ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப் படையில் சிறீலங்கா படையினருக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ள செயல் உலகத் தமிழ் மக்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளதுடன், ஐக்கிய நாடுகள் சபையின் நடவடிககை மீதான நம்பிக்கையீனத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தமிழ் மக்கள் மீதான போரில் சிறீலங்கா படையினர் பெருமளவான மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்களில் ஈடுபட்டிருநததாக அனைத்துலக மனித உரிமை அமைப்புக்கள் குற்றம் சுமத்தியிருந்தன.
சிறீலங்கா படையினரின் பல தளபதிகள் மீது அனைத்துலக நாடுகளில் வழக்குகளும் பதிவுசெய்யப்பட்டுள்ளது. ஆனால் அதனை எல்லாம் புறம்தள்ளி தென்சூடானில் அமைதிப் பணிகளில் ஈடுபடுவதற்காக 61 சிறீலங்கா இராணுவத்தினரை ஐ.நா மீண்டும் அழைத்துள்ளது.
ஐ.நாவின் அழைப்பை ஏற்று 11 அதிகாரிகள் உட்பட 61 சிறீலங்கா படையினர் இன்று (03) தென்சூடானுக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாக சிறீலங்கா இராணுவம் தெரிவித்துள்ளது.
தன்னை படுகொலை செய்ய முயற்சி நடைபெறுவதாகவும், அதனை புலனாய்வு அதிகாரிகள் தனக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் சிறீலங்கா அரச தலைவர் மைத்திரிபால சிறீசேன தெரிவித்துள்ளார்.
பொலநறுவைப் பகுதியில் மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் சிங்கள மக்களுக்கு காணிகளுக்கான பத்திரங்களை வழங்கும் விழாவில் கலந்துகொண்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
நான் போதைப் பொருள் கடத்துபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோன். எனவே தான் அவர்கள் என்னைக் கொல்ல முயற்சிக்கின்றனர். இந்த முயற்சிக்காக அவர்கள் பெருமளவான பணத்தைச் செலவிட்டுள்ளனர்.
சமூகவலைத்தளங்களும் போதைப் பொருள் கடத்துபவர்களுக்கும், அதனை பயன்படுத்துவோருக்கும் ஆதரவாக பிரச்சாரங்களை மேற்கொள்கின்றன. எனது முயற்சியை முறியடிப்பதற்கு நீதிமன்றத்திற்கும் பலர் செல்கின்றனர்.
ரணில் தலைமையிலான அரசும், எதிர்க்கட்சியும், அரசசார்பற்ற நிறுவனங்களும் என்னைக் குறிவைக்கின்றன என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, போதைப்பொருள் பாவனக்கு எதிராக மரணதண்டனை சட்டத்தை மைத்திரி பிரகடனம் செய்தபோது அதனை அமெரிக்கா தலைமையிலான மேற்குலகமே கடுமையாக எதிர்த்து வந்தது. இந்த நிலையில் மைத்திரி மீதான கொலைக்குற்றசசாட்டுக்கள் சிறீலங்காவின் நிலையை மேலும் மோசமாக்கியுள்ளது.
ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பாக பாதுகாப்பு முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்னான்டோ மற்றும் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்ட பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தர ஆகியோர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டனர்.
குறித்த இருவரும் இன்று காலை 10 மணிக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
இதேவேளை பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னான்டோ, உடல் நலக் குறைவு காரணமாக தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டமையினால், திங்கட்கிழமை முன்னிலையாவதாக அறிவித்திருந்தார்.
எனினும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஹேமசிறி பெர்னான்டோவிடம் குற்றப்புலனாய்வினர் வாக்குமூலத்தைப் பெற்றுக் கொண்டு அவரை கைது செய்ததாக ருவான் குணசேகர குறிப்பிட்டார்.
இவரைத் தொடர்ந்து கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்ட பூஜித ஜெயசுந்தரவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பொலிஸ் மருத்துவமனைக்கு சென்ற குற்றப் புலனாய்வுத் திணைக்கள, அதிகாரிகள் தமது பொறுப்பில் எடுத்துள்ளதாகவும் ருவான் குணசேகர குறிப்பிட்டார்.
