்புப் பேரைவையாகக் கூடிய பாராளுமன்றத்துக்கு, வழிகாட்டல் குழுவின் இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

அந்த இடைக்கால அறிக்கையில், எல்லாத் தரப்புகளும் ஏற்று இணங்கிக் கொண்ட அதிகாரப் பகிர்வுக்கான அம்சங்கள் என 14 விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றையே தமிழர்களின் அபிலாசைக ளுக்கான தமது கட்சியின் நிலைப்பாடு என ரணில் இப்போது கூறுகின்றார் என்றே எடுத்துக்கொள்ள வேண்டும்.

இவை இணக்கம் காணப்பட்ட விடயங்கள் என ரணில் கூறினாலும், ராஜபக்ச தரப்பு இதற்கு முழுமையான இணக்கத்தை வெளியிட்டிருக்கவில்லை. அத்துடன், தமிழ் மக்களுடைய அபிலாசைகளை முழு அளவில் பூர்த்தி செய்யக் கூடியவையாகவும் இவை இருக்கவில்லை. அதனால்தான் அதன் விபரங்களை வெளிப்படுத்திக் கூறாமல், வெறுமனே இணக்கம் காணப்பட்ட விடயங்கள் எனக் கூறி அனைத்துத் தரப்பையும் திருப்திப்படுத்த ரணில் முற்பட்டிருக்கின்றார்.

2015 இல் பதவிக்கு வந்த மைத்திரி – ரணில் அரசு தீர்வைத் தரும் என கூட்டமைப்பு நம்பியதற்குப் பிரதான காரணமாக இருந்தது – அது தேசிய அரசாங்கமாக இருந்ததுதான். இலங்கையின் அரசியல் வரலாற்றில் முதன்முறையாக இரண்டு பிரதான போட்டிக் கட்சிகளும் இணைந்து ஒரு அரசாங்கத்தை அமைத்துக் கொண்டது அதுதான் முதல்முறை. அதனால், தீர்வு ஒன்றைப் பெற்றுக்கொள்ள முடியும் என கூட்டமைப்பு நம்பியது.  புதிய அரசியலமைப்பு உருவாக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டு, அதற்கு தமது யோசனைகளைப் பெரும்பாலான கட்சிகள் சமர்ப்பித்த போதிலும், ஐ.தே.க. யோசனைகள் எதனையும் முன்வைப்பதை தவிர்த்துக்கொண்டது. இரண்டு பக்கத்தையும் சமாளிப்பதற்கான உபாயம்தான் அது. இந்த நிலையில், வழிநடத்தல் குழுவால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அம்சங்களைத் தமது தீர்வாக வெளிப்படுத்த ரணில் இப்போது முனைகிறார்.

இதனை முன்னெடுப்பதில் தமக்கிருந்த தடை பாராளுமன்றத்தில் பெரும்பான்மை தம்மிடம் இருக்காதததுதான் எனவும் ரணில் கூறுகின்றார். சுமார் நான்கு வருடகாலம் பாராளுமன்றத்தில் இந்தப் பிரச்சினை ஆராயப்பட்டிருக்கின்றது. கூட்டமைப்பின் ஆதரவையும் பெறக்கூடிய நிலையில் பிரதமர் இருந்திருக்கின்றார்.

அதனைவிட எதிரணியில் உள்ள சிலரும் இனநெருக்கடிக்கான தீர்வுக்கு உதவத் தயாராகவே இருந்தார்கள். குறிப்பாக ஜே.வி.பி.. அதனால், வழிநடத்தல் குழுவின் செயற்பாடுகளைத் துரிதப்படுத்தி பாராளுமன்றத்தில் இதனை நிறைவேற்றுவதற்கான செயற்பாடுகளை மேற்கொண்டிருக்க முடியும். அதற்கான துணிச்சல் ரணிலுக்கு இருக்கவில்லை. ஆக, இந்தப் பிரச்சினை நீடிப்பதற்கு ரணிலும் ஒருவகையில் காரணமாக இருந்திருக்கின்றார்.

