Home Blog Page 2745

கலிபோர்னியாவில் மீண்டும் நில நடுக்கம் – 5.4 ஆக பதிவு

கடந்த வியாழக்கிழமை (04) அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் ஏற்பட்ட மிகப்பெரும் நில நடுக்கத்தைத் தொடர்ந்து அதன் மறுதாக்கம் நேற்று (05) 5.4 அளவுக்கு பதிவாகியுள்ளது.

கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற நில நடுக்கம் 20 வருடங்களின் பின்னர் ஏற்பட்ட மிகப்பெரும் நிலநடுக்கமாகும். 6.4 அளவு பதிவாகியுள்ள இந்த நலநடுக்கதினால் சிலர் காயமடைந்துள்ளதுடன், எரிவாயுக்குழாய்கள் வெடித்ததனால் இரண்டு வீடுகள் தீப்பற்றியுள்ளன.

மக்கள் குடியிருப்புக்கள் குறைவாக உள்ள காட்டுப்பகுதியில் நில அதிர்வு இடம்பெற்றதனால் அதிக இழப்புக்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

28,000 மக்கள் தொகையைக் கொண்ட நகரத்தில் காட்டுப் பகுதிகளே அதிக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. வீதிகள் சேதமடைந்ததுடன், எரிவாயுக்குழாய்கள் வெடித்ததனால் காட்டுப் பகுதியில் பல இடங்களில் தீ பரவியுள்ளது.

1,875 சதுர மைல் பரப்பளவு கொண்ட பகுதிகளில் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிட்டு வருவதாக கலிபோர்னியாத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இராணுவத்தினர் கையகப்படுத்திய காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் – மாவை

இராணுவத்தினரால் யாழ்ப்பாணத்தில் கையகப்படுத்தப்பட்ட  பொது மக்களின் காணிகளை உடனடியாக விடுவிக்க வேண்டுமென கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா வேண்டுகோள் விடுத்துள்ளார். பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

30 ஆண்டுகளுக்குப் பின்னரும் யுத்தம் முடிவடைந்து 10 ஆண்டுகளின் பின்னரும் தமிழரின் நிலத்தை இராணுவம் கையகப்படுத்தியுள்ளது அநீதியான செயலாகும். இது சமாதானத்தை நிலைநாட்டாது.

குறித்த நிலங்களை விடுவிப்பதன் மூலமும், மக்களின் அரசியல் அபிலாசைகளை தீர்ப்பதன் மூலமுமே நாட்டில் அமைதி பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதனிடையே, சிறீலங்காவில் அரச தலைவர் தேர்தல் நடைபெறுவதற்கு ஏறத்தாள ஐந்து மாதங்களே உள்ள நிலையில் தமிழ் மக்களை ஏமாற்றி அவர்களின் வாக்குகளை தமக்கு விரும்பிய சிங்களத் தலைவருக்கு வழங்கி அதன் மூலம் சுயலாபம் ஈட்டுவதற்காக தமிழத் தேசியக் கூட்டமைப்பினர் தற்போது போராட்டம் மற்றும் தமிழ் மக்களின் உரிமை குறித்து அதிகம் பேசி வருவதாக மக்கள் கருதுகின்றனர்.

28 வருடங்களின் பின் நளினி பிணையில் வெளியில் வந்தார்

இந்தியா முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வந்த நளினி, ஒருமாத கால பிணையில் வெளியில் வந்துள்ளார். இந்தக் காலப்பகுதிக்கான பாதுகாப்பு செலவை இந்திய அரசாங்கமே பொறுப்பேற்றுக் கொள்ளும்.

லண்டனில் வசிக்கும் தனது மகள் ஹரிதாவின் திருமண ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக, தனக்கு 6 மாதகால பிணை வழங்குமாறு சென்னை உயர்நீதிமன்றில் நளினி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணைக்கு நளினியை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதில் சிக்கல்கள் உள்ளதென காவல்துறையினர்  தெரிவித்ததிருந்தனர். இருந்தும் இவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு நீதிபதி குழுவினர் அறிவித்தல் விடுத்திருந்தனர். இதற்கமைவாக இவரின் மனு மீதான விசாரணையின் போது, நளினி நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.