ஈஸ்டர் தாக்குதல் பற்றித் தெரிந்திருந்தும் அதற்குரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று இவர்கள் மீது குற்றஞ் சுமத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் இருவரையும் கைது செய்யுமாறு சட்ட மா அதிபர், பதில் பொலிஸ் மா அதிபருக்கு நேற்று அறிவித்திருந்தார். இதன் அடிப்படையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் ஆயுள்தண்டனை அனுபவித்து வரும் 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநருக்கு நினைவூட்டல் கடிதம் அனுப்ப தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்து வரும் பேரறிவாளன், முருகன், நளினி உட்பட 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநருக்கு மேற்படி நினைவூட்டல் கடிதம் அனுப்ப தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்த நிலையில் தமிழக அரசு நினைவூட்டல் கடிதத்தை அனுப்ப முடிவு செய்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் ெராபர்ட் பயாஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் 2012-ம் ஆண்டு உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
25 ஆண்டுகளுக்கு மேலாக தாங்கள் இந்த தண்டனையை அனுபவித்து வருவதாகவும், கருணை அடிப்படையிலும், மனிதாபிமானம் அடிப்படையிலும் தங்களை விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் எனவும் அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அந்த வழக்கு கடந்த மாதம் விசாரணைக்கு வந்த போது, தமிழக அமைச்சரவைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதனை ஆளுநருக்கு அனுப்பி வைத்திருப்பதாகவும், ஆளுநர்தான் இன்னும் முடிவு எடுக்காமல் இருக்கிறார் எனவும் இது குறித்து விளக்கம் கேட்டு தெரிவிப்பதாகவும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு நேற்றைய திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் நிர்மல் குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. முக்கூட்டியே விடுதலை செய்யக் கூறும் வழக்குகள் ஏற்கனவே ஜுலை 30-ம் திகதி பட்டியலிடப்பட்டுள்ளன.
அந்த வழக்குடன் ராபர்ட் பயாஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் வழக்கையும் சேர்த்து விசாரிக்க வேண்டும் என்றும், இதற்கிடையில் ஆளுநரிடம் தமிழக அரசு அனுப்பிய தீர்மானத்தில் என்ன முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பாக ஒரு நினைவூட்டல் கடிதம் அனுப்ப இருப்பதாகவும், அதற்கு ஆளுநர் ஆளுநர் அலுவலகம் தெரிவிக்கும் பதிலை நீதிமன்றத்தில் தெரிவிப்பதாகவும், தமிழக அரசு கூறியுள்ளது.
இதன் மூலம் ஜுலை 30-ம் திகதி வழக்கு விசாரணைக்கு வரும் சூழ்நிலையில் தமிழக அரசு நிறைவேற்றிய தீர்மானம் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில் ஆளுநர் மாளிகை என்ன முடிவு எடுத்துள்ளது என்ற விவரத்தை கேட்டு பெற்று நீதிமன்றத்தில் தெரிவிப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது.
ஏற்கனவே தமிழக அமைச்சரவை அனுப்பியுள்ள தீர்மானத்தின் அடிப்படையில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்கள். எனவே அவர்களை கருணை அடிப்படையிலும், மனிதாபிமானம் அடிப்படையிலும் விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி இருப்பதாகவும், அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் 7 பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசு முடிவு எடுக்கும் என்றும் அந்த தீர்மானம் அனுப்பி வைக்கப்பட்டது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அனுப்பிய தீர்மானத்தில் ஆளுநர் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று நளினி ஒரு வழக்குத் தொடர்ந்தார்; அது நிலுவையில் இருந்து வருகிறது. அந்த வழக்கு நேற்று மற்றோரு அமர்வில் விசாரணைக்கு வந்த போது அரசின் நிலைப்பாடை தெரிவிக்க 4 வார காலம் அவகாசம் கேட்கப்பட்டது.
ஆனால் 2012-ம் ஆண்டு தொடரப்பட்ட இந்த ெராபர்ட் பயாஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் தொடர்ந்த வழக்கு நீதிபதி எம்.எம்.
சந்தர் அமர்வில் விசாரணைக்கு வந்த போது ஆளுநர் மாளிகையில் அனுப்பியுள்ள தீர்மானம் தொடர்பாக நினைவூட்டல் கடிதம் அனுப்ப இருப்பதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதையும் நீதிபதிகள் பதிவு செய்து கொண்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
இந்த நினைவூட்டல் கடிதத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 2014-ம் ஆண்டு ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது நிறைவேற்றப்பட்ட தீர்மானம், அதற்கு பிறகு கடந்த ஆண்டு தமிழக அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானம் இவை இரண்டு தொடர்பாகவும் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.