நான்கு வருடங்களில் கிடைத்த சந்தர்ப்பங்களைத் தவறவிட்டுவிட்டு, இப்போது யாழ்ப்பாணம் வந்து, இரண்டு வருடங்களில் தீர்வு எனவும், வழிநடத்தல் குழுவில் இணக்கம் கண்ட விடயங்கள்தான் எமது கட்சியின் தீர்வுத் திட்டம் என்ற வகையில்  சொல்வது தேர்தலை இலக்காகக் கொண்ட கருத்தாக மட்டுமே இருக்க முடியும்.

தமது தீர்வு இதுதான் என்பதையும், தமிழ் மக்களுடைய அன்றாடப் பிரச்சினைக்கான தீர்வு என்ன என்பதையும் திட்டவட்டமாக கூறக்கூ டியவராக ரணில் இல்லை என்பதை அவரது குருநகர் பேச்சு வெளிப்படுத் துகின்றது. தமிழ் மக்களுக்கான தீர்வொன்றைத் தரக்கூடியவர் அவர்தான் என்பதை வெளிப்படுத்த எந்தளவுக்குத்தான் சுமந்திரன் முற்பட்டாலும், ரணிலின் அணுகுமுறை, “ஆற்றைக் கடக்கும் வரை மட்டும்தான் அண்ணனும் தம்பியும்” என்பதாகவே உள்ளது.

விண்வெளி மையத்தில் பழுதுபார்ப்பு பணிகளில் ரசிய ரோபோ

சர்வதேச விண்வெளி மையத்தில் தங்கியுள்ள வீரர்களுக்கு உதவும் வகையிலும், விண்வெளி நடை மேற்கொண்டு சர்வதேச விண்வெளி மையத்தில் பழுது பார்க்கும் பணியில் ஈடுபடுத்தப்படுவதற்காகவும் ‘பெடர்’ என்ற ரோபோ மனிதனை ரஷ்யா உருவாக்கியுள்ளது.

இதன் உயரம் 5 அடி 11 அங்குலம். எடை 160 கிலோ. இதற்கு ‘ஸ்கைபாட் எப்850’ என்ற அடையாள எண் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ‘பெடர்’ ரோபோவை,  சோயுஸ் எம்-14 விண்கலம் மூலம், கஜகஸ்தானில் உள்ள ஏவுதளத்திலிருந்து ரஷ்யா நேற்று காலை அனுப்பியது. வழக்கமாக சோயுஸ் விண்கலத்தில் விண்வெளி வீரர்கள் அனுப்பப்படுவார்கள்.

இந்த முறை, சோதனை ரோபோ அனுப்பப்பட்டுள்ளது. விண்கலத்தின் பைலட் இருக்கையில் கட்டப்பட்டிருந்த ரோபோ தனது கையில் ரஷ்ய கொடி ஒன்றையும் வைத்திருந்தது. சோயுஸ் விண்கலம் ஏவுதளத்தில் இருந்து புறப்படும்போது, ‘நாம் புறப்படலாம் (லெட்’ஸ் கோ) என ரோபோ கூறியது. இது விண்வெளிக்கு முதலில் சென்ற ரஷ்ய வீரர் யூரி காகரின் கூறிய வார்த்தை. இந்த பெடர் ரோபோவுக்கு இஸ்டாகிராம், டிவிட்டர் கணக்குகளும் உள்ளன. பெடர் ரோபோ விண்வெளியில் கற்றுக்கொள்ளும் விஷயங்களை  இதில் தெரிவிக்கும்.

குறைந்த புவியீர்ப்பு விசையில் எப்படி செயல்படுவது, தண்ணீர் பாட்டீலை எப்படி திறப்பது போன்ற செயல்களை இந்த ரோபோ பரிசோதித்து பார்க்கும். ஸ்கூரு டிரைவர், ஸ்பானர், தீயணைப்பு கருவிகள் ஆகியவற்றை எப்படி பயன்படுத்துவது, சர்வதேச விண்வெளி மையத்தில் மின் வயர்களை இணைப்பது, துண்டிப்பது போன்றவற்றையும் இந்த ரோபா பரிசோதித்து பார்க்கும்.

