இலங்கையின் 8வது சனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர்களைக் கோரும் அறிவிப்பு இலங்கையின் அரசியலமைப்புப்படி நவம்பர் மாதம் 7ம் திகதிக்கும் மார்கழி மாதம் 7ம் திகதிக்கும் இடையில் வெளியிடப்படல் வேண்டும்.
இந்தத் தேர்தல் முடிவும் 2020 இல் நடைபெறக் கூடிய சிறிலங்காப் பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளும் இலங்கையில் பழைய மாதிரி மீளவும் “எதேச்சதிகாரவிலக்கல்” (Autocratic and Exclusionary) கொள்கைகள் சிறீலங்காவால் முன்னெடுக்கப்படுவதற்கான வழிகளைத் தோற்றுவித்துவிடுமா? என்கிற அச்சத்தை மேற்குலகில் ஏற்படுத்தியுள்ளது.
இதனை“வெளிநாட்டுக் கொள்கைள்” (Foreign policy) ) ஆய்விதழில் ஜெவ்ரிவெல்ட்மென் (Jeffrey Feltman) என்னும் ஆய்வாளர் சித்திரை 2019 இல் ‘சிறீலங்காவின் சனாதிபதி தேர்தல் முன்னேற்றமா? பின்னடைவா? அல்லது செயலற்ற நிலையா? (Sri Lanka’s Presidential Elections : Progress, Regression or Paralysis?)’ என்னும் தலைப்பிலான கொள்கைமீளாய்வுக் கட்டுரை தெளிவாக எடுத்து விளக்குகிறது.
சிங்களப் பெரும்பான்மையினருக்கும் மற்றைய சிறுபான்மையினருக்குமான உறவுகளை மட்டுமல்ல உலகில் இலங்கையின் பூகோள அரசியலிலும் இம் முடிவுகள் பலத்த தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது இவரின் கருத்தாக உள்ளது. இந்த கொள்கை மீளாய்வுக் கட்டுரை எதிர்வரும் இலங்கையின் சனாதிபதி தேர்தல் உலக அரங்கிலும் தமிழர்களுக்கு மத்தியிலும் மிகமுக்கியமான ஒன்றாகவுள்ளது என்பதைத் தெளிவுபடுத்துகின்றது.
இதே கருத்து உலகின் பல ராஜதந்திரிகளுக்கு மத்தியிலும் அனைத்துலக ஆய்வாளர்களுக்கு மத்தியிலும் உள்ளது. இந்நிலையில் இந்தத் தேர்தலில் தமிழர்களின் ஈழத்தமிழர் உரிமைகள் பாதுகாப்பு என்பது அனைத்துலக நிலையில் முதன்மை பெற்றுக் காணப்படுகிறது. இந்த உலகளாவிய அக்கறைக்கு ஏற்றவகையில் ஈழத்தமிழர்களும் புலம்பெயர் தமிழர்களும் அனைத்துலகிலும் உள்ள தமிழினத்தவர்களும் இந்தத் தேர்தலில் ஈழத்தமிழர் உரிமைகள் பாதுகாப்பை எவ்வாறு முதன்மை நிலைக்கு முன்னெடுக்கப் போகிறார்கள் என்ற சிந்தனையும் செயல் திட்டங்களும் பொதுக்கருத்துக் கோளத்தின் வழி உருவாக்கப்பட்டாலே இவ்விடயத்தில் அக்கறையும் ஆர்வமும் உள்ள அனைத்துலக செயற்பாட்டாளர்களால் ஏற்புடைய நடவடிக்கைகளைத் தொடரமுடியும்.
« தமிழர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை தேர்தலுக்கான கொள்கை விளக்கங்களில் இணைக்க வைப்பது.
« ஈழத்தமிழர் உரிமை பாதுகாப்புக்கே முக்கியத்துவம் கொடுத்து அதனையே தேர்தலில் போட்டியிடுவதற்கான கொள்கையாக வெளிப்படுத்திப் பொது வேட்பாளர் ஒருவரைத் தமிழர்கள் நிறுத்தல்
« இன அழிப்பு இனத்துடைப்பு மனிதாயத்திற்கு எதிரான குற்றங்கள் காணாமல் போனவர்கள் குறித்த பொறுப்புக் கூறல் மனித உரிமை மீறல்கள் குறித்த தரவுகள் செய்திகள் சான்றாதாரங்கள் சாட்சிகளை கொண்ட ஆவணங்கள், படைகளால் பறிக்கப்பட்ட வீடுகள் காணிகள் வழங்கப்படாமலும் மக்களின் வாழ்வாதாரங்கள் மறுக்கப்பட்டும் மக்கள் தவிப்பது என்பவற்றை தேர்தல் காலத்தில் அதிக அளவில் வெளிப்படுத்தி நீதியும் புனர்வாழ்வும் புனர்நிர்மாணமும் இன்றிப் பத்தாண்டுகளாகத் தவிக்கும் மக்களுக்கான மேடையாக தேர்தல் களத்தை மாற்றுவது.