சிறிலங்காவில் படைத் தளத்தை நிறுவும் நோக்கமோ திட்டமோ அமெரிக்காவிற்கு இல்லை என்று சிறிலங்காவிற்கான அமெரிக்கத் தூரவர் அலெய்னா ரெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்ட சோபா உடன்பாட்டு வரைபை, கொழும்பு ஊடகங்கள் பலவும் வெளியிட்டமையினால் அவர் இத்தகவலை தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நாட்களில் அமெரிக்காவிற்கும், சிறிலங்காவிற்குமிடையிலான இருதரப்பு பாதுகாப்பு ஒப்பந்தமான “சோபா“வில் காணப்படும் சில சரத்துக்கள் இலங்கையின் இறையாண்மைக்கு பாதகமாகக் காணப்படுகின்றன என்று ஊடகங்களில் வெளியிடப்பட்ட கருத்துக்களுக்கு பதிலளித்தே இந்தத் தகவலை, அமெரிக்க தூதுவர் வெளியிட்டிருந்தார்.
இது ஒரு தவறான தகவலாகும். அமெரிக்காவிற்கு இப்படியானதொரு திட்டமோ நோக்கமோ கிடையாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
எந்தவொரு உடன்பாடும் சிறிலங்காவின் இறையாண்மையைப் பாதிக்காது என்றும் அவர் தெரிவித்தார்.
சிறிலங்காவில், நீண்டகாலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டுமென, யாழ். மத்திய பேருந்து நிலையம் முன்பாக நேற்று ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டுமென்றும், பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க வேண்டும் என்றும் பிரதானமாக வலியுறுத்தப்பட்டது. அத்துடன் சகாதேவனின் மரணத்திற்கு நீதி வேண்டுமென்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்தப் போராட்டத்தில் தமிழ் தேசிய முன்னணியின் பொதுச் செயலாளரான செல்வராசா கஜேந்திரன், கட்சியின் சட்ட ஆலோசகர் சட்டத்தரணி சுகாஷ், கட்சியின் மகளிர் அணித் தலைவி உட்பட கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள், அரசியல் கைதிகளின் உறவினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
வவுனியா விமானப்படைத் தளத்தில், உலங்கு வானூர்திகளை பழுது பார்க்கும் பிரிவு ஒன்றை உருவாக்குவதில் ரஷ்ய அரசுத்துறை நிறுவனமாக ‘Rosoborone’ , பாதுகாப்பு அமைச்சிடம் ஆலோசனை கோரியுள்ளது.
உள்நாட்டு பிரதிநிதி ஊடாக இந்த அனுமதியை பாதுகாப்பு அமைச்சிடம் கோரியதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த பிரிவிற்கு 19 மில்லியன் டொலர் முதலீடு செய்ய ரஷ்யா முடிவு செய்துள்ளது. 40 மில்லியன் டொலர் செலவில் இந்தத் திட்டத்தை நிறைவேற்ற முடியும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்தது.
இந்தத் திட்டம் பயனற்றதொன்று என்றும், இதனால் இந்தத் திட்டம் நிறுத்தப்பட்டது என்றும் முன்னாள் விமானப்படைத் தளபதி கூறியிருந்தார்.
பெரிய தொகையினை செலவு செய்து இந்த முயற்சியை மேற்கொண்டாலும், ஏனைய நாடுகள் தங்கள் உலங்கு வானூர்திகளை இங்கு அனுப்புவதற்கான வாய்ப்புகள் இல்லை என்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதுபோன்ற மையங்கள் தற்போது இந்தியாவிலும், வியட்நாமிலும் இயங்குகின்றன.
விமானசேவைக் கட்டணங்களைக் குறைக்குமாறு சிறிலங்கன் விமான சேவைக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார். அலரி மாளிகையில் நேற்று நடைபெற்ற கூட்டத்திற்கு தலைமை தாங்கிப் பேசும் போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தப் பணிப்புரையை விடுத்ததாக தேசிய கொள்கை மற்றும் பொருளாதார அமைச்சின் ஆலோசகர் சுதர்ஷன குணவர்த்தன தெரிவித்தார்.