சர்வதேச விண்வெளி மையத்துக்கு கடந்த மாதம் சென்ற ரஷ்ய வீரர் அலெக்ஸ்சாண்டர் ஸ்கோட்சோவின் மேற்பார்வையில் இந்த ரோபோ பணிகளை மேற்கொள்ளவுள்ளது. மனிதனின் செயல்களை அப்படியே செய்யும் இந்த ரோபோ, விண்வெளி வீரர்களுக்கு பல்வேறு வகையில் உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

விண்வெளி நடை போன்ற ஆபத்தான பணிையும், இந்த ரோபோ மேற்கொள்ளும் என ரஷ்ய விண்வெளி மைய இயக்குனர் பிளாஸன்கோ தெரிவித்தார். விண்வெளியை மிக ஆழமாக ஆராயும் பணிகளுக்கு, இந்த வகை ரோபோக்களை எதிர்காலத்தில் பயன்படுத்த ரஷ்ய விண்வெளித்துறை திட்டமிட்டுள்ளது. விண்வெளிக்கு ரோபோ அனுப்பப்படுவது இது முதல் முறை அல்ல. நாசா கடந்த 2011ல் ‘ரோபோனட்-2’ என்ற ரோபோவை அனுப்பியது. இதில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் இது கடந்த ஆண்டு பூமிக்கு திருப்பி கொண்டுவரப்பட்டது. கடந்த 2013ம் ஆண்டில், ஜப்பானும் ‘கிரோபோ’ என்ற சிறிய ரோபோவை சர்வதேச விண்வெளி மையத்துக்கு அனுப்பியது.

வடக்கு, கிழக்கில் பிரசாரக் கூட்டங்களை நடத்த கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் – சஜித்

சனாதிபதித் தேர்தலில் தான் வேட்பாளராகக் களமிறங்கும் பட்சத்தில் தமிழ்த் தேசியக் கட்சியின் ஆதரவு கட்டாயம் தேவை என்று  ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரான அமைச்சர் சஜித் பிரேமதாஸ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் நேரில் கோரிக்கை விடுத்துள்ளார். எனினும், அந்தக் கோரிக்கைக்குப் சாதகமான பதில் எதுவும் வழங்காமல் இரா.சம்பந்தன் நழுவியுள்ளார் .

அமைச்சர் மங்கள சமரவீரவின் இல்லத்தில் நேற்றுமுன்தினம் இரவு சஜித் பிரேமதாஸவுக்கும் இரா.சம்பந்தனுக்கு இடையில் முக்கியமான சந்திப்பு நடைபெற்றது. அமைச்சர் மங்களவும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டார்.

“எதிர்வரும் சனாதிபதித் தேர்தலில் போட்டியிட நான் தயாராக இருக்கின்றேன். என்னை ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராகக் களமிறக்குமாறு கட்சியின் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிவில் அமைப்பினர் ஆகியோர் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் நேரில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக நான் நியமனம் பெறாத பட்சத்தில் பொதுவேட்பாளராகப் போட்டியிடுமாறும் எனக்குப் பல தரப்பின ராலும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.எனவே, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக அல்லது பொது வேட்பாளராக நான் களமிறங்கினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு எனக்குக் கட்டாயம் தேவை.

வடக்கு, கிழக்கில் மாபெரும் பிரசாரக் கூட்டங்களை நடத்த கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எனக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும். அத்துடன், எனது பிரசாரக் கூட்டங்களில் கூட்டமைப்பின் சகல நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்க வேண்டும்” என்று இந்தச் சந்திப்பின்போது இரா.சம்பந் தனிடம் சஜித் பிரேமதாஸ கோரிக்கை விடுத்தார்.

