Home Blog Page 3032

இந்தியாவில் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் ஈழ அகதி

கன்னியாகுமாரி மாவட்டம் நாகர் கோவில் கோட்டார் காவல் நிலையம் முன்பாக ஈழ  அகதி ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

ஜோயி என்ற இந்த அகதி சில ஆண்டுகளுக்கு முன்னர் கன்னியாகுமாரி வந்தார். பல இடங்களிலும் வேலை பார்த்து வந்தார். தற்போது வேலை இல்லாமல் இருக்கின்றார்.

நேற்று (23.08) கன்னியாகுமாரி காவல் நிலையம் சென்று தன்னை கைது செய்யும்படி கூறியுள்ளார். காவல்துறையினர் அவரை சமாதானப்படுத்தி அனுப்பியிருந்தனர்.

ஆனால் அவர் மண்ணெண்ணெய் வாங்கி வந்து உடலில் ஊற்றி தற்கொலை செய்ய முயன்றுள்ளார். அப்போது அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட போது அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என அறிய வந்தது. இதனைத் தொடர்ந்து அவர் நாகர்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ரணிலின் விருந்தில் கலந்து கொண்ட கூட்டமைப்பினர்

நல்லாட்சி அரசாங்கத்தின் 4ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நேற்று அலரிமாளிகையில் நடத்திய விருந்துபசாரத்தில் சஜித் பிரேமதாசா, மங்கள சமரவீர, ஹரின் பெர்னான்டோ மற்றும் புத்திக பத்திரன ஆகியோரைத் தவிர ஏனைய ஐ.தே.க.யின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

அவர்கள் மாத்தறையில் நேற்று நடந்த பேரணியில் கலந்து கொண்டதால், இரவு விருந்தில் கலந்து கொள்ளவில்லையென ஐ.தே.வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த இரவு விருந்திற்கு ஐ.தே.க யிற்கு ஆதரவளிக்கும் கட்சிகள் அனைத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

தமிழ் முற்போக்கு கூட்டணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகியனவும் இந்த இரவு விருந்தில் கலந்து கொண்டனர். தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராசா, த. சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன், இ.துரைரட்ணசிங்கம், ஈ.சரவணபவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

 

சிறீலங்காவில் மத சுதந்திரம் சிறப்பாக உள்ளது – ஐ.நா அதிகாரி

சிறீலங்காவில் எல்லா இன மக்களும் தமது மத சுதந்திரத்தை அனுபவித்து வருவதாகவும், ஏனைய ஆசிய நாடுகளுடன் ஒப்பிடும்போது அது சிறப்பாக உள்ளதாகவும் சிறீலங்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மத மற்றும் நம்பிக்கை தொடர்பான சிறப்பு அதிகாரி அகமட் சகீட் தெரிவித்தள்ளர்.

சிறீலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்தா ராஜபக்சாவை இன்று (24) அவரது அலுவலகத்தில் சந்தித்த போதே சகீட் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இனங்களுக்கு இடையில் நல்லிணக்கங்கள் நன்றாக உள்ளதாகவும், எல்லா இன மக்களும் தமது மத சுதந்திரத்தை அனுபவித்து வருவதாகவும் ஐ.நா அதிகாரி தெரிவித்துள்ளாதாக சிறீலங்கா எதிர்க்கட்சித் தலைவர் மகிந்தா ராஜபக்சா தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 15 ஆம் நாளில் இருந்து 26 ஆம் நாள் வரையிலும் ஐ.நா அதிகாரி சிறீலங்காவுக்கான தனது பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

சிறீலங்கா அரசின் ஆதரவுடன் பௌத்த துறவிகள் பௌத்த மதத்தை தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களில் அத்துமீறி பரப்பி வருவதுடன், தமிழ் மக்களின் நிலங்களையும் அபகரித்து வருகின்றனர்.