இவர் மீதான விசாரணை இன்று உயர்நீதிமன்றிற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, இவரின் பிணை கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டதையடுத்து, நளினி ஒரு மாதகால பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஊடகங்களை சந்திக்கக் கூடாது என்ற நிபந்தனையிலேயே இவர் பிணையில் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வட இந்தியர்களுக்கு ஒரு நீதியும், தென்னிந்திய தமிழ் மக்களுக்கு ஒரு நீதியையும் வழங்கிவரும் இந்திய அரசு தமிழ் இனத்தின் மீது ஒரு மறைமுக இனஅழிப்பு போரை நடத்தி வருவது நாம் அறிந்ததே.

முன்னாள் போராளிகள் பற்றி ஐ.நா. கவனம் எடுக்க வேண்டும்

முன்னாள் போராளிகளுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை (08) அன்று பயங்கரவாத குற்றத் தடுப்புப் பிரிவின் (TID) தலைமைக் காரியாலயத்தின் மூலமாக விசாரணைக்கான அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டதையடுத்து 05ஆம் திகதி காரைதீவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, முன்னாள் போராளிகளின் பாதுகாப்புகள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை கூடியளவு கவனம் செலுத்த வேண்டும் என முன்னாள் போராளிகள் கட்டமைப்பின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் வடிவேல் சசிதரன்  கேட்டுள்ளார்.

ரணில் – மைத்திரி மீதும் விசாரணை வேண்டும்: பொன்சேக்கா

சிறீலங்காவின் அரச தலைவர் மைத்திரிபால சிறீசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா மற்றும் முன்னாள் பாதுகாப்புத்துறைச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சா ஆகியோரை நாடாளுமன்ற தெரிவுக்குழு விசாரணை செய்யவேண்டும் என சிறீலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார்.

நேற்று (05) ஊடகவியலாளர்களுடன் கம்பக பகுதியில் இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சட்ட ஒழுங்கு தொடர்பாக பணியாற்றிய முன்னாள் அமைச்சர்களையும் விசாரணைக்கு அழைக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சிறீலங்காவின் தென்னிலங்கையில் தொடரும் அரசியல் நெருக்கடியினால் பல வன்முறைகள் ஏற்பட்டுவருவதுடன், கடந்த ஏப்பிரல் மாதம் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலுக்கும் இந்த அரசியல் நெருக்கடிகளே முக்கிய காரணமாக கருதப்படுகின்றது.

இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமானத் தளம்

இதுவரை விமானப்படையினரின் கட்டுப்பாட்டில் இயங்கி வந்த பலாலி விமானப்படைத் தளம் தற்போது  பொதுமக்கள் போக்குவரத்து செய்யக்கூடிய சிவில் விமானப்படைத் தளமாக இன்றிலிரு்து விளங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  போருக்கு முன்னரும் இந்த விமானப்படைத் தளம் சர்வதேச விமானப்படைத் தளமாக இருந்து வந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

இன்றைய நிகழ்வில் கலந்து கொண்டுள்ள சிவில் விமான சேவைகள் ராஜாங்க அமைச்சர் அசோக் அபயசிங்க தெரிவிக்கையில், பலாலி விமான நிலைய மையத்தினுள் வரும் அராலி – தெல்லிப்பளை  வல்லை வீதியின் ஒரு பகுதியை இராணுவத்திலிருந்து மீள பெற்றுத் தந்தால், அதை காப்பற் வீதியாக மாற்றியமைத்து, பொது மக்களின் போக்குவரத்திற்கு நன்மையளிக்கக் கூடியவாறு மாற்றித் தரமுடியும் என்று கூறினார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், இலங்கையில் இதுவரை இரண்டு சர்வதேச விமான நிலையங்களே இருக்கின்றன. இன்றிலிருந்து மூன்றாவது சர்வதேச விமான நிலையமாக பலாலித் தளமும் விளங்கும் என்று கூறினார்.

தென்னாசிய நாடுகளின் அடிப்படையில் தரமான விமானசேவை ஊடாக வருமானம் பெறுவதில் இலங்கை முன்னணியில் இருக்கின்றது.

