Home Blog Page 3031

ஜப்பானிய விசேட தூதுவர் யசூசி அகாசி இலங்கை வருகை ஏன்?

புரிந்துணர்வு உடன்படிக்கையினூடாக தமிழீழ நடைமுறை அரசை அழித்தொழிக்கும் நயவஞ்சக நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட இணைத்தலைமை நாடுகளின் முக்கியமான அலகாக அப்போது ஜப்பான் விளங்கியது.

அதன் விசேட துதுவராக இந்த யசூசி அகாசி இருந்தார்.

இவர் தமிழின அழிப்புக்கு அனைத்துலக அங்கீகாரத்தை வேண்டி உலகெங்கும் பறந்து திரிந்தவர்,

புலத்தில் தமிழ்த்தேசிய செயற்பாடுகளை முடக்குதல்/ புலிகளின் அனைத்துலக ஆயுத மற்றும் அரசியல் கட்டமைப்புக்களை உடைத்தல்/ தாயகத்தில் புலிகளை மக்களிடம் இருந்து வேறுபடுத்துதல்/ இறுதியாக புலிகளை படைத்துறைரீதியாக அழித்தொழிப்பு செய்தல் ஆகிய நடவடிக்கைகளை முன்னெடுக்கும் ”புரொஜக்ட பெக்கன்” என்ற தமிழர் தேசத்திற்கு எதிரான அனைத்துலக நகர்வின் சூத்திரதாரிகளில் ஒருவர் இவர்.

பிற்பாடு நடந்த இன அழிப்புக்கு வெள்ளையடிக்கவும் தொடரும் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பை மறைக்கவும் களமிறங்கியவர்.

மதரீதியான உடன்பாடுகளும் , வியாபார ஒப்பந்தங்களும் சிங்களத்தை ஜப்பானுடன் பிணைத்து வைத்திருக்கிறது.

தமிழினத்தை அழிக்கும் நோக்குடன் புரிந்துணர்வு உடன்படிக்கை காலத்தில் களமிறங்கிய மேற்குலகம் தாம் விலகிநிற்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த மேற்படி ஜப்பான் – சிங்கள நலன்கள் அடிப்படையில் இந்த யசூசி அகாசியை களம் இறக்கியது.

தற்போது மேற்குலகம் தமது நலன்களுக்காக சிங்களத்தை நெருக்கத் தொடங்கியிருக்கின்றன. ஆனால் சிங்களம் இந்த எதிர்ப்பை எதிர்கொள்ள அல்லது நீர்த்துபோக செய்ய பல காய்களை நகர்த்த தொடங்கியிருக்கிறது.

இந்த இடத்தில்தான் இந்த யசூசி அகாசி முக்கியத்துவம் பெறுகிறார். சிங்களத்திற்காக மேற்குலகுடன் சமரசம் பேசக்கூடிய ஒருவராகவும், வியாபார நலன்களுக்காக அனைத்துலக மட்டத்தில் சிங்களத்தை காக்க கூடிய ஒருவாராகவும் இவர் இருக்கிறார்.

புல்மோட்டையிலுள்ள இல்மனைட் தாதுமணல் ஜப்பானுக்கு சமாதான காலத்திலேயே தாரைவார்க்கப்பட்டுவிட்டது. இப்படி நிறைய கதைகள் இருக்கின்றன.

புவிசார் அரசியல் நெருக்கடிக்குள் சிங்களம் சிக்கியதன் விளைவே இவர் வருகை.

இது எதுவும் தெரியாமல்/ எமக்கான கதவு திறக்கப்படுவது கூடத் தெரியாமல் தமிழ் அரசியல்வாதிகள் இணக்க அரசியலுக்குள் சுருண்டு கிடக்கிறார்கள்.

நன்றி: பரணி கிருஸ்ணரஜனி

அழித்து முடிக்கும் பணபல வர்க்கம், காக்கத் துடிக்கும் பழங்குடி சமூகம்

எங்கள் உயிர் இருக்கும் வரை பிரேசிலின் அமேசன் காட்டினை காப்பாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம் என  பிரேசிலின் முரா பழங்குடி இனத்தவர்கள் தெரிவித்துள்ளதுடன் அதற்கான முயற்சிகளை ஆரம்பித்துள்ளனர்.