இதற்குப் பதிலளித்த இரா.சம்பந்தன், “ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்படாத நிலையில் இது குறித்து இப்போதே அவசரப்பட்டு முடிவுகளை எடுக்க முடியாது. தேர்தல் அறிவிப்பு வெளியானாலும் இது தொடர்பில் நான் மட்டும் தனித்து முடிவெடுக்க முடியாது.இந்த விடயம் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் மற்றும் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஆகியவற்றில் பேசித்தான் தீர்க்கமான முடிவு எடுக்க வேண்டும்.அதற்கு முன்னர் சனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் சகல வேட்பாளர்களுடனும் கூட்டமை ப்பின் நாடாளுமன்றக்குழு தனித்தனியே பேச்சுகளை நடத்தும்” என தெரிவித் துள்ளார்.

சீனாவின் போர்க்கப்பலுக்கு பராக்கிரமபாகு என பெயரிட்டார் மைத்திரி

  1. மேற்குலகத்திற்கு எதிரான செயற்பாடுகளை தீவிரப்படுத்திவரும் சிறீலங்கா அரசு தற்போது சீனாவில் இருந்து தனது கடற்படைக்கு கொள்வனவு செய்யப்பட்ட போர்க்கப்பலுக்கு பராக்கிரமபாகு என பெயரிட்டுள்ளது.

பி- 625 என்ற இலக்கத்தைக் கொண்ட இந்த கப்பல் சிறீலங்கா கடற்படையில் நேற்று (22) முதல் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் சிறிலங்கா அரச தலைவர், சிறீலங்காவுக்கான சீனா தூதுவர் மற்றும் முப்படைத் தளபதிகள் உட்பட பெருமளவானோர் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த வாரம் நியமனம் பெற்றவரும், ஐக்கிய நாடுகள் சபை உட்பட மேற்குலக நாடுகளால் போர்க்குற்றவாளி என அடையாளம் காணப்பட்டவருமான லெப். ஜெனரல் சவேந்திர சில்வாவும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டதும், அவரின் பிரசன்னத்தை சீனா வரவேற்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

1991 ஆம் ஆண்டு கட்டப்பட்ட 122 மீற்றர் நீளமும், 2300 தொன் எடையும் கொண்ட இந்த கப்பல், நவீன ஆயுதங்கள் மற்றும் கண்காணிப்புச் சாதனங்களைக் கொண்டதாகும். மேலும் 23 கடல் மைல் வேகத்தில் செல்லும் இந்த கப்பலில் 18 அதிகாரிகள் உட்பட 92 படையினர் பணியாற்றுவார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

நல்லிணக்கச் செயற்பாடுகளில் தமிழ் மக்கள் நம்பிக்கையிழந்து ள்ளனர் – சந்திரகுமார்

இலங்கையில் தற்போது நல்லிணக்கச் செயற்பாடுகளில் தமிழ் மக்கள் நம்பிக்கையிழந்து காணப்படுகின்றனர். புதிய இராணுவத்தளபதியின் நியமனம் நல்லிணக்கத்தின் மீது தமிழ் மக்களின் நம்பிக்கையை தகர்த்துள்ளது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார் பிரித்தானிய உயர்ஸ்தானிகராலய முதன்மை செயலாளரிடம் தெரிவித்துள்ளார்.