நாட்டு மக்களின் போக்குவரத்திற்காக 2000 பேருந்துகளை கொள்வனவு செய்யவிருக்கின்றோம். இவற்றில் யாழ்ப்பாணத்திற்கு நான்கு பேருந்துகள் கொடுக்கப்படவிருக்கின்றன. மேலும் புகையிரத சேவைக்கு 12 இயந்திரங்கள் இந்தியாவிடம் கோரப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

 

சுற்றுலா தளமாகின்றது யாழ். மண்டைதீவு

யாழ்ப்பாணம், மண்டைதீவில் ஒரு பகுதி சுற்றுலாப் பயணிகளைக் கவரும் ஒரு வலயமாக்கப்படவுள்ளது. இதன்படி இங்குள்ள கரையோரத்தை அபிவிருத்தி செய்து, படகு சவாரி போன்றவற்றை ஒழுங்குபடுத்த திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.

முதலில் உள்ளுர் சுற்றுலாதாரிகளை அனுமதித்து, எதிர்காலத்தில் வெளிநாட்டு சுற்றுலாதாரிகள் இங்கு அனுமதிக்கப்படுவர். இதனால் ஆழம் குறைந்த யாழ்ப்பாணக் கடலநீரேரியிலுள்ள பவளப் பாறைகள், கடற்தாவரங்கள் மற்றும் மீனினங்கள் போன்றவற்றையும், குடாநாட்டின் இயற்கை வனப்பையும் கண்டு ரசிக்க முடியும் என சுற்றுலாத்துறை அதிகாரி ஒருவர் கூறினார்.

வை.கோ சிறை செல்ல வேண்டியிருப்பதால், மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவதில் சிக்கல்

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவிற்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் ஓராண்டு சிறைத்தண்டனை விதித்துள்ளது. கடந்த 2009இல் சென்னையில் நடைபெற்ற ஒரு புத்தக வெளியீட்டு விழாவில், விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதால், இந்திய இறையாண்மைக்கு எதிராக செயற்பட்டார் என குற்றஞ்சாட்டப்பட்டு சென்னை பொலிஸ் நிலையத்தில் தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

சென்னை அமர்வு நீதிமன்றில் நடைபெற்று வந்த இந்த வழக்கு, பின்னர் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றிற்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி ஜெ.சாந்தி முன்பாக விசாரிக்கப்பட்டு, இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

ஒரு வருட சிறைத் தண்டனையையும், 10 ஆயிரம் ரூபா அபராதமும் தீர்ப்பாக வழங்கப்பட்டது. அபராத தொகையை உடனே செலுத்திய வைகோ மேல்முறையீடு செய்வதற்கு 1மாத கால அவகாசம் வழங்கப்பட்டது.

எதிர்வரும் 18ஆம் திகதி நடக்கவிருக்கும் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட திமுக தரப்பில் மதிமுகவிற்கு ஒரு இடம் வழங்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் வைகோ போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

மக்களவை சட்டத்தின்படி ஒரு வழக்கில் தண்டிக்கப்பட்டவர் தண்டனைக்காலம் முடிந்து மேலும் 6ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது. எனவே வைகோ போட்டியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

 

 ஈழ அன்னையர்கள்தான் உலகின் பிக்பாஸ்கள் – தீபச்செல்வன்

இந்தியா மற்றும் தமிழகத்தைப் பொறுத்தவரையில் இங்கே தொலைக் காட் சிகள்தான் மக்களை கட்டிப் போடுகின்றன என்று தமிழக இதழியல் துறை பேராசிரியர் கோ. ரவீந்திரன் கூறுகிறார். ஒரு செய்தியை ஒரு தேவைக்காக உருவாக்கும் இந்த தொலைக் காட்சிகள், இன்னொரு செய்தியை உருவாக்கி, முதல் செய்தியை மறக்கடிக்கச் செய்கின்றன. தமிழகத்தைப் பொறுத்த வரையில் தொண்ணூறுகளின் இறுதிவரை முழுக்க முழுக்க சினிமாதான் ஆட்சி செய்து வந்தது. இப்போது தொலைக்காட்சிகள் மக்களை கட்டி ஆழ்கின்றன.   ஊடகத்துறை சார்ந்த வல்லுநர்கள் சுமார் அறுபது வருடங்களுக்கு முன் எச்சரித்த விடயங்கள் இன்றைக்கு தமிழகத்தில் நடந்தேறி வருவதுதான் இங்கே முக்கியமானது.

