ஈஸ்ரர் தாக்குதலும் அதன் பின்னுள்ள சக்திகளும்

ஈஸ்ரர் தினத்தன்று தேவாலயங்களிலும் உல்லாசப் பயணிகள் பெருமளவில் தங்குகின்ற விடுதிகளிலும் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களும் அதனால் ஏற்பட்ட மனித இழப்புக்களும் அவலங்களும் உள்நாட்டிலும் சர்வதேச ரீதியாகவும் பேரதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளன. ஒரு வாரகாலமாகியும் அதனையொட்டிய தொடர்ச்சியான சம்பவங்கள் இன்று வரை இடம்பெற்ற வண்ணமே இருக்கின்றன. இலங்கைத் தீவில் பத்தாண்டுகளுக்கு பின்னர் நிகழ்ந்த பாரிய சம்பவங்களாகவும் வரலாற்றில் இது பதிவாகி உள்ளது. இந்தச் சம்வங்களும் அதையொட்டி வெளிவந்து கொண்டிருக்கின்ற விடயங்களும் அதிக கவனயீர்ப்பையும் பெருத்த கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்பியவாறே உள்ளன.

கிறீஸ்தவர்களும் குறிப்பாக தமிழ் கிறீஸ்தவர்களும் வெளிநாட்டு உல்லாசப் பயணிகளுமே தாக்குதலாளிகளின் முக்கியமான இலக்குகளாக இருந்துள்ளனர். அதிகமான உயிர்ச் சேதங்களை ஏற்படுத்தக் கூடிய வகையில் தாக்குதலுக்கு இலக்கானவர்களின் மையப்பகுதிக்கு சென்று மனித வெடிகுண்டுகளால் தாக்கி அழிக்கும் அளவுக்கு தாக்குதலாளிகளின் நோக்கம் இருந்துள்ளதை தாக்குதல் சம்பவங்களும் அதற்கான அவர்களது உத்திகளும் வெளிப்படுத்தி உள்ளன. அம்புகளை விட எய்தவர்கள் யார் என்பது தொடர்பில் உரிமை கோரல்களும் வெளித்தெரிகின்ற வெளித்தெரியாத சக்திகளும் இதன் பின்னணியில் இருந்துள்ளார்கள் என்பதை ஆழமான பார்வை உள்ளவர்கள் புரிந்து கொள்வார்கள்.

இன்றைய நவீன உலக இயங்கியல் என்பது உலகப் புலனாய்வாளர்களின் கைகளிலேயே தங்கி இருக்கின்றது. இரண்டு வாரங்களுக்கு முன்பிருந்தே புலனாய்வு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்தும் அவை உரியவர்களுக்கு தெரியப்படுத்தப்படாமல் இருந்ததும் உரிய முன்னெச்சரிக்கை உடனான ஏற்பாடுகள் இடம்பெறாமல் இருந்ததும் பலத்த சந்தேகங்களையும் மக்களுக்கான அரசாங்கமாக இந்த அரசாங்கம் தொடர முடியுமா என்ற பலமான கேள்வியையும் எழுப்பி உள்ளது. முப்படைகளையும் தன்னுடைய கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கின்ற சிறிலங்காவின் சனாதிபதியும் மற்றும் பிரதம மந்திரியும் தங்களுக்கே இந்த விடயம் தெரியப்படுத்தப்படவில்லை எனப் பகிரங்கமாக வெளிப்படுத்தி உள்ளமையானது ஏளனத்தையும் அப்படியாயின் சிறீலங்காவின் புலனாய்வுத்துறை யார் கட்டுப்பாட்டில் இருக்கின்றது என்ற பெரிய கேள்வியையும் எழுப்பி உள்ளது. எந்தவொரு திட்டமிடலுக்கும் தாக்குதலுக்கு பின்னாலும் வலுவான காரணங்கள் இருக்கும். நாட்டின் பல இடங்களில் ஒரே நேரத்தில் அதுவும் இராணுவ நேக்கமில்லாத ஒன்றின் மேல் மனித வெடிகுண்டுகள் பாவிக்கப்பட்டுள்ளமையானது இதன் பின்னாலுள்ள சக்தி மிகவும் பலமானது என்பதையும் இந்த தாக்குதல்களின் நோக்கங்கள் யார் யாருக்கெல்லாம் நன்மையளிக்கக் கூடியவை என்ற பார்வையையும் தாக்குதலாளிகளின் உண்மைப் பின்னணியை தெளிவாக்கவும் உதவும்.

