Home Blog Page 2810

உக்ரேனில் உக்கிரமடையும் வல்லரசுப் போட்டி – வேல் தர்மா

உக்ரேனில் அதிபர் தேர்தல் 2019 ஏப்ரல் 21-ம் திகதி நடந்து முடிந்தவுடன் அதை மையப்படுத்தி இரசியாவும் அமெரிக்காவும் அரறவியல் நகர்வுகளை செய்துள்ளன. அரசியல் கற்றுக் குட்டியான புதிய அதிபர் ஜெலென்ஸ்க்கியின் அரசியல் அனுபவம் நகைச்சுவை நாடகத் தொடரில் அதிபராக நடித்தது மட்டுமே. உக்ரேன் தேர்தலில் இரசியாவால் பெரும் பாதிப்புக்கள் எதையும் ஏற்படுத்த முடியவில்லை. ஒரு வல்லரசு நாட்டின் எல்லையில் இருக்கும் நாட்டில் நடக்கும் தேர்தலில் அந்த வல்லரசு நாட்டால் தாக்கத்தை ஏற்படுத்த முடியாவிடில் அந்த நாட்டின் வல்லரசு நிலை கேள்விக் குறியாகிவிடும்.

2014-ம் ஆண்டு இரசியா உக்ரேனின் ஒருபகுதியாக இருந்த கிறிமியாவை தன்னுடன் இணைத்ததைத் தொடர்ந்து உக்ரேன் வல்லரசு நாடுகளின் போட்டிக் களமானது.

இரசியாவிற்கு உக்ரேனின் முக்கியத்துவம்

உக்ரேனும் அதன் ஒரு பகுதியான கிறிமியாவும் சோவியத் ஒன்றியத்தின் ஒரு பகுதியாக இருந்தன. கிறிமியா இரசியாவின் வசம் இல்லாவிடில் இரசியாவிற்கு ஒரு காத்திரமான கடற்படை இல்லை என்ற நிலை உருவாகிவிடும். உக்ரேன் இரசியாவின் எதிரிகளின் கையில் இருந்தால் இரசியா ஒரு வல்லரசு இல்லை என்ற நிலை உருவாகும். சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் உக்ரேன் தனி நாடாக உருவானபோது அதன் ஒரு பகுதியான கிறிமியாவில் இரசியக் கடற்படை இருக்க ஒத்துக் கொள்ளப்பட்டது.

இரசியாவின் மீள் விரிவாக்கம்

இரசியா தனது ஆதிக்க நிலப்பரப்பை விரிவாக்குவதற்கு சுதந்திர நாடுகளின் பொதுநலவாயம் என்னும் கூட்டமைப்பை 1991-ம் ஆண்டின் இறுதியில் உருவாக்கியது. இதில் ஆர்மினியா, அஜர்பைஜான், கஜகஸ்த்தான், கிர்க்கிஸ்த்தான், மோல்டோவா,   தேர்க்மெனிஸ்த்தான்,   தஜிகிஸ்த்தான்,   உஸ்பெக்கிஸ்த்தான், உக்ரேன்ஆகிய நாடுகள் இணைந்தன. 1993-ம் ஆண்டு ஜோர்ஜியாவும் இணைந்து கொண்டது. உக்ரேன், ஜோர்ஜியா, தேர்க்மெனிஸ்த்தான் ஆகிய நாடுகளில் நடந்த ஆட்சி மாற்றத்தால்   அவை சுதந்திர நாடுகளின் பொதுநலவாயத்தில் இருந்து வெளியேறின. சுதந்திர நாடுகளின் பொதுநலவாய நாடுகளிடையே   ஒரு சுதந்திர வர்த்தக உடன்படிக்கை கைச்சாத்திட இரசியா முயற்ச்சித்த போதும் அதற்கு சில நாடுகள் ஒத்துக் கொள்ள மறுத்தன. 2013-ம் ஆண்டு  உக்ரேன், இரசியா, மோல்டோவா, ஆர்மீனியா ஆகிய நாடுகள் ஒரு பொது சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை ஏற்றுக் கொண்டன. தனது எல்லையில் உள்ள நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதைத் தடுக்கவே இரசியா சுதந்திர நாடுகளின் பொதுநலவாயத்தை உருவாக்கியது. ஜோர்ஜியாவும் உக்ரேனும் ஐரோப்பிய ஒன்றியத்திலோ அல்லது நேட்டோவிலோ இணைவதை இரசியா கடுமையாக எதிர்த்தது.

உக்ரேனும் ஜோர்ஜியாவும்

putin உக்ரேனில் உக்கிரமடையும் வல்லரசுப் போட்டி – வேல் தர்மாஜோர்ஜியா நேட்டோவிலும் ஐரோப்பிய ஒன்றியத்திலும் இணைய எடுத்த முயற்ச்சிகளை இரசியா கடுமையாக எதிர்த்தது ஜோர்ஜியாவில் பிரிவினைவாதத்தை ஊக்கிவித்ததுடன் ஜோர்ஜியாமீது 2008-ம் ஆண்டு படையெடுத்து அதன் ஒரு பகுதியைத் தன்னுடன் இணைத்தும் கொண்டது. அதே போல் உக்ரேன் முயற்ச்சித்தபோது 2014-ம் ஆண்டு இரகசியப் படையெடுப்பை மேற்கொண்டு கிறிமியாவைத் தன்னுடன் இணைத்துக் கொண்டது. அதை ஆட்சேபித்து அமெரிக்காவும் மேற்கு ஐரோப்பிய நாடுகளும் இரசியாவிற்கு எதிராக கடுமையான பொருளாதாரத் தடைகளை மேற்கொண்டன.