இலங்கை்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் முதன்மை செயலாளரும், அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆலோசகருமான அமி ஓ பிரின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் தலைவருமான மு. சந்திரகுமாரை அவரது கிளிநொச்சி அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இன்று காலை காலை பதினொரு மணிக்கு இடம்பெற்ற இச் சந்திப்பில் இலங்கையின் நல்லிணக்கச் செயற்பாடுகளின் நிலைமைகள், ஜனாதிபதி தேர்தல் போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இலங்கையில் தற்போது நல்லிணக்கச் செயற்பாடுகளில் தமிழ் மக்கள் நம்பிக்கையிழந்து காணப்படுகின்றனர். குறிப்பாக நல்லாட்சி அரசின் காலத்தில் தமிழர்களின் தொல்லியல் பிரதேசங்கள் உட்பட பல இடங்களின்ஆக்கிரமிப்புக்கள் அதிகமாக இடம்பெறுகின்றமை, என்பன நல்லிணக்கச் செயற்பாடுகளை கேள்விக்குட்படுத்துகிறது எனத்தான் சுட்டிக்காட்டியதாக தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் விருப்பத்திற்கு மாறாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அலுவலகம் உருவாக்கப்பட்டமை மற்றும் அதன் பிராந்திய அலுவலகங்கள் திறக்கப்படுகின்றமை, அவர்களுக்கான நீதியான தீர்வுகள் காணப்படாமை பற்றியும், குறித்த அலுவலகத்தின் மூலம் இதுவரை ஆரோக்கியமான எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை என்ற விடயம் என்பன நல்லிணக்கத்தின் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்தியருக்கிறது.

இதனை தவிர புதிய இராணுவத்தளபதியின் நியமனமும் நல்லிணக்கத்தின் மீது தமிழ் மக்களின் நம்பிக்கையை தகர்த்திருக்கிறது.

இதனைத் தவிர கடந்த ஆட்சிக் காலத்தில் இலங்கை மீது இருந்த சர்வதேச அழுத்த தற்போது இல்லை எனவும் இலங்கை மீதான சர்வதேச விசாரணையை மேற்கொள்ளும் வகையில் பெயர் குறிப்பிட்டு நீதிபதிகளை நியமிக்கும் அளவுக்கு காணப்பட்ட சர்வதேச அழுத்தம் தற்போது இல்லை என்றும் தான் சுட்டிக்காட்டியதாக தெரிவித்த அவர்,ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் இரண்டு தரப்பினர்கள் மீது நம்பிக்கை இழந்தே காணப்படுகின்றனர். எனவே இச் சந்தர்ப்பத்தில் தமிழ் மக்களின் வாக்குகள் பற்றி எதனையும் கூற முடியாது என்றும் தெரிவித்ததாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார்.

இலங்கையூடாக கோவைக்குள் தீவிரவாதிகள் ஊடுருவல்;பாதுகாப்பு தீவிரம்

இலங்கை ஊடாக ஆறு பயங்கரவாதிகள் தமிழ்நாட்டின் கோயம்புத்தூரிற்குள் ஊருடுவியுள்ளதாக இந்திய புலனாய்வுத் துறைஎச்சரிக்கை விடுத்துள்ளது

தமிழகத்தில் லஷ்கர் இ தொய்பா (எல்இடி) தீவிரவாதிகள் ஆறு பேர் ஊடுருவி இருப்பதாகவும் ஊடுருவிய ஆறு தீவிரவாதிகளும் கோவையில் முகாம் இட்டு இருப்பதாக மத்திய உளவுத்துறை தமிழக அரசை எச்சரித்துள்ளது.

மத்திய உளவுத்துறை எச்சரிக்கையத் தொடர்ந்து தமிழகத்தின் பெரும்பாலான முக்கிய பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மேலும் ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், விமான நிலையங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மத்திய உளவுத்துறை தமிழக அரசுக்கு அனுப்பி இருக்கும் எச்சரிக்கையில், ”இந்த ஆறு தீவிரவாதிகளில் ஒருவர் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர். அவர் பெயர் இளையாஸ் அன்வர். அவர் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த ஆறு தீவிரவாதிகளும் இலங்கை வழியாக தமிழகத்துக்குள் புகுந்துள்ளனர்.