கடந்த ஒக்ரோபரின் பின்னரான அரசியல் குழப்பங்களும் அடுத்த தேர்தலை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படுகின்றன காய்நகர்த்தல்களிலுமே அரசியல்வாதிகள் அக்கறையாக இருக்கின்றரார்களே அன்றி மக்களுக்கான அரசியலில் இவர்கள் யாரும் இல்லை என்பதும் மீண்டும் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபணமாகி உள்ளது. ஏற்படுத்தப்பட்டுள்ள அல்லது ஏற்பட்டிருக்கின்ற வாய்ப்பை பயன்படுத்தி கோத்தபாய தான் சனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எண்ணத்தை வெளிப்படுத்தி இருப்பதனையும் நாம் இந்த நேரத்தில் கவனித்தேயாக வேண்டும். முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பத்தாமாண்டு நிறைவு நினைவேந்தலை எதிர்நோக்கி இருக்கின்ற எங்களையும் இந்த நிகழ்வுகள் நிட்சயம் பாதிப்புக்குள்ளாக்கும். அவசரகால சட்ட அமலாக்கமும் மீண்டும் முளைக்கும் சோதனைச்சாவடிகளும் காவல் துறைக்கு வழங்கப்பட்டிருக்கின்ற அதீத அதிகாரங்களும் சுற்றிவளைப்புக்களும் கைதுகளும் காணாமல் போதல்களும் காரணமின்றி எங்கள் மக்கள் மேலும் பிரயோகிக்கப்படும். துயர்சுமந்த மேமாத நினைவேந்தல்களையும் நிட்சயம் அது பாதிக்கும்.

கடும்போக்குடைய மதவாதச் சிந்தனை என்பது இலங்கைத் தீவில் இன்று நேற்றல்ல இலங்கை சுதந்திரம் அடைந்தாக சொல்லப்படுகின்ற காலம் தொட்டே இந்தப் பிரச்சனை புரையோடிப் போயிருக்கின்றது. சமய அல்லது மார்க்க சிந்தனைகளென்பது ஒரு மனிதனிடம் இருக்கின்ற மிருக குணங்கள் வெளிப்படாமல் அவனை மனிதத் தன்மையோடு வைத்திருப்பதையே பிரதான நோக்கமாகக் கொண்டது. ஆனால் அந்த மதங்களின் பேராலேயே மனிதன் மிருகமாகின்ற தன்மைகளையையே அண்மைக்கால வரலாறு உணர்த்தி நிற்கின்றது. அதுவே எங்கள் விடயத்திலும் வரலாறாகி நிற்கின்றது. எந்தெந்த நாடுகளில் மதவாத சக்திகள் அரசியலில் செல்வாக்கு செலுத்துகின்றதோ அல்லது எந்தெந்த நாடுகளின் தலைவர்கள் மதவாத சக்திகளிடம் மண்டியிட்டு கிடக்கின்றார்களோ அந்த நாடுகளின் அரசியல் நிட்சயம் மக்கள்அரசியலாக இருக்க முடியாது. கடும்போக்கு மதவாத சக்திகள் அது எந்த வடிவத்தில் இருந்தாலும் அது அடியோடு களையப்பட வேண்டும். கடும்போக்குடைய மதவாத சக்திகளையும் அந்தமத நம்பிக்கையோடு இருக்கின்ற மற்றவர்களையும் ஒரே பார்வோயோடு பார்க்கின்ற நிலை அடியோடு மாற வேண்டும். மனிதன் மனிதத்தன்மையை இழந்து போவானாக இருந்தால் அவனும் இந்த உலகில் மிருகமாகவே கருதப்பட வேண்டும்.

இலக்கு மின்னிதழ் ஆசிரியர் தலையங்கம்.