இரசியாவின் அதிரடி நகர்வு

உக்ரேனில் அதிபர் தேர்தல் முடிந்த பின்னர் புதிதாக தெரிவு செய்யப்பட்ட அதிபர் விளடிமீர் ஜெலென்ஸ்க்கிக்கு இரசியாவிடமிருந்து வாழ்த்துச் செய்தி எதுவும் அனுப்பப்படவில்லை. மாறாக உக்ரேனில் இருக்கும் இரசியர்கள் இரசியக் கடவுட்சீட்டுக்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்ற அறிவித்தலை இரசியா முதலில் வெளியிட்டது. பின்னர் அந்த விண்ணப்பங்கள் துரித வழியில் பரிசீலிக்கப்படும் என இன்னும் ஒரு அறிவித்தலையும் இரசியா வெளிவிட்டது. இந்த அறிவிப்பு புதிய அதிபருக்கு சவால்விடும் செய்தி என அமெரிக்கா கருதுகின்றது. உடனே உக்ரேனுக்கான அமெரிக்கத் தூதுவர் இரசியாவின் செயல் அபத்தமானதும் திடநிலைச்சீர்குலைப்பும் (destabilisation) ஆகும் என்றது. உக்ரேனின் கிழக்குப் பிராந்தியத்தில் உள்ள இரு மாகாணங்களில் இரசியர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றார்கள். இவர்கள் இரசியக் கடவுட்சீட்டுக்களைப் பெற்று இரசியக் குடிமக்கள் ஆகின்றமை இரசியாவிற்கு அம்மாகாணகள் மீதான பிடியை அதிகரிக்கின்றது. அவர்கள் தற்போது செய்து கொண்டிருக்கும் பிரிவினைப் போர் தீவிரமடையும் போது தனது குடிமக்களைப் பாதுகாப்பது என்ற போர்வையில் அம்மாகாணங்களைப் பிரித்து தனிநாடாக செல்வதற்கு ஆதரவளிக்கலாம் அல்லது அவற்றை பிரித்து இரசியாவுடன் இணைக்கலாம்.

இரசிய அதிபர் விளடிமீர் புட்டீனின் கடவுட்சீட்டு அறிவிப்பு அபத்தமானதும் உக்ரேனில் திடநிலைச்சீர்குலைப்புமாகும் (destabilisation) என்றார் உக்ரேனுக்கான அமெரிக்கத் தூதுவர். அதைத் தொடர்ந்து அமெரிக்கா அணுவலுவில் இயங்கக் கூடிய இரண்டு விமானம் தாங்கிக் கப்பல்களை மத்திய தரைக்கடலின் கிழக்குப் பகுதிக்கு அனுப்பியது. அவற்றில் ஒன்றான USS Abraham Lincolnஇல் இருந்து உரையாற்றிய அமெரிக்காவின் இரசியாவிற்கான தூதுவர் அந்த இரண்டு கப்பல்களின் வலிமையும் இரசியாவிற்கு ஒரு அரசுறவியல் செய்தியை (Diplomatic message) இரசியாவிற்கு சொல்கின்றன என எக்காளமிட்டார். உக்ரேனுக்கான அமெரிக்கத் தூதுவர் இரசியா உக்ரேனில் வாழும் இரசியர்களுக்கு கடவுட்சீட்டுக்கள் வழங்குவதை விபரிக்கப் பாவித்த திடநிலைச்சீர்குலைப்பு (destabilisation) என்ற அதே பதத்தை இரசியாவிற்கான அமெரிக்கத் தூதுவரும் பாவித்தார். அவரின் உரையில் கவனிக்கப்பட வேண்டியவை:

  1. ஒவ்வொரு விமானம் தாங்கிக் கப்பலும் ஒரு இலட்சம் தொன் பன்னாட்டு அரசுறவியல் செய்தியை பிரதிநிதித்துவம் செய்கின்றன.
  2. இந்த இரண்டு கப்பலின் வலிமையும் இரசியா அமெரிக்காவுடன் உண்மையான உறவை விரும்பினால் இரசியா உலகெங்கும் தனது திடநிலைச்சீர்குலைப்பு நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்பதை இரசியாவிற்கு உணர்த்துகின்றன.

ஒற்றுமையில்லா நேட்டோவும் நெருக்கடியை விரும்பும் புட்டீனும்

இரசியாவை எப்படிக் கையாள வேண்டும் என்பதில் ஜேர்மனியும் அமெரிக்காவும் முரண்படுகின்றன. இதை இரசியா தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி உக்ரேனில் தனது பிடியை இறுக்கக் கூடாது என்பதை உணர்த்தவே USS Abraham Lincolnஇல் நின்று கொண்டு அமெரிக்கத் தூதுவர் ஹண்டர் தனது அமெரிக்காவின் நிலைப்பாட்டை முழங்கியுள்ளார். நேட்டோ உக்ரேனை மையப்படுத்தி இரசியாவுடன் ஒரு போர் புரிவதையோ அல்லது ஒரு நெருக்கடி நிலை உருவாகுவதையோ விரும்பவில்லை. விளடிமீர் புட்டீன் தலைமையிலான இரசியாவும் போரை விரும்பவில்லை ஆனால் நெருக்கடியான சூழலைப் பெரிதும் விரும்புகின்றது போல் தெரிகின்றது. அதனால்தான் அது உக்ரேனில் தனது பிடியைத் தளர்த்தாமல் மேலும் இறுக்கிக் கொண்டே போகின்றது.

தேர்தலுக்கு முன்னர் இரசியா தொடர்பாக கடுமையான நிலைப்பாட்டில் இல்லாமல் இருந்த புதிய அதிபர் விளடிமீர் ஜெலென்ஸ்க்கி தேர்தலின் பின்னர் இரசிய அதிபர் விளடிமீர் புட்டீனின் கடவுட்சீட்டு அறிவிப்பால் தனது நிலைப்பாட்டைக் கடுமையாக்கியுள்ளார். ஊழல்மிகு சர்வாதிகாரிகளின் ஆட்சியில் அவலப்படும் மக்களுக்கு உக்ரேனியக் கடவுட்சீட்டு வழங்கப்படும் என்றார் ஜெலென்ஸ்க்கி. அவரது தீவிரம் உக்ரேனில் வல்லரசுப் போட்டி தீவிரமடைவதைச் சுட்டிக் காட்டுகின்றது.