ஆனால் ஐ.நா அதிகாரிகள் சிறீலங்கா அரசின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக அவதானிப்புக்களை மேற்கொண்டுவருவதும், தமிழ் மக்களின் பிரச்சனைகளை ஐ.நா அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவருவதில் தமிழ்; அரசியல்வாதிகள் தோல்வி கண்டுவருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

யாழில் அதிகாலை திறக்கப்பட்ட அலுவலகத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம்

யாழில் திறக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து வவுனியாவில் ஆர்ப்பாட்டமொன்றும் முன்னெடுக்கப்பட்டது.

வவுனியாவில் 917ஆவது நாட்களாக தொடர்ந்து போராட்டம் மேற்கொண்டு வரும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளாலேயே இந்தப் போராட்டம் இன்று (சனிக்கிழமை) நடத்தப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் ஓ.எம்.பி அலுவலகம் திறந்து வைக்கப்பட்டதற்கும் பளை வைத்தியசாலையின் வைத்தியர் சிவரூபன் கைது செய்யப்பட்டதற்கும் தமது எதிர்ப்பினைத் தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஒரு மணி நேரம் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை மேற்கொண்டனர்.

வெளியேறு வெளியேறு ஓ.எம்.பி வெளியேறு, விடுதலை செய் விடுதலை செய் மருத்துவரை விடுதலை செய், எங்கே எங்கே எமது உறவுகள் எங்கே? வேண்டும் வேண்டும் எமது உறவுகள் வேண்டும், உறவுகளை மீட்க சர்வதேசம் வேண்டும், போன்ற கோசங்களை எழுப்பியவாறும் அமெரிக்கா, ஜரோப்பிய கொடிகளைத் தாங்கியவாறும் கதறி அழுது போராட்டத்தில் அவர்கள் ஈடுப்பட்டிருந்தனர்.

10 ஆண்டுகளுக்கு மேலாக ஆண்குழந்தையே பிறக்காத கிராமம்

போலந்து நாட்டில்   10 ஆண்டுகளுக்கு மேலாக ஆண்குழந்தையே பிறக்காத கிராமம் சர்வதேச கவனத்தை ஈர்த்து வருகிறது.

போலந்து நாட்டில்  மியெஜ்சே ஆட்ர்ஸான்ஸ்கீ ((Miejsce Odrzanskie)) என்ற கிராமம் கடந்த 10 ஆண்டுகளாக ஆண் குழந்தை பிறப்பையே பார்க்கவில்லை. கடைசியாக அந்த கிராமத்தில் அடுத்தடுத்து பிறந்த குழந்தைகள் பன்னி ரெண்டும் பெண் குழந்தைகளாகவே பிறந்தன. இதற்கு அந்த கிராமத்தின் சூழல் அல்லது மரபணு தொடர்ச்சி காரணமாக இருக்கலாம் எனக் கூறப்பட்ட நிலையில், ஆண் குழந்தை பிறக்க வேண்டி அந்த கிராமத்தில் பல பெண்கள், உணவுப் பழக்கவழக்கம் உள்ளிட்ட பல மாற்றங்களை மேற்கொண்டும் பெண் குழந்தைகள் பிறப்பே அதிகரித்துள்ளது.

மாறாக போலந்தில் 2017-ல் பிறந்த குழந்தைகளில், ஒரு லட்சத்து 96 ஆயிரம் பெண் குழந்தைகளுக்கு 2 லட்சத்து 7 ஆயிரம் ஆண் குழந்தைகள் பிறப்பு விகிதம் இருந்ததை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பாகிஸ்தான் கோரிக்கையை நிராகரித்தது ஐ.நா. பொதுச்செயலாளரர்

நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு யுனிசெப் நல்லெண்ண தூதர் என தரப்பட்ட பதவியைப் பறிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் விடுத்த கோரிக்கையை ஐ.நா.சபை நிராகரித்துள்ளது.

ஐ.நா.வின் அங்கமான யுனிசெப் தொண்டு நிறுவனத்தின் நல்லெண்ண தூதராக பிரியங்கா சோப்ரா நியமனம் செய்யப்பட்டதற்கு பாகிஸ்தான் எதிர்ப்புத் தெரிவித்து அவரை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. பாகிஸ்தானுக்கு எதிரான கருத்துகளை பிரியங்கா கூறி வருவதாகவும் பாகிஸ்தான் அரசு குற்றம் சாட்டியது.