பிரேசிலின் முரா பழங்குடியினத்தவர்கள் தங்கள் உடல்களில் நிறங்களை தீட்டியவாறு அம்பு மற்றும் ஏனைய ஆயுதங்களுடன்  காடுகளை அழிப்பவர்களிற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பிரேசிலின் அமேசன் மழைக்காடுகள் அமோஜோனஸ் மாவட்டமாநிலத்தில் சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட முரா பழங்குடியினத்தவர்கள் வாழ்கின்றனர்.

முரா பழங்குடியினத்தை சேர்ந்தவர்கள் தங்கள் கிராமங்களை அண்டிய பகுதிகளில் இடம்பெற்றுள்ள பாரிய காடழிப்புகளை ரொய்ட்டர் செய்தியாளரிடம் காண்பித்துள்ளனர்.

ஒவ்வொரு நாளும் நாங்கள் காடுகள் அழிக்கப்படுவதையும் மரங்கள் வெட்டப்படுவதையும் ஆக்கிரமிப்பையும் பார்க்கின்றோம் அழிவு நெருங்கிவருவதை காண்கின்றோம் என பழங்குடியின தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு நிமிசத்திலும் காடு மரணத்தை தழுவுகின்றது இது குறித்து நாங்கள் கடும் கவலையடைந்துள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.

காலநிலை மாறுவதாக நாங்கள் உணர்கின்றோம் உலகிற்கு காடுகள் அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

முரா கிராமத்திற்கு அருகில் உள்ள அனைத்து பகுதிகளிலும் காடுகள் தீப்பற்றி எரிவதை காணமுடிகின்றது என சர்வதேச செய்தி சேவை தெரிவி;த்துள்ளது.

மரங்களை சட்டவிரோதமாக தறிப்பவர்கiளை எங்களால் தடுக்க முடியவில்லை,என தெரிவிக்கும் பழங்குடியின மக்கள் கடந்த நான்குவருடத்திற்கு முன்னரே இந்த நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன என குறிப்பிடுகின்றனர்.

தங்கள் நிலத்தை அழிப்பவர்களிற்கு எதிராக போராடபோவதாக முரா இனத்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

தனது வாழ்க்கை முழுவதும் தனது மண்ணிலேயே வாழ்ந்துள்ள 73 வயது ரைமுண்டோ முரா இறுதிவரை போராடப்போவதாக தெரிவிக்கின்றார்.இந்த காட்டிற்காக எனது கடைசி சொட்டு இரத்தத்தையும் சிந்த தயார் என அவர் தெரிவித்துள்ளார்.

“இனவழிப்பின் அரசியல்” ; ஈழத்தமிழர் உணரவேண்டிய உண்மைகள் -ந.மாலதி

பேராசியர் ஹேர்மன் மற்றும் பிற்றர்சன் எழுதிய ”இனவழிப்பின் அரசியல்” (Politics of Genocide) என்ற ஆங்கில நூல் 2010 இல் வெளிவந்தது. இதற்கு பேராசிரியர் நோம் சொம்ஸ்கி முன்னுரை எழுதியுள்ளார். நூலாசிரியர்கள் இந்நூலை எழுதி முடித்தபோது 2009 முள்ளிவாய்க்கால் சம்பவம் இடம்பெறவில்லை.இதனால் இதுபற்றி இந்நூலில் குறிப்பிடப்படவில்லை.

(பின்னர் 2012 இல் நூலாசிரியர்கள் , ”Reflections on the Politics of Genocide” என்ற ஒரு ஆக்கத்தை வெளியிட்டார்கள். இவர்கள் கணக்கிலெடுத்த இரண்டு சம்பவங்கள்தான் முள்ளிவாய்க்கால் இனவழிப்பும் லிபியாவில் கடாபி அரசு அழிக்கப்பட்டதும். இந்த இரண்டு கொடூரங்களையும் இந்த ஆக்கத்தில் நூலாசிரியர்கள் ஒப்பிடுகிறார்கள்.இதுபற்றி இவ்வாக்கத்தின் பிற்பகுதியில் குறிப்பிடப்படுகிறது.)