யாழ். பல்கலைக்கழகத்தில் புலிகளுக்கு சார்பான செயற்பாடுகள் மேற்கொள்ளக்கூடாது- ஹெட்டியாராச்சி எச்சரிக்கை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சார்பான செயற்பாடுகள் இடம்பெறாமல் இருப்பதை பீடாதிபதிகள் உறுதிப்படுத்த வேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

யாழ். பல்கலைக்கழக பீடாதிபதிகளை நேற்று (07) பலாலி படைத் தலைமையகத்திற்கு அழைத்த படைத் தளபதி இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் மற்றும் சிற்றுண்டிச் சாலை நடத்துனர் ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களின் விடுதலைக்கு உதவுமாறு பல்கலைக்கழக சமூகம் படைத் தலைமை மற்றும் பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்திருந்தது.

இது தொடர்பாக கலந்துரையாடுவதற்கு பலாலி படைத்தலைமையகத்திற்கு வருகை தருமாறு பீடாதிபதிகளுக்கு படைத் தலைமையால் அழைப்பு விடுக்கப்பட்டது. யாழ்.பல்கலைக்கழகத்தில் இந்தச் சந்திப்பை ஒழுங்குபடுத்தியிருக்க முடியும் என்ற நிலையிலும் பலாலி படைத் தலைமையகத்திற்கு அழைக்கப்பட்ட விடயத்தில் பீடாதிபதிகள் அச்சத்தை வெளியிட்டிருந்தனர். எனினும் அங்கு சந்திப்பு இடம்பெற்றது.

கைது செய்யப்பட்ட மாணவர்களின் எதிர்காலத்தினை கருத்திற்கொண்டு அவர்கள் மீதான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என பீடாதிபதிகள் கோரிக்கை விடுத்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த யாழ்ப்பாண மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி, தனது அதிகார வரம்புக்கு உட்பட்ட விடயங்களை செய்து தருவதாக உறுதியளித்தார்.

அத்துடன்  யாழ்ப்பாண பல்கலைக்கழகம் மட்டுமல்லாது இலங்கையில் அனைத்துப் பல்கலைக் கழகங்களிலும் தேடுதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அதேபோன்றதொரு தேடுதலே யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் மேற்கொள்ளப்பட்டது. இந்தத் தேடுதல் நடவடிக்கை முன்னறிவுப்புடனேயே நடத்தப்பட்டது. ஆகவே அங்கு வைக்கப்பட்டிருந்த ஒளிப்படங்கள், பதாகைகளை அகற்றியிருக்க உங்களால் முடியவில்லையா?யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் எதிர்காலத்தில் இவ்வாறான சட்டத்துக்குப் புறம்பான விடயங்கள் இடம்பெறாது என உறுதிப்படுத்தப்படவேண்டும்.என்றார்.

கிளிநொச்சியில் துப்பாக்கி மற்றும் வாள்களுடன் ஒருவர் கைது!

கிளிநொச்சி- பூநகரி, முட்கொம்பன் பிரதேசத்தில் (இடியன்) வகை  உள்ளூர் துப்பாக்கிகள் ஏகே ரவைகள் மற்றும் வாள்கள் உள்ளிட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் சந்தேகத்தின் பேரில் ஒருவரை பூநகரி பொலிஸார் இன்று (செவ்வாய்க்கிழமை) கைது செய்துள்ளனர்.

குறித்த பிரதேசத்தில் பொலிஸாரும் படையினரும் இணைந்து திடீர் சோதனை நடவடிக்கையின் இன்று ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது அப்பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து துப்பாக்கிகள், ரவைகள் மற்றும் சந்தேகத்திற்கிடமான பல பொருட்களை அவர்கள் மீட்டுள்ளனர்.

பின்னர் அவ்வீட்டிலிருந்தவரையும் சந்தேகத்தின் பேரில் கைது செய்து பொலிஸார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.

மேலும் இந்த சுற்றிவளைப்பின்போது சந்தேகத்திற்கிடமான மோட்டார் சைக்கிள் மற்றும் மோட்டார் இலக்க தகடு ஆகியவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பூநகரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாடசாலைகள் கடும் பாதுகாப்புக்கு மத்தியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன

இரண்டாம் தவணைக்காக இன்று(06)  பாடசாலைகள்  கடும் பாதுகாப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகளுக்கு மத்தியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சியில் ஆரம்ப பிரிவு பாடசாலைகளை தவிர ஏனைய 64 பாடசாலைகளும்  இரண்டாம் தவணைக் கல்விச் செயற்பாடுகளுக்காக ஆரம்பிக்கப்பட்டது. மாணவர்கள் பாடசாலைகளின்  நுழைவாயிலில் அனுமதிக்கப்பட்ட பெற்றோர், பொலீஸ், சிவில் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர்கள், இராணுவத்தினர் ஆகியோர் இணைந்து கடும் சோதனைகளுக்கு பின்னர் உள்ளே அனுமதிக்கப்பட்டார்கள்.

இதன் போது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் புத்தக பைகள் சோதனைக்குள்ளாக்கப்பட்டன. அத்தோடு பாடசாலைகள் விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினரின் சோதனைகளுக்கும் உள்ளாக்கப்பட்டது. இச்சோதனை நடவடிக்கைகளின் போது மோம்ப நாய்களும் பயன்படுத்தப்பட்டன.

மாணவர்களின் வரவு ஜம்பது வீதமாக காணப்பட்டுள்ளது என்றும் வழமையான மனநிலையில் மாணவர்கள் சமூகம் அளித்துள்ளனர் என்றும் கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் ஜோன் குயின்ரஸ் தெரிவித்துள்ளார்.

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் விவகாரத்தில் ஐ.நாவின் தலையீட்டைக்கோரும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !

சிறிலங்கா அரசின் தடுப்புக்காவில் வைக்கப்பட்டுள்ள யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் விவகாரத்தில், ஐ.நா மனித உரிமைச்சபையின் கண்காணிப்பினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் கோரியுள்ளார்.

இது தொடர்பில் ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளர் மிசெல் பசேலே அம்மையார் அவர்களுக்கு எழுத்தியுள்ள கடிதத்தில், பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்குவதாக சிறிலங்கா அரசாங்கம் பல தடவைகள் ஐ.நாவுக்கும் அனைத்துலக சமூகத்துக்கும் வாக்குறுதி அளித்திருந்த நிலையில், அதற்கு மாறாக கைது செய்யப்பட்டுள்ள யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டத்தினை ஏவிவிடுவதற்கான நிலைமை அங்கு காணப்படுகின்றது எனத் தெரிவித்துள்ளார்.

