Home Blog Page 2772

அமைச்சர் மனோ கன்னியா, நீராவியடி ஆலய விவகாரங்கள் தொடர்பில் திருகோணமலை, முல்லைத்தீவு விஜயம்

சர்ச்சைக்குரிய திருகோணமலை கன்னியா வென்னீர் ஊற்று விநாயகர் ஆலய விவகாரம், முல்லைத்தீவு நீராவியடி விநாயகர் ஆலய விவகாரம் தொடர்புகளில் அமைச்சர் மனோ கணேசன் நாளை திங்கட்கிழமை திருகோணமலை, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு நேரடி விஜயம் செய்ய உள்ளார்.

திருகோணமலை மாவட்ட செயலாளர் என்.ஏ. ஏ. புஷ்பகுமாரவுக்கும், முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் ரூபவதி கேதீஸ்வரனுக்கும், தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன் விடுத்துள்ள பணிப்புரைகளின்படி இரண்டு மாவட்ட செயலகங்களிலும் அனைத்து தரப்புகளையும் அழைத்து இரண்டு கூட்டங்கள் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் காலை 8.30 மணிக்கு திருகோணமலை கன்னியா வென்னீர் ஊற்று விநாயகர் ஆலய விவகாரம் தொடர்பிலும், முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் பிற்பகல் 2.30 மணிக்கு முல்லைத்தீவு நீராவியடி விநாயகர் ஆலய விவகாரம் தொடர்பில் இக்கூட்டங்கள் நடைபெற உள்ளன.

ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கத்திற்கான அடிப்படை நோக்கங்களை கேள்விக்குறியாக்கும் சிறிலங்கா – இரா.சம்பந்தன்