இருந்தாலும் ”இனவழிப்பின் அரசியல்” நூலில் அவர்கள் சொல்வது ஈழத்தமிழர் இனவழிப்புக்கும் அதற்கு பின்னர் நடந்தவற்றிற்கும் மிகவும் பொருந்தும். ஏனெனில் இந்த நூலில் இனவழிப்பு என்ற பதம் பல தசாப்தங்களாக எவ்வாறு கையாளப்பட்டு வருகிறது என்பதை பல ஆதரங்களை வைத்து இவர்கள் காட்டுகிறார்கள்.PB21292 “இனவழிப்பின் அரசியல்” ; ஈழத்தமிழர் உணரவேண்டிய உண்மைகள் -ந.மாலதி

இந்த நூலில் முக்கியமான அட்டவணை ஒன்று உள்ளது. அதன் தமிழாக்கம் இங்கே தரப்படுகிறது. இந்த அட்டவணையின் முதலாவது நிரல் கொடூரங்கள் நடந்த சில இடங்களை குறிக்கிறது. இரண்டாவது நிரல் இங்கு ஏற்பட்ட உயிர்சேத எண்ணிக்கையின் கணிப்பீட்டை காட்டுகிறது. மூன்றாவது நிரல் மேற்குலக அச்சு ஊடகங்கள் இந்த கொடூரங்களை இனவழிப்பு என்று எத்தனை தடவைகள் குறிப்பிட்டுள்ளன என்பதை காட்டுகிறது. நான்காவது நிரல் எத்தனை உயிரிழப்புக்களுக்கு ஒரு தடவை இனவழிப்பு பதம் அச்சு ஊடகங்களால் கையாளப்பட்டிருக்கிறது என்பதை காட்டுகிறது.

இராக்கின் மேல் 2003ம் ஆண்டுக்கு முன்னர் போடப்பட்ட பொருளாதார தடையால் ஏற்பட்ட உயிரிழப்புக்களில், 10,000 உயிரிழப்புகளுக்கு ஒரு தடவையே இனவழிப்பு என்ற பதம் கையாளப்பட்டிருக்கிறது. பொஸ்னியா போரின்போது ஏற்பட்ட உயிரிழப்புக்களில், 80 உயிரிழப்புக்களுக்கு ஒரு தடவை இனவழிப்பு பதம் கையாளப்பட்டிருக்கிறது. கொசோவோ போரின்போது ஏற்பட்ட உயிரிழப்புக்களில், 2 உயிரிழப்புக்களுக்கு ஒருதடவை இனவழிப்பு பதம் கையாளப்பட்டிருக்கிறது. ருவன்டா கொலைகளின் போது ஏற்பட்ட உயிரிழப்புக்களில், 256 உயிரிழப்புக்களுக்கு ஒருதடவை இனவழிப்பு பதம் கையாளப்பட்டிருக்கிறது.

கொடுமைகள் நடந்த இடம் கொல்லப்பட்டோர் எண்ணிக்கையின் கணிப்பு அச்சு ஊடகம் இனவழிப்புஎன்ற சொல்லால் விபரித்த எண்ணிக்கை எத்தனை உயிரிழப்புக்கு ஒரு தரம் இனவழிப்பு என்று விபரித்தது
இராக்கின் மக்கள் மீதான தடைகள் 800,000 80 10,000 ஒரு தடவை
இராக்கிற்கு எதிரான பிரித்தானிய-ஐ-அமெரிக்க போர் 1,000,000 13 76,923 ஒரு தடவை
பொஸ்னியாவின் முஸ்லீம்கள் 33,000 13 69 ஒரு தடவை
கொசோவாவின் அல்பேனியர்கள் 4,000 323 12 ஒரு தடவை
ருவன்டா 800,000 3199 250 ஒரு தடவை
கொங்கோ குடியரசு 5,400,000 17 317,647 ஒரு தடவை
டாஃவூர் 300,000 1172 256 ஒரு தடலை

 

இதையே ஈழத்தமிழர் உயிரிழப்புக்களுக்கும் கணிப்பிடுவதாக இருந்தால்…. உயிரிழப்புக்கள் 70,000 இலிருந்து 140,000 வரையாக கணிப்பிடப்படுகிறது. ஆனால் மேற்கு ஊடகங்கள் இதை இனவழிப்பு என்று பத்து தடவைகள் கூட குறிப்பிட்டிருக்காது. ஆக மேலே குறிப்பிட்ட அட்டவணையில் உள்ள சிலவற்றை போல ஈழத்தமிழர் இனவழிப்பை மறைப்பதும் மிகவும் மோசமாகவே நடக்கிறது என்பது நிரூபிக்கப்படுகிறது.