« ஈழத்தமிழர் உரிமைகள் என்பது மனிதஉரிமைகள் மீறலுடன் மட்டுமல்லாது ஈழத் தமிழர்களின் தாயகம் தேசியம் தன்னாட்சி என்கிற அவர்களின் பிறப்புரிமையையும் மறுக்கின்ற பறிக்கின்ற செயலாக உள்ளது என்பதைத் தேர்தல் காலத்தில் தெளிவாக்குவது.
26 வருடங்களாக சிறையில் வாடிக்கொண்டிருக்கும் செல்லப்பிள்ளை மகேந்திரனின் கைதும், நீதிமன்ற தீர்ப்பும் மற்றும் அவரது வலிகள் நிறைந்த வாழ்க்கை தொடர்பில் மூத்த சகோதரியான செல்லப்பிள்ளை புஷ்பவதி இலக்கு மின்னிதழுக்கு வழங்கிய நேர்காணல்
கேள்வி:- மகேந்திரன் எப்படி கைது செய்யப்பட்டார்?
பதில்:- மட்டக்களப்பு முறக்கொட்டாஞ்சேனை தேவாலய வீதி தான் எமது சொந்த இடம். 1993.09.27 அன்று, வந்தாறுமூலை மக்கள் குடியிருப்பு பிரதேசத்தில் இராணுவத்தினரும் காவல் துறையினரும் இணைந்து மேற்கொண்ட சுற்றி வளைப்பினைச் செய்தார்கள். அதன் பின்னர் யாரோ ஒருவரை வைத்து அடையாள அணி வகுப்பினைச் செய்தனர். இதன்போது தான் மகேந்திரனை சந்தேகத்தின் பேரில் கைது செய்து கொண்டு சென்றனர்.
எங்களின் குடும்பத்தில் அம்மா, அப்பா, சகோதரிகள் நாங்கள் நால்வர், சகோதரர்கள் இருவர் ஆகியோரே உள்ளனர். மகேந்திரனை இராணுவம் கொண்டு சென்றவுடன் அவரை விடுவிக்குமாறு கோரி இராணுவ முகாம் வரையில் சென்று கதறி அழுதோம். அவர்கள் விசாரணையின் பின்னர் காவல் துறையினரிடத்தில் ஒப்படைப்பதாகவும் நாளை அனுப்புகின்றோம் என்றும் கூறினார்கள்.
ஆனால் இன்று வரையில் வீடு திரும்பவில்லை. தற்போது வரையில் 26 வருடங்களாக அவர் சிறையிலேயே உள்ளார். அம்மாவும், அப்பாவும் இறக்கும்வரையில் மகேந்திரன் வந்திட்டாரா என்று கேட்டக்கொண்டே இருப்பார்கள். இறுதியில் அவர்களும் அவரைக் காணாமலேயே உயிர் நீத்தார்கள்.
அப்பா 2008இலும் அம்மா 2015இலும் உயிர்நீத்தார்கள். அம்மா இறந்தபோது மட்டும் மரணச்சடங்கில் கலந்து கொள்வதற்கு அவருக்கு அனுமதி கிடைத்திருந்தது. அப்போது மகேந்திரன் வந்திருந்தபோதும் எங்களுடைய முகத்தினை கூட நிமிர்ந்து பார்க்காது இருந்தார். அவருக்கான சொற்ப நேரம் நிறைவடைந்ததும் அவரை சிறை அதிகாரிகள் மீளவும் அழைத்துச் சென்று விட்டனர்.
கேள்வி:- அவர் மீது எத்தகைய குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு தீர்ப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன?
பதில்:- விசாரணை என்ற பெயரில் மகேந்திரனை அச்சுறுத்திய புலனாய்வு பிரிவினர், தமக்குத் தேவையான வகையில் குற்றச்சாட்டுக்களை அடுக்கி, அவரது கையொப்பத்தையும் பெற்றுக்கொண்டனர். அதற்கமைய நீதிமன்றத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டன. அவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது நாங்களும் பல்வேறு முயற்சிகளை செய்து மீட்க முயன்றோம். எங்களுடைய சொத்துகளை இழந்தாவது அவரை மீட்க சட்டத்தரணிகளை தேடி அலைந்தோம்.