இலங்கைத்தீவின் தற்போதைய நிலைமைகளில் சிறிலங்கா அரசினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அவசரகால நிலையென்பது, தமிழர்களுக்கு எதிராக துஸ்பிரயோகம் செய்யப்படுகின்ற நிலைமை அங்கு காணப்படுகின்றது.

இந்நிலையில் ஐ.நா ஆணையாளர் அவர்கள் இவ்விவகாரத்தில் தீவிரகண்காணிப்பு கொள்ள வேண்டும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தனது கடிதத்தில் கோரியுள்ளார்.

பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வழக்கின் தீர்ப்பு வெளியாகியது , பிள்ளையார் ஆலயம் அமைந்துள்ள இடத்தில் தடையின்றி வழிபாடுகளை மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதி !

முல்லைத்தீவு பழையசெம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தை அடாத்தாக பிடித்து பௌத்த மதகுரு ஒருவர்  விகாரை அமைந்துள்ளமை தொடர்பான வழக்கு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் நடைபெற்றுவரும் நிலையில் இன்றையதினம் குறித்த வழக்கில் தீர்ப்பு வெளியாகியுள்ளது .

அதாவது அடாத்தாக பௌத்த பிக்குவால் விகாரை அமைக்கப்பட்டுள்ள பிரதேசத்தில் ஒரு பிள்ளையார் ஆலயம் மிக நீண்டகாலமாக இருந்துள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் குறித்த பிள்ளையார் ஆலயத்தில் தடைகள் எதுவும் அற்றநிலையில் வழிபாடுகளை மேற்கொள்ளவும் அபிவிருத்திகளை உரிய உள்ளுராட்ச்சி திணைக்களகளின்  அனுமதிகளுடன் மேற்கொள்ளவும் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்று அனுமதியளித்து தீர்ப்புவழங்கியுள்ளது .

முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் நீதிபதி எஸ் .லெனின்குமார் முன்னிலையில் இடம்பெற்ற இந்த வழக்கிலேயே இவ்வாறு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கில் முதலாம் தரப்பாக பிள்ளையார் ஆலய வளவில் விகாரை அமைத்துள்ள குருகந்த ரஜமஹா விகாரையின் விகாராதிபதியும் இரண்டாம் தரப்பாக நீராவியடி பிள்ளையார் ஆலய நிர்வாகத்தினரும் மன்றில் முன்னிலையாகியிருந்தனர் .

இதில் பிள்ளையார் ஆலயம் சார்பாக சிரேஷ்ட சட்டத்தரணி அன்டன் புனிதநாயகம் உள்ளிட்ட முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தை சேர்ந்த சட்டதரணிகள் தமது வாதங்களை முன்வைத்தனர். மிக நீண்டநேரம் இடம்பெற்ற இந்த வழக்கில் இருதரப்பு வாதங்களையும் செவிமடுத்த நீதிபதி முதலாம் தரப்பான பௌத்த மதகுரு இரண்டாம் தரப்பான  பிள்ளையார் ஆலயத்தினரின் வழிபாட்டுக்கு எந்தவிதமான தடையையும் ஏற்படுத்தக்கூடாது எனவும் கட்டுமான வேலைகளின்போது உரிய அனுமதிகளை உள்ளூராட்சி திணைக்களங்களில் பெற்று மேற்கொள்ளவேண்டும் எனவும் அதேபோல் இரண்டாம் தரப்பான பிள்ளையார் ஆலயதரப்பினர் வழிபாடுகளை சுயமாக தடைகளின்றி மேற்கொள்ளமுடியும் எனவும் கட்டுமானங்களை மேற்கொள்ளவிருந்தால் உரிய அனுமதிகளை பெற்று மேற்கொள்ளமுடியும் எனவும் ஏற்கனவே நீராவியடி பிள்ளையார் ஆலயம் என இருந்த பெயர்பலகையை மாற்றி கணதேவி தேவாலயம் என பௌத்த பிக்கு பெயர் பலகையை நாட்டியிருந்தார் .ஆகவே அது வழமையாக இருந்ததைப்போன்று நீராவியடி பிள்ளையார் ஆலயம் என மீண்டும் அமைக்கப்படவேண்டும் எனவும்  அதனை உறுதிசெய்து மன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் நீதிபதி பொலிசாருக்கு கட்டளையிடடார் .

 மேலும் இரண்டு தரப்பும் தலா இரண்டுலட்ஷம் ரூபா பெறுமதியான பிணைமுறியின் செல்லலாம் எனவும் மன்று கட்டளையிட்டது . 

 இந்த வழக்கு கடந்த 4 மாதங்களாக முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் நடைபெற்று வந்த நிலையில் இன்று தீர்ப்புவழங்கப்பட்டுள்ளது . பழையச்செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் வருடாந்த பொங்கல் உற்சவத்தை மேற்கொள்ளும் பொருட்டு கடந்த 14.01 .2019 அன்று செம்மலை கிராம மக்கள் சென்றவேளை குறித்த பிள்ளையார் ஆலய வளவை அபகரித்து குருகந்த ரஜமஹா விகாரை என்ற விகாரையையும் பிரம்மாண்ட புத்தர் சிலையையும் அமைத்துள்ள பௌத்த பிக்குவும் தென்பகுதியிலிருந்து வருகைதந்த ஒரு குழுவினரும் குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தனர் . இதனை தொடர்ந்து பொலிஸார்  தலையிட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்ததோடு சமாதான குலைவு ஏற்பட்ட்தாக தெரிவித்து வழக்கு ஒன்றை முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் தாக்கல் செய்திருந்தனர் .

