Home Blog Page 2784

பாராளுமன்ற தெரிவுக்குழுவின் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் பல உண்மைகள் புலப்படத் தொடங்கியுள்ளன- ரஹ்மான்

ஏப்ரல் 21ஆம் திகதி தாக்குதல் குறித்து விசாரிக்கும் பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்குபற்றாது பிரச்சினைகளை வேறுபக்கத்துக்குத் திசைதிருப்ப ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் முயற்சிப்பதாக ஆளும் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குற்றஞ்சாட்டினார்.

தெரிவுக்குழுவின் முதல்நாள் அமர்வில் பல விடயங்கள் வெளிப்பட்டுள்ளன. தொடர்ந்தும் நடத்தப்படும் விசாரணைகளில் பல்வேறு உண்மைகள் புலப்பட்டு பொறுப்புக் கூறவேண்டியவர்கள் யார் என்பது தெரியவரும் என்றும் அவர் கூறினார்.அலரிமாளிகையில் நேற்று நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே முஜிபுர் ரஹ்மான் எம்.பி இந்தத் தகவல்களை முன்வைத்தார்.

தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

எதிர்க்கட்சியினர் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். எனினும், பாராளுமன்ற தெரிவுக்குழுவின் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் பல உண்மைகள் புலப்படத் தொடங்கியுள்ளன. பெப்ரவரி 19ஆம் திகதிக்குப் பின்னர் குண்டுத் தாக்குதல் நடைபெறும் வரை பாதுகாப்புச் சபை கூட்டப்படவில்லை. குண்டுத் தாக்குதல் பற்றி 12 நாட்களுக்கு முன்னர் உயர்மட்டத்துக்குத் தெரியப்படுத்தியிருப்பதாக அரசாங்கப் புலனாய்வுப் பிரிவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதுவரை காலமும் அரசு மீது குற்றஞ் சுமத்திய எதிர்க்கட்சியினர் ஏன் இந்த விவகாரம் தொடர்பில் மௌனம் காக்கின்றனர். மண்ணெண்ணெய் ஊற்றப்பட்ட சாரைப்பாம்புபோல அடங்கிப் போயுள்ளனர். சஹ்ரானை கைது செய்வதற்காக பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மாஅதிபராகவிருந்த நாளக்க.டி.சில்வா கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் பிடியாணை பெற்றிருந்தார். எனினும், சஹ்ரானை கைது செய்யவிடாது எங்கோவிருந்த நாமல் குமார என்ற நபரின் குற்றச்சாட்டின் பேரில் பிரதிப் பொலிஸ்மா அதிபர் கைதுசெய்யப்பட்டார். இதனால் கடந்த செப்டெம்பர் மாதத்தின் பின்னர் சஹ்ரான் தொடர்பான விசாரணைகள் முன்நகர்த்திச் செல்லப்படவில்லை. இதன் பின்னணியில் ஜனாதிபதி இருக்கிறாரா என்ற சந்தேகம் உள்ளது.

தெரிவுக்குழுவில் புலப்படும் தகவல்களை அடிப்படையாக வைத்து சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவர தயாரில்லாத எதிர்க்கட்சியினர், எங்கோவிருந்த அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை முன்வைத்துள்ளனர். பொறுப்புக் கூறவேண்டியவர்கள் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்தாது ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான கருத்துக்களையே அவர்கள் பரப்பி வருகின்றனர். இதனால் சிங்கள, முஸ்லிம் இனங்களுக்கிடையில் மோதல்களை உருவாக்கும் திசையை நோக்கி பிரச்சினைகளை அவர்கள் திருப்புகின்றனர்.

1983ஆம் ஆண்டு ஜூலை கலவரத்தின் பின்னர் நாட்டிலிருந்த தமிழ் புத்திஜீவிகளை நாட்டைவிட்டு அனுப்பியதைப்போன்று தற்பொழுது முஸ்லிம் புத்திஜீவிகளை நாட்டைவிட்டு அனுப்புவதற்காக முயற்சிக்கின்றனர். இது விடயத்தில் ஜனாதிபதி மெளனம் காத்துவரும் நிலையில் அவர் பின்னணியில் இருக்கிறாரா எனக் கேட்க விரும்புகின்றோம்.

பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 150 பேர் மாத்திரமே இருப்பதாகவும், இவர்களில் பெரும்பாலானவர்கள் கைதுசெய்யப்பட்டதாகவும் ஜனாதிபதி கூறியிருந்தார். எனினும், ஆயிரத்துக்கும் அதிகமான முஸ்லிம் சமூகத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் அப்பாவிப் பொதுமக்களே அதிகமானவர்கள். மறுபக்கத்தில் முஸ்லிம் சமூகத்தினர் மீது தாக்குதல் நடத்திய சிங்கள இனவாதிகள் சாதாரண சட்டத்தின் கீழ் விடுவிக்கப்பட்டுள்ளனர். எனினும் கைதுசெய்யப்பட்ட அப்பாவி முஸ்லிம்கள் அவசரகாலச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். சட்டம் ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி சகலருக்கும் சட்டத்தை நியாயமாக நிலைநாட்ட வேண்டும் என்றும் அவர் மேலும் கோரிக்கை விடுத்தார்.

இந்தியப் பிரதமரை சந்தித்தார் மைத்திரி

பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவுக்காக இந்தியா சென்றிருந்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று காலை ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை சந்தித்து கலந்துரையாடினார்.

இரு நாட்டு தலைவர்களும் நாட்டின் உறவுகள் குறித்து விரிவாக கலந்துரையாடியதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

தெரிவுக்குழுவில் தமிழ் பிரதிநித்துவம் இல்லை – தமிழர்களே அதிகம் பாதிக்கப் பட்டுள்ளனர் என்பதை மூடிமறைக்கும் முயற்சி – ஜனநாயக மக்கள் முன்னணி

21/4 தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்றத் தெரிவுக்குழுவானது, பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை முழுமையாக பிரதிநிதித்துவப்படுத்தாத தெரிவுக்குழுவாகவே விளங்குகின்றது என ஜனநாயக மக்கள் முன்னணியின் அமைப்புச் செயலாளர் விநாயகமூர்த்தி ஜனகன் தெரிவித்தார்.

எனவே, பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு இக்குழுவின் ஊடாக நீதி நிவாரணம் கிடைக்குமா? என்ற சந்தேகமும் மேலோங்கியுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் விநாயகமூர்த்தி ஜனகன் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“ 21/4 தாக்குதல் குறித்து விசாரணை நடாத்தி, அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு, பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் சார்பில் – அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு பாராளுமன்ற உறுப்பினரும் உள்வாங்கப்படவில்லையென்பது வேதனைக்குரிய விடயமாகும்.

பயங்கரவாதிகளால் அரங்கேற்றப்பட்ட இந்த ஊழித்தாண்டவத்தில் மட்டக்களப்பு மற்றும் கொழும்பு மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ் மக்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பலர் உயிரிழந்தனர்.மேலும் சிலர் உடல் அவயவங்களை இழந்து சிகிச்சைபெற்றுவருகின்றனர்.

எனவே, இம்மக்களுடன் தொடர்பைபேணிய, அவர்கள் சம்பந்தமாக பகுதியளவேனும் தெரிந்து வைத்துள்ள மக்கள் பிரதிநிதிகளையே பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு உள்வாங்கியிருக்கவேண்டும். அதுவே வழமையும்கூட. எனினும், இங்கு அவ்வாறு நடைபெறவில்லை.

இதனால், அரசியல் நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றுவதற்காகவா தெரிவுக்குழு அமைக்கப்பட்டுள்ளது என்ற வினா தமிழ் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

அதுமட்டுமல்ல பயங்கரவாதத் தாக்குதல்களில் தமிழர்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற தகவலை உள்நாட்டுக்கும், அனைத்துலக சமூகத்துக்கும் தெரியப்படுத்தாமல் – மூடிமறைப்பதற்கான வியூகமாகக்கூட இது இருக்கலாமென கருத்துகள் முன்வைக்கப்பட்டுவருகின்றன.

இவ்வாறான செயற்பாடுகளானவை தமிழ் மக்களுக்கு அரசாங்கம்மீது இருக்கும் நம்பிக்கையை தவிடுபொடியாக்கிவிடும்.

அதேவேளை, தமிழ்ப் பிரதிநிதித்துவம் இல்லையென யார் சொன்னது? அதுதான் சுமந்திரன் உள்வாங்கப்பட்டுள்ளாரே என சிலர் நியாயம் கற்பிக்கக்கூடும்.