எனினும் எம்மால் எதுவும் செய்ய முடியாது போய்விட்டது. அக்காலத்தில் எமக்கு கொழும்பு செல்வது முதல் அனைத்துமே பிரச்சினையாக இருந்தது. என்ன செய்வது என்று தெரியாது தவித்தோம். எமது தவிப்பு ஒருபக்கம் இருக்கின்ற போது, 1994ஆம் ஆண்டு கொழும்பு மேல் நீதிமன்றினால் (வழக்கு எண் HC/6894/94) ஆயுட்காலச் சிறைத் தண்டனையும், அதற்கு மேலதிகமாக 50 வருட கடூழியச் சிறைத் தண்டனையும் வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது. சற்றும் எதிர்பாராத இந்தத் தண்டனைத் தீர்ப்பு அம்மா, அப்பா உட்பட அனைவரையுமே வெகுவாக பாதித்தது.
பிறகு அடுத்த கட்டமாக என்ன செய்யலாம் என்று முயற்சிகளை எடுத்த போது கடவுள் பெயரால் சட்ட உதவி அமைப்பொன்று மகேந்திரனுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பினை மேன் முறையீடு செய்வதற்கு உதவியிருந்தது. CA190/95 என்ற எண்ணை கொண்ட வழக்கினை தாக்கல் செய்தது. இதனை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட கொழும்பு மேன் முறையீட்டு நீதிமன்றமானது, மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு சரியானதே என்று உறுதி செய்து தீர்ப்பளித்தது.
அதனைத் தொடர்ந்து அதே சட்ட உதவி அமைப்பானது, உச்ச நீதிமன்றத்தில் (SC(spl) LA No.165/2003) என்ற இலக்கத்தினை கொண்ட மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவைப் பரிசீலித்த உச்ச நீதிமன்றம், ஏற்கனவே உறுதி செய்யப்பட்ட ஆயுட்காலச் சிறைத் தண்டனை சரியானதே என்றும், மேலதிகமாக வழங்கப்பட்டிருந்த 50 வருட சிறைத் தண்டனையினை, 10 வருட காலத்துக்குள் அனுபவித்து முடிக்குமாறும் இறுதித் தீர்ப்பளித்தது.
இப்போது மகேந்திரனுக்கு 46 வயதாகிறது. 26 வருடங்களாக சிறைச்சாலையிலேயே உள்ளார். அவருக்கு காசநோய், நீரிழிவு, மாரடைப்பு என பல நோய்களால் அன்றாடம் கஷ்டமான நிலைமைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றார். அவரை நாங்கள் பார்க்கச் செல்கின்றபோது நாம் கவலை அடைந்து விடக்கூடாது என்பதற்காக அவற்றை மறைத்தாலும் அவரின் நிலைமைகளை எம்மால் உணரமுடிகின்றது.
கேள்வி:- விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்து செயற்பட்டிருந்தாரா?
பதில்:- நாங்கள் வளர்ந்ததெல்லாம் போர் சூழ்ந்த மட்டக்களப்பு மண்ணில் தான். அறியாத, தெரியாத 16 வயதில் தான் மகேந்திரன் விடுதலைப்புலிகளின் அமைப்பின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு சுமார் இரண்டு வருடங்கள் அவர்களுடைய பாசறைக்குள் இருந்தார்.
ஆனால் சிறுவனான மகேந்திரனை எந்தவொரு படையணி நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தவில்லை. ஆயுதம் கூட மகேந்திரன் தரிக்கவில்லை. குறித்த அமைப்பின் அன்றைய கிழக்கு மாகாண தளபதியாக செயற்பட்டிருந்த கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனின் பணிப்பின் பேரில், முகாமுக்குள் சிறு எடுபிடி வேலைகளையே செய்து வந்தார்.
எனினும், தொடர்ந்து அங்கிருக்க விரும்பாத மகேந்திரன் அவ்வமைப்பில் இருந்து முற்று முழுதாக விலகி தனது 18 ஆவது வயதில், வீட்டிற்கு வந்து கூலித்தொழில் புரிந்து அம்மாவிற்கு உதவியாக இருக்க ஆரம்பித்தார். அதன் பின்னர் திருமணம் செய்து கொள்ளவும் தீர்மானித்தார். அவர் கைது செய்யப்பட்டபோது அவருக்கு 19 வயதாகியிருந்தது. திருமணம் செய்து சரியாக ஏழு நாட்களே நிறைவாகியிருந்தது. அத்துடன் அவரின் திருமண வாழ்வே முற்றுப்புள்ளியாகிவிட்டது.
கேள்வி:- தமிழ் அரசியல் வாதிகளிடத்தில் மகேந்திரனின் விடுதலை குறித்து பேசினீர்களா?