ஐக்கிய நாடுகள் சபையின் உதவி செயலாளர் நாயகமும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் பயங்கரவாத ஒழிப்பு நிறைவேற்று சபையின் நிறைவேற்று அதிகாரியுமான மிஷேல் கோனின்சஸ் நேற்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனை கொழும்பில் சந்தித்து கலந்துரையாடினார்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையின் பிரேரணையின் அமுலாக்கதின் முக்கியத்துவம் தொடர்பில் கருத்து தெரிவித்த இரா.சம்பந்தன், “இந்த பிரேரணைகளின் கூட்டு பங்காளிகள் என்பதனை மறந்தவர்களாக அரசாங்கம் செயற்படுகின்றது என்றும் பிரேரணைகளின் முன் மொழிவுகளை அமுலாக்குவதற்கான நடவடிக்கைகள் இடம்பெறவில்லை என்பதனையும் சுட்டிக்காட்டினார்.
இந்த நிலைமை தொடர்பில் நாங்கள் அதிருப்தி அடைந்துள்ளோம் எனவும் இந்த நிலைமை நாட்டிற்கு நல்லதல்ல மிக விசேடமாக ஐக்கிய நாடுகள் சபைக்கு இந்த நிலைமை தொடர்ந்தால் அபகீர்த்தி ஏற்படும் எனவும் தெரிவித்த இரா.சம்பந்தன், ஒரு அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு வாக்குறுதிகளை வழங்கிவிட்டு அவற்றினை சற்றும் மதிக்காமல் செயற்படுமேயாகில் அத்தகைய நடவடிக்கையானது ஐக்கிய நாடுகள் சபை போன்ற அமைப்புகளின் உருவாக்கத்திற்கான அடிப்படை நோக்கங்களை கேள்விக்குறியாக்கும் செயற்பாடாகும் எனவும் வலியுறுத்தினார்.
மேலும் ஒரு புதிய அரசியல் யாப்பினை உருவாக்குவதற்காக இலங்கை பாராளுமன்றத்தினால் ஏக மனதாக நிறைவேற்றப்பட்ட பிரேரணையை இந்த அரசாங்கம் உதாசீனம் செய்துள்ளதனை சுட்டிக்காட்டிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இத்தகைய பிரரேரணைகளுக்கெதிரான அரசாங்கத்தின் செயற்பாடானது நல்லிணக்க முயற்சிகளிற்கும் கடந்த கால சம்பவங்கள் மீள் நிகழாமையை உறுதி செய்வதற்குமான பொறிமுறைகளில் பாரிய பின்னடைவினை ஏற்படுத்தியுள்ளது எனவும் தெரிவித்தார்.
மனித உரிமை பேரவையின் பிரேரணையினையும் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையினையும் உதாசீனம் செய்யும் வகையில் செயற்படுகின்றமையானது இந்த அரசாங்கம் பிறிதொரு அட்டவணையில் முன்செல்லுகின்றமைக்கான எடுத்துக்காட்டாகும் எனவும் சுட்டிக்காட்டினார்.
இங்கு கருத்து தெரிவித்த யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன், தற்போது அமுலில் உள்ள கடுமையான பயங்கரவாத தடைச்சட்டத்தின் பின்னணியை விளக்கிய அதேவேளை இந்த சட்டத்தினை பிறிதொரு சட்டத்தினால் மாற்றீடு செய்வது இந்த அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு கொடுத்த வாக்குறுதிகளில் பிரதானமான ஒன்றாகும் என்பதனையும் ஒரு வரைபு சட்டமூலம் இருக்கின்ற போதிலும் அது குறித்ததான முன்னெடுப்புகள் இன்னும் முற்றுப்பெறவில்லை என்பதனையும் சுட்டிக்காட்டினார்.
தமிழ் மக்கள் தமது உரிமைகளை கோரி அகிம்சை போராட்டங்களை நடாத்திய போது தமிழ் மக்களிற்கெதிரான வன்முறைகள் 1950 1970 மற்றும் 1980 களில் அரங்கேற்றப்பட்டது என்றும் இவை தமீழீழ விடுதலை புலிகள் தோற்றம் பெறுவதற்கு முன்னர் இடம்பெற்ற சம்பவங்கள் என்றும் எடுத்துக்காட்டிய இரா சம்பந்தன், சிங்கள தலைவர்களான பண்டாரநாயக்க மற்றும் டட்லி சேனாநாயக்க ஆகியோர் தமிழ் மக்களின் தலைவரான செல்வநாயகத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் தமிழீழ விடுதலை புலிகளின் உருவாக்கத்திற்கு முன் இடம்பெற்றவை ஆயினும் சிங்கள தலைவர்கள் அந்த ஒப்பந்தகளை மதித்து செயற்படவில்லை அவர்கள் அவ்வாறு மதித்து செயற்பட்டிருந்தால் இந்த நாட்டில் ஒரு யுத்தம் ஏற்பட்டிருக்காது என்பதனையும் வலியுறுத்தினார்.
தொடர்ச்சியாக கட்டமிடப்பட்ட வகையில் எமது உரிமைகளை மறுக்கும் செயலானது ஐக்கிய நாடுகளின் சமூக அரசியல் உரிமைகள் சாசனத்தினை மீறும் செயலாகும் என்பதனை தெளிவுபடுத்திய இரா சம்பந்தன், இன்று எமது விருப்பிற்கு மாறாக நாம் ஆளப்படுகின்றோம் என்றும் தெரிவித்தார்.
மேலும் மீண்டும் ஒரு யுத்தம் உருவாகுவதை நாம் அனுமதிக்க முடியாது யுத்தத்தினால் எமது மக்கள் பாரிய அழிவுகளை சந்தித்துள்ளார்கள் என்றும் தெரிவித்த இரா சம்பந்தன், சிங்கள மக்களிற்கு பாதிப்பு ஏற்படுவதனை நாம் விரும்பவில்லை என்றும் ஆனால் துரதிஷ்ட்டவசமாக இந்த நாடு ஒரு சில சிங்கள பௌத்த பேரினவாதிகளால் இயக்கப்படுகின்றமையும் அத்தகைய சக்திகளிற்கு எதிராக சிங்கள தலைவர்கள் செயற்படாமையும் வருந்தத்தக்க விடயமாகும் என்பதனையும் சுட்டிக்காட்டினார்.
மேலும் கருத்து தெரிவித்த எம் ஏ சுமந்திரன், இந்த நாட்டின் சட்டங்கள் இனங்களிற்கிடையே வித்தியாசமாக பிரயோகிக்கப்படுவதனையும் விசேடமாக சட்ட அமுலாக்க நிறுவனங்கள் சிங்கள பௌத்த கடும்போக்காளர்களின் செயற்பாடுகளை திட்டமிட்ட முறையில் அனுமதிப்பதனையும் எடுத்துக்காட்டினார்.
நாங்கள் பிரிவுபடாத பிரிக்க முடியாத ஒன்றிணைந்த இலங்கை தீவிற்குள் ஒரு நியாயமான அரசியல் தீர்வினை எதிர்பார்க்கின்றோம் இந்த தீர்வினை எமக்கு விரைவில் வழங்காத சந்தர்ப்பத்தில் எமது மக்கள் தமது நீண்டகால அரசியல் கோரிக்கைகள் தொடர்பில் மீள சிந்திக்க நிர்பந்திக்கப்படுவார்கள் என்பதனையும் இரா.சம்பந்தன் வலியுறுத்தினார் .
மேலும் இலங்கை அரசாங்கமானது தமது வாக்குறுதிகளை நிறைவேற்றுகின்றமையினை உறுதி செய்யும் வகையில் சர்வதேச சமூகம் மிக உத்வேகத்துடனும் ஆக்கபூர்வமாகவும் செயற்பட வேண்டும் எனவும் இரா.சம்பந்தன் வேண்டிக்கொண்டார்
தமது முன்மொழிவுகளில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களின் கருத்துக்களிற்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்பதனை உறுதி செய்த உதவி செயலாளர் நாயகம் அவர்கள் ஐ நாவின் ஆக்கபூர்வமான பங்களிப்பு தொடர்ந்தும் இருக்கும் என்பதனையும் உறுதி செய்தார்.
இச்சந்திப்பில் உதவி செயலாளர் நாயகத்துடன் ஐக்கிய நாடுகளிற்கான இலங்கை வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் மற்றும் சட்ட அதிகாரி அட்ரியா மற்றும் விசேட உதவியாளர் திரு லைலா ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்