ஆனால் இந்த கோரிக்கையை ஐநா.சபை நிராகரித்து விட்டது. ஐநா.சபையின் முகவர்கள் தங்கள் சொந்த ஆளுமையினால் பேசுகிறார்கள் என்றும் முக்கியப் பிரச்சினைகள் குறித்து தங்கள் கருத்துகளை அவர்கள் வெளியிடும் உரிமை உள்ளது என்றும் ஐநா.சபையின் பொதுச்செயலாளரர் அந்தோணியோ குட்டரஸ் தெரிவித்துள்ளார்.

ஐ.நா.சபை சார்பில் அவர்கள் கருத்துகளை வெளியிட்டால் அதன் நடுநிலையை மீற வேண்டாம் என்று வலியுறுத்துவோம் என்றும் ஐநா.பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.

ராஜபக்ச அணியின் பழைய கஞ்சி வியாபாரம் ஆரம்பம் – மனோ கணேசன்

“இருநாட்களுக்கு முன், சம்பந்தனை சந்தித்த ஐதேக தலைவர் ஒருவர் சம்பந்தனுக்கு, பெடரல் (சமஷ்டி) தர உடன்பட்டு விட்டார். சிங்கள பெளத்த மக்களுக்கு தெரியாமல் இரகசியமாக இந்த வேலை நடக்கிறது” என கனக ஹேரத் என்ற பொதுபெரமுன எம்பி சொல்கிறார்.

இது ராஜபக்ச அணியின் பழைய கஞ்சி இனவாத பிரசார ஆரம்பத்தை காட்டுகிறது.

தமிழ் மக்களுடன், தமிழ் கட்சிகளுடன் பேச வேண்டும், வடகிழக்குக்கு வர வேண்டும், மலையகத்துக்கு வரவேண்டும் என கூறும் கோட்டாபய ரராஜபக்சவுக்கு தெரிந்துதான் இது நடக்கிறதா? அல்லது இது, தமிழ் மக்களின் முழுமையான வெறுப்பை சம்பாதித்து அவரை தோற்கடிக்க செய்யும் உள்வீட்டு சதியா? என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான அமைச்சர் மனோ கணேசன் கேட்கிறார்.

அமைச்சர் மனோ மேலும் கூறியதாவது,

இரண்டு நாள் முன் அமைச்சர் மங்கள சமரவீர வீட்டில் அமைச்சர் சஜித் பிரேமதாச, கூட்டமைப்பு தலைவர் இரா. சம்பந்தன் குழுவினரை சந்தித்தார்.

இது ஒரு இரகசிய சந்திப்பல்ல. இதுபற்றி கடந்த வாரமே அமைச்சர் மங்கள சமரவீர என்னிடம் தெரிவித்தார். நல்ல விஷயம். மனம் விட்டு பேசுங்கள் என நானும் சொன்னேன்.

அமைச்சர் சஜித்துடன் பேசிய சாதாரண பொது விஷயங்கள் பற்றி நேற்று அலரி மாளிகை நிகழ்வில் சந்தித்தபோது தமிழரசு தலைவர் மாவை சேனாதிராசா எம்பி என்னிடம் சொன்னார். எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை எனவும் சொன்னார்.

இரா. சம்பந்தன் ஒரு கட்சி தலைவர். சஜித் பிரேமதாச வேட்பாளராக தயாராகின்ற ஒரு பிரபல அமைச்சர். இந்நிலையில் இவர்கள் இருவரும் சந்தித்து தாராளமாக பேசலாம். இதற்கு யாரும் குறுக்கே நிற்க முடியாது.

இந்நிலையில் இதற்குள் இந்த ஸ்ரீலங்கா பொதுபெரமுனகாரர்கள் இனவாத பிரசாரத்தை ஆரம்பித்து விட்டார்கள். இதைதான் பழைய கஞ்சி என்று நான் நேற்று ஒரு தொலைகாட்சி நிகழ்வில் சொன்னேன்.