அமெரிக்கப் பேராசிரியரான வில்பர் ஸ்ராம், 1960களில் தன்னுடைய ஆய்வு ஒன்றில் தொலைக்காட்சி ஊடகத்தின் தாக்கம் குறித்து எச்சரித்திருந்தார். தொலைக்காட்சிகள் குழந்தைகளையும் இளைஞர்களையும் மிகவும் பாதிப்பதாகவும் அது அவர்களை முழுமையாக சீர்குலைக்கும் என்றும் அவர் எச்சரித்தார். இவை மனித தொடர்பாடலை பாதிக்கும் என்றும் ஊடகங்களை விமர்சனக் கண்ணோட்டத்துடன் அணுகுகின்ற கல்வி பள்ளிகளில் சிறு வயதிலிருந்தே தேவை என்றும் வில்பர் ஸ்ராம் போன்றவர்கள் அக்காலத்தில் பரிந்துரைத்தார்கள்.

சினிமா, ஊடகம், ஊடக கல்வி என பல்வேறு கற்கைகளும் உரையாடல்களும் நடக்கக்கூடிய தமிழகத்தில் இன்றைக்கு தொலைக்காட்சிகளின் ஆதிக்கம் தலை தூக்கியுள்ளது. ஆதிக்கம் செய்கின்ற இந்த தொலைக்காட்சிகள்தான் தமிழக மக்களின் எளிய பிரச்சினைகளிலிருந்து கவனத்தை திசை திருப்புகின்றன. தமிழகத்தின் எத்தனையோ பிரச்சினைகள் வெளித் தெரியாமல் அடிபட்டுப் போகின்றன. இரகசியங்களாக இருளில் மறைந்து போகின்றன. இத்தகைய ஊடக ஆதிக்கத்திற்கு மத்தியில்தான் அங்கு கடுமையான பாலியல் வன்புணர்வுகளும் நடக்கின்றன.

ஈழத்திற்கும் தமிழகத்திற்கும் நெடுங்காலத் தொடர்புண்டு. ஈழத்தைப் பொறுத்த வரையில், தமிழகத்தின் நிலவரங்களை செய்தியாக வெளியிடுவதில் ஈழப் பத்திரிகைகள் மிக முக்கிய இடத்தை வழங்குகின்றன. தமிழக செய்திகள் என்றும் இந்திய செய்திகள் என்றும் தனியான பக்கங்களே ஒதுக்கப்படுகின்றன.

இந்தியாவிலும் தமிழகத்திலும் ஏற்படும் முக்கிய மாற்றங்கள் ஈழ ஊடகங்களின் தலைப்புச் செய்தியாக அமைகின்றன. தமிழீழ விடுதலைப் புலிகள் ஒளிபரப்பிய தமிழீழ தேசியத் தொலைக்காட்சி மற்றும் புலிகளின் குரல் வானொலி ஆகியற்றிலும் இந்திய, தமிழக செய்திகள் முக்கியத்துவம் பெற்றிருந்தன. இப்போதும் இலங்கையின் தமிழ் தேசிய நாளிதழ்களில் வாரம் தோறும் இந்திய நிலவரங்களின் மதிப்பீடுகள் முக்கிய இடத்தைப் பெறுகின்றன.

அத்துடன் இலங்கையின் இன்றைய தொலைக்காட்சிகள்கூட அவ்வாறே செயற்படுகின்றன. ஆசியாவில் முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்ட வானொலிச் சேவை இலங்கை வானொலி. ஊடகத்தில் ஈழம் எப்போதும் முன் உதாரணமான நாடுதான். ஆனால் இன்றைக்கு ஊடகம், சினிமா குறித்த தொழில் நகரமான சென்னையைக் கொண்டுள்ள தமிழகத்தின் ஊடக நிலைமைகள் பெரும் கவலை அளிப்பதாகவே உள்ளது. அதாவது மக்கள் ஊடகங்கள் என்பதிலிருந்து அவை விலகுகின்றன.hh  ஈழ அன்னையர்கள்தான் உலகின் பிக்பாஸ்கள் - தீபச்செல்வன்

அண்மைய காலத்தில் பிக்பாஸ் என்ற மெய்மை நிகழ்ச்சி ஒன்று பிரபல இந்திய தொலைக்காட்சி ஒன்றில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் தாக்கம் ஈழம் வரை பரவியிருக்கிறது. கடந்த காலத்தில் இந்த நிகழ்ச்சி முழு தமிழ் நாட்டையும் முழு உலக தமிழர்களையும் ஆக்கிரமித்திருந்தது. இம்முறை குறித்த தொலைக்காட்சி ஈழத் தமிழர்களையும் புலம்பெயர் தமிழர்களையும் தெளிவாக இலக்கு வைத்திருக்கிறது. கிளிநொச்சியில் பிறந்து திருகோணமலையில் படித்து, கொழும்பில் வளர்ந்த என்ற அடைமொழிகளுடன் சில போட்டியாளர்கள் அதில் கலந்து கொண்டுள்ளனர்.