சிறிலங்கன் விமான சேவை கட்டணங்களைக் குறைத்தால் மற்றைய விமான சேவைகளும் கட்டணங்களை குறைக்க வேண்டியிருக்கும். அத்துடன் விமான எரிபொருள் கட்டணம் அடுத்த ஆறு மாதங்களுக்குள் குறைக்கப்பட வேண்டும் என்றும் பிரதமர் மேலும் கூறினார். இதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி விமான சீட்டுக் கட்டணங்களை குறைக்கவும், எரிபொருள் செலவை மாற்றியமைக்கவும் இணக்கம் காணப்பட்டது. அத்துடன் மறுசீரமைத்து அதனை 40 அமெரிக்க டொலர் என்ற அளவுக்கு கொண்டு வருவதென்றும் பரிந்துரை செய்யப்பட்டது. இது தொடர்பான அமைச்சரவை பத்திரமொன்றும் பிரதமரினால் விரைவில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
படை பலமும், அரசியல் இராஜதந்திரமுமம் உள்ள இனமும், நாடும் தப்பிப்பிழைக்கும் என்பதற்கு அண்மையா உதாரணமாக சிரியா விளங்கியது, அதாவது மேற்குலகத்தின் வன்முறைகளை முறியடிப்பதற்கு ரஸ்யா இருhணுவத்தின் துணையை நாடியதால் அமெரிக்காவின் “பேய்களின் கூட்டு” என்ற இனஅழிப்பு தத்துவத்தில் இருந்து சிரியா தப்பிக்கொண்டது.
அதனையே தற்போது ஈரானும் பின்பற்றுகின்றது. தனது பலத்தை தக்கவைப்பதிலும், மேற்குலகத்திற்கு எதிரான கூட்டணியின் கொள்கைகளை உள்வாங்குவதன் மூலமும் தனது நாட்டையும், மக்களையும் காப்பாற்ற முற்பட்டுள்ளது ஈரான்.
சிரியாவின் வழியை பின்பற்றி, ரஸ்யாவுடன் நெருக்கமான பிணைப்புக்களை ஏற்படுத்தியுள்ள ஈரான் தற்போது தன்னிடம் ரஸ்யாவின் அதிநவீன ஆயுதங்கள் உண்டு என்ற பீதியையும் அமெரிக்காவுக்கு ஏற்படுத்தியுள்ளது.
அதற்காகவே கடந்த 20 ஆம் நாள் அமெரிக்காவின் அதி நவீன உளவு விமானத்தை (Global Hawk) ஈரான் சுட்டுவீழ்த்தியிருந்தது. இந்த தாக்குதல் அமெரிக்காவுக்கு மிகவும் அதிர்ச்சிகரமானது, ஏனெனில் 65,000 அடிகள் உயரத்தில் பறக்கும் விமானத்தை புறஊதாக் கதிர் வெப்பத்தை நாடிச்செல்லும் சாதாரண ஏவுகணை மூலம் வீழ்த்த முடியாது.
எனவே தான் அமெரிக்க கடற்படை கப்பல்கள் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள நீரிணைகளைக் கடக்கும் போது இந்த உளவு விமானங்கள் அவற்றிற்கான பாதுகாப்பு கண்காணிப்புக்களை மேற்கொள்வதுண்டு.
சிரியாவில் மட்டும் கடந்த ஆண்டு 15 இந்கு மேற்பட்ட உளவு பணிகளை இந்த விமானம் மேற்கொண்டிருந்தது. அதனை வீழ்தமுடியாது என அமெரிக்கா நம்பியிருக்கலாம், ஆனால் அமெரிக்காவின் பிந்திய தயாரிப்பான எபஃ-35 ரக உருமறைப்பு தாக்குதல் விமானத்தை (F-35A Lightning II Joint Strike Fighter) விட (89 மில்லியன் டொலர்) அதிக பெறுமதியான இந்த உளவு விமானத்தை (123 மில்லியன் டொலர்) தன்னிடம் உள்ள எஸ்-300 என்ற ரஸ்யாவின் ஏவுகணை மூலம் ஈரான் வீழ்த்தியுள்ளது.
