மன்னாரில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மாதிரி கிராம வீட்டுத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை மாலை வைபவ ரீதியாக நடைபெற்றது.
மன்னார் பிரதேச சபை பிரிவிற்குட்பட்ட மன்னார் – தலைமன்னார் வரை சுமார் 12 மாதிரி வீட்டுத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இத்திட்டத்தில் 322 வீடுகள் அமைய இருக்கின்றன.
மன்னார் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் முகாமையாளர் செல்வராஜ் குலாஸ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வுகளில் மன்னார் பிரதேச சபை தவிசாளர் எம்.முஜாகீர் மற்றும் உறுப்பினர்கள், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
மலேசிய விமான நிலையத்தில் வைத்து 2017 ஆம் ஆண்டு நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் விஷம் தடவி கொலை செய்யப்பட்ட வட கொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன்னின் ஒன்றுவிட்ட சகோதரரான கிம் ஜோங் நாம் (Kim Jong Nam), அமெரிக்க உளவுப்பிரிவின் உளவாளி என வோல் ஸ்ட்ரீட் பத்திரிகை (Wall Street Journal) செய்தி வௌியிட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பிலான பல தகவல்களை அறிந்தவர் என பெயர் குறிப்பிடாத ஒருவரை மேற்கோள்காட்டி இந்த செய்தி வௌியிடப்பட்டுள்ளது.
கிம் ஜோங் நாமுக்கும் அமெரிக்க உளவு அமைப்பான CIA க்கும் இடையில் தொடர்பு காணப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளதாக குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இது தொடர்பில் பதிலளிக்க CIA மறுத்துள்ளது.
வட கொரியாவிலிருந்து வௌியேறி பல வருடங்களாக வேறு நாடுகளில் வாழ்ந்துவந்த கிம் ஜோங் நாம், சீனா உள்ளிட்ட நாடுகளின் பாதுகாப்புச் சேவைகளுடன் தொடர்புகளைப் பேணியதாகவும் Wall Street Journal செய்தி வௌியிட்டுள்ளது.
கிம் ஜோங் நாம், CIA உடன் தொடர்புள்ள ஒருவரை சந்திக்கும் நோக்கிலேயே 2017 ஆம் ஆண்டு மலேசியாவுக்கு வந்திருந்ததாகவும் பெயர் குறிப்பிடாத நபரை மேற்கோள்காட்டி அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், கிம் ஜோங் நாமை கொலை செய்யுமாறு வட கொரிய அதிகாரிகள் உத்தரவிட்டதாக தென் கொரிய மற்றும் அமெரிக்க அதிகாரிகள் குற்றஞ்சுமத்திய போதிலும் வட கொரியா குற்றச்சாட்டை மறுத்திருந்தது.
இந்தக் கொலைச்சம்பவம் தொடர்பில் மலேசிய மற்றும் இந்தோனேஷிய பெண்கள் இருவர் கைது செய்யப்பட்டிருந்ததுடன், அவர்கள் கடந்த மார்ச் மற்றும் மே மாதங்களில் விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பொன் சிவகுமாரன் என்ற மாணவன் யார்? அவர் குறித்து இன்றைய தலைமுறைகள் அறிந்துள்ளனவா? உண்மையில் எமது நிலத்தில் வளரும் ஒவ்வொரு குழந்தையும் சிவகுமாரன் பற்றி அறிந்திருக்க வேண்டும். முள்ளிவாய்க்காலுக்குப் பிந்தைய இன்றைய ஆக்கிரமிப்புக் காலத்தில் பொன் சிவகுமாரனின் தியாகத்தை போற்றியும் உணர்ந்தும் எமது தலைமுறைகள் வாழ வேண்டும். மாணவர்கள் மாத்திரமில்லை. எமது மக்களும் தலைமைகளும் இந்த தியாகியை உண்மையாய் உணர வேண்டும்?
யார் இந்த சிவகுமாரன்?