இந்த பழம் கஞ்சி இனவாத வியாபாரம், இனி சிங்கள மக்களிடமும் விலை போகாது.

இவர்கள் இப்படி பேசத்தொடங்கினால் சிங்கள வாக்கும் இல்லாமல், தமிழ் வாக்கும் இல்லாமல் கடைசியில் அழிவைதான் தேடப்போகிறார்கள்.

கொடிய பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்படல் வேண்டும் – செ.கஜேந்திரன்

பளை வைத்தியசாலை பொறுப்பதிகாரி வைத்தியர் சிவரூபன் கைது செய்யப்பட்டுள்ளதை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மிகவும் வன்மையாகக் கண்டிப்பதாக, அதன் பொதுச் செயலாளர் செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது-

“வைத்தியர் சிவரூபன் அவர்கள் சட்ட வைத்திய அதிகாரியாக பணியாற்றிய காலப்பகுதியில் அரச படைகளின் துன்புறுத்தல்களினால் ஏற்பட்ட பதிப்புக்களை மூடிமறைப்பதற்கு இடமளிக்காது பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாகவும் நேர்மையாகவும் துணிச்சலுடனும் செயற்பட்டிருந்தார்.

பளை ஆதார வைத்தியசாலையின் பொறுப்பதிகாரியாகப் பொறுப்பேற்ற பின்னர் வைத்தியசாலையில் பொது மக்களுக்குச் சிறந்த சேவையை வழங்க வேண்டும் என்பதற்காக வைத்தியசாலை அபிவிருத்திச் சங்கத்துடனும், பிரதேச மக்களுடனும் இணைந்து சிறப்பாகப் பணியாற்றியவர்.

அவர் மீது பயங்கரவாதக் குற்றச்சாட்டுகளை சுமத்தி, கைது செய்திருப்பதானது அவரைப் பழிவாங்கும் நோக்கம் கொண்ட செயலாகும்.

இலங்கையில் நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச்சட்டமானது, உலகிலுள்ள மிகக்கொடிய சட்டங்களில் ஒன்றாக உள்ளமையை சுட்டிக்காட்டியுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையானது அச்சட்டத்தை நீக்க வேண்டுமென 2015ஆம் ஆண்டிலேயே வலியுறுத்தியிருந்தது. இலங்கை அரசாங்கம் அதற்கு இணங்கியிருந்தது. எனினும் இன்று வரை அச்சட்டம் நீக்கப்படவில்லை என்பதுடன், அதன் கீழ் கைதுகளும் சித்திரவதைகளும் தொடர்ந்த வண்ணமேயுள்ளது.

எனவே, கொடிய பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்படல் வேண்டுமென நாம் வலியுறுத்துவதுடன், வைத்திய கலாநிதி சிவரூபனையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென வலியுறுத்துகின்றோம்” எனவும், அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்கா ஏவுகணை சோதனை செய்ததற்கு சரியான பதிலடி கொடுக்கப்படும் – ரசியத் தலைவர்

அமெரிக்கா ஏவுகணை சோதனை செய்ததற்கு சரியான பதிலடி கொடுக்கப்படும் என ரஷ்யா அதிபர் புடின் கூறியுள்ளார். ஆயுத போட்டியை கட்டுப்படுத்த அமெரிக்காவும், ரஷ்யாவும் கடந்த 1987ம் ஆண்டு நடுத்தர ரக ஏவுகணை தடை ஒப்பந்தத்தை செய்து கொண்டன. இதன்படி, 500 கி.மீ முதல் 5,500 கி.மீ வரை சென்று தாக்கும் ஏவுகணைகளை இரு நாடுகளும் தயாரிக்க கூடாது. ஆனால், இந்த விதிமுறையை ரஷ்யா மீறுவதால், இந்த ஒப்பந்தத்தை அமெரிக்கா சமீபத்தில் முறித்துக் கொண்டது.