ஈழத்தமிழர் இனவழிப்பையும் மேற்குலகம் இதை கையாளும் விதத்தையும் புரிந்து கொள்வதற்கு இந்நூலில் சொல்லப்பட்டவை மிகவும் முக்கியமானவை. இத்தரவுகளையும் ஈழத்தமிழர் இனவழிப்பையும் மனதில் வைத்து நூலாசிரியர்கள் சொல்லும் சில கருத்துக்களை நாம் இப்போது பார்க்கலாம்.

“கடந்த சில தசாப்தங்களாக ‘இனவழிப்பு’ என்ற பதத்தில் உள்ள அரசியல் சார்பு மாறாமலே தொடர்கிறது. 1973 எவ்வாறு அது கையாளப்பட்டதோ அவ்வாறே இப்போதும் கையாளப்படுகிறது. இந்த சார்பின் ஊடாக ஐ-அமெரிக்காவின் நண்பர்கள் யார் எதிரிகள் யார் என்பதையே இலகுவாக அடையாளம் காண முடியும்.”

அதே போல நூலாசிரியர்கள் மேலும்,

ஊடகங்களும் இனழிப்பு பற்றி பேசும் புத்திசீவிகளும் இன்னும் சொல்லப்போனால் அரசசார்பற்ற நிறுவனங்களும் கூட இதே சார்பாகவே படுகொலைகளையும் இனவழிப்பையும் பார்க்கிறார்கள். ஐ-அமெரிக்காவின் பூகோள பலத்தை கணக்கிலெடுக்கும்போது ஐரோப்பிய ஒன்றியமும் ஐநாவும் கூட இதையே செய்கின்றன.”

இதிலிருந்து ஈழத்தமிழர் இனவழிப்பு விடயத்தில் யாரெல்லாம் ஐ-அமெரிக்காவின் நண்பர்கள் என்பது தெளிவாகிறதல்லவா?

இவர்களின் நூல் வெளிவந்து இரண்டு ஆண்டுகளில், உலகில் மேலும் இரண்டு மாபெரும் கொடூரங்கள் நடந்தேறின. இவற்றையும் கணக்கிலெடுக்க வேண்டும் என்ற நோக்கில் நூலாசிரியர்கள் 2012 இல், ”Reflections on the Politics of Genocide” என்ற ஒரு ஆக்கத்தை வெளியிட்டார்கள். இவர்கள் கணக்கிலெடுத்த இரண்டு சம்பவங்கள்தான் முள்ளிவாய்க்கால் இனவழிப்பும் லிபியாவில் கடாபி அரசு அழிக்கப்பட்டதும். இந்த இரண்டு கொடூரங்களையும் இந்த ஆக்கத்தில் நூலாசிரியர்கள் ஒப்பிடுகிறார்கள். இந்த ஆக்கத்திலிருந்து சில பகுதிகள்.

லிபியாவும் சிறிலங்காவும்

சிறிலங்கா அரசு நீண்ட காலமாக அது நடாத்திய கொடுமைகளுக்கான தண்டனைகள் எதுவும் அனுபவிக்காமல் திட்டமிடப்பட்ட வகையில் தப்பி வந்திருக்கிறது. முக்கியமாக 2008-2009 இல் அது நடாத்திய கொடூரங்களுக்கான எதுவித தண்டனைகளையும் அது அனுபவிக்கவில்லை. அதே நேரத்தில், ஐநா செயராளர் நாயகமும், ஐநா மனித உரிமை கமிசனரும் லிபியாவின் கடாபியை மிகதுரிதமாக கண்டித்தனர். லிபியாவில் வெளிநாட்டு நிதியுடன் நடாத்தப்பட்ட கிளர்ச்சியை அடக்குவதற்கு கடாபி அரசு எடுத்த நடவடிக்கைகளை சர்வதேச குற்றிவியல் நீதிமன்றம் துரிதமாக விசாரணை செய்து கடாபியையும் அவரது மகனையும் மைத்துனரையும் கைது செய்வதற்கு அசாதரண வேகத்தில் ஆணை பிறப்பித்தது.