குண்டுத் தாக்குதலுக்குளான கொச்சிக்கடை அந்தோனியார் ஆலயத்தில் மோடி வழிபாடு

இன்று காலை 11.00 மணியளவில் கொழும்பு, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட சில அமைச்சர்கள் வரவேற்பளிதனர்.

அங்கிருந்து ஜனாதிபதி செயலகத்தை நோக்கி புறப்பட்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி செல்லும் வழியில் கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி தற்கொலை குண்டுத் தாக்குதலினால் பாதிக்கப்பட்ட கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தோவலாயத்தையும் பார்வையிட்டதுடன் வழிபாடுகளிலும் ஈடுபட்டார். அத்துடன் கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய பங்குத்தந்தை மற்றும் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்தித் ஆண்டகையையும் சந்தித்துத்து தனது கவலையையும் இரங்கலையும் தெரிவித்தார்.download 2 குண்டுத் தாக்குதலுக்குளான கொச்சிக்கடை அந்தோனியார் ஆலயத்தில் மோடி வழிபாடு

இலங்கை வந்தடைந்தார் மோடி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சற்று முன்னர் கொழும்பு, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

அத்துடன் மோடிக்கான உத்தியோகபூர்வ வரவேற்ப்பு நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.Modiin Colombo 2 இலங்கை வந்தடைந்தார் மோடி

தெரிவுக்குழு பற்றிய சிறீலங்கா சபாநாயகரின் அறிக்கை

தெரிவுக் குழுவின் விசாரணைகளில் ஊடகங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதியை இரத்துச் செய்யும் அதிகாரம் சபாநாயகர் என்ற ரீதியில் எனக்கும் கிடையாது. அதேவேளை பாராளுமன்றில் ஜனாதிபதியின் அதிகாரங்களை கட்டுப்படுத்துவது எமது நோக்கமல்ல என்று சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.

தெரிவுக் குழுவினர் முன்னெடுக்கப்படும் விசாரணை தொடர்பாக மக்கள் மத்தியில் தவறான கருத்துக்கள் சென்றடைவதை தடுக்கவே ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தின் போது சிறீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவுக் குழுவின் செயற்பாடுகளை நிறுத்துமாறு கூறியிருந்தார். இது தொடர்பாக சபாநாயகர் வெளியிட்ட அறிக்கையே இதுவாகும்.