கிளிநொச்சிக்கும் திருகோணமலைக்கும் ஒரு அடையாளமும் வரலாறும் இருக்கிறது. இப்போது இந்த நிகழ்ச்சிக்காக போட்டியாளர்களுக்கு இந்த மண்ணின் போரை வைத்து சமூக வலைத்தளங்களில் கவனங்களை கோரும் முயற்சிகள் இடம்பெறுகின்றன. உண்மையில் தமிழ் ஈழத்தைப் பொறுத்தவரையில் இங்கு எத்தனையோ பிரச்சினைகள். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தாய்மார்கள் விடும் கண்ணீர் ஒருபுறம். அரசியல் கைதிகளின் விடுதலைக்காக போராடும் குடும்பங்கள் மறுபுறம். நிலங்கள் ஆக்கிரமிப்பு, இராணுவ மயம். அரசியல் தீர்வின்மை என்று ஈழம் கொந்தளிப்போடு போராடிக் கொண்டிருக்கின்றது.

தமிழகத்தில் உள்ள சில அச்சு ஊடகங்கள் ஈழத்தின் இந்த நிலவரங்களைப் பற்றி பேசுகின்றன. சில தொலைக்காட்சிகள் அவ்வப்போது இந்த விடயங்கள் குறித்து சில விவாதங்களை நடத்தியுள்ளன. ஆனால், ஒன்றரை இலட்சம் மக்கள் கொல்லப்பட்டு, பல ஆயிரம் பேர் காணாமல் ஆக்கப்பட்டிருக்கும் இந்த தேசத்திற்கான மதிப்பு அவ்வளவுதானா? ஈழத்தில் நடந்தவைகள், இனி உலகத்தில் நடக்கக் கூடாதவைகள்.

எனவே இவற்றை உலக அளவில் எடுத்துச் செல்ல தமிழக ஊடகங்கள் பங்களிக்க வேண்டுமல்லவா? குறிப்பாக தொலைக்காட்சிகள் இந்தப் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டுமல்லவா? ஈழத்தில் லட்சம் பேர் கொல்லப்பட்டபோதும், தமிழக தொலைக்காட்சிகள் மானாட மயிலாட நிகழ்வுகளை நடத்திக் கொண்டிருந்தன. அன்றைக்கு இனப்படுகொலை குறித்த செய்தியை தமிழக மக்கள் அனைவருக்கும் கொண்டு சேர்க்க தவறியது. இப்போதும், ஈழ மக்களின் பிரச்சினைகள், கோரிக்கைகளை 24 மணி நேர ஒளிபரப்பில் ஒரு ஐந்து நிமிடம் ஒதுக்க முடியாதா? ஈழம் என்ற ஒரு நாடு இருக்கிறது. அங்கு எப்படியான பிரச்சினைகள் இருக்கின்றன? மக்கள் எப்படி வாழ்கிறார்கள்? எப்படி போராடுகிறார்கள்? என்ற நிலவரத்தை பேசினால், ஈழம் குறித்த தமிழக மக்களின் புரிதல் அதிகரிக்குமல்லவா?

இந்தப் பெரிய தமிழகம் இருந்த போதுதான் ஈழ இனப்படுகொலை நடத்தப் பட்டது. இன்றைக்கும் தமிழக மக்கள் அந்த குற்ற உணர்வுடன்தான் எங்களுடன் பேசுகின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சியை நடாத்துகின்ற குறித்த தொலைக்காட்சி, பாடல் போட்டி ஒன்றின்போது, விடை கொடு எங்கள் நாடே பாடலை பாட செய்கிறது. ஈழம் குறித்த கழிவிரக்கத்தை தேடி, தொலைக்காட்சி ஊடகப் போட்டியில் வெல்வதும், வர்த்தக ரீதியில் முன்னேறுவதும்தான் அதன் நோக்கம். இது குறித்து ஈழத் தமிழர்கள் மாத்திரமல்ல, தமிழக தமிழ்மக்களும் சமூக வலைத்தளங்கள் எங்கும் விமர்சனங்களை முன் வைத்திருக்கிறார்கள்.