நாங்கள் ஒப்பிட்டு பார்த்த இந்த இரண்டு நாட்டின் சம்பவங்களிலும், இது போன்ற இன்னும் பல சம்பவங்களிலும் குறிவைக்கப்பட்ட நாடுகளின் தலைவர்கள் மிக மோசமானவர்களாக சித்திரிக்கப்பட்டார்கள். அதே நேரத்தில் பங்காளி நாடுகளின் தலைவர்களின் கொடுமைகள் கவலைக்கிடமானவையாக சித்தரிக்கப்பட்டு அவர்கள் மென்மையாக கண்டிக்கப்பட்டார்கள் அல்லது அவர்களின் கொடுமைகள் உதாசீனப்படுத்தப்பட்டன அல்லது குறைவாக மதிப்பிடப்பட்டன அல்லது தவிர்க்க முடியாதவையாக சித்தரிக்கப்பட்டன.

இவ்வாறு நூலாசிரயர்கள் இந்த 2012ம் ஆண்டு ஆக்கத்தில் எழுதுகிறார்கள்.

ஈழத்தமிழர்கள்,செயற்பாட்டாளர்கள், தமிழ் அரசியல் தலைமைகள் இந்த சார்புத்தன்மையை புரிந்துகொண்டு செயலாற்ற வேண்டியதன் அவசியத்தை இன்னும் உணர்ந்து கொள்ளாமல், மேற்குலகையும், ஐநாவையும், மேற்குலகில் தங்கி இயங்கும் அரசசார்பற்ற நிறுவனங்களையும் மட்டுமே நம்பி இருப்பதுதான் கவலைக்கிடமானது.

இனவழிப்பை நினைவுகூரும் மியான்மர் அகதிகள்

பர்மிய இனவழிப்பில் இருந்து தப்பித்து பங்களாதேஷுக்கு அடைக்கலம் புகுந்த பல்லாயிரக்கணக்கான ரோஹிங்கியா அகதிகள்
இன்று ஞாயிற்றுக்கிழமை பங்களாதேஷின் காக்ஸ் பஜாரில் உள்ள குட்டுபலோங் முகாமில் அமைதியான பேரணி நடத்தினர்.

மியான்மரில் இருந்து அவர்கள் வெளியேறிய இரண்டாம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் இப்பேரணி இடம்பெற்றது.

“ரோஹிங்கியா இனப்படுகொலை நினைவு நாள்” மற்றும் “எங்கள் குடியுரிமையை நிலைநிறுத்து “.போன்ற பதாதைகளை அவர்கள் தங்கியிருந்தனர்.

இப்பேரணியில் கிட்டத்தட்ட 200,000 ரோஹிங்கியாக்கள் பங்கேற்றதாக காவல்துறை அதிகாரி ஜாகிர் ஹசன் தெரிவித்தார்.

“மியான்மர் எங்கள் நாடு. நாங்கள் ரோஹிங்கியாக்கள்,நாங்கள் எங்கள் உரிமைகளை திரும்பப் பெற விரும்புகிறோம், குடியுரிமை வேண்டும், எங்கள் வீடுகளையும் நிலத்தையும் திரும்பப் பெற விரும்புகிறோம்” என்று ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தின் அமைப்பாளர்களில் ஒருவரான முஹிப் உல்லா தெரிவித்தார்.

“எனது இரு மகன்களின் கொலைக்கு நீதி தேடுவதற்காக நான் இங்கு வந்துள்ளேன். எனது கடைசி மூச்சு வரை நீதியைத் தேடுவேன்” என்று 50 வயதான தயாபா கதுன் ஏ.எஃப்.பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தபோது, ​​அவரது கன்னங்களில் கண்ணீர் உருண்டது.

 

தமிழர்களின் அரசியல் பிரச்சினை தீர்க்கப்படும்வரை சிங்களவர்கள் சுதந்திரத்தை அனுபவிக்க முடியாது – ஸ்ரீதுங்க ஜயசூரிய

வடக்கு- கிழக்கு வாழ் தமிழர்களுக்கு முழுமையான அரசியல் தீர்வு கிடைக்கும்வரை, தெற்கிலுள்ள சிங்களவர்களுக்கு சுதந்திரமும், ஜனநாயகமும் முழுமையாகக் கிடைக்காது என்று ஐக்கிய சோஷலிசக் கட்சி தலைவர் ஸ்ரீதுங்க ஜயசூரிய தெரிவித்தார்.

யாழில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது,

“ஜனாதிபதி வேட்பாளராக தற்போது களமிறங்கியுள்ள எவருக்கும், வடக்கு- கிழக்கு வாழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக அக்கறையில்லை.