இந்த உலகில் தனியொருவனாய் போராடியவர்கள் வெகு சிலரே. பெருங்கதைகளில் வரும் தனித்த நாயகன் போல எவரும் போராட முன் வருவதில்லை. அநீதிகளை கண்டு அதற்கெதிராய் கொதித்தொழுந்து தனி ஒருவனாய் போராடிய வெகு சிலரில் பொன். சிவகுமாரனும் ஒருவர். சிவகுமாரன் ஈழப் போராட்டத்தின் முன்னோடி. ஈழ இளைஞர்களின் முன்னோடி. தமிழ் மாணவர் சமூகத்தின் முன்னோடி. இலங்கை அரசியலில் ஏற்பட்ட சமத்துவமின்மை அநீதிச் செயற்பாடுகளுக்கு எதிராக போராட்டத்தை மிகவும் முக்கிய காலமொன்றில் கையில் எடுத்தவர் சிவகுமாரன்.
இலங்கை சுதந்திரமடைந்து இரு வருடங்களின் பின்னர் அதாவது 1950இல் ஓகஸ்ட் 26ஆம் திகதி பொன். சிவகுாமரன் பிறந்தார். பொன்னுத்துரை அன்னலட்சுமி இவரது பெற்றோர். யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் உயர்தர மாணவனாக இவர் கல்வி பயின்றார். அக் காலத்தில் கல்வி தரப்படுத்தல் கொண்டுவரப்பட்டது. இது சிவகுாமரனுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. ஒரு மாணவனாய் தன்னுடைய மாணவ சமூகத்தின் உரிமை மறுக்கப்பட்டு தாம் ஒடுக்கப்பட்டபோது சிவகுமாரன் போராடத் துணிந்தார். கல்வித் தரப்படுத்தலுக்கு எதிராக தொடங்கிய மாணவர் பேரவையில் அவர் தன்னையும் இணைத்தார்.
ஈழ விடுதலைப் போராட்டத்தின் முதல் தாக்குதலையும் பொன். சிவகுமாரனே நடத்தினார். கல்வித் தரப்படுத்தலை மேற்கொண்ட சிறிமா ஆட்சியில் அமைச்சரவையில் இடம்பிடித்த யாழ் நகரத் தந்தை அல்பிரட் துரையப்பாவை கொல்வதற்கு அவரது வாகனத்தில் சிவகுமாரன் குண்டு பொருத்தினார். எனினும் துரையப்பா வருவதற்கு முன்பாகவே அந்தக் குண்டு வெடித்தமையால் அதிலிருந்து அவர் தப்பினார். பின்னர் துரையப்பா கொலை முயற்சிக்காக இரண்டு வருடங்கள் சிவகுமாரன் சிறையில் அடைக்கப்பட்டார்.
அதன் பின்னர் சிறையிலிருந்து வெளியேறிய சிவகுமாரன் தனித் தாக்குதல் முயற்சிகளுடன் உண்ணாவிரதப் போராடட்டம் போன்றவற்றில் தன்னை இணைத்தார். இளைஞர் பேரவையின் உண்ணாவிரதப் போராட்டங்களில் பங்கெடுத்தார். 1970களில் அப்போதைய சிறிமாவோ பண்டாரநாயக்க அரசில் அமைச்சரவையில் இடம்பெற்ற சோமவீர சந்திரசிறியின் வாகனத்திற்கு குண்டு வைத்தார் என்ற குற்றச்சாட்டில் சிவகுமாரன் கைதுசெய்யப்பட்டார்.