சுமந்திரன் எம்.பி. தெரிவுக்குழுவில் அங்கம் வகிப்பதானது ஒரு துறைசார்ந்த உள்வாங்கல் மாத்திரமே. மாறாக பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் சார்பில் தேர்வுசெய்யப்பட்ட பிரதிநிதியாக அவரை கருதமுடியாது. இதுவே தமிழ் மக்களின் நிலைப்பாடும்கூட.

சுருக்கமாக சொல்வதாயின், முன்னாள் அமைச்சர் அமரர். லக்ஸ்மன் கதிர்காமரை தமிழ் மக்களின் பிரதிநிதியாக அடையாளப்படுத்தி, தமிழ் மக்களுக்கும் இடம் வழங்கப்பட்டுள்ளது என சர்வதேச சமூகத்தை ஏமாற்றியதற்கு ஒப்பான செயலாகும். “ என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வன்னி முள்ளிவாய்கால் நிகழ்வில் இனவழிப்பு என்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி

நிரந்தர மக்கள் தீர்பாயத்தின் (நிமதீ) நீதிபதி, கொலம்பியாவை சேர்ந்த அருட்தந்தை ஜாவியர் கிரால்டோ, வன்னி முள்ளிவாய்கால் பத்தாம் ஆண்டு நிகழ்வில் கலந்து கொண்டார். அதை ஒரு ஆழமான அனுபவமாக இவர் விபரித்தார். இனவழிப்பால் பாதிக்கப்பட்ட சமூகங்களை ஆய்வு செய்யும் அருட்தந்தை ஜாவியர், ஜெர்மனியின் பிரேமன் நகரில் 2013 டிசம்பரில் அமர்ந்த நிமதீயின் பன்னிரண்டு நீதிபதிகளில் ஒருவர்.

ஈழத்தமிழர் அடையாளத்தையும் ஏற்றுக்கொண்டு நிமதீ ஈழத்தமிழர் இனவழிப்பு ஒரு தொடரும் இனவழிப்பு என்றும் தீர்ப்பு வழங்கியுள்ளதை இங்கு குறிப்பிட வேண்டும்.  அத்துடன் முள்ளிவாய்கால் ஈழத்தமிழர் இனவழிப்பு நினைவுகூரல் உலகமயமாக்கப் பட வேண்டும் என்றும் நிமதீ முன்மொழிந்துள்ளது. இன்று லத்தீன் அமெரிக்காவிலிருந்து கிழக்கு ஆசியா வரை மே-18 நினைவுகூரல் பரவிவருவதும் காணக்கூடியதாக இருக்கிறது.

ஐநா மனித உரிமை கவுன்சில் ஈழத்தமிழர் இனவழிப்பை கருத்திலெடுக்காதது சிறிலங்கா அரசை பாதுகாப்பதாகவே முடிந்துள்ளது என்று விபரித்தார் அருட்தந்தை ஜாவியர். லத்தீன் அமெரிக்காவின் சில இடதுசாரி அரசுகளும் கூட இந்த அரசுகளின் கூட்டு அரசியலுக்கு பலியாகியது கவலைக்கிடமானது என்று இவர் கூறினார்.

நேர்மையான ஈழத்தமிழர் உரிமை போராட்டம் நீண்ட கடினமான போராட்டம் தான். ஆனால் பல சர்வதேச கூட்டொருமை அமைப்புக்கள் இப்போராட்டத்தை ஆதரிக்கின்றன. முள்ளிவாய்கால் பத்தாம் ஆண்டு நிகழ்வு ஈழத்தமிழர்களின் போராட்ட உறுதியை வெளிப்படுத்துகிறது என்று தனது அனுபவத்தை மேலும் விபரித்தார்.

1980களின் லத்தீன் அமெரிக்காவிற்கான நிமதீயின் அமர்விலும் அருட்தந்தை பணியாற்றினார். நிமதீயின் இவ்வமர்வு லத்தீன் அமெரிக்காவில் அக்காலத்தில் நிலவிய சர்வாதிகார அரசுகளால் பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலங்களை பதிவுசெய்தது.

1990களில் கொலம்பியாவில் இடம்பெற்ற கொடுமைகளை பதிவு செய்வதற்கான பல பணிகளிலும் இவர் ஈடுபட்டுள்ளார். 2008 இல் கொலம்பியாவில் பல்தேசிய கார்பரேசன்களின் மனித உரிமை மீறல்கள் தொடர்பான நிமதீ அமர்விலும் ஈடுபட்டார்.