 அதன் பிரகாரம் விசாரணைகள் பல்வேறுகட்ட்மாக இடம்பெற்றுவந்தநிலையில் குறித்த பிரதேசம் தொல்லியல் பிரதேசம் எனவும் அங்கே ஒரு விகாரை இருந்ததாகவும்  தொல்லியல் திணைக்களத்தால் மன்றுக்கு தெரியப்படுத்தப்பட்டது . இதன் தொடர்சியாக தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் மன்றில் முன்னிலையாகி குறித்த பகுதி தொல்லியல் பிரதேசம் எனவும் ஆனால் விகாரை அமைப்பதற்கான அனுமதியை தாம் வழங்கவில்லை எனவும் மாறாக சிபாரிசை வழங்க முடியும்எனவும்  தெரிவித்திருந்தார் .  மேலும் இப்பகுதியில் ஒரு பிள்ளையார் ஆலயம் மிக நீண்டகாலமாக இருந்துவருகின்றமை தொடர்பில் பிள்ளையார் ஆலய தரப்பால் பல சான்றாதாரங்கள் மன்றில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது 

மேலும் இது தொடர்பில் சிரேஸ்ட சட்டவளரான அன்ரன் புனிதநாயகம் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், இன்றைய தினம் நீராவியடிப் பிள்ளையார் கோவில் தொடர்பான கட்டளை மன்றினால் வழங்கப்பட்டது.

குறித்த கட்டளையின் பிரகாரம் முதலாம் இரண்டாம் பகுதியினர் பிணை முறி ஒன்றினை நிறைவேற்றிச் செல்லுமாறு மன்று கட்டளை ஒன்றைப் பிறப்பித்திருந்தது.

முதலாம் பகுதியினர் குறித்த இரண்டாம் பகுதியினரின் வழிபாட்டிற்கு எந்தவித இடையூறையும் செய்யக்கூடாதெனவும், ஏதாவது அபிவிருத்தி வேலைகள் செய்வதாக இருந்தால் உரிய உள்ளூராட்சித் திணைக்களம், உள்ளூராட்சிச் சட்டங்களுக்கு அமைவாக கட்டடங்களை அமைக்கவேண்டும் எனவும்.

அதேபோல் இரண்டாம் பகுதியினர் தங்களுடைய வழிபாடுகளை சுயமாக செய்ய முடியுமெனவும், இரண்டாம் பகுதியினருடைய வழிபாட்டிற்கு முதலாம் பகுதியினர் எந்தவிதமான இடையூறும் செய்யக்கூடாது எனவும்

இரண்டாம் பகுதியினர் ஏதாவது, அதாவது நீராவியடிப் பிள்ளையார் கோவிலைச்சேர்ந்த பரிபாலன சபையினர் அந்தக் கோவிலில் ஏதாவது கட்டடங்கள் கட்டுவதானால் உரிய அனுமதிகளைப்பெற்று தங்களுடைய வேலைகளைச் செய்யலாம் எனவும், இரண்டு தரப்பினரும் இன்றைய நாள் தலா இரண்டு இலட்சம் உரூபாய் பெறுமதியான பிணை முறியில் செல்லுமாறும் நீதிமன்று கட்டளையிட்டது.

இந்தப் பிணைமுறியின் நிபந்தனைகளை மீறினால் நீதிமன்று உரிய தண்டனை வழங்குமெனவும் மன்று கட்டளையிட்டது.

இன்றைய தினம் குறித்த கட்டளையானது முதலாம் பகுதியினருக்கு சிங்கள மொழியிலே வழங்கப்பட்டதன் பின்னர் இரு பகுதியினரையும் வழக்கேட்டிலும், குறித்த பிணை முறியிலும் கையெழுத்துட்டுமாறும் மன்றுகட்டளையிட்டது. என்றார்.

 

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளில் கைகளில் கறுப்புப்பட்டி அணிவோம்! ஆளுக்கொரு மரம் நாட்டுவோம் !! – பிரதமர் வி.உருத்ரகுமாரன்

பெரும் இனவழிப்பொன்றின் ஊடாக தமிழர் தேசத்தை ஆக்கிரமிப்புச் செய்த, மே 18 முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் கூட்டுபெருந்துயரின் நாளாகிய தமிழீத் தேசிய துக்க நாளில், இரண்டு செயற்பாடுகளை தமிழர்கள் முன்னெடுக்க வேண்டுமென நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அறைகூவல் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு  நிகழ்த்தப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இந்தப் பத்து ஆண்டுகளிலும் தமிழ் மக்களின் சுதந்திர உணர்வை நீர்த்துப் போகச் செய்யச் சிங்களப்பேரினவாதம் பகீரத முயற்சி எடுத்த போதும் அவை வெற்றியடையவில்லை.

தமிழ் மக்கள் தமது சுதந்திர உணர்வை முழுமையாக வெளிப்படுத்தப் போதிய அரசியல் வெளி தமிழர் தாயகத்தில் இல்லாத போதும் தமக்குக் கிடைக்கக்கூடிய அனைத்துவகை வாய்ப்புகளையும் பயன்படுத்தித் தாயகத்தில் வாழும் தமிழ் மக்கள் தமது உரிமைக்குரலை வெளிப்படுத்திக் கொண்டவாறுதான் உள்ளனர்.

முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்புக்கு நீதி கோரும் போராட்டத்தை தமிழ் மக்கள் ஏற்கனவே இருக்கும் அனைத்துலக அரங்குகளில் கடந்த 10 ஆண்டுகளாகத் தொடர்ந்து கொண்டிருக்கின்றனர்.

அவ்வரங்குகள் பலவற்றில் முடிவுகளை எடுக்கும் அதிகாரங்கள் நாடுகளின் வசமே இருப்பதால், அரசற்ற தமிழ்மக்கள் அங்கு நீதியினைப் பெறுவது இலகுவானதொரு விடயமாக இருக்கப்போவதில்லை என்பது புரிகின்றது.எனவே நீதிக்கான எமது போராட்டத்திற்காக புதிய போர்க்களங்களை உருவாக்குவது அத்தியாவசியமானதாகும்.