அவர்கள் வாக்குகளைப் பெற்றுக்கொள்ளவே இங்கு வருகிறார்களே, ஒழிய அவர்களுக்கு இந்த மக்களின் பிரச்சினைகளைத் தீரக்க வேண்டும் என்ற நோக்கம் கிடையாது.

வடக்கில் யுத்தம் இடம்பெற்றுக்கொண்டிருந்தபோது, இதனை வைத்துதான் அனைவரும் அரசியலில் ஈடுபட்டார்கள்.

சர்வதேசம்வரை இதனை கொண்டு சென்றார்கள். இப்போது யுத்தம் முடிவடைந்து விட்டதால், வடக்கிலுள்ள மக்களின் அனைத்துப் பிரச்சினைகளும் முடிந்து விட்டதாகக் கருதுகிறார்கள்.

ஆனால், வடக்கிலுள்ள மக்களின் எந்தவொரு பிரச்சினையும் இதுவரை தீர்க்கப்படவில்லை என்பதுவே உண்மையாகும்.

யுத்தம் ஆரம்பித்த காலத்திலிருந்து இது நீடிக்கிறது. காணி, கல்வி, தொழில், வீட்டுப் பிரச்சினை என எந்தவொரு அடிப்படைப் பிரச்சினையும் தீர்க்கப்படவில்லை.

முக்கியமாக அவர்களின் உரிமை முழுமையாக வழங்கப்படவில்லை. சிங்கள மக்கள் கூறுவதைப் போல தமிழர்கள் வாழ வேண்டிய அவசியமில்லை.

சிங்களவர்களுக்கு இருப்பதைப் போல, தமிழர்களுக்கும் தனி உரிமையும், சுயகௌரவமும் இருக்கின்றது. இதனை முழுமையாக வழங்க வேண்டும் என்பதுதான் எமது நோக்கமாகும்.

இந்த உரிமையை நாம் வழங்க வேண்டும். அதற்கு மரியாதை செலுத்த வேண்டும். தேசிய வாதம் என்பது பிறப்பிலேயே உருவாவது.

தமிழர்களின் அரசியல் பிரச்சினை முழுமையாகத் தீர்க்கப்படும்வரை தெற்கிலுள்ள சிங்களவர்களுக்கும் இந்நாட்டில் முழுமையான சுதந்திரமும், ஜனநாயகமும் கிடைக்காது என்பதே உண்மையாகும்” என குறிப்பிட்டுள்ளார்.

ஐதேக வினரும் இளைஞர்களை தேடித் தேடி கொலை செய்தவர்களே – மஹிந்த

கடந்த காலங்களில் இளைஞர்களை தேடித் தேடி கொலை செய்தவர்களுக்கும், சித்திரவதை செய்தவர்களுக்கு அன்று முறையான தண்டனை வழங்கியிருந்தால், இந்த அரசாங்கத்தைக் கொண்டு நடாத்த தலைவரும் அமைச்சர்களும்  இருந்திருக்க மாட்டார்கள் என முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.

நேற்று (24) மாலை கொழும்பு தாமரைத் தடாக அரங்கில் இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் இளைஞர் அணியின் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் கூறினார்.

பட்டலந்த சித்திரவதை முகாம் 1989 ஆம் ஆண்டுகளில் அம்பிலிப்பிட்டியவிலிருந்து பட்டலந்தை வரை பல இடங்களில் சித்திரவதை முகாம் இருந்ததை கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்தக் கால கட்டத்தில் தான் மனித உரிமைகள் என்ற வார்த்தையை முதன் முதலில் அறிமுகம் செய்தோம்.

சித்திரவதை பட்டவர்களும் அதற்கு எதிராக குரல் கொடுத்தவர்களும் இன்று ஓரணியில் திரண்டுள்ளனர் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இரண்டு இஸ்ரேலிய உளவு விமானங்கள் லெபனானில் வீழ்ந்தன

லெபனானின் தெற்கு பெய்றூட்டில் உள்ள கிஸ்புல்லா படையினரின் தீவிரமான ஆளுமையுள்ள பகுதியில் இஸ்ரேல் படையினருக்கு சொந்தமான இரண்டு ஆளில்லா உளவு விமானங்கள் வீழ்ந்து நொருக்கியுள்ளதாக றொய்டர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அது மேலும் தெரிவித்தள்ளதாவது:

