யாழ். பல்கலைக்கழகத்தில் புலிகளுக்கு சார்பான செயற்பாடுகள் மேற்கொள்ளக்கூடாது- ஹெட்டியாராச்சி எச்சரிக்கை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சார்பான செயற்பாடுகள் இடம்பெறாமல் இருப்பதை பீடாதிபதிகள் உறுதிப்படுத்த வேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

யாழ். பல்கலைக்கழக பீடாதிபதிகளை நேற்று (07) பலாலி படைத் தலைமையகத்திற்கு அழைத்த படைத் தளபதி இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் மற்றும் சிற்றுண்டிச் சாலை நடத்துனர் ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களின் விடுதலைக்கு உதவுமாறு பல்கலைக்கழக சமூகம் படைத் தலைமை மற்றும் பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்திருந்தது.

இது தொடர்பாக கலந்துரையாடுவதற்கு பலாலி படைத்தலைமையகத்திற்கு வருகை தருமாறு பீடாதிபதிகளுக்கு படைத் தலைமையால் அழைப்பு விடுக்கப்பட்டது. யாழ்.பல்கலைக்கழகத்தில் இந்தச் சந்திப்பை ஒழுங்குபடுத்தியிருக்க முடியும் என்ற நிலையிலும் பலாலி படைத் தலைமையகத்திற்கு அழைக்கப்பட்ட விடயத்தில் பீடாதிபதிகள் அச்சத்தை வெளியிட்டிருந்தனர். எனினும் அங்கு சந்திப்பு இடம்பெற்றது.

கைது செய்யப்பட்ட மாணவர்களின் எதிர்காலத்தினை கருத்திற்கொண்டு அவர்கள் மீதான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என பீடாதிபதிகள் கோரிக்கை விடுத்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த யாழ்ப்பாண மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி, தனது அதிகார வரம்புக்கு உட்பட்ட விடயங்களை செய்து தருவதாக உறுதியளித்தார்.

அத்துடன்  யாழ்ப்பாண பல்கலைக்கழகம் மட்டுமல்லாது இலங்கையில் அனைத்துப் பல்கலைக் கழகங்களிலும் தேடுதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அதேபோன்றதொரு தேடுதலே யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் மேற்கொள்ளப்பட்டது. இந்தத் தேடுதல் நடவடிக்கை முன்னறிவுப்புடனேயே நடத்தப்பட்டது. ஆகவே அங்கு வைக்கப்பட்டிருந்த ஒளிப்படங்கள், பதாகைகளை அகற்றியிருக்க உங்களால் முடியவில்லையா?யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் எதிர்காலத்தில் இவ்வாறான சட்டத்துக்குப் புறம்பான விடயங்கள் இடம்பெறாது என உறுதிப்படுத்தப்படவேண்டும்.என்றார்.