தெரிவுக்குழுவில் தமிழ் பிரதிநித்துவம் இல்லை – தமிழர்களே அதிகம் பாதிக்கப் பட்டுள்ளனர் என்பதை மூடிமறைக்கும் முயற்சி – ஜனநாயக மக்கள் முன்னணி

21/4 தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்றத் தெரிவுக்குழுவானது, பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை முழுமையாக பிரதிநிதித்துவப்படுத்தாத தெரிவுக்குழுவாகவே விளங்குகின்றது என ஜனநாயக மக்கள் முன்னணியின் அமைப்புச் செயலாளர் விநாயகமூர்த்தி ஜனகன் தெரிவித்தார்.

எனவே, பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு இக்குழுவின் ஊடாக நீதி நிவாரணம் கிடைக்குமா? என்ற சந்தேகமும் மேலோங்கியுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் விநாயகமூர்த்தி ஜனகன் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“ 21/4 தாக்குதல் குறித்து விசாரணை நடாத்தி, அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு, பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் சார்பில் – அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு பாராளுமன்ற உறுப்பினரும் உள்வாங்கப்படவில்லையென்பது வேதனைக்குரிய விடயமாகும்.

பயங்கரவாதிகளால் அரங்கேற்றப்பட்ட இந்த ஊழித்தாண்டவத்தில் மட்டக்களப்பு மற்றும் கொழும்பு மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ் மக்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பலர் உயிரிழந்தனர்.மேலும் சிலர் உடல் அவயவங்களை இழந்து சிகிச்சைபெற்றுவருகின்றனர்.

எனவே, இம்மக்களுடன் தொடர்பைபேணிய, அவர்கள் சம்பந்தமாக பகுதியளவேனும் தெரிந்து வைத்துள்ள மக்கள் பிரதிநிதிகளையே பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு உள்வாங்கியிருக்கவேண்டும். அதுவே வழமையும்கூட. எனினும், இங்கு அவ்வாறு நடைபெறவில்லை.

இதனால், அரசியல் நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றுவதற்காகவா தெரிவுக்குழு அமைக்கப்பட்டுள்ளது என்ற வினா தமிழ் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

அதுமட்டுமல்ல பயங்கரவாதத் தாக்குதல்களில் தமிழர்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற தகவலை உள்நாட்டுக்கும், அனைத்துலக சமூகத்துக்கும் தெரியப்படுத்தாமல் – மூடிமறைப்பதற்கான வியூகமாகக்கூட இது இருக்கலாமென கருத்துகள் முன்வைக்கப்பட்டுவருகின்றன.

இவ்வாறான செயற்பாடுகளானவை தமிழ் மக்களுக்கு அரசாங்கம்மீது இருக்கும் நம்பிக்கையை தவிடுபொடியாக்கிவிடும்.

அதேவேளை, தமிழ்ப் பிரதிநிதித்துவம் இல்லையென யார் சொன்னது? அதுதான் சுமந்திரன் உள்வாங்கப்பட்டுள்ளாரே என சிலர் நியாயம் கற்பிக்கக்கூடும்.

சுமந்திரன் எம்.பி. தெரிவுக்குழுவில் அங்கம் வகிப்பதானது ஒரு துறைசார்ந்த உள்வாங்கல் மாத்திரமே. மாறாக பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் சார்பில் தேர்வுசெய்யப்பட்ட பிரதிநிதியாக அவரை கருதமுடியாது. இதுவே தமிழ் மக்களின் நிலைப்பாடும்கூட.

சுருக்கமாக சொல்வதாயின், முன்னாள் அமைச்சர் அமரர். லக்ஸ்மன் கதிர்காமரை தமிழ் மக்களின் பிரதிநிதியாக அடையாளப்படுத்தி, தமிழ் மக்களுக்கும் இடம் வழங்கப்பட்டுள்ளது என சர்வதேச சமூகத்தை ஏமாற்றியதற்கு ஒப்பான செயலாகும். “ என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.