அமெரிக்கா மீது சீனா வரி விதிப்பு – பதிலடி அமெரிக்க நிறுவனங்களை வெளியேறுமாறு ட்ரம்ப் உத்தரவு

சுமார் 5.25 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான அமெரிக்க சோயா பீன், நிலக்கடலை, கிரீம் உள்ளிட்ட பொருட்களுக்கு இறக்குமதி வரியை சீனா நேற்று அதிரடியாக அதிகரித்தது. கடந்த செப்டம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் சீனா பொருட்களுக்கு அமெரிக்கா இறக்குமதி வரியை அதிகரித்தது. அதற்கு பழி தீர்க்கும் விதமாக சீனா நேற்று அதிரடி காட்டியது.

இந்த தகவல் வெளியானதும் ஆவேசம் அடைந்த ட்ரம்ப் சீனாவில் இருந்து அமெரிக்க நிறுவனங்களை வெளியேற உத்தரவிட்டுள்ளார். எனினும், தனியார் நிறுவனங்களை வெளியேற அதிபர் ட்ரம்ப் எந்த அதிகாரத்தின் கீழ் உத்தரவிடமுடியும் என்பது தெளிவாக இல்லை

அமெரிக்க சீனா இடையே வர்த்தக போர் உச்சகட்டத்தை எட்டி இருப்பதால் சீனாவை விட்டு வெளியேற அமெரிக்க நிறுவனங்களுக்கு அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் ஆத்திரத்தை கொட்டி தீர்த்திருக்கும் ட்ரம்ப், அமெரிக்காவுக்கு சீனா தேவையில்லை என்றும், வெளிப்படையாக கூறினால் சீன பொருள் இல்லாமல் அமெரிக்கா இதைவிட நன்றாகவே இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சீனாவிடம் கடந்த பல ஆண்டுகளாக பல லட்சம் டாலர் மதிப்பிலான வர்த்தகத்தை அமெரிக்கா இழந்திருப்பதாக கூறியுள்ள ட்ரம்ப், சீனாவை முட்டாள் தனமாக நம்பி அமெரிக்கர்கள் இழப்பையே சந்தித்திருப்பதாக தெரிவித்துள்ளார். அமெரிக்கர்களின் நூற்றுக்கணக்கான, லட்சக்கணக்கான டாலர் மதிப்புள்ள அறிவு சார் சொத்துரிமையை சீனா திருடி விட்டதாகவும், அதை தொடர சீனர்கள் விரும்புவதாகவும் ட்ரம்ப் ஆத்திரத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சீனாவின் எண்ணம் ஈடேற விடமாட்டேன் என்றும் அவர் தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ளார். சீனாவில் உள்ள அமெரிக்க நிறுவனங்கள் அங்கிருந்து வெளியேறி மாற்று இடத்தை தேட வேண்டும் என்று கூறியுள்ள ட்ரம்ப், அமெரிக்காவுக்கு திரும்பி வந்ததும் பொருட்களை பரிசீலிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.