கொலம்பியா அரசுக்கும் கொலம்பியாவின் ஆயுத போராட்ட அமைப்பான FARC என்ற அமைப்புக்கும் இடையே 2015 இல் நடந்த பேச்சுவார்த்தைகளில் இவரும் ஆலோசகராக பணியாற்றினார்.

 

நன்றி தமிழ்நெற்

 

கட்டிக்கொடுப்புக்கு பெற்ற பணத்தை மீளளித்த சாய்ந்தமருது முஸ்லீங்கள்

கடந்த 26ஆம் திகதி சாய்ந்தமருது பிரதேசத்தில் தீவிரவாதிகளை படையினருக்கு காட்டிக்கொடுத்த மூவருக்கு 30 இலட்சம் ரூபாய் பணம் சன்மானமாக வழங்கப்பட்டது.எனினும் குறித்த பணத்தை அவர்கள் திருப்பிக் கொடுத்துள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு அன்று இடம்பெற்ற பயங்கரவாத செயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அந்த பணத்தை வழங்குமாறு அரசாங்கத்தை கேட்டுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முஸ்லிம் மக்கள் பயங்கரவாதத்தையோ, பயங்கரவாதிகளையோ ஒரு போதும் ஆதரிக்கவில்லை. எமது தாய் நாட்டுக்கே விசுவாசமாக உள்ளோம் என்பதை உலகுக்கு காட்டவே அரசு வழங்கிய சன்மானத்தை பெற மறுத்ததாக இவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

 

 

குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் 66 பேர் தடுத்துவைப்பு 1800 தொலைபேசி இலக்கங்கள் தொடர்பிலும் விசாரணை

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களை நடத்திய நபர்களுடன் தொடர்புகளை மேற்கொண்ட 1800 தொலைபேசி இலக்கங்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இந்த பயங்கரவாத குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் 7 பெண் சந்தேக நபர்கள் உட்பட 66 பேர் தற்பொழுது குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக ஸ்ரீலங்கா பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர, கடந்த ஏப்ரல் 21 தாக்குதல்தாரிகள் வேறு நபர்களுடன் நடத்திய தொலைபேசி அழைப்புக்களின் அடிப்படையில் இந்த இலக்கங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறினார்.

கடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பில் பாதுகாப்புப் படையினர் வெற்றிகரமாக விசாரணைகளை முன்னெடுத்துச் செல்வதாகவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

இந்த பயங்கரவாத குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் 7 பெண் சந்தேக நபர்கள் உட்பட 66 பேர் தற்பொழுது குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன், 2 பெண்கள் உட்பட 21 சந்தேகநபர்கள் பயங்கரவாத தடுப்புப் பிரிவினால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் கூறினார்.

தற்கொலை தாக்குதல் நடத்திய 9 பயங்கரவாதிகளது 1800க்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகள் குறித்து பரிசீலனை நடத்தப்பட்டு வருகின்றது.

பயங்கரவாதிகள் மற்றும் சந்தேகநபர்களிடம் இருந்து மீட்கப்பட்ட பொருட்களின் விபரங்களையும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இதன்போது வெளியிட்டார்.

இதன்படி 142 சிம் அட்டைகள், 23 மடி கணினிகள், 03 கணினிகள், 138 கையடக்கத் தொலைபேசிகள், 30 வன்தட்டுக்கள், 12 பென்டிரைவ், 67 இருவட்டுக்கள் என்பன இவ்வாறு கைப்பற்றப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர குறிப்பிட்டார்.

தாக்குதல் குறித்து முன்னெச்சரிக்கைக் கடிதம் வெளியானது

தேசிய தௌஹீத் ஜமா அத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஹாசீம் மற்றும் அவரது சகாக்கள் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தும் வாய்ப்பு இருக்கின்றது எனக் கூறி கடந்த ஏப்ரல் 9ஆம் திகதி தேசிய புலனாய்வுத்துறையின் தலைவர் சிசிர மெண்டிஸ், பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தரவுக்கு அறிவித்திருக்கும் கடிதம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தக் கடிதத்தை ‘தமிழன்’ செய்திச் சேவை வெளியிட்டுள்ளது.