100,000 அடிகள் உயர தூரவீச்சுக்கொண்ட இந்த ஏவுகணை ரடார் மூலம் வழிநடத்தப்படுவதாகும். ஈரானின் இந்த துணிச்சலான நடவடிக்கை அமெரிக்காவின் போர்க் கனவை பின்தள்ளியுள்ளது. அதன் மூலம் ஈரான் மக்கள் பேரழிவில் இருந்து தற்போது தப்பிக்கொண்டனர்.
அதாவது ஒரு இனத்தின் அரசியல் தலைவர்கள் என்பவர்கள் தமது இனத்தை காப்பாற்ற வேண்டிய வழிமுறைகளைத் தேடவேண்டும். சிறீலங்காவின் தென்னிலங்கையைப் பொறுத்தவரையிலும் அதனை நாம் காணமுடியும்.
சிறீலங்காவின் அரசியல் வரலாற்றில் ஆட்சியில் இருந்த ஒவ்வொரு அரச தலைவர்களுக்கும் ஒவ்வொரு அரசியல் சாணக்கியம் உண்டு, ஜே. ஆர் ஜெயவர்த்தனாவின் அணுகுமுறை ஆர் பிரேமதாசாவின் அணுகுமுறையில் இருந்து வேறுபட்டது.
இராஜதந்திரம் என்ற அணுகுமுறையில் தமிழ் மக்களின் போரிடும் வலுவையும், தமிழ் மக்கள் மீதான ஒரு இனஅழிப்பையும் மேற்கொள்வதில் பிரேமதாசாவைவிட ஜே.ஆர் மிகவும் கைதேந்தவராக இருந்தார்.
அதேபோலவே தற்போது ரணிலின் அணுகுமுறையும் உள்ளது, மேற்குலகத்தின் ஆதரவைப் பெற்று அதிகாரமுள்ள பிரதமர் பதவியை கைப்பற்றிய அவர் தனது பதவி பல தடவைகள் அந்தரத்தில் தொங்கிய போதும் தமிழ் மக்களுக்கு எந்த சலுகைகளையும் வழங்க முன்வரவில்லை, மாறாக தமிழ்த் தலைமைகளின் ஆதரவைப் பெற்று அவர்களை ஏமாற்றுவதில் தொடர்ந்தும் வெற்றிபெற்றே வருகின்றார்.
தமிழர் தரப்பைப் பொறுத்தவரையில் தமது உரிமைகளுக்காக போரிட்டு உயிர்களைத்துறந்து, அதன் மூலம் தமிழ் மக்களின் இனப்பிரச்சனையை ஐக்கிய நாடுகள் சபைவரை கொண்டுவந்து, அனைத்துலக மட்டத்தில் ஒரு பேசும் பொருளாக்கி தமிழ் மக்களுக்கு ஒரு பேரம்பேசும் அரசியல் பலத்தை ஏற்படுத்தியிருந்தனர் விடுதலைப்புலிகள்.
ஆனால் அதனைகூட தமது பலமாகக் கருதி இனஅழிப்புக்கு உட்பட்ட ஒரு இனத்திற்கு தேவையான அடிப்படை உரிமைகளைக் கூட பெறமுடியாத இயலாமை அரசியலை மேற்கொண்டு வருகின்றது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. அதனைத் தான் நாம் தற்போது கல்முனைவடக்கு பிரதேச சபையினை தரமுயர்த்த மேற்கொண்ட போராட்டத்திலும் கண்டோம்.
1989 ஆம் ஆண்டில் இருந்து இந்த பிரச்சனை உள்ளதாக சிறீலங்கா அமைச்சரே ஒப்புக்கொள்கின்றார், அதனை தரமுயர்த்த வேண்டாம் என்ற முஸ்லீம் அமைச்சரின் கோரிக்கைக்கு ரணில் உடன்படுகின்றார், ஆனால் ரணிலுக்கு மனம்நோகக் கூடாது என்பதற்காக தமிழ் மக்களின் அடிப்படை உரிமையை கூட கைவிட்டுவிட்டார் தமிழத் தேசியக் கூட்டமைப்பின் தலைவர், அவரின் போக்கை தட்டிக்கேட்க முடியவில்லை ஏனைய உறுப்பினர்களால். இது தான் தமிழ் தலைமைகளின் சாணக்கியம்.