மாறிவரும் உலக சட்ட நடைமுறை அதற்கான வாய்ப்புக்களை தருகின்றது. தற்போது சர்வதேச சட்டங்களில் அங்கீகரிக்கப்பட்டுவரும் ‘உண்மைகளை அறியும்’; உரிமையின் அடிப்படையிலும் right to the truth), ‘தெரிந்து கொள்வதற்கான உரிமையின்’அடிப்படையிலும் (right to know) பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியினை நிலைநாட்டும் பொருட்டு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தால் Victim Driven International Justice (VDIJ )  என்னும் நீதிக்கான முன்முயற்சி ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. இம் முன்முயற்சி நாம் புதிதாகத் திறக்கவுள்ள நீதிக்கான போர்க்களங்களில் ஓர் அம்சமாகும்.முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு தந்த ஆழ்ந்த சோகம் நெஞ்சக்கூடெங்கும் நிரம்பியிருக்க தமிழின அழிப்பின் 10வது ஆண்டினை உணர்வெழுச்சியுடன் தமிழ் மக்கள் நினைவேந்தும் நாட்களை சிறிலங்கா அரசு அனுமதிக்காது தடுக்கக்கூடிய நிலைகளும் தற்போது உருவாகியிருக்கின்றன.

இலங்கைத்தீவில் நிகழ்த்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களின் பின்விளைவாகப் பாதுகாப்புக் காரணங்களை முன்னிறுத்தி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு இடையூறு விளைவிக்கப்படலாம். எத்தகைய தடைகள் வந்தாலும் ஈழத்தமிழ் தாயகத்திலும் உலகில் தமிழர்கள் வாழும் பகுதியெங்கும் முள்ளிவாய்க்கால் நினைவுகள் மக்களால் நினைவுகூரப்பட்டே ஆகும்.முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பையும் தமிழர் துயரத்தின் வெளிப்பாடாகப் பிரகடனப்படுத்தப்பட்ட தமிழீழத் தேசிய துக்க நாளையும் அடையாளப்படுத்தும் வகையில் இரண்டு செயல்களை உலகில் வாழும் தமிழ் மக்கள் அனைவரும் செய்ய வேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பில் நாம் தோழமையுடன் வேண்டுகிறோம்.

1. மே 18 – தமிழீழத் தேசிய துக்க நாளன்று, ஈழத்தமிழர் தாயகம், தமிழகம், மற்றும் உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் தமது கைகளில் கறுப்புப் பட்டி அணிந்து முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பையும் தமிழர் துயரத்தினையும் வெளிப்படுத்த வேண்டும்.

2. முள்ளிவாய்க்கால் நினைவுகளை நீடித்து நிலைக்கச் செய்யும் வகையிலும், உலகச் சுற்றுச் சூழலை மேம்படுத்த உதவும் வகையிலும் நாம் ஆளுக்கொரு மரத்தை இக் காலப்பகுதியில் நாட்ட வேண்டும்.  இதனைத் தமிழ் மக்கள் தாம் வாழும் ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு முள்ளிவாய்க்கால் நினைவுக்காலத்திலும் மேற்கொள்ள வேண்டும். நாம் நாட்டும் ஒவ்வொரு மரக்கன்றின் ஊடாகவும் நாம் தமிழின அழிப்பில் மாண்டுபோன உறவுகளை நினைவு கூர வேண்டும்.

என பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈஸ்ரர் தாக்குதலும் அதன் பின்னுள்ள சக்திகளும்

ஈஸ்ரர் தினத்தன்று தேவாலயங்களிலும் உல்லாசப் பயணிகள் பெருமளவில் தங்குகின்ற விடுதிகளிலும் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களும் அதனால் ஏற்பட்ட மனித இழப்புக்களும் அவலங்களும் உள்நாட்டிலும் சர்வதேச ரீதியாகவும் பேரதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளன. ஒரு வாரகாலமாகியும் அதனையொட்டிய தொடர்ச்சியான சம்பவங்கள் இன்று வரை இடம்பெற்ற வண்ணமே இருக்கின்றன. இலங்கைத் தீவில் பத்தாண்டுகளுக்கு பின்னர் நிகழ்ந்த பாரிய சம்பவங்களாகவும் வரலாற்றில் இது பதிவாகி உள்ளது. இந்தச் சம்வங்களும் அதையொட்டி வெளிவந்து கொண்டிருக்கின்ற விடயங்களும் அதிக கவனயீர்ப்பையும் பெருத்த கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்பியவாறே உள்ளன.

கிறீஸ்தவர்களும் குறிப்பாக தமிழ் கிறீஸ்தவர்களும் வெளிநாட்டு உல்லாசப் பயணிகளுமே தாக்குதலாளிகளின் முக்கியமான இலக்குகளாக இருந்துள்ளனர். அதிகமான உயிர்ச் சேதங்களை ஏற்படுத்தக் கூடிய வகையில் தாக்குதலுக்கு இலக்கானவர்களின் மையப்பகுதிக்கு சென்று மனித வெடிகுண்டுகளால் தாக்கி அழிக்கும் அளவுக்கு தாக்குதலாளிகளின் நோக்கம் இருந்துள்ளதை தாக்குதல் சம்பவங்களும் அதற்கான அவர்களது உத்திகளும் வெளிப்படுத்தி உள்ளன. அம்புகளை விட எய்தவர்கள் யார் என்பது தொடர்பில் உரிமை கோரல்களும் வெளித்தெரிகின்ற வெளித்தெரியாத சக்திகளும் இதன் பின்னணியில் இருந்துள்ளார்கள் என்பதை ஆழமான பார்வை உள்ளவர்கள் புரிந்து கொள்வார்கள்.