யாழ்ப்பாணம் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலைகள் சிவகுமாரனிடத்தில் கடும் சீற்றத்தை ஏற்படுத்தியது. படுகொலைகளை நடத்திய சந்திரசிறியை கொலை செய்ய வேண்டும் என்று சிவகுமாரன் வெளிப்படையாக கூறும் நிலையை அடையுமளவில் சினத்திற்குள்ளானார். இதனால் சிவகுமாரன் தேடப்படும் நபரானார். கோப்பாயில் தாக்குதல் ஒன்றை நடத்த திட்டமிட்ட சிவகுமாரன் காவல்துறையினரால் சுற்றிவளைக்கப்பட்டபோது சயனைட் அருந்தி தன்னை தானே மாய்த்துக்கொண்டார். யூன் 05 1974 இல் தன்னுடைய 24ஆவது வயதில் தன்னை மாய்த்த சிவகுமாரனின் 44 ஆவது நினைவுதினம் இன்றாகும்.
ஈழ விடுதலைப் போராட்டத்தில் முதன் முதலில் சயனைட் அருந்தி உயிர்நீத்தவர் சிவகுமாரனே. இவரே ஈழவிடுதலைப் போராட்டத்தின் முதல் மாவீரர் என்றும் முக்கியம் பெறுகிறார். தமிழ் மக்கள்மீது நிகழ்த்தப்பட்ட இலங்கை அரசின் அநீதிகளுக்கு எதிராக போராடும் வல்லமையை இளைஞர்களிடத்தில் சிவகுமாரன் ஏற்படுத்தினார். இவரது மரண நிகழ்வின்போது முதன் முதலில் பெண்கள் சுடலைக்கு வருகை தந்த மாற்றமும் இடம்பெற்றது. மாணவர்கள் இளைஞர்கள் மத்தியில் சிவகுமாரனின் மரணம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
ஈழத் தமிழ் மக்கள் இரண்டாம் தரப் பிரசைகளாகவும் ஈழத் தமிழ் மாணவர்கள் திட்டமிட்ட ரீதியில் ஒடுக்கப்பட்டபோதும் சிவகுமாரன் போராட்டத்தை கையில் எடுத்தார். இலங்கை அரசியலில் ஏற்பட்ட இனப்பிரச்சினையும் அதனால் ஏற்பட்ட கல்வித் தரப்படுத்தல் போன்ற செயற்பாடுகள் குறித்தும் தமிழ் மிதவாத தலைமைகளால் எதுவும் செய்ய முடியாதபோது சிவகுமாரன் அகிம்சைப் பாதையிலிருந்து விலகி ஆயுதப் பாதையில் சென்றார். தமிழ் அரசியல் தலைமைகளின் கோரிக்கைகளை ஆளும் சிங்களத் தரப்புக்கள் ஏற்றுக்கொள்ளாமல் ஒடுக்குமுறையை ஈழ மக்களிடத்தில் பிரயோகித்த போது சிவகுமாரன் ஆயுதப் பாதையை கையில் எடுத்தார்.
சிவகுமாரனின் வாழ்வையும் மரணத்தையும் கையில் எடுத்த போராட்டத்தையும் புரிந்துகொள்ள வேண்டியது அவசியமானது. சாதாரணமாக எல்லா மாணவர்களையும் போல தன் படிப்பில் மாத்திரம் அவன் கவனம் செலுத்தியிருக்கவில்லை. அவன் எல்லா மாணவர்களின் படிப்பிலும் கவனம் செலுத்தினான். அவன் எல்லா மாணவர்களின் நலனினும் கவனம் செலுத்தினான். அவன் ஈழ மக்களின் நலனின் கவனம் செலுத்தினான். தமிழ் மக்களின் கோரிக்கைகளை ஏற்காதுஇ தொடர்ந்தும் அவர்களை ஒடுக்கியபோது சிவகுமாரன் இப்படியான போராட்டம் ஒன்றே தேவை என உணர்ந்தான்.
சிவகுமாரனுக்கான உண்மையான அஞ்சலி எது?
