யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் விவகாரத்தில் ஐ.நாவின் தலையீட்டைக்கோரும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !

சிறிலங்கா அரசின் தடுப்புக்காவில் வைக்கப்பட்டுள்ள யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் விவகாரத்தில், ஐ.நா மனித உரிமைச்சபையின் கண்காணிப்பினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் கோரியுள்ளார்.

இது தொடர்பில் ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளர் மிசெல் பசேலே அம்மையார் அவர்களுக்கு எழுத்தியுள்ள கடிதத்தில், பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்குவதாக சிறிலங்கா அரசாங்கம் பல தடவைகள் ஐ.நாவுக்கும் அனைத்துலக சமூகத்துக்கும் வாக்குறுதி அளித்திருந்த நிலையில், அதற்கு மாறாக கைது செய்யப்பட்டுள்ள யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டத்தினை ஏவிவிடுவதற்கான நிலைமை அங்கு காணப்படுகின்றது எனத் தெரிவித்துள்ளார்.

இலங்கைத்தீவின் தற்போதைய நிலைமைகளில் சிறிலங்கா அரசினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அவசரகால நிலையென்பது, தமிழர்களுக்கு எதிராக துஸ்பிரயோகம் செய்யப்படுகின்ற நிலைமை அங்கு காணப்படுகின்றது.

இந்நிலையில் ஐ.நா ஆணையாளர் அவர்கள் இவ்விவகாரத்தில் தீவிரகண்காணிப்பு கொள்ள வேண்டும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தனது கடிதத்தில் கோரியுள்ளார்.