ஈரானின் ஆதரவுடன் இயங்கிவரும் இந்த குழுவினரின் பகுதியில் இன்று (25) காலை பாரிய வெடிச்சத்தம் கேட்டதாக அந்தப்பகுதி மக்கள் தெரிவித்தள்ளனர். இது உளவு விமானம் தரையில் வீழ்ந்து வெடித்ததால் ஏற்பட்டிருக்கலாம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தமது ஊடக மையத்திற்கு அண்மையாகவே உளவு விமானம் வீழ்ந்துள்ளதாக கிஸ்புல்லா அமைப்பின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதற்கு அண்மையாக உள்ள கட்டிடம் ஒன்று சேதமடைந்துள்ளதுடன், விமானத்தின் பகுதிகளை சிலர் எடுத்துச் செல்வதையும் காணமுடிகின்றது.
விமானம் வீழ்ந்து நொருக்குவதற்கு முன்னர் விமானம் பறக்கும் சத்தம் கேட்டதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

ஒரு விமானம் வீழ்ந்து நொருக்கியதுடன், மற்றையது வானில் வெடித்துச் சிதறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆனால் இஸ்ரேல் அரசு கருத்து எதனையும் கூற மறுத்துவிட்டது. எனினும் லெபனானின் வான்பரப்பில் அடிக்கடி அத்துமீறி பறப்பில் ஈடுபடும் இஸ்ரேல் போர்விமானங்கள் சிரியா மீது தாக்குதல் மேற்கொள்வது இங்கு குறிப்பிடத்தக்கது.

சவேந்திர சில்வாவின் நியமனத்தால் எழுத்த எதிர்ப்பைக் குறைக்கவே அவசரகாலச்சட்டம் நீக்கம்

அவசரகாலச்சட்டம் நீக்கப்பட்டபோதும் முஸ்லீம் தீவிரவாத இயக்கங்கள் மீதான தடை நீஎக்கும் என சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சு நேற்று (24) தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அது மேலும் தெரிவித்துள்ளதாவது:

தேசிய தௌகீத் ஜமாத், ஜமாதி மில்லாது இப்ராகீம் மற்றும் விலாயத், செய்லானி ஆகிய அமைப்புக்கள் மீதான தடை தொடர்ந்து நீடிக்கும்.

இந்த இயக்கங்கள் 1978 ஆம் ஆண்டு சிறீலங்காவில் கொண்டுவரப்பட்ட பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு அமைவாக தடைசெய்யப்பட்டுள்ளதாக அது மேலும் தெரிவித்துள்ளது.

இதனிடையே, அனைத்துலக சமூகத்தை ஏமாற்றும் நோக்கத்துடன் சிறீலங்கா அரசு அவசரகாலச்சட்டத்தை நீக்கியுள்ளதுடன், அதற்கு இணையான அதிகாரங்களை சிறீலங்கா படையினருக்கு வழங்கியுள்ளது.

முப்படையினருக்கும் தாம் அதிக அதிகாரங்களை வழங்குவதாக சிறீலங்கா அரச தலைவர் மைத்திரிபால சிறீசேன கடந்த வியாழக்கிழமை (22) வெளியிட்ட தனது அரச அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

போர்க்குற்றவாளி சவேந்திர சில்வாவின் நியமனத்தால் எழுந்துள்ள எதிர்ப்புக்களைச் சமாளிக்கவே சிறீலங்கா அரசு அவசரகாலச்சட்டத்தை நீக்கியுள்ளது என கருதப்படுகின்றது.

பிரெஞ்சுப் பாராளுமன்றம் முன்பாக நடைபயண ஆரம்பமும் கவனயீர்ப்பும்!

அனைத்துத் தேசிய விடுதலைச் செயற்பாட்டாளர்களுக்கும்! தமிழின விடுதலை உணர்வாளர்கள்களும் விடுக்கும் அன்பான வேண்டுகோள்!

ஓர் இனத்தின் தொடர் வலிகளை சர்வதேசத்திற்கு எடுத்தியம்பி அதற்கு நீதிகேட்டு கடந்த 19 வருடங்களாக போராட்டம் நடாத்திவரும் புலம்வாழ் தமிழீழ மக்களின் போராட்டத்தின் தொடர்ச்சியாக தியாக தீபம் திலீபனின் 32 ஆவது நீங்காத நினைவுநாட்களில் ஈருருளிமூலமும், கால்நடையாகவும் போராட்டங்கள் நடைபெறவுள்ளன.

