சீனாவின் போர்க்கப்பலுக்கு பராக்கிரமபாகு என பெயரிட்டார் மைத்திரி

  1. மேற்குலகத்திற்கு எதிரான செயற்பாடுகளை தீவிரப்படுத்திவரும் சிறீலங்கா அரசு தற்போது சீனாவில் இருந்து தனது கடற்படைக்கு கொள்வனவு செய்யப்பட்ட போர்க்கப்பலுக்கு பராக்கிரமபாகு என பெயரிட்டுள்ளது.

பி- 625 என்ற இலக்கத்தைக் கொண்ட இந்த கப்பல் சிறீலங்கா கடற்படையில் நேற்று (22) முதல் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் சிறிலங்கா அரச தலைவர், சிறீலங்காவுக்கான சீனா தூதுவர் மற்றும் முப்படைத் தளபதிகள் உட்பட பெருமளவானோர் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த வாரம் நியமனம் பெற்றவரும், ஐக்கிய நாடுகள் சபை உட்பட மேற்குலக நாடுகளால் போர்க்குற்றவாளி என அடையாளம் காணப்பட்டவருமான லெப். ஜெனரல் சவேந்திர சில்வாவும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டதும், அவரின் பிரசன்னத்தை சீனா வரவேற்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

1991 ஆம் ஆண்டு கட்டப்பட்ட 122 மீற்றர் நீளமும், 2300 தொன் எடையும் கொண்ட இந்த கப்பல், நவீன ஆயுதங்கள் மற்றும் கண்காணிப்புச் சாதனங்களைக் கொண்டதாகும். மேலும் 23 கடல் மைல் வேகத்தில் செல்லும் இந்த கப்பலில் 18 அதிகாரிகள் உட்பட 92 படையினர் பணியாற்றுவார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.