தொலைக்காட்சி ஊடகங்கள் மாய சன்னங்களை உடம்பில் ஏற்றுபவை, ஊசி மருந்து குருதியுடன் கலப்பதைப்போல ஆக்கிரமிப்பவை என தொடர்பியல் கோட்பாட்டாளர்கள் சொன்னது தமிழக ஊடகங்களுக்கு நன்றாகவே பொருந்திப் போகின்றன. இன்றைக்கு அங்கிருக்கும் பிரேக்கிங் நியூஸே தமிழக மக்களை நோயாளிகள் ஆக்கக்கூடியவை. இதுபோன்ற மெய்மை நிகழ்ச்சிகளே மக்களை தனிமைப்படுத்தி சமூகயமாக்கலையும் வாழ்வு மற்றும் பண்பாட்டுப் பரிமாற்றத்தையும் முடக்குபவை.

ஊடகம் எதற்காக உருவாக்கப்பட்டதோ, அவைகளுக்கு எதிரானவையாக மாறிவிட்டன இந்த ஊடகச் சூழல். பிக்பாஸை பற்றிப் பேச வேண்டும் என்பதை ஒரு நிர்ப்பந்தமாக்குகிறது குறித்த நிகழ்ச்சியை நடத்தும் வணிகத் தொலைக்காட்சி. அது ஈழத்தின் கோடிவரை இன்று வருகின்றது. தமிழீழ மக்கள் ஒன்றைத்தான் வேதனையுடன் சொல்ல விரும்புகின்றனர். கமராக்கள் சூழ்ந்த ஒரு வீட்டில், நூறு நாட்கள் நடக்கிற பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பதைவிட திரும்பி ஈழத்தைப் பாருங்கள். ஆயிரம் நாட்களாக வெயிலிலும், மழையிலும் பனியிலும் இருந்து போராடுகின்ற எங்கள் அன்னையர்கள்தான் இந்த உலகின் பிக்பாஸ்கள். சுற்றிச் சுற்றி சிங்கள இராணுவக் கமராக்களின் மத்தியில் வாழ்வை போராட்டமாக்கியவர்கள்.

சிங்கள பௌத்த பேரினவாதத்தின் சூழ்ச்சிக்குள் தமிழினம் சிக்கக்கூடாது தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர் த. வசந்தராஜா

தமிழர் தாயகத்தில் சிங்கள, பௌத்த ஆக்கிரமிப்பை திட்டமிட்டு முன்னெடுத்துக் கொண்டிருக் கும் பேரினவாதம், முஸ்லிம்களை ஒடுக்குவதற்கு தமிழினத்தை பயன்படுத்த விளைகின்றது. இந்த சூழ்ச்சி மாயைக்குள் தமிழினம் சிக்கிவிடக்கூடாது என தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர் த.வசந்தராஜா இலக்குமின்னிதழுக்கு வழங்கிய விசேட செவ்வியில் கோரிக்கை விடுத்துள்ளார்.

கேள்வி:- கல்முனை உபபிரிவு தரமுயர்த்தப்படுத்துவதில் இவ்வளவு காலதாமதம் ஏற்படுவதற்கான காரணம் என்ன?

பதில்:- 1989ஆம் ஆண்டு கல்முனை வடக்கு உபபிரிவு உருவாக்கப்பட்டது. அதற்கு முன்னதாக கல்முனை மாநகரசபை பிரதேசசெயலகம் அனைத்து அதிகாரங்களையும் வளங்களையும் கொண்டு தரமுயர்த்தப்பட்டிருந்தது. இந்த மாநகரசபை நிருவாகத்தின் கீழ் தமிழர்கள், முஸ்லிம்கள் என கிட்டத்தட்ட 70ஆயிரம் பேர் இருந்தனர்.

இக்காலப்பகுதியில் இலங்கை முழுவதிலும் 28 உபபிரிவுகளை உருவாக்கும் செயற்றிட்ட மொன்று முன்னெடுக்கப்பட்டது. இதிலொன்றாக கல்முனை வடக்கு உபபிரிவும் உருவாக்கப்பட்டது. எனினும் இந்த உபபிரிவு முழுமையாக தமிழர்களை மையப்படுத்தி யிருந்ததாலோ என்னமோ அதற்கான காணி மற்றும் நிதி கையாளுகைக்கான அதிகாரம் வழங்கப்பட்டிருக்கவில்லை.