கடந்த சில வருடங்களாக சிவகுமாரனின் நினைவு நாட்களும் அரசியல் கட்சிகளின் நிகழ்வுகளில் ஒன்றாகிவிட்டது. ஒரு மேதினத்தை அரசியல் கட்சி ஒன்று அணுகுவதைப் போல நமது தியாகிகளின் தினங்களும் தியாக நாட்களும் ஆகிவிட்டது. எமது அரசியல் தலைமைகள் சிவகுமாரனின் படத்திற்கு மாலையிட்டு தீபமேற்றி அஞ்சலி செலுத்துவதுடன் அரசியல் கட்சிகள் தமது கடமைகளை முடித்துக் கொள்ளுகின்றன? அவனின் தியாகத்திற்கும் அவனின் கனவுக்கும் என்ன செய்தீர்கள்? என்பதுதான் அவனின் கேள்வியாக உறுத்தும்.
சிவகுமாரனின் சினமும் கேள்வியும் எப்படி இருக்கும்? நான் அன்று எதிர்த்த சிங்களக் கொடிகளை இன்று ஏற்றுகிறீர்கள். எமது இனத்தை அழித்த அரசிற்கு ஆதரவு அளிக்கிறீர்கள். சர்வதேச கூண்டிலில் நிறுத்தி இன அழிப்புக்கு நீதியை பெற வேண்டியவர்களுடன் சுதந்திர தின நிகழ்விலும் போர் வெற்றி நிகழ்விலும் நின்று கொடி ஏந்துகிறீர்கள். எமது இனத்தை இன்றும் திட்டமிட்ட அறிவிக்கப்படாத இன அழிப்பில் கொன்றழிக்கும் அரசை காப்பாற்றுகிறீர்கள்? இப்படியெல்லாம் செய்துவிட்டு எனக்கு வந்து மாலை போடவும் தீபமேற்றவும் எப்படி மனம் வருகிறது? இதுவே அரசின் அநீதியிலும் பெரும் அநீதி. இப்படித்தான் இருக்கும்.
தனி ஒருவனாய் சிவகுமாரன் முன்னெடுத்த போராட்டமே பின்னர் ஈழவிடுதலை ஆயுதப் போராட்டமாக விரிந்தது. சிவகுமாரன் ஏன் ஆயுதத்தை கையில் எடுத்தான் என்பதையும் அவன் எப்படியான காலத்தில் தன் தாக்குதல்களை நடத்தினான் என்பதையும் இன்றைய நாளில் ஆராய்வது மிகவும் அவசியமானது. திட்டமிட்டு போராட்டத்தை சிதைக்க முற்படும் சூழ்ச்சிகள் நடக்கும் எமது மண்ணில் இன்றைய சூழிலில் சிவகுமாரனின் தனிமனித போராட்ட சரித்திரம் நினைவுகூரவும் மதிப்பிடவும் பாடங்களை கற்றுக்கொள்ளவும் வேண்டிய ஒன்றாகும்.
முஸ்லிம் அமைச்சர்கள் கூட்டாக பதவி விலகியமை ஏற்றுக் கொள்ள முடியாது. அதேவேளை மீண்டும் அமைச்சுப் பதவிகளை ஏற்றுக் கொள்ளுமாறு வற்புறுத்தவும் முடியாது. ஆனால் பதவி விலகி பிரிந்து செல்வதால் தீர்வினைக்காண முடியாது என்பதால் முஸ்லிம் உறுப்பினர்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்று அஸ்கிரிய மற்றும் மல்வத்துபீட மகாநாயக்க தேரர்கள் பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்களிடம் வலியுறுத்தியுள்ளனர்.
பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் அஸ்கிரிய , மல்வத்து பீட மகாநாயக்க தேரர்கள் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இன்று கண்டியில் இடம்பெற்றது.
இந்த சந்திப்பில் முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் கூட்டாக பதவி விலகியமை குறித்து மகா நாயக்க தேரர்களுக்கு விளக்கமளிக்கப்பட்ட போதே இவ்விடயம் குறித்து வலியுறுத்தப்பட்டுள்ளது.
குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளவர்கள் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். நாட்டில் பொது நீதி மற்றும் ஒரே கலாசாரம் என்பது அனைவருக்கும் பொதுவானது. எனவே இலங்கையில் இனங்களுக்கிடையிலும் மதங்களுக்கிடையிலும் ஒற்றுமை பேணப்பட வேண்டும். இதற்கு முஸ்லிம் தலைவர்கள் வழிகாட்டிகளாக இருக்க வேண்டும் எனவும் இதன்போது தேரர்கள் சுட்டிக்காட்டினர்.
அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ இலங்கைக்கு விஜயத்தை மேற்கொள்ளவிருப்பதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் அறிவித்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்காக அமெரிக்க மக்களின் நட்புறவை வெளிப்படுத்துவதே இந்த விஜயத்தின் பிரதான நோக்கமாகும் என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
எதிர்வரும் 24ஆம் திகதி இந்தியாவிற்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ள அவர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். அதனைத் தொடர்ந்து அவர் இலங்கைக்கு விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேஜர் ஜெனரல் ஜெவேகா ருவன் குலதுங்க சிறிலங்கா ஜனாதிபதியால் தேசிய புலனாய்வுத்துறையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னராக இப்பதவியை வகித்த சிசிர மெண்டிஸ் பதவி விலககியதையடுத்தே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. 19984 இல் படைத்துறை சேவையில் இணைந்த ருவன் குலதுங்க, 1985 ஆம் ஆண்டு டிசம்பர் 16 சிறிலங்கா இலககு காலாட்படையின் இரண்டாம் லெப்டினென்ட் ஆக நியமிக்கப்பட்டார்.
போர் நடைபெற்ற காலங்களில் யாழ்ப்பாணத்திலும் வன்னியிலும் கட்டளை அதிகாரியாகப் பணியாற்றினார். 2002 ஆம் ஆண்டு முதல் 2003 ஆம் ஆண்டு வரையான 53 காலாட்படை பிரிவு கேணல் நிலை அதிகாரியாகவிருந்தார்.
பின்னர் டிசம்பர் 2005 ல் அவர் காலாட்படை பிரிகேடியர் நியமிக்கப்பட்ட அவர் முகமாலை பகுதியில்செப்டம்பர் 2007 வரை பணியாற்றினார். யுத்தத்தின் போது யாழ்ப்பாண பிரதேச சிவில் விவகாரங்கள் மற்றும் நிருவாக ஒருங்கிணைப்பு நடவடிக்கை களுக்கான பொறுப்பதிகாரியாகவும் செயட்பட்டார்.
இவர் 2012 ல் 55 வது டிவிசனின் கட்டளை அதிகாரியாக இருந்தார்.
மேஜர் ஜெனரல் குலதுங்க, இலங்கை இராணுவ கல்லூரியின் பொறுப்பாளராவும் செயற்பட்டவர்.2018 இல் இலங்கை இலகு காலாட்படையின் Sri Lanka Light Infantry (SLLI) தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர்,
‘சட்டத்தை மீறி நடப்பவர்களை இலங்கை அரசு கண்டிக்கத் தவறியதே அண்மையில் நடைபெற்ற குண்டுவெடிப்புத் தாக்குதல்களுக்கு காரணம்’ என்றார்.
அவர் மேலும் பேசுகையில்,
இவ்வருட இறுதியில் இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது. அந்தத் தேர்தல் மிக முக்கியமான தீர்மானமிக்க தேர்தலாக அமையவுள்ளது.
இந்தத் தேர்தலில் தமிழ்பேசும் மக்கள் எவ்வாறான தீர்மானத்தை எடுக்கப்போகின்றார்கள் என்பதைப் பொறுத்துத்தான் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான முடிவுகள் நிச்சயிக்கப்படும் என்ற பின்னணி காணப்படுகின்றது.