பதில்:- ஆம், நாம் கிழக்கு, வடக்கு ஆளும்தரப்பு, எதிர்த்தரப்பு என அனைத்து அரசியல்வாதிகளிடத்திலும் மகேந்திரனின் விடயத்தினை கூறினோம். நேரடியாகவே சென்று பேச்சுக்களையும் நடத்தியிருந்தோம். ஆனால் இதுவரையில் எமக்கு எவ்விதமான தீர்வும் கிடைத்ததாய் இல்லை. அரசியல்வாதிகள் சிறைச்சாலைக்கு செல்கின்ற தருணங்களில் எல்லாம் மகேந்திரனை பார்த்து விட்டு எமக்கு அவரைப்பற்றி கூறுவார்கள். எனினும் மகேந்திரன் உட்பட சிறையில் வாடுகின்ற கைதிகளின் விடுதலை சம்பந்தமாக தமிழ் அரசியல்வாதிகள் கூடுதலாக கவனம் செலுத்த வேண்டும் என்றே கருதுகின்றோம்.
கேள்வி:- அவருடைய விடுதலை தொடர்பில் அடுத்த கட்டம் என்ன நடவடி க்கைகளை எடுக்கவுள்ளீர்கள்?
பதில்:- உயர் நீதிமன்றத்தினால் இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டதை அடுத்து எமக்குஎன்ன செய்வது என்று தெரியாத நிலையில் மகேந்திரனே தனக்கு அளிக்கப்பட்டுள்ள கடூழிய சிறைத்தண்டனை பற்றி குறிப்பிட்டடுள்ளார். அத்துடன் 12 ஆயிரம் விடுதலைபுலிகள் உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டுள்ள நிலையிலும், தான் பணியாற்றிய கட்டளைத்தளபதியே சுதந்திரமாக வெளியில் இருக்கின்ற நிலையிலும் தான் பதின்ம வயதில் செய்த செயற்பாடுகள் தவறாக இருப்பின் அவற்றை தயவாக மன்னித்து விடுமாறு கோரியிருந்தார். மேலும் தன்னிடத்தில் அச்சுறுத்திப்பெற்ற வாக்குமூலத்தின் அடிப்படையில் தான் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டது என்பதையும் கவனத்தில் கொண்டு பொதுமன்னிப்பில் விடுதலை அளிக்குமாறு சனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு 2017 ஆம் அண்டு கருணை மனுவொன்றை நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஊடாக அனுப்பியிருந்தார். ஆனால் அம்மனுவுக்கு கூட இதுவரையில் பதில் கிடைக்காத நிலையில் தான் இருக்கின்றோம்.
இந்நிலையில் நாம், அடுத்தகட்டமாக என்ன செய்வதென்று தெரியாது சிந்தித்துக் கொண்டிருக்கின்றோம். தன்னைக் கொலை செய்ய வந்த நபருக்கே மன்னிப்பளித்த சனாதிபதி 26வருடங்களாக இளமையை, உறவுகளை தொலைத்து நோய்வாய்ப்பட்டு எஞ்சிய ஆயட்காலத்தினை குடும்பத்தினருடன் கழிக்க விரும்பும் மகேந்திரனுக்கு மன்னிப்பளிக்க வேண்டும் என்று கோரி இறைவனை பிரார்த்திப்பதை தவிர எம்மால் என்ன செய்ய முடியும்.
அமெரிக்காவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்குப் பதிலடியாக ஈரானின் இராணுவக் கம்யூட்டர் அமைப்பின் மீது அமெரிக்கா சைபர் தாக்குதல் நடத்தியிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. கடந்த 2015இல் செய்து கொள்ளப்பட்ட அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா கடந்த ஆண்டு விலகியது. இதிலிருந்தே இரு நாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவுகின்றது.
ஈரான் மீது அமெரிக்கா பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்தது. ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் மற்ற நாடுகள் மீதும் தடை விதிப்பதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருந்தது.
மக்களை அச்சுறுத்தும் வகையிலான சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வரும் சட்ட விரோத ஆவா குழுவுக்கு அங்கீகாரம் அளித்து வடக்கினை தொடர்ந்து பதற்றத்திற்குள் வைத்திருக்க வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் முயல்கின்றாரா? என தமிழ்த் தேசிய அரசியல் அவதானிப்பு மையம் கேள்வி எழுப்பியுள்ளது.
இது சம்பந்தமாக இன்று மையம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
2009 யுத்த முடிவுக்கு வந்த பின்னரான காலப்பகுதியில் தமிழர் தாயகத்தை தொடர்ந்து இராணுவப் பொறிக்குள் வைத்திருப்பதற்கு சுமுக நிலைமைகளை குழப்புவதற்கு படையினரும், மஹிந்த தரப்பும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தார்கள். டக்ளஸ், சித்தார்த்தன், கருணா போன்றவர்களிடத்தில் தானே ஆயுதங்களை மீளப்பெற்றேன் என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தா கூறினாலும் இக்காலப்பகுதியில் “ஆவா” எனப்படும் சட்டவிரோத குழுவொன்று தலைதூக்க ஆரம்பித்தது.
