வேட்பாளராக தெரிவாகும் முன்பேபிரச்சாரத்தை ஆரம்பித்த ரணில் – பூமிகன்

இலங்கையின் சனாதிபதித் தேர்தல் நவம்பர் மாதத்தில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்படும் நிலையில், இலங்கையின் பிரதான கட்சிகளில் ஒன்றான ஐ.தே.க.வுக்குள் பூகம்பம் வெடித்துள்ளது. சனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவா? சஜித் பிரேமதாசவா? என்ற பிரச்சினையில் கட்சி இரண்டாகிப்போயுள்ளது.

மிகப் பெரும் நெருக்கடிக்குள் கட்சி சிக்கித் தவிக்கும் நிலையில், கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் வந்து மூன்று நாட்களாகத் தங்கியிருந்து பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களில் பங்கேற்ற ரணில், அரசியல் தீர்வு குறித்தும் முதல் தடவையாகப் பேசியிருக்கின்றார். கூட்டமைப்பின் பேச்சாளரும், ரணிலின் தீவிர விசுவாசியாகக் கருதப்படுபவருமான சுமந்திரன் இலகுவாகப் பந்தைப் போட்டுக்கொடுக்க ‘ஸிக்ஸர்’ அடிக்க முயன்றுள்ளார் ரணில்.

இன நெருக்கடி விடயத்தில் பிரதான இரண்டு கட்சிகளுமே தமது தீர்வு இதுதான் என்பதைத் திட்டவட்டமாகச் சொல்வதற்கு தயங்கும் நிலைதான் தொடர்கி ன்றது. தீர்வைத் தரக் கூடிய கட்சிகளாகவும், தீர்வைக் குழப்பக் கூடிய கட்சி களாகவும் இரண்டு பிரதான கட்சிகளுமே இருந்தாலும், தமது தீர்வு இதுதான் என்பதை வெளிப்படுத்தும் அரசியல் துணிச்சல் அந்தக் கட்சிகளிடம் இல்லை. இப்போதும், தன்னுடைய தீர்வுத் திட்டம் இதுதான் என்பதை வெளிப்படையாகச் சொல்லாமல், சுற்றிவளைத்து “பாராளுமன்ற வழிநடத்தல் குழுவில் இணக்கம் காணப்பட்ட அம்சங்களே எமது நிலைப்பாடு” என ரணில் கூறியிருக்கின்றார்.

வழிநடத்தல் குழுவில் இணக்கம் காணப்பட்ட விடயம் என்ன என்பதோ, அது தமிழ் மக்களுடைய அபிலாசைகளைத் தீர்க்கக்கூடியவை என்பதோ விவாதத்துக்குரிய விடயங்கள்தான்.

யாழ்ப்பாணத்தில் வைத்து இதனை அறிவிக்கவேண்டிய தேவையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் எழுப்பிய கேள்வி ஒன்றினால்தான் ரணிலுக்கு ஏற்பட்டது. யாழ். குருநகரில் வியாழக்கிழமை இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில், ரணிலின் முன்பாக உரையாற்றிய சுமந்திரன் இந்தக் கேள்வியை எழுப்பினார்.

“உங்களை ஒரு பிரதமராக அல்லாமல், சனாதிபதி வேட்பாளராக அல்லாமல், முக்கியமான கட்சித் தலைவர் என்ற முறையில் ஓர் கேள்வி கேட்க விரும்புகின்றோம். எங்களுடைய அரசியல் அபிலாசைகளுக்கு உங்கள் கட்சியின் நிலைப்பாடு என்ன? அதைத் தெளிவுபடுத்துவீர்களா?” என்பதுதான் சுமந்திரன் எழுப்பிய கேள்வி.

சனாதிபதி வேட்பாளரை ஐ.தே.க. தெரிவு செய்ய முன்னரே ரணிலை சனாதிபதி வேட்பாளர் என சுமந்திரன் அறிவித்துவிட்டார் என்பது கவனிக்கத்தக்கது. இதற்குப் பதிலளித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,

“அதிகாரப் பகிர்வு தொடர்பாக அரசமைப்பு பேரவை தனது அறிக்கையில் வெளிப்படுத்தியுள்ள கொள்கைக், கோட்பாடே தமிழர்களின் எதிர்பார்ப்புத் தொடர்பான ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரே நிலைப்பாடு. இந்த நாட்டில் தமிழினம் இலங்கை சனநாயகக் குடியரசு என்ற கட்டமைப்புக்குள் சமத்துவமாக, கௌரவமாக, சுயமரியாதை யுடன், தங்களின் விடயங்களைத் தாங்களேமுடிவெடுத்துக் கையாண்டு வாழவேண்டும் என்பதே எமது நம்பிக்கை” எனக் குறிப்பிட்டிருக்கின்றார்.

சுமந்திரன் எழுப்பிய கேள்விக்கு பிடி கொடுக்காமல், வழிநடத்தல் குழுவில் எட்டப்பட்ட இணக்கத்தையே தமது தீர்வாக பிரதமர் வெளிப்படுத்தி யிருக்கின்றார்.