முன்னதாக நேற்று நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியம் வழங்கியிருந்த சிசிர மெண்டிஸ் , தாக்குதல் அச்சுறுத்தல் குறித்து முன்னதாக எழுத்து மூலம் பொலிஸ்மா அதிபருக்குத் தெரியப்படுத்தியிருந்தார் எனக் கூறியிருந்தார்.

அதேவேளை, இன்று அறிக்கையொன்றை வெளியிட்ட பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தாக்குதல் குறித்து எந்த முன்னெச்சரிக்கையும் தனக்குக் கிடைக்கவில்லை எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆப்கானிய அகதிகளுக்கு நிவாரண உதவிகள் – முன்வந்துள்ள முல்லைத்தீவு மக்கள்

வவுனியாவில் தங்க வைக்கப்பட்டுள்ள ஆப்கானிய அகதிகளிற்கான ஒரு தொகுதி நிவாரணத்தை முல்லைதீவு தமிழ் மக்கள் வழங்க முன்வந்துள்ளனர்.அவர்களுக்கு முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த கிராம அபிவிருத்திச் சங்கங்கள் மற்றும் மாதர் அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் உலர் உணவு பொதிகளை வழங்க திட்டமிட்டிருந்தனர்.

அவர்களை உலர் உணவு கொடுக்கவிடாமல் அங்கு நின்ற இலங்கை இராணுவத்தினர் திருப்பி அனுப்பியுள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலய அதிகாரிகளின் அனுமதியைப் பெற்று உலர் உணவுகளை வழங்குமாறு இலங்கை இராணுவம் கூறியுள்ளது.

இதேவேளை முப்பது ஆண்டுகால போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் ஏதிலிகளாக வவுனியாவில் தங்கியுள்ள பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மக்களை மனிதாபிமான ரீதியில் பராமரிக்கவும் அதற்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளனர்.

உலர் உணவுகளைக் கையளிப்பதற்கான அனுமதியை கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தில் பெற அவர்கள் முற்பட்டுள்ளனர்.

இந்த அகதிகளின் செலவுகளுக்கு தலா 20 ஆயிரம் ருபாய்களை ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயம் வழங்கி வருகின்றது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த சுமார் ஆயிரத்து ஐநூறு அகதிகள் இலங்கையில் தஞ்சமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முஸ்லீம் அரசியல்வாதிகளை பதவி விலகக்கோரி உண்ணாநிலைப் போராட்டம்

கடந்த ஏப்பிரல் மாதம் இடம்பெற்ற தாக்குதலில் தொடர்புடைய முஸ்லீம் அரசியல்வாதிகள் பதவிவிலக வேண்டும் எனத் தெரிவித்து சிறீலங்கா நாடாளுமன்ற உறுப்பினரும், பௌத்த துறவியுமான அதுரலிய ராதான தேரர் சாகும்வரை உண்ணாநிலைப் போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.

இன்று (31) கண்டி தலதா மாளிகைக்கு முன்னால் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த போராட்டத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா, ஆளுநர் அசாத் சலே மற்றும் அமைச்சர் றிசாட் பத்யூடீன் ஆகியோர் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அமைச்சர் றிசாட் பத்யூடீன் பதவி விலகுவதற்கு தான் 24 மணி நேரம் அவகாசம் கொடுத்ததாகவும் அவர் விலகாததால் தற்போது இந்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாகவும் அதுரலிய தேரர் தெரிவித்துள்ளார்.

மோடியுடன் இணைந்து செயற்பட அமெரிக்கா தயார்

இந்தியா எங்களின் ஒரு நட்பு நாடு. பிரதமர் மோடியுடன் இணைந்து அமெரிக்கா செயற்படும் என அமெரிக்கா கூறியுள்ளது. இது தொடர்பாக வெளியுறவ அமைச்சின் செய்தித் தொடர்பாடல் அதிகாரி குறிப்பிடும் போது, கடந்த காலங்களில் நாம் இந்தியாவுடன் இணைந்து செயற்பட்டோம்.

வாஷிங்டனில் அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மோர்கன் ஆர்ட்டகஸ் நிருபர்களுக்கு பேட்டியளித்த போது, மோடியின் இரண்டாவது ஆட்சிக் காலத்தில் இந்திய வெளியுறவுத்துறை இந்தியாவுடன் உறவை மேம்படுத்த காத்திருக்கிறது என்று தெரிவித்தார்.