பாரிசிலிருந்து எதிர் வரும் 28.08.2019 புதன்கிழமை 11.00 மணிக்கு பிரெஞ்சுப்பாராளுமன்றம் முன்பாக நிழற்படக்கண்காட்சியும், தொடர்ந்து 14.00 மணிக்கு நடைபயணப்போராட்டமும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

28.08.2019 – 15.09.2019 ஜெனீவா மனிதவுரிமைகள் சதுக்கம் ( முருகதாசன் திடலில் ) நிறைவடையவுள்ளது. அதன் ஆரம்ப நிகழ்விலும் தொடர்ந்து தமிழ்மக்கள் வாழும் பிரதேசங்களால் இந்த நடைபயணம் இடம் பெறும் போதும் அப்பிரதேச மக்களும் கலந்து இச்சனநாயகப் போராட்டத்திற்கு வலிமை சேர்க்க வேண்டும் எனக்கேட்டுக்கொள்கின்றோம்.

எமது நல்வாழ்வுக்காவும், நம் அடுத்த தலைமுறையினர் சுதந்திரமாகவும், நிம்மதியாகவும் எங்கும் வாழவேண்டும் என்பதையுமே நெஞ்செல்லாம் சுமந்து மண்ணில் விதையான ஆயிரமாயிரம் உயிர்களை எப்பொழுதும் மனதில் நிறுத்துவோம்.

இந்த செய்தியை அனைவருக்கும் பகிரவும், பங்கு கொள்ளவும், பங்களிக்க வைக்கவும்.

நன்றி.

தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு- 06 62 84 6606
தமிழீழ மக்கள் பேரவை- 06 52 72 5867
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சு 0143150421

இந்தோனேசியாவில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஈழ அகதிகள்

இந்தோனேசியாவில் சுமாத்திரா தீவின் மெடான் மாநகரத்தில் ஐக்கிய நாடுகள் அகதிகள் அலுவலகத்தின் முன்னால் பல நாட்டு அகதிகள் ஒன்று திரண்டு 23 நாள் காலை தொடக்கம் மதியம் வரை ஒரு மணிநேரம் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்தப் போராட்டம் இரண்டாவது நாளாக 24.08 அன்றும் தொடர்ந்தது. இரண்டாம் நாள் போராட்டம் காலை 9 மணிமுதல் மதியம் 1 மணிவரை நடைபெற்றது.

ஈழ அகதிகள் தமிழ் மொழியில் பதாதைகளை தாங்கியவாறு போராட்டத்தில் கலந்து கொண்டனர். குறித்த போராட்டத்தில் ஈடுபடும் அகதிகள், மீள் குடியேற்றம் நடைபெறாமல் உள்ளதால் தங்களுக்கான மீள்குடியேற்றத்தை பிரித்தானியா, கனடா, பிரான்ஸ், அவுஸ்திரேலியா போன்ற அபிவிருத்தியடைந்த நாடுகளுகு்கு மேற்கொள்ளுமாறு ஐ.நா. அகதிகள் அமைப்பிற்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபடும் அகதிகள் இந்தோனேசிய அரசு எமக்கு அடைக்கலம் கொடுத்து பாதுகாப்பதற்கு நன்றி தெரிவித்துள்ளனர். அதேபோல் அகதிகளுகு்கான மீள் குடியேற்றத்தை மேற்கொள்ளுமாறு ஐ.நாவிற்கு சர்வதேச நாடுகளுக்கும் அடுத்தம் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்துள்ளனர்.

Indonesia refu இந்தோனேசியாவில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஈழ அகதிகள்தமிழ், ஆங்கிலம், பாகசா இந்தோனேசியா போன்ற மொழிகளில் பதாதைகளை ஈழ அகதிகள் சுமந்து நின்றனர்.

ஜெகரத்தா, சூரபாயா, மகசார், சுமாத்தராவில் மெடான் போன்ற இடங்களில் தொடர்ச்சியாக போராட்டங்கள்நடைபெறுகின்றது. இதற்கு இந்தோனேசிய அரசும் பொலிசாரும் தேவையான ஆதரவை வழங்கி வருகின்றனர்.

மீண்டும் திங்கட்கிழமை காலை 9 மணிக்கு போராட்டம் தொடரப்போகின்றமை குறிப்பிடத்தக்கது.