அரசியலமைப்பு உருவாக்கத்துக்கான வழிகாட்டல் குழுவின் மூல அறிக்கையில் அதிகாரப் பகிர்வு தொடர்பான கொள்கைகள், கோட்பாடுகள் என்ற தலைப்பில் 16 அம்சத் திட்டம் வரையப்பட்டிருந்தது. பல்வேறு கட்சிகளுடனும் நடந்த கலந்துரையாடல்களின் பின்னர் அரசமைப்புப் பேரைவையாகக் கூடிய பாராளுமன்றத்துக்கு, வழிகாட்டல் குழுவின் இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

அந்த இடைக்கால அறிக்கையில், எல்லாத் தரப்புகளும் ஏற்று இணங்கிக் கொண்ட அதிகாரப் பகிர்வுக்கான அம்சங்கள் என 14 விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றையே தமிழர்களின் அபிலாசைக ளுக்கான தமது கட்சியின் நிலைப்பாடு என ரணில் இப்போது கூறுகின்றார் என்றே எடுத்துக்கொள்ள வேண்டும்.

இவை இணக்கம் காணப்பட்ட விடயங்கள் என ரணில் கூறினாலும், ராஜபக்ச தரப்பு இதற்கு முழுமையான இணக்கத்தை வெளியிட்டிருக்கவில்லை. அத்துடன், தமிழ் மக்களுடைய அபிலாசைகளை முழு அளவில் பூர்த்தி செய்யக் கூடியவையாகவும் இவை இருக்கவில்லை. அதனால்தான் அதன் விபரங்களை வெளிப்படுத்திக் கூறாமல், வெறுமனே இணக்கம் காணப்பட்ட விடயங்கள் எனக் கூறி அனைத்துத் தரப்பையும் திருப்திப்படுத்த ரணில் முற்பட்டிருக்கின்றார்.

2015 இல் பதவிக்கு வந்த மைத்திரி – ரணில் அரசு தீர்வைத் தரும் என கூட்டமைப்பு நம்பியதற்குப் பிரதான காரணமாக இருந்தது – அது தேசிய அரசாங்கமாக இருந்ததுதான். இலங்கையின் அரசியல் வரலாற்றில் முதன்முறையாக இரண்டு பிரதான போட்டிக் கட்சிகளும் இணைந்து ஒரு அரசாங்கத்தை அமைத்துக் கொண்டது அதுதான் முதல்முறை. அதனால், தீர்வு ஒன்றைப் பெற்றுக்கொள்ள முடியும் என கூட்டமைப்பு நம்பியது.  புதிய அரசியலமைப்பு உருவாக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டு, அதற்கு தமது யோசனைகளைப் பெரும்பாலான கட்சிகள் சமர்ப்பித்த போதிலும், ஐ.தே.க. யோசனைகள் எதனையும் முன்வைப்பதை தவிர்த்துக்கொண்டது. இரண்டு பக்கத்தையும் சமாளிப்பதற்கான உபாயம்தான் அது. இந்த நிலையில், வழிநடத்தல் குழுவால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அம்சங்களைத் தமது தீர்வாக வெளிப்படுத்த ரணில் இப்போது முனைகிறார்.

இதனை முன்னெடுப்பதில் தமக்கிருந்த தடை பாராளுமன்றத்தில் பெரும்பான்மை தம்மிடம் இருக்காதததுதான் எனவும் ரணில் கூறுகின்றார். சுமார் நான்கு வருடகாலம் பாராளுமன்றத்தில் இந்தப் பிரச்சினை ஆராயப்பட்டிருக்கின்றது. கூட்டமைப்பின் ஆதரவையும் பெறக்கூடிய நிலையில் பிரதமர் இருந்திருக்கின்றார்.

அதனைவிட எதிரணியில் உள்ள சிலரும் இனநெருக்கடிக்கான தீர்வுக்கு உதவத் தயாராகவே இருந்தார்கள். குறிப்பாக ஜே.வி.பி.. அதனால், வழிநடத்தல் குழுவின் செயற்பாடுகளைத் துரிதப்படுத்தி பாராளுமன்றத்தில் இதனை நிறைவேற்றுவதற்கான செயற்பாடுகளை மேற்கொண்டிருக்க முடியும். அதற்கான துணிச்சல் ரணிலுக்கு இருக்கவில்லை. ஆக, இந்தப் பிரச்சினை நீடிப்பதற்கு ரணிலும் ஒருவகையில் காரணமாக இருந்திருக்கின்றார்.

நான்கு வருடங்களில் கிடைத்த சந்தர்ப்பங்களைத் தவறவிட்டுவிட்டு, இப்போது யாழ்ப்பாணம் வந்து, இரண்டு வருடங்களில் தீர்வு எனவும், வழிநடத்தல் குழுவில் இணக்கம் கண்ட விடயங்கள்தான் எமது கட்சியின் தீர்வுத் திட்டம் என்ற வகையில்  சொல்வது தேர்தலை இலக்காகக் கொண்ட கருத்தாக மட்டுமே இருக்க முடியும்.

தமது தீர்வு இதுதான் என்பதையும், தமிழ் மக்களுடைய அன்றாடப் பிரச்சினைக்கான தீர்வு என்ன என்பதையும் திட்டவட்டமாக கூறக்கூ டியவராக ரணில் இல்லை என்பதை அவரது குருநகர் பேச்சு வெளிப்படுத் துகின்றது. தமிழ் மக்களுக்கான தீர்வொன்றைத் தரக்கூடியவர் அவர்தான் என்பதை வெளிப்படுத்த எந்தளவுக்குத்தான் சுமந்திரன் முற்பட்டாலும், ரணிலின் அணுகுமுறை, “ஆற்றைக் கடக்கும் வரை மட்டும்தான் அண்ணனும் தம்பியும்” என்பதாகவே உள்ளது.