இதன் பின்னணியில் அண்மையில் நடைபெற்ற தாக்குதல் சம்பவங்கள் மற்றும் தற்போது இலங்கையில் முன்னெடுக்கப்படுகின்ற பெரும்பான்மைத் தீவிரவாதம் குறித்தும் கலந்துரையாடினோம்” என்றார்.
கிழக்கு மாகாண ஆளுநராக இருந்த ஹிஸ்புல்லா பதவிவிலக்கியதைத் அடுத்து சிறிலங்கா ஜனாதிபதியால் கிழக்கு ஆளுநராக ஷான் விஜேலால் டி சில்வா நியமிக்கப்பட்டிருந்தார். நேற்று (10) திருகோணமலையில் உள்ள கிழக்குமாகாண ஆளுநர் அலுவலகத்தில் அவர் தனது கடமைகளை அதிகார பூர்வமாக பொறுப்பேற்றார்.
ஜப்பான் பிரதமரின் சிறப்பு ஆலோசகர் டாக்டர் ஹிரோட்டோ இஸுமி இம்மாத இறுதியில் சிறிலங்கா வரவுள்ளதாக அறியமுடிகின்றது.கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் மற்றும் சிறிலங்கா மீதான பயண ஆலோசனைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த ஜப்பானிய பிரதமர் ஷின்ஜோ அபே, சிறிலங்காவிற்கு சிறப்புத் தூதுவரை அனுப்ப முடிவு செய்துள்ளார்.
இவர் பிரதமர் ரணில் விக்கிரசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்துவர் எனவும் அறிய முடிகின்றது. ஜுன் 20 முதல் 22ஆம் திகதிக்குள் இந்தப் பேச்சுவார்த்தை இடம்பெறலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறப்புத் தூதரின் விஜயத்தின் போது, சிறிலங்கா மீதான பயண ஆலோசனையில் ஜப்பான் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன் மத்திய அதிவேக வீதி அமைக்கும் திட்டத்தில் உள்ள பிரச்சினைகள் தொடர்பாகவும், கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய கூட்டு ஒப்பந்தம் தொடர்பாகவும் விவாதிக்கப்படும் எனவும் கருதப்படுகின்றது.
இம்மாத இறுதியில் அமெரிக்க இராஜாங்க செயலரும் சிறிலங்கா விஜயம் செய்யவுள்ளார் என்பது இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டிய ஒரு விடயமாக அமைகின்றது.
சிறிலங்கா பிரதமர் சிங்கப்பூர் பயணமாகின்றார். எந்த நோக்கத்திற்காக செல்கின்றார் என அறியப்படாத நிலையில், சிறிலங்காவின் தற்போதைய அரசியல் குழப்ப நிலையைக் கருத்திற் கொண்டு செல்கின்றார் என்பது தெரியவருகின்றது. இந்த அறிவித்தலை பிரதமர் செயலக வட்டாரங்கள் வெளியிட்டுள்ளன.
நாடாளுமன்ற தெரிவுக்குழுவை ரத்துச் செய்யும் வரை அமைச்சரவைக் கூட்டங்களில் தான் கலந்து கொள்ளப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருக்கும் இந்நிலையில், நாடாளுமன்ற தெரிவுக் குழுவை ரத்துச் செய்யப் போவதில்லை என்று ஐ.தே.க. உறுப்பினர்கள் அடம் பிடிக்கும் போது, ரத்துச் செய்யும் தீர்மானத்தை நாடாளுமன்றம் தான் தீர்மானிக்க வேண்டும் என சபாநாயகர் கரு ஜெயசூரியா தெரிவித்திருக்கின்றார்.
ஜனாதிபதி பிரதம மந்திரி இருவருக்குமிடையிலான பனிப்போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, ரணில் விக்கிரமசிங்கவின் இந்த சிங்கப்பூர் விஜயம் அமைகின்றது. சிறிலங்கா அரசியலில் திடீர் திருப்பங்கள் சிலநாட்களில் ஏற்படக் கூடும் என நம்ப முடியும்.