பயங்கரவாத ஒழிப்பிற்கு ஐ.நா.விடம் உதவி கோரும் ரணில்

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஐ.நா பயங்கரவாத ஒழிப்புக்கான குழுவினர் மற்றும் அதன் நிர்வாக இயக்குநர் மிச்சேல் கொன்னிஸுடன் கலந்துரையாடியுள்ளார். நேற்று (08) இடம்பெற்ற சந்திப்பின் போது, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கான வழிமுறை பற்றிக் கலந்துரையாடப்பட்டது.

இக்கலந்துரையாடலில் ஐ.நா.வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கர், லெயிலா எஸாரக்கி, ஆட்ரியா டி லாண்டரி மற்றும் கீதா சபர்வால் ஆகிய ஐ.நா. உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு வெளிநாட்டு தொழில்நுட்ப உதவி மற்றும் இதற்குத் தேவையான நிதியை பெறுவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

முறுகல் நிலையில் ரஸ்யா – அமெரிக்கா கடற்படை

ரஷ்ய போர்க்கப்பல் ஒன்றும், அமெரிக்கப் போர்க்கப்பல் ஒன்றும் மேற்குப் பசுபிக் பெருங்கடலில் மோதும் நிலைக்கு நெருங்கி வந்தன. இந்தச் சம்பவத்திற்கு இரு நாடுகளும் ஒன்றையொன்று குற்றஞ்சாட்டுகின்றன.

யு எஸ் எஸ் சான்சிலர்வில்லி போர்க்கப்படல், அட்மிரல் வினோகிராதோஃப் போர்க்கப்பலுக்கு முன் 50 மீற்றர் இடைவெளியில் கடந்து சென்றது என்று ரஷ்ய பசுபிக் கடற்படை தெரிவித்தது.

அமெரிக்க போர்க்கப்பலுடன் மோதாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் ரஷ்ய போர்க்கப்பலுக்கு ஏற்பட்டது.பிலிப்பைன்ஸ் கடலில் யு எஸ் எஸ் சான்சிலர் வில்லி போர்க் கப்பலை, ரஷ்ய அட்மிரல் வினோகிராதோஃப் 50 முதல் 100 அடிவரை நெருங்கி வந்ததாக அமெரிக்கா கூறியது.கடந்த நவம்பர் கருங்கடலிற்கு மேலே ரஷ்ய போர் விமானங்கள் தங்கள் விமானங்களை இடைமறித்தது பொறுப்பற்ற நடவடிக்கை என அமெரிக்கா தெரிவித்தது.

ஆனால் ரஷ்ய வான்பரப்பு மீறல்களை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை அதுவென ரஷ்யா கூறியது.

பாதுகாப்பு திணைக்கள அதிகாரியின் வாகனம் கனகராயன்குளத்தில் எரிந்து அழிந்தது

சிறீலங்கா அரச பாதுகாப்புத் திணைக்கள அதிகாரியின் வாகனம் ஒன்று வவுனியா கனகராயன்குளம் பகுதியில் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வாகனத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பப் பிரச்சனை ஒன்றை சரிசெய்ய முற்பட்டபோதே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக கனகராயன்குளம் பகுதி சிறீலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

எனினும் இந்த சம்பவத்தில் இருந்து ஆணையாளர் சந்திரரட்னா பலேகமவும் ஏனைய பயணிகளும் காயங்களின்றி தப்பியுள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

kanarajan பாதுகாப்பு திணைக்கள அதிகாரியின் வாகனம் கனகராயன்குளத்தில் எரிந்து அழிந்தது

மோடியின் தயவை நாடும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு

ஈழத் தமிழர்கள் உட்பட சிறுபான்மையின மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள், அரசியல் தீர்வு உள்ளிட்ட விவகாரம் தொடர்பாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமுக தீர்வு காண, சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, நாளை (09ஆம் திகதி) கொழும்பில் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்தியப் பிரதமர் மாலைதீவு விஜயத்தை முடித்து விட்டு இந்தியா செல்லும் வழியில் இலங்கை செல்லவுள்ளார்.  சிறிலங்கா அதிபர் சிறிசேனவின் அழைப்பை ஏற்று சிறிலங்கா செல்லும் மோடிக்கு, அங்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

மோடி, சிறிலங்கா அதிபர் சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஸ, சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் உள்ளிட்டோர் சந்தித்துப் பேசவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சுற்றுலாவிற்கான சர்வதேச விண்வெளி நிலையத்தை நாசா திறக்கவுள்ளது

நாசா  நிறுவனம் திறக்கவுள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தில் பயணிகள் ஒரு இரவு தங்குவதற்கு 35,000 அமெரிக்க டொலர்களை அல்லது 27,500 யூரோகளை அறவிடவுள்ளது. இது 2020ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது.