இன்றைய நவீன உலக இயங்கியல் என்பது உலகப் புலனாய்வாளர்களின் கைகளிலேயே தங்கி இருக்கின்றது. இரண்டு வாரங்களுக்கு முன்பிருந்தே புலனாய்வு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்தும் அவை உரியவர்களுக்கு தெரியப்படுத்தப்படாமல் இருந்ததும் உரிய முன்னெச்சரிக்கை உடனான ஏற்பாடுகள் இடம்பெறாமல் இருந்ததும் பலத்த சந்தேகங்களையும் மக்களுக்கான அரசாங்கமாக இந்த அரசாங்கம் தொடர முடியுமா என்ற பலமான கேள்வியையும் எழுப்பி உள்ளது. முப்படைகளையும் தன்னுடைய கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கின்ற சிறிலங்காவின் சனாதிபதியும் மற்றும் பிரதம மந்திரியும் தங்களுக்கே இந்த விடயம் தெரியப்படுத்தப்படவில்லை எனப் பகிரங்கமாக வெளிப்படுத்தி உள்ளமையானது ஏளனத்தையும் அப்படியாயின் சிறீலங்காவின் புலனாய்வுத்துறை யார் கட்டுப்பாட்டில் இருக்கின்றது என்ற பெரிய கேள்வியையும் எழுப்பி உள்ளது. எந்தவொரு திட்டமிடலுக்கும் தாக்குதலுக்கு பின்னாலும் வலுவான காரணங்கள் இருக்கும். நாட்டின் பல இடங்களில் ஒரே நேரத்தில் அதுவும் இராணுவ நேக்கமில்லாத ஒன்றின் மேல் மனித வெடிகுண்டுகள் பாவிக்கப்பட்டுள்ளமையானது இதன் பின்னாலுள்ள சக்தி மிகவும் பலமானது என்பதையும் இந்த தாக்குதல்களின் நோக்கங்கள் யார் யாருக்கெல்லாம் நன்மையளிக்கக் கூடியவை என்ற பார்வையையும் தாக்குதலாளிகளின் உண்மைப் பின்னணியை தெளிவாக்கவும் உதவும்.

கடந்த ஒக்ரோபரின் பின்னரான அரசியல் குழப்பங்களும் அடுத்த தேர்தலை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படுகின்றன காய்நகர்த்தல்களிலுமே அரசியல்வாதிகள் அக்கறையாக இருக்கின்றரார்களே அன்றி மக்களுக்கான அரசியலில் இவர்கள் யாரும் இல்லை என்பதும் மீண்டும் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபணமாகி உள்ளது. ஏற்படுத்தப்பட்டுள்ள அல்லது ஏற்பட்டிருக்கின்ற வாய்ப்பை பயன்படுத்தி கோத்தபாய தான் சனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எண்ணத்தை வெளிப்படுத்தி இருப்பதனையும் நாம் இந்த நேரத்தில் கவனித்தேயாக வேண்டும். முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பத்தாமாண்டு நிறைவு நினைவேந்தலை எதிர்நோக்கி இருக்கின்ற எங்களையும் இந்த நிகழ்வுகள் நிட்சயம் பாதிப்புக்குள்ளாக்கும். அவசரகால சட்ட அமலாக்கமும் மீண்டும் முளைக்கும் சோதனைச்சாவடிகளும் காவல் துறைக்கு வழங்கப்பட்டிருக்கின்ற அதீத அதிகாரங்களும் சுற்றிவளைப்புக்களும் கைதுகளும் காணாமல் போதல்களும் காரணமின்றி எங்கள் மக்கள் மேலும் பிரயோகிக்கப்படும். துயர்சுமந்த மேமாத நினைவேந்தல்களையும் நிட்சயம் அது பாதிக்கும்.

கடும்போக்குடைய மதவாதச் சிந்தனை என்பது இலங்கைத் தீவில் இன்று நேற்றல்ல இலங்கை சுதந்திரம் அடைந்தாக சொல்லப்படுகின்ற காலம் தொட்டே இந்தப் பிரச்சனை புரையோடிப் போயிருக்கின்றது. சமய அல்லது மார்க்க சிந்தனைகளென்பது ஒரு மனிதனிடம் இருக்கின்ற மிருக குணங்கள் வெளிப்படாமல் அவனை மனிதத் தன்மையோடு வைத்திருப்பதையே பிரதான நோக்கமாகக் கொண்டது. ஆனால் அந்த மதங்களின் பேராலேயே மனிதன் மிருகமாகின்ற தன்மைகளையையே அண்மைக்கால வரலாறு உணர்த்தி நிற்கின்றது. அதுவே எங்கள் விடயத்திலும் வரலாறாகி நிற்கின்றது. எந்தெந்த நாடுகளில் மதவாத சக்திகள் அரசியலில் செல்வாக்கு செலுத்துகின்றதோ அல்லது எந்தெந்த நாடுகளின் தலைவர்கள் மதவாத சக்திகளிடம் மண்டியிட்டு கிடக்கின்றார்களோ அந்த நாடுகளின் அரசியல் நிட்சயம் மக்கள்அரசியலாக இருக்க முடியாது. கடும்போக்கு மதவாத சக்திகள் அது எந்த வடிவத்தில் இருந்தாலும் அது அடியோடு களையப்பட வேண்டும். கடும்போக்குடைய மதவாத சக்திகளையும் அந்தமத நம்பிக்கையோடு இருக்கின்ற மற்றவர்களையும் ஒரே பார்வோயோடு பார்க்கின்ற நிலை அடியோடு மாற வேண்டும். மனிதன் மனிதத்தன்மையை இழந்து போவானாக இருந்தால் அவனும் இந்த உலகில் மிருகமாகவே கருதப்பட வேண்டும்.

இலக்கு மின்னிதழ் ஆசிரியர் தலையங்கம்.

இலக்கு – 24 (05-05-2019)

முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அழுத்தவும்:
இலக்கு 05-05-2019

இராணுவம் வெளியேறவேண்டும்: பல்கலை மாணவர் கைதை கண்டித்து முன்னாள் முதலமைச்சர் அறிக்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களைச் சாட்டாக வைத்து பாதுகாப்பு என்ற போர்வையில் வடமாகாணத்தில் இராணுவத்தைத் தொடர்ந்தும் நிலைகொள்ள அனுமதிக்க முடியாது என்றும் மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் பொலிசாருக்குத் தேவையான அதிகாரத்தை வழங்கவேண்டும் என்றும் வட மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.