திருட்டு, நபர்கள் மீதான தாக்குதல்கள், வாள்வெட்டுச் சம்பவங்கள் என அவ்வப்போது நிகழ்த்தி வந்தமையால் பொதுமக்கள் மத்தியில் அச்சமான மனநிலையொன்று தோற்றம்பெற்றது.
ஆறு பொதுமக்களுக்கு ஒரு படைவீரர் என்ற அடிப்படையில் இராணுவம் வடக்கில் நிலைகொண்டுள்ளது. இதனை விட காவல் துறையினர், புலனாய்வுப்பிரிவுகள் என இலட்சக்கணக்கானோர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கு மத்தியில் வெறுமனே கூரிய ஆயுதங்களை தாங்கிய இளம் வயதினரைக் கொண்ட சிறு குழுவொன்றால் தனது இலக்கை நோக்கி செயற்பாடுகளை முன்னெடுக்கவும் சுதந்திரமாக பயணிக்கவும் எவ்வாறு முடிகின்றது என்ற கேள்வி இங்கு எழுகின்றது. எந்தவொரு படைத்தரப்பாலும் அவர்களை அணுக முடியவில்லை. அவ்வாறு இந்த சட்டவிரோத குழுவினால் சுதந்திரமாக நடமாடுவதற்கும், செயற்படுவதற்கும் முடிகின்றது என்றால் அதன் பின்னணியில் யார் இருக்கின்றார்கள். அதனை யார் இயக்குகிறார்கள் யார் ஊக்கப்படுத்துகின்றார்கள்.
வடக்கில் சட்டம் ஒழுங்கு, தேசிய பாதுகாப்பு என அனைத்தையும் கட்டுக்குள் வைத்திருப்பதாக மார்பு தட்டிக் கூறும் படையினர் 12ஆயிரம் விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர்களை புனர்வாழ்வளித்து சமூகத்துடன் இணைத்துவிட்டு அவர்களை தமது கழுகுப்பார்வைக்குள் வைத்திருப்பதாக பெருமிதம் கொள்கின்ற படைத்தரப்பால் இந்த சட்டவிரோத சிறு குழுவை ஏன் கட்டுப்படுத்த முடியாது என்கின்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுகிறது.
இந்நிலையில், வடக்கின் ஆளுநர் பதவியை ஏற்றுக்கொண்ட சுரேன் ராகவன், முதலாவதாக பெருமெடுப்பில் வவுனியாவில் பௌத்த மாநாட்டினை நடத்தி வடக்கில் நடைபெறும் பௌத்த மயமாக்கலுக்கான தனது அங்கீகார சமிக்ஞையை காட்டி தென்னிலங்கையை திருப்திப்படுத்தினார்.
பின்னர், யூன் 14ஆம் திகதி, ஆவா குழுவுடன் நிராதியுதபாணியாக பேசுவதற்கு தயார் என்று அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு சரியாக ஆறு நாட்களின் பின்னர் யூன் 20ஆம் திகதி ஆவா குழு முதல்முறையாக உத்தியோக பூர்வமான தனது முத்திரை பதிக்கப்பட்ட கடித தலைப்பில் அந்த பேச்சு அழைப்புக்கான அறிவிப்பினை நிராகரித்து பதில் கடிதம் அனுப்பியுள்ளது.
தென்னிலங்கையில் இருக்கும் எத்தனையோ பாதாள உலக குழுக்களுக்கும், சமுக விரோதக்குழுக்களுக்கும் காவல்துறையினரோ, படையினரோ அல்லது அங்குள்ள அரசியல்வாதிகளோ இவ்வாறு பேச்சுக்கான அழைப்பினை இதுவரையில் விடுத்துள்ளனரா? அப்படியிருக்கையில் சட்ட விரோத குழுவொன்றுக்கு வடக்கின் ஆளுநர் எவ்வாறு பேச்சுவார்த்தைக்கான அழைப்பினை விடுத்தார்? எந்த சட்டம் இதற்கு அனுமதியளித்தது? போன்ற பல கேள்விகள் எழுகின்றன.
இவ்வாறு அழைப்பு விடுப்பதன் மூலம் சமூகத்தினை அச்சுறுத்தும் சட்டவிரோத குழுவொன்றுக்கு அங்கீகாரம் அளித்து அதனை கட்டமைக்கப்பட்ட ஒரு அணியாக மாற்றுவதற்கு ஆளுநர் விளைகின்றாரா என்ற பாரிய கேள்வி இல்லாமில்லை.
