இரு தலைமைத்துவ ஆட்சியே நாட்டின் இன்றைய நிலைக்குக் காரணம் – மைத்திரி

சிறீலங்காவின் தற்போதைய நிலைக்கு இரு தலைவர்கள் அதிகாரத்தைக் கொண்டிருப்பதே காரணம். அதற்கு 19 ஆவது திருத்தச்சட்டமே காரணம் எனவே அதனை முற்றாக அகற்றவேண்டும் என சிறீலங்கா அரச தலைவர் மைத்திரிபால சிறீசேனா தெரிவித்துள்ளார்.

நேற்று (23) பண்டாராநாயக்க சர்வதேச நினைவு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு பேசும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

நாட்டில் ஜனநாயகத்தை ஏற்படுத்த வேண்டுமெனில் 18 ஆவது மற்றும் 19 ஆவது திருத்தச்சட்டங்களை முற்றாக அகற்றவேண்டும். 19 ஆவது திருத்தச்சட்டம் நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் அமைதியிழந்துள்ளனர்.

இரண்டு அரசியல் தலைவர்கள் அதிகாரத்தை கொண்டுள்ளபோது நாட்டில் உறுதித்தன்மையை ஏற்படுத்த முடியாது.

இதனிடையே, அரச தலைவருக்கு அதிக அதிகாரங்களை வழங்கும் 18 ஆவது திருத்தச்சட்டத்தை முன்னாள் அரச தலைவர் மகிந்தா ராஜபக்சா கொண்டுவந்திருந்தார். பின்னர் அதன் அதிகாரங்களை குறைப்பதற்காக ரணில் தலைமையிலான அரசினால் கொண்டுவரப்பட்டதே 19 ஆவது திருத்தச்சட்டம். தற்போது இரண்டையும் அகற்றுவதற்காக மைத்திரி முயற்சி எடுக்கின்றார்.