அவசரகால சட்டத்தின் அடிப்படையில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இன்று வெள்ளிக்கிழமை கைதுசெய்யப்பட்டு கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையைக் கண்டித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள திரு.விக்னேஸ்வரன் அவர்கள் நாட்டின் பாதுகாப்பை விரைவாக உறுதிப்படுத்தி அவசரகால நிலைமையை அரசாங்கம் மிக விரைவாக முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விபரமும் பின்வருமாறு:

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களைச் சாட்டாக வைத்து பாதுகாப்பு என்ற போர்வையில் வடமாகாணத்தில் பல்லாயிரக்கணக்கான இராணுவத் தினரைத் தொடர்ந்தும் வைத்திருப்பதை எந்தச் சந்தர்ப்பத்திலும் ஏற்றுக்கொள்ளமுடியாது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் முழு நாட்டினதும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள நிலையில் நான் ஏற்கனவே கூறியபடி எல்லா மாகாணங்களுக்கும் இராணுவத்தை சம அளவில் பகிர்ந்து பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளவேண்டும். பத்து வருடங்களுக்கு முன்னர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட போரைச் சாட்டாக வைத்து இராணுவத்தினரை இங்கு நிலைநிறுத்தி வைத்த அரசாங்கம் அண்மைய நிலைமையைச் சாட்டாக முன்வைத்து வடமாகாணத்தை இராணுவக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கப்பார்ப்பது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாததொன்று. வடக்கு மாகாணம் தொடர்ந்தும் உச்ச அளவில் இராணுவமயப்படுத்தப்பட்ட நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பொதுமக்களின் நாளாந்த வாழ்க்கை தொடர்ந்தும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களின் வாழ்வாதார செயற் பாடுகளும் பாதிப்படைந்துள்ளன. பொதுமக்களின் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை அவர்கள் அபகரித்துள்ளனர். இது நல்லிணக் கத்துக்கும் நிலையான சமாதானத்துக்கும் பெரும் அச்சுறுத்தலாகவே தொடர்ந்தும் இருந்து வருகின்றது. நிலைமை இவ்வாறு இருக்கும்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னர், பாதுகாப்பு காரணங் களுக்காக இராணுவத்தினரைத் தொடர்ந்து வடக்கு கிழக்கில் வைத்திருக்கவேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு வலியுறுத்தி இருக்கின்றமை மிகவும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அரசாங்கம் ஒரு துன்பியல் நிலைமையைத் தமக்குச் சாதகமாகப் பாவிக்க முற்பட்டுள் ளதை அறியாதிருக்கும் இவர்கள் மேல் பரிதாபம் மேலோங்குகின்றது.
தீர்வு முயற்சிகள் ஒருபுறம் இருக்க, தற்போதைக்கு பொலிசார் மூலம் எமது பாதுகாப்பை நாம் உறுதிப்படுத்திக்கொள்ள முடியும். சிறந்த முறையில் சட்டம் ஒழுங்கை எமது மக்களே எமது பகுதிகளில் பொலிசாருடன் சேர்ந்து நிர்வகிக்க முடியும். இதனைவிடுத்து, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களைச் சாட்டாக வைத்து இராணுவத்தைத் தொடர்ந்து பெருமளவில் வடக்கு கிழக்கில் வைத்திருப்பதற்கு நியாயம் கற்பிப்பது எந்தவகையிலும் பொருத்தம் அற்றது.

மிகவும் தெளிவான முன் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுங் கூட எந்த விதமான பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படாமல் விட்டமையே உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களுக்கு காரணம் என்பதை அரசாங்கமே ஏற்றுக்கொண்டுள்ளது. பாதுகாப்பு தரப்பினதும் அரசாங் கத்தினதும் அலட்சியமே இன்றைய நிலைக்கு காரணம். மரணித்த வர்களில் பெரும்பாலானோர் தமிழினத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகின்றது. அரசாங்கம் முன்னெச்சரிக்கையாகச் செயற் பட்டிருந்தால், இன்று நாட்டில் மீண்டும் அவசரகால நிலைமையைப் பிரகடனம் செய்யவேண்டி இருந்திருக்காது. கடந்த காலங்களில் அவசரகால நிலைமை எந்தளவுக்குப் பொதுமக்களின் சுதந்திரங்களைப் பாதித்ததுடன் மோசமான மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுத்தது என்பதை நாம் கண்டுள்ளோம்.

இன்று எமது பல்கலைக்கழக மாணவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளமை மீண்டும் அந்த நிலைமை ஏற்படப்போகின்றதோ என்ற அச்சத்தை எமக்கு ஏற்படுத்தியுள்ளது. இந்த மாணவர்களின் கைதை நாம் வன்மையாகக் கண்டிப்பதுடன் அவர்களை உடனடியாக விடுதலைசெய்ய வேண்டும் என்று அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்கின்றேன். பாராளு மன்றத்தில் அவசரகால நிலைமைக்கு ஆதரவாகச் செயல்ப் பட்டுவிட்டு இன்று எமது மாணவர்கள் இந்த சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸ் நிலையங்களுக்கு சென்று அவர்களை விடுதலைசெய்யுமாறு எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் கோருவது வேடிக்கையாக இருக்கின்றது.

ஆகவே, அண்மைய பயங்கரவாத தாக்குதல்களுக்கு காரணமானவர்க ளையும் அவற்றுக்குத் தூண்டுகோல்களாக இருந்தவர்களையும் இனம் கண்டு கைதுசெய்து சட்டத்தின்முன்பாக நிறுத்தி அனைத்து மக்களி னதும் பாதுகாப்பை உறுதிசெய்ய அரசாங்கம் உடனடி நடவடிக் கைகளை எடுக்கவேண்டும் என்றும் இயன்றளவு விரைவாக அவசர காலப் பிரகடனத்தை வாபஸ் பெறவேண்டும் என்றும் அவசரகாலச் சட்டத்தை வைத்து அப்பாவி மக்களைக் கைது செய்து துன்புறுத்துவதை நிறுத்தவேண்டும் என்றும் அரசாங்கத்தை வேண்டிக்கொள்கின்றேன். பயங்கர வாதத்தை முறியடிக்கும் வகையில் பொலிஸ் திணைக் களத்தைப் பலப்படுத்துமாறும் வேண்டிக்கொள்கின்றேன்.

ஊடகப் பிரிவு
தமிழ் மக்கள் கூட்டணி
03.05.2019