மற்ற 5 பேரும் இலங்கை தமிழ் முஸ்லிம்கள். இவர்கள் தங்களது அடையாளத்தை வெளியே காட்டிக் கொள்ளக் கூடாது என்ற நோக்கத்தில் நெற்றியில் திருநீறு அணிந்து, திலகம் இட்டு இருப்பார்கள். தற்போது இவர்கள் 6 பேரும் கோவையில் முகாமிட்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் கோவையில் முகாமிட்டு இருப்பதாக வந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து அனைத்து இடங்களிலும் உச்சகட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர்களில் சிலருக்கு இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பில் தொடர்பு இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

கோவை மேற்கு மண்டல போலீஸ் ஐஜி கே. பெரியய்யா மேட்டுப்பாளையம் மற்றும் முக்கியப் பகுதிகளில் போலீசார் மேற்கொண்டு வரும் சோதனைகளை பார்வையிட்டார். இவரைத் தொடர்ந்து சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி ஜெயந்த் முரளி கோவைக்கு விரைந்துள்ளார். அங்கு இவர் முன்னணியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேலும் வலுப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.

கோவையில் 2000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கோவை, கேரளா எல்லையிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள் கொண்டு கோவை ரயில் நிலையம், போத்தனூர் ரயில் நிலையம், பீளமேடு ரயில் நிலையம், விமான நிலையம், காந்தி புரம், டவுன் ஹால், திருச்சி சாலை, அவிநாசி சாலை, லாட்ஜ்கள், கோயில்கள் ஆகிய இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது

எழுக தமிழுக்கு மக்களை அணிதிரட்ட யாழ் நகரில் துண்டு பிரசுரம்!!

சர்வதேச போர்குற்ற விசாரணையை நடாத்து,தமிழ் அரசியல் கைதிகள் அனனைவரையும் விடுதலை செய்,வலிந்து காணமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் உடனடியாக விசாரணை செய்,வடக்கு கிழக்கில் இராணுவ மயமாக்கலை நிறுத்து,இடம் பெயர்ந்த அனைவரையும் அவர்களது பாரம்பரிய இடங்களில் குடியமர்த்து  போன்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி எதிர்வரும் 16.09.2019 அன்று நடைபெறவுள்ள எழுக தமிழ் நிகழ்வுக்கு மக்களை அணிதிரட்டும் முகமாக இன்று காலை யாழ் நல்லூர் ஆலய முன்றல் மற்றும் யாழ் பேருந்து தரிப்பிடநிலையங்களில் மக்களுக்கு துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் மற்றும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ்பிரேமசந்திரன் மற்றும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன். தமிழ் மக்கள் பேரவையினர் தமிழ் மக்கள் கூட்டணியின் உறுப்பினர்கள் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் உறுப்பினர்கள் மற்றும் பொது அமைப்புக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Ezlugatamil எழுக தமிழுக்கு மக்களை அணிதிரட்ட யாழ் நகரில் துண்டு பிரசுரம்!!

வைத்தியர் சிவரூபனை அடுத்து மேலும் 3 பேர் கைது

பளை வைத்திய சாலையின் பெறுப்பதிகாரி வைத்தியர் சிவரூபன் கைது செய்யப்பட்டமை தொடர்பில் மேலும் 3 பேர் சிறீலங்கா பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பளை பகுதியை சேர்ந்த வாகனங்கள் திருத்துமிடத்தின் உரிமையாளர் மற்றும் கூலித் தொழிலாளர்கள் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

வைத்தியரிடம் இருந்து மீட்கப்பட்ட பொருட்கள் குறித்து விசாரணை நடத்தவே இவர்கள் கைது செய்யப்பட்டதாக அறியமுடிந்தது.

சிறிலங்கா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள பெண் வேட்பாளர்

எதிர்வரும் சிறிலங்கா ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக பிரதி சொலிஸ்டர் நாயகம் டில்ருக்ஷி டயஸ் போட்டியிடவுள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளராக டில்ருக்ஷி டயஸ் பதவி வகித்ததோடு, அவரது காலப்பகுதியிலேயே கடந்த ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற ஊழல் தொடர்பான அதிகளவு வழக்குகள் விசாரிக்கப்பட்டன என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இதனால் இவரை பலரும் இரும்புப் பெண் என அழைத்தனர்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக தமது பிரதி சொலிஸ்டர் பதவியிலிருந்து 20.08 அன்று இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்க்கட்சி சார்பாக இவர் வேட்பாளராக போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.