இந்நிலையில், 500 கி.மீ தூரம் சென்று தாக்கும் டொமஹாக் ரக புதிய ஏவுகணையை லாஸ் ஏஞ்சல்ஸ் அருகேயுள்ள சான் நிகோலஸ் தீவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சோதித்ததாக அமெரிக்க ராணுவ தலைமையகமாக பென்டகன் அறிவித்தது. இதற்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
இதையடுத்து, மாஸ்கோவில் நடந்த அரசு நிகழ்ச்சி ஒன்றில் நேற்று பேசிய ரஷ்ய அதிபர் புடின், ‘‘ நாம் அதிக பொருள் செலவிலான ஆயுத போட்டியில் ஈடுபடமாட்டோம் என்றாலும், நமது நாட்டையும், மக்களையும் பாதுகாக்க தேவையானதை செய்வோம். அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஏவுகணை சோதனைக்கு தயாராகும்மாறு ராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளேன்,’’ என்றார்.

அமெரிக்கா மீது சீனா வரி விதிப்பு – பதிலடி அமெரிக்க நிறுவனங்களை வெளியேறுமாறு ட்ரம்ப் உத்தரவு

சுமார் 5.25 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான அமெரிக்க சோயா பீன், நிலக்கடலை, கிரீம் உள்ளிட்ட பொருட்களுக்கு இறக்குமதி வரியை சீனா நேற்று அதிரடியாக அதிகரித்தது. கடந்த செப்டம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் சீனா பொருட்களுக்கு அமெரிக்கா இறக்குமதி வரியை அதிகரித்தது. அதற்கு பழி தீர்க்கும் விதமாக சீனா நேற்று அதிரடி காட்டியது.

இந்த தகவல் வெளியானதும் ஆவேசம் அடைந்த ட்ரம்ப் சீனாவில் இருந்து அமெரிக்க நிறுவனங்களை வெளியேற உத்தரவிட்டுள்ளார். எனினும், தனியார் நிறுவனங்களை வெளியேற அதிபர் ட்ரம்ப் எந்த அதிகாரத்தின் கீழ் உத்தரவிடமுடியும் என்பது தெளிவாக இல்லை

அமெரிக்க சீனா இடையே வர்த்தக போர் உச்சகட்டத்தை எட்டி இருப்பதால் சீனாவை விட்டு வெளியேற அமெரிக்க நிறுவனங்களுக்கு அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் ஆத்திரத்தை கொட்டி தீர்த்திருக்கும் ட்ரம்ப், அமெரிக்காவுக்கு சீனா தேவையில்லை என்றும், வெளிப்படையாக கூறினால் சீன பொருள் இல்லாமல் அமெரிக்கா இதைவிட நன்றாகவே இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சீனாவிடம் கடந்த பல ஆண்டுகளாக பல லட்சம் டாலர் மதிப்பிலான வர்த்தகத்தை அமெரிக்கா இழந்திருப்பதாக கூறியுள்ள ட்ரம்ப், சீனாவை முட்டாள் தனமாக நம்பி அமெரிக்கர்கள் இழப்பையே சந்தித்திருப்பதாக தெரிவித்துள்ளார். அமெரிக்கர்களின் நூற்றுக்கணக்கான, லட்சக்கணக்கான டாலர் மதிப்புள்ள அறிவு சார் சொத்துரிமையை சீனா திருடி விட்டதாகவும், அதை தொடர சீனர்கள் விரும்புவதாகவும் ட்ரம்ப் ஆத்திரத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சீனாவின் எண்ணம் ஈடேற விடமாட்டேன் என்றும் அவர் தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ளார். சீனாவில் உள்ள அமெரிக்க நிறுவனங்கள் அங்கிருந்து வெளியேறி மாற்று இடத்தை தேட வேண்டும் என்று கூறியுள்ள ட்ரம்ப், அமெரிக்காவுக்கு திரும்பி வந்ததும் பொருட்களை பரிசீலிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.