போர் நிறைவடைந்து 10 வருடங்கள் கடந்த நிலையிலும், போரில் பாதிக்கப்பட்ட மக்களின் அடிப்படை அரசியல் தேவைகளை நிறைவேற்றவோ அல்லது வேறு வடிவங்களில் சிறீலங்கா அரசு தொடர்ந்து மேற்கொள்ளும் இனஅழிப்புக்களில் இருந்து இனத்தைக் காப்பாற்றவோ தமிழ் அரசியல்வாதிகளால் முடியவில்லை.
இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச் செயலாளர் பான் கீ மூனினால் அமைக்கப்பட்ட நிபுணர் குழுவில் அங்கம் வகித்த ஒருவருடன் அண்மையில் உரையாடும் சந்தர்ப்பம் கிடைத்தது. பத்து வருடங்களாகியும், எமது மக்களின் துயரங்கள் விலகவில்லை, அரசியல் கைதிகளைக் கூட விடுவிக்க முடியவில்லை என்று தெரிவித்த போது, அவர் என்னிடம் கூறியது ஒன்று தான் அதாவது உங்களின் அரசியல்லாதிகளின் தவறுகள் இவை, அது மட்டுமல்லாது, அவர்களுக்கு வாக்களித்த மக்கள் கூட தமது அரசியல்வாதிகளிடம் கேள்விகள் கேட்பதில்லை என்று கூறியவர்.
ஒரு ஐந்து கோரிக்கைளை எழுதி அதனை அரசியல்வதிகள் நிறைவேற்றினார்களா? நிறைவேற்றவில்லை என்றால் அதற்கான காரணம், அதற்கான தடைகள் குறித்து மக்கள் தமது அரசியல்வாதிகளிடம் கேள்விகளை கேட்கவேண்டும் என மேலும் தெரிவித்தார்.
உண்மைதான், பிரித்தானியாவிலும், கனடாவிலும், அரசியல்வாதிகளிடம் மக்கள் கேள்வி கேட்பதனால்தானோ என்னவோ அந்த நாடுகளில் ஒரளவேனும் ஜனநாயகம் நடைமுறையில் உள்ளதுடன், அந்த மக்களும் தமது உரிமைகளுடன் வாழ்கின்றனர்.
போர் நிறைவடைந்து பத்து ஆண்டுகள் கடந்து விட்டது இன்றும் எமது மக்கள் தமது உரிமைகளுக்காக வடக்குக்கு பயணம் செய்யும் சிங்கள அரசியல்வாதிகளின் கால்களில் வீழ்ந்து கதறுகின்றனர்.
எமது மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும், தமிழ் இனத்தின் இருப்பை தக்கவைக்கவேண்டும் என இந்த பத்து ஆண்டு நிறைவிற்கு பின்னர் பல இனப்பற்றுள்ள ஆவலர்களும், இளம் தலைமுறையினரும் புறப்பட்டுள்ளனர். தாயகத்தில் உள்ள அரசியல்வாதிகளால் மட்டுமல்லாது, செயற்திறனற்ற புலம்பெயர் தமிழ் அமைப்புக்களாலும் தாம் ஏமாற்றப்படுவதாக அவர்கள் உணரத்தலைப்பட்டுள்ளனர்.
எனவே அவர்கள் தமது போரட்டத்தை யாருக்கு எதிராக எங்கிருந்து முதலில் ஆரம்பிக்கபோகின்றனர் என்பதை தெளிவாக தீர்மானிக்கவேண்டியது தருணமிது.
பொலிஸ்மா அதிபர் புஜித ஜெயசுந்தர, மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னான்டோ ஆகியோரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா பதில் பொலிஸ்மா அதிபர் சி.டி விக்ரமரத்னவிற்கு உத்தரவிட்டுள்ளார்.
ஏப்ரல் 21 தாக்குதல் குற்றவாளி சந்தேக நபர்களாக இவர்கள் இருவரும் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டதாலேயே இந்த உத்தரவை அவர் பிறப்பித்தார். இத் தாக்குதல் பற்றி இந்திய புலனாய்வுப் பிரிவு பிரதானிகள் எச்சரிக்கை விடுத்தும் இவர்கள் அதனை அலட்சியப்படுத்தியமையாலேயே இத்தாக்குதல் நடைபெற்றதாக இவர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
இத்தாக்குதல் தொடர்பாக பொலிஸ்மா அதிபர் இராஜினாமா செய்ய மறுத்தமையினால், பொலிஸ்மா அதிபர் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டார். இதற்கு எதிராக அவர் உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்திருந்தார்.