அதேநேரம் இந்தக்குழுவின் இயக்கும் சக்தியாக படையினரே இருப்பதாக தகவல்கள் உள்ள நிலையில் அக்குழுவிற்கு அங்கீகாரம் அளித்து வடக்கினை முழுமையான பதற்றத்திற்குள் வைத்திருந்து தமிழர் தாயகத்தை முழுமையாக இராணுவ பூமியாக மாற்றும் அரசின் திட்டத்தினை ஆளுநர் அரங்கேற்ற முற்படுகின்றாரா? என்ற கேள்வியும் உள்ளது.
சர்வதேச பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ்.உடன் தொடர்புடையவர்களையே 24 மணித்தியாலத்திற்குள் கட்டுக்குள் கொண்டுவர முடிந்த சிறீலங்க படையினருக்கு 2013 முதல் இப்போது வரையில் செயற்படும் ஆவா சிம்ம சொப்பனமாக இருக்கின்றதா? என்ற கேள்விக்கு இலங்கை அதிகார வர்க்கமும் அவர்களை பாதுகாத்து நிற்கும் தமிழ்த் தலைமைகளும் தான் பதிலளிக்க வேண்டும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பிரிட்டிஸிலிருந்து வெளிவரும் ஹெரால்ட் பத்திரிகை நடத்திய கருத்துக் கணிப்பில், 2019ஆம் ஆண்டின் உலகின் சக்தி வாய்ந்த தலைவர்கள் பட்டியலில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி முதலிடம் பிடித்துள்ளார்.
லண்டனிலிருந்து வெளியாகி வந்து கொண்டிருக்கும் பிரபல இதழான பிரிட்டிஸ் ஹெரால்ட், 2019ஆம் ஆண்டில் உலகின் சக்தி வாய்ந்த தலைவராக யாரை நினைக்கிறீர்கள் என்ற கேள்வியை தனது வாசகர்களிடம் கேட்டு அதற்கு வாக்கெடுப்பும் நடத்தியது.
இந்த வாக்கெடுப்பில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமர் புட்டின், சீன அதிபர் ஜின்பிங் உட்பட 25இற்கும் மேற்பட்ட உலகத் தலைவர்கள் பெயர் பட்டியல் இடம்பெற்றிருந்தன.
வாக்கெடுப்பில் 31% வாக்குகள் பெற்று மோடி முதலிடம் பிடித்தார். ரஸ்ய அதிபர் விளாடிமர் புடின் 29% வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தையும், அமெரிக்க அதிபர் ட்ரம் 21.9% வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தையும், சீன அதிபர் ஜின்பிங் 18.1% வாக்குகள் பெற்று நான்காம் இடத்தையும் பிடித்தனர்.
இதனையடுத்து ஜுலை 15ஆம் திகதி வரை பிரிட்டிஸ் ஹெரால்ட் பத்திரிகையின் முன்பக்க அட்டையில் மோடியின் படம் இடம்பெறவுள்ளது.
நிலத்தொடர்ச்சியற்ற மாகாணசபையை முதன்முதலில் கோரியவர் மறைந்த அமைச்சர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்கள். எனவே நிலத்ததொடர்ச்சி என்றபேச்வை பேசுவதற்கு அவர்களுக்கு எந்த உரிமையுமில்லை.இன்று த.தே.கூட்டமைப்பு கம்பெரலிய பனை சமுர்த்தி என்று அவற்றுக்குப் பின்னால் போகிறது ஆனால் மக்களின் தேவைகளை ஏறெடுத்துப்பார்ப்பதில்லை.
இவ்வாறு கல்முனை உண்ணாவிரதப்போராட்டத்தை நிறைவுசெய்யும் வைபவத்தில் கலந்துகொண்ட முன்னாள் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ்பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்:
கல்முனைப்பிரச்சினை தொடர்பாக நாம் பலதடவைகள் அரசுடன் பேசியிருக்கிறோம். இன்று அமைச்சர்கள் 03 மாதம் அவகாசம்கேட்டுள்ளனர். ஞானசார தேரர் ஒரு மாதம் கேட்டிருக்கிறார். உண்மையில் இந்தகாலஅவகாசம் என்பது அதிகம் என நினைக்கிறேன்.
ஒரே இரவில் அக்கரைப்பற்று பிரதேசசபையை மாநகரசபையாக மாற்ற தன்னை அரபுத்தமிழன் என்றழைக்கும் அதாவுல்லாவினால் முடியுமென்றால் இந்த சிறுபிரச்சினைக்கு மாதக்கணக்கில் அவகாசம் தேவையா? த.தே.கூட்டமைப்பினர் இதனைச்செய்திருக்கவேண்டும்.
மட்டக்களப்பில் நிலத்ததொடர்பற்ற ரீதியில் காத்தான்குடி ஏறாவுர் ஓட்டமாவடி போன்ற பிரதேசங்களை இணைத்து தனி மத்தி கல்வி வலயம் உருவாக்கமுடியுமென்றால் கல்முனைக்கு ஏன் முடியாது?
