ஆவா குழுவிற்கு அங்கீகாரம் வழங்கி தமிழர் தாயகத்தில் பதற்றத்தை நீடிக்க முயல்கிறாரா வடக்கின் ஆளுநர்

மக்களை அச்சுறுத்தும் வகையிலான சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வரும் சட்ட விரோத ஆவா குழுவுக்கு அங்கீகாரம் அளித்து வடக்கினை தொடர்ந்து பதற்றத்திற்குள் வைத்திருக்க வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் முயல்கின்றாரா? என தமிழ்த் தேசிய அரசியல் அவதானிப்பு மையம் கேள்வி எழுப்பியுள்ளது.

இது சம்பந்தமாக இன்று மையம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

2009 யுத்த முடிவுக்கு வந்த பின்னரான காலப்பகுதியில் தமிழர் தாயகத்தை தொடர்ந்து இராணுவப் பொறிக்குள் வைத்திருப்பதற்கு  சுமுக நிலைமைகளை குழப்புவதற்கு படையினரும், மஹிந்த தரப்பும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தார்கள். டக்ளஸ், சித்தார்த்தன், கருணா போன்றவர்களிடத்தில் தானே ஆயுதங்களை மீளப்பெற்றேன் என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தா கூறினாலும் இக்காலப்பகுதியில் “ஆவா” எனப்படும் சட்டவிரோத குழுவொன்று தலைதூக்க ஆரம்பித்தது.

திருட்டு, நபர்கள் மீதான தாக்குதல்கள், வாள்வெட்டுச் சம்பவங்கள் என அவ்வப்போது நிகழ்த்தி வந்தமையால் பொதுமக்கள் மத்தியில் அச்சமான மனநிலையொன்று தோற்றம்பெற்றது.

ஆறு பொதுமக்களுக்கு ஒரு படைவீரர் என்ற அடிப்படையில் இராணுவம் வடக்கில் நிலைகொண்டுள்ளது. இதனை விட காவல் துறையினர், புலனாய்வுப்பிரிவுகள் என இலட்சக்கணக்கானோர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கு மத்தியில் வெறுமனே கூரிய ஆயுதங்களை தாங்கிய இளம் வயதினரைக் கொண்ட சிறு குழுவொன்றால் தனது இலக்கை நோக்கி செயற்பாடுகளை முன்னெடுக்கவும் சுதந்திரமாக பயணிக்கவும் எவ்வாறு முடிகின்றது என்ற கேள்வி இங்கு எழுகின்றது. எந்தவொரு படைத்தரப்பாலும் அவர்களை அணுக முடியவில்லை. அவ்வாறு இந்த சட்டவிரோத குழுவினால் சுதந்திரமாக நடமாடுவதற்கும், செயற்படுவதற்கும் முடிகின்றது என்றால் அதன் பின்னணியில் யார் இருக்கின்றார்கள்.  அதனை யார் இயக்குகிறார்கள் யார் ஊக்கப்படுத்துகின்றார்கள்.

வடக்கில் சட்டம் ஒழுங்கு, தேசிய பாதுகாப்பு என அனைத்தையும் கட்டுக்குள் வைத்திருப்பதாக மார்பு தட்டிக் கூறும் படையினர் 12ஆயிரம் விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர்களை புனர்வாழ்வளித்து சமூகத்துடன் இணைத்துவிட்டு அவர்களை தமது கழுகுப்பார்வைக்குள் வைத்திருப்பதாக பெருமிதம் கொள்கின்ற படைத்தரப்பால் இந்த சட்டவிரோத சிறு குழுவை ஏன் கட்டுப்படுத்த முடியாது என்கின்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுகிறது.

இந்நிலையில், வடக்கின் ஆளுநர் பதவியை ஏற்றுக்கொண்ட சுரேன் ராகவன், முதலாவதாக பெருமெடுப்பில் வவுனியாவில் பௌத்த மாநாட்டினை நடத்தி வடக்கில் நடைபெறும் பௌத்த மயமாக்கலுக்கான தனது அங்கீகார சமிக்ஞையை காட்டி தென்னிலங்கையை திருப்திப்படுத்தினார்.

பின்னர், யூன் 14ஆம் திகதி, ஆவா குழுவுடன் நிராதியுதபாணியாக பேசுவதற்கு தயார் என்று அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு சரியாக ஆறு நாட்களின் பின்னர் யூன் 20ஆம் திகதி ஆவா குழு முதல்முறையாக உத்தியோக பூர்வமான தனது முத்திரை பதிக்கப்பட்ட கடித தலைப்பில் அந்த பேச்சு அழைப்புக்கான அறிவிப்பினை நிராகரித்து பதில் கடிதம் அனுப்பியுள்ளது.

தென்னிலங்கையில் இருக்கும் எத்தனையோ பாதாள உலக குழுக்களுக்கும், சமுக விரோதக்குழுக்களுக்கும் காவல்துறையினரோ, படையினரோ அல்லது அங்குள்ள அரசியல்வாதிகளோ இவ்வாறு பேச்சுக்கான அழைப்பினை இதுவரையில் விடுத்துள்ளனரா? அப்படியிருக்கையில் சட்ட விரோத குழுவொன்றுக்கு வடக்கின் ஆளுநர் எவ்வாறு பேச்சுவார்த்தைக்கான அழைப்பினை விடுத்தார்? எந்த சட்டம் இதற்கு அனுமதியளித்தது? போன்ற பல கேள்விகள் எழுகின்றன.

இவ்வாறு அழைப்பு விடுப்பதன் மூலம் சமூகத்தினை அச்சுறுத்தும் சட்டவிரோத குழுவொன்றுக்கு அங்கீகாரம் அளித்து அதனை கட்டமைக்கப்பட்ட ஒரு அணியாக மாற்றுவதற்கு ஆளுநர் விளைகின்றாரா என்ற பாரிய கேள்வி இல்லாமில்லை.

அதேநேரம் இந்தக்குழுவின் இயக்கும் சக்தியாக படையினரே இருப்பதாக தகவல்கள் உள்ள நிலையில் அக்குழுவிற்கு அங்கீகாரம் அளித்து வடக்கினை முழுமையான பதற்றத்திற்குள் வைத்திருந்து தமிழர் தாயகத்தை முழுமையாக இராணுவ பூமியாக மாற்றும் அரசின் திட்டத்தினை ஆளுநர் அரங்கேற்ற முற்படுகின்றாரா? என்ற கேள்வியும் உள்ளது.

சர்வதேச பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ்.உடன் தொடர்புடையவர்களையே 24 மணித்தியாலத்திற்குள் கட்டுக்குள் கொண்டுவர முடிந்த சிறீலங்க படையினருக்கு 2013 முதல் இப்போது வரையில்  செயற்படும் ஆவா சிம்ம சொப்பனமாக இருக்கின்றதா? என்ற கேள்விக்கு இலங்கை அதிகார வர்க்கமும் அவர்களை பாதுகாத்து நிற்கும் தமிழ்த் தலைமைகளும் தான் பதிலளிக்க வேண்டும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.