ஒரு வருடத்தில் 2 தடவைகள் பயணிக்க முடியும் என ஐ. எஸ்.எஸ் இன் துணை இயக்குநர் றொபின் கற்றென்ஸ் கூறினார்.

அமெரிக்க விண்வெளி ஓடத்தில் பயணித்து, 30 நாட்கள் வரை தனியார் விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்குவதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என நாசா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னர் அனுமதிக்காமல் இருந்த, வணிக முயற்சிகளுக்கும், சந்தைப்படுத்தலுக்கும் சர்வதேச விண்வெளி நிலையத்தை திறக்கவுள்ளது என இதன் தலைமை நிதி அதிகாரி ஜெஃப் டி விற் நியூயோர்க்கில் தெரிவித்தார்.

விண்வெளி சுற்றுலா செல்வோர் அங்கு செல்வதற்கான   மருத்துவ மற்றும் பயிற்சியினை உறுதிப்படுத்துவதோடு, எத்தனை பேர் செல்லலாம் என்பதையும் தனியார் வணிக நிறுவனத்தின் குழுவினரே தீர்மானித்துக் கொள்வர்.

நாசா விண்வெளி வீரர்களை, தங்கள் விண்கலங்கள் மூலம் விண்வெளி நிலையத்திற்கு அனுப்புவதற்கு ஒருமுறை பறக்க 60 மில்லியன் டொலர் கட்டணம் விதிக்கின்றன. இந்த தனியார் விண்வெளி நிறுவனங்கள் தனியார் விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அழைத்துச் செல்லவும் இதேயளவு கட்டணத்தை இந்த நிறுவனங்கள் வ#லிக்கும் என்று தெரிகின்றது.

எலோன் மஸ்ஸின் ஸ்பேஸ் எக்ஸ், நிறுவனம் தயாரித்துள்ள டிராகன் காப்ஸ்யூல் மற்றும் போயிங் கட்டமைத்து வரும் ஸ்ரார் லைனர்  விண்கலம் இரண்டையும் நாசா பயன்படுத்திக் கொள்ளும்.

இதுவரை விண்வெளி நிலையத்தை வணிக ரீதியாக பயன்படுத்துவதை தடுத்து வந்த நாசா, விண்வெளி வீரர்கள் ஆதாயம் தரக்கூடிய ஆய்வுகளில் பங்கு பெறுவதற்கும் தடை விதித்து வந்தது.

1998 இல் ரஷ்யாவின் உதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிலையம் நாசாவிற்கு சொந்தமானதல்ல.  இதை வர்த்தக நோக்கோடு செயற்படாது, விண்வெளி வீரர்களின் பயன்படுத்துவதற்காகவும் இதை தடை செய்திருந்தது.

தற்போது ரஷ்யாவுடனான வர்த்தக ஏற்பாடுகளை தளர்த்தியதால், இதை அமெரிக்கா அனுமதித்துள்ளது.  2001 ஆம் ஆண்டில் அமெரிக்கத் தொழிலதிபர் டென்னிஸ் டிட்டோ 20 மில்லியன் டொலர்களை ரஷ்யாவிற்கு வழங்கி தனது முதல் பயணத்தை மேற்கொண்டிருந்தார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தை வெளியிட்ட போது, இந்த விண்வெளி நிலையத்திற்கு வழங்கப்படும் நிதியுதவி 2025 ஆம் ஆண்டளவில்  நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2024ஆம் ஆண்டளவில் மீண்டும் சந்திரனுக்கு செல்ல முதல் முறையாக பெண் ஒருவரையும், ஆண் ஒருவரையும் அனுப்பவுள்ளதாக      நாசா அறிவித்திருந்தது.