அசிங்கமான விடயம் என்னவென்றால் தமிழ்மக்கள் தமது தேவையை நிறைவேற்றக்கோரி உயிரைத்துச்சமென மதித்து தியாகம் செய்து உண்ணாவிரதம் செய்தவேளை அதற்கெதிராக முஸ்லிம்களைத் தூண்டி சத்தியாக்கிரகம் செய்தார்களே. அது அசிங்கம்.
அதனால் அவர்கள் சொல்கின்ற செய்தி என்னவென்றால் நீங்களும் நாங்களும் ஒருபோதும் சேர்ந்து வாழமுடியாது என்பதே.
சம்மாந்துறை நிந்தவூர் அட்டாளைச்சேனை போன்ற முஸ்லிம் பிரதேச செயலகப்பகுதிகளில் சிறுபான்மையாக தமிழ்மக்கள் வாழவில்லையா? ஏன் கல்முனை வடக்கில் தமிழ்மக்கள் செயலகத்தில் முஸ்லிம்கள் வாழமுடியாது?
முஸ்லிம் மக்களை இந்த நாட்டு முஸ்லிம் தலைவர்கள் தனிமைப்படுத்திவாழவைக்கும் போக்கில் செயற்படுகிறார்களா?
கிழக்கில் முஸ்லிம் காங்கிரசிடம் முதலமைச்சர் பதவியை தாரைவார்க்கின்ற கட்டத்தில் பேரம் பேசியிருக்கலாம். வடக்க கிழக்கு இணைப்பிற்கான ஆதரவு கல்முனை தமிழ் பிரதெசசெலயக தரமுயர்த்தல் பற்றியேல்லாம் கூட்டமைப்பு பேசியிருக்கலாம்.
சம்பந்தருடன் ஹக்கீமிற்கு நல்ல உறவு இருக்கிறது. நல்ல நட்பு உள்ளது. ஆனால் சம்பந்தர் ஹக்கீமிடம் தோற்றுப்போய்விட்டார். இன்று கம்பெரலிய பனை சமுர்த்தி என்று அவற்றுக்குப் பின்னால் போகின்ற த.தே.கூட்டமைப்பு, மக்களின் தேவைகளை ஏறெடுத்துப்பார்ப்பதில்லை. சலுகை அரசியலின் பின்னால் சென்றால் எதிர்காலம் இதைவிட மோசமாகும்.
மாந்தை வெலிஓய பிரதேசசெயலகப்பிரிவு அமைக்கப்பட்டது எப்படியென தெரியும். எனவே இந்தக்கல்முனை வடக்கு பிரச்சினையை தீர்க்க ஒரு வார காலம் போதும். கூட்டமைப்பின் 16 எம்பிக்களும் அழுத்தம் கொடுத்து மக்களின் அபிலாசையை பூர்த்தி செய்யுங்கள் என்றார்.
கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை உடனடியாக தரமுயர்த்துமாறு வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை கவனவீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அகில இலங்கை சைவ மகா சபையின் ஏற்பாட்டில், யாழ். மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக மாலை 2 மணிக்கு இப்போராட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்தில் இந்து மகா சபையினர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டு தமது கோரிக்கையை முன்வைத்தனர்.
இதன்போது,கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு கோரிய பதாதைகளை ஏந்தியவாறும், கோசங்களை எழுப்பியவாறும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேவேளை, கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு கோரி மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக முற்போக்கு தமிழர்கள் அமைப்பினால் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டம் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.
சிறீலங்காவின் தற்போதைய நிலைக்கு இரு தலைவர்கள் அதிகாரத்தைக் கொண்டிருப்பதே காரணம். அதற்கு 19 ஆவது திருத்தச்சட்டமே காரணம் எனவே அதனை முற்றாக அகற்றவேண்டும் என சிறீலங்கா அரச தலைவர் மைத்திரிபால சிறீசேனா தெரிவித்துள்ளார்.
நேற்று (23) பண்டாராநாயக்க சர்வதேச நினைவு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு பேசும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
நாட்டில் ஜனநாயகத்தை ஏற்படுத்த வேண்டுமெனில் 18 ஆவது மற்றும் 19 ஆவது திருத்தச்சட்டங்களை முற்றாக அகற்றவேண்டும். 19 ஆவது திருத்தச்சட்டம் நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் அமைதியிழந்துள்ளனர்.
இரண்டு அரசியல் தலைவர்கள் அதிகாரத்தை கொண்டுள்ளபோது நாட்டில் உறுதித்தன்மையை ஏற்படுத்த முடியாது.
இதனிடையே, அரச தலைவருக்கு அதிக அதிகாரங்களை வழங்கும் 18 ஆவது திருத்தச்சட்டத்தை முன்னாள் அரச தலைவர் மகிந்தா ராஜபக்சா கொண்டுவந்திருந்தார். பின்னர் அதன் அதிகாரங்களை குறைப்பதற்காக ரணில் தலைமையிலான அரசினால் கொண்டுவரப்பட்டதே 19 ஆவது திருத்தச்சட்டம். தற்போது இரண்டையும் அகற்றுவதற்காக மைத்திரி முயற்சி எடுக்கின்றார்.
அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் உறுப்பினர்கள் இருவர் யாழ். மாநகரசபை உறுப்பினர்களாக பதவியேற்கின்றனர்.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் யாழ்.மாநகர சபைக்குத் தெரிவான அஜந்தா தனபாலசிங்கம் மற்றும் சுகந்தினி சிறிதரன் ஆகியோர் கடந்த மே மாதம் தமது உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்து கொண்டனர்.
இதையடுத்து இந்த வெற்றிடத்திற்கு அக்கட்சியின் சார்பில் டெய்சி பிலிப் ஜெயரஞ்சன், தர்சிபா லவகீசன் ஆகியோரின் பெயர்கள் தேர்தல் ஆணையாளருக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இதனால் இவர்கள் இருவரினது பெயர்களும் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் ஏற்பட்ட இனப்பிரச்சினை காரணமாக புலம் பெயர்ந்து இந்தியாவில் வசிக்கும் ஈழத் தமிழர்களை ஓர் குற்றப் பரம்பரையினர் போல இந்திய அரசாங்கம் நடத்துகின்றது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளதாவது,
இலங்கை அரசின் தாக்குதலுக்கு அஞ்சி உயிர்ப் பாதுகாப்பிற்காக இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள ஈழத் தமிழர்களை இந்திய அரசு பலவழிகளிலும் அடக்கி, ஒடுக்கி வருகின்றது. தமிழ் நாட்டில் சந்தேக வழக்குகளில் கைதாகின்ற இளைஞர்களை விசாரணையின் பின் விடுதலை செய்யப்படுவது வழமையானதொன்று.
ஆனால் ஈழத் தமிழ் இளைஞர்கள் என்றாலே அவர்களை தீவிரவாதிகளாக சித்தரித்து, எந்தவித விசாரணையும் இன்றி, செங்கல்பட்டு சிறப்பு முகாமில் அடைத்து வந்தது. தற்போது அந்த முகாம் மூடப்பட்டதால், திருச்சியிலுள்ள சிறப்பு முகாம் என்ற பெயரில், திருச்சி மத்திய சிறைக்கு இடம் மாற்றி அங்கே அடைத்து வைத்திருக்கின்றது.
இந்த முகாமில் எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை. மலசலகூட வசதிகள்கூட ஒழுங்காக கிடைக்கவில்லை. இந்த முகாமில் உள்ள இளைஞர்கள் தமது இளமைக் காலம் முழுவதையும் கழிக்க வேண்டியுள்ளது. இதில் இருக்கும் கைதிகளுக்கு எப்போது விடுதலை கிடைக்கும் என்பது தெரியாத நிலையில் தமது வாழ்நாளைக் கழிக்கின்றனர்.
அண்மையில் இந்த முகாமிலிருந்த 3 இளைஞர்கள் தங்களை விடுதலை செய்யுமாறு கோரி சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தனர். அவர்களது நியாயமான கோரிக்கையை தமிழக அரசு புறக்கணித்து வருகின்றது.
ஐரோப்பிய நாடுகள், அவுஸ்திரேலியா, கனடாவிற்குக் குடிபெயர்ந்த ஈழத் தமிழர்களை அந்தந்த நாடுகள் வரவேற்று மதிப்பளித்து உதவிகள் அளித்து குடியுரிமை வழங்கியிருக்கின்றது. அகதிகளுக்கான ஐ.நா ஒப்பந்தத்தில் இந்தியா இதுவரை கையொப்பம் இடவில்லை.
ஆனால் இந்தியாவில் குடியுரிமை கோருகின்ற ஈழத்தமிழர்களின் விண்ணப்பங்களை 16 வாரங்களுக்குள் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டுமென்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை மத்திய அரசிற்கு உத்தரவு பிறப்பித்திருக்கின்றது.
எனவே இந்தியாவிலுள்ள ஈழத் தமிழர்களை, இந்திய அரசு இனியும் சந்தேகக் கண்ணோடு அணுகக் கூடாது. சிறப்பு முகாமில் இருக்கும் ஈழத் தமிழர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும். அத்தகைய முகாம்களை அடியோடு மூடவேண்டும் என்று வைகோ தெரிவித்துள்ளார்