இந்நிலையில் தமிழர்கள் அன்றிலிருந்து இந்த உபபிரிவினை தரமுயர்த்தவேண்டும் என்று தொடர்ச்சியாக கோர ஆரம்பித்தார்கள். 1993ஆம் ஆண்டு மட்டக்களப்பினை சேர்ந்த கே.டபிள்யு. தேவநாயகம் என்பவர் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சராக இருந்தார். அவரின் அழுத்தம் காரணமாக உருவாக்கப்பட்ட 28 உபபிரிவுகளில் 27 இற்கு சகல அதிகாரங்களும் அளிக்கப்பட்டபோதும், கல்முனை வடக்கு உபபிரிவுக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டிருக்கவில்லை.

குறிப்பாக, சகோதர முஸ்லிம் இனத்தலைவர்கள் தமக்கிருந்த அதிகாரத்தினைப் பயன்படுத்தி கல்முனை வடக்கு உபபிரிவு தரமுயர்த்தப்பட்டாலும் அதற்கான நிதி, காணி அதிகாரங்களை பெற்றுக்கொள்வதற்கு இடமளித்திருக்கவில்லை.
முஸ்லிம் பிரதிநிதிகள் தொடர்ச்சியாக அனைத்து அரசாங்கத்திலும் அங்கம்வகித்து வந்திருந்த மையால் இந்த விடயத்திற்கு உரிய அழுத்தங்களை பிரயோகிக்க முடியாதவாறு மூன்று தசாப்தகாலமாக கல்முனை வடக்கு உபபிரிவு விவகாரம் நீடித்து வந்தது.

தமிழ் மக்கள் இந்தப்பிரிவினை தரமுயர்த்துவதற்காக எத்தனையோ முயற்சிகளை எடுத்திருந்தபோதும், எவ்விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருக்கவில்லை. தமிழ்மக்களை வழிநடத்திவருகின்ற தமிழ்த் தலைவர்கள் இந்த விடயத்தில் கூடிய அக்கறை காட்டியிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் போதிய அக்கறை காட்டியதாக தெரியவில்லை.

கேள்வி:- கல்முனை வடக்கு விவகாரத்தில் தமிழர்கள் எவ்வாறு பௌத்த தேரர்களின் ஆதரவினை பெறும் தீர்மானத்திற்கு வந்தார்கள்?

பதில்:- உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் முஸ்லிம்களுக்கு எதிரான மனநிலையொன்று உருவெடுத்திருந்தது. அத்துடன் முஸ்லிம்களை விடவும் சிங்கள மக்களுடன் வாழமுடியும் என்ற மனநிலைத் தோற்றம் சதாரண மக்கள் மத்தியில் ஏற்பட்டிருந்தது. இது உண்மையான நிலைமை என்று கொள்ள முடியாது விட்டாலும் சதாரண மக்கள் அவ்வாறான சிந்தனைக்குள் தள்ளப்பட்டிருகின்றார்கள்.

அத்துடன் தலதா மாளிகைக்கு முன்னால் அத்துரலிய தேரரின் உண்ணாவிரதம் முஸ்லிம் பிரதிநிதிகளை பதவிகளிலிருந்து இறக்கி வெற்றிகண்டிருந்தது. இத்தகைய பிரதிபலிப்புக்கள் எல்லாம் ஒன்றிணைந்ததன் காரணத்தால் தான் தமிழ் மக்கள் கல்முனை வடக்கு விடயத்தில், தேரர்களை நாடினார்கள்.

கல்முனை விகாரதிபதி ரன்முத்துகலவுடன் தமிழ் தரப்பினரும் ஏனைய மதத்தலைவர்களும் இணைந்து உண்ணாவிரதப்போராட்டத்தினை மேற்கொண்டார்கள். இதற்கு மட்டக்களப்பு உட்பட தமிழர் தாயகத்தின் அனைத்து பகுதிகளும் பூரணமான ஆதரவினையும் அளித்திருந்தன. தற்போது ஒரு மாத காலத்திற்குள் தீர்வு வழங்கப்படும் என்ற வாக்குறுதியின் அடிப்படையில் உண்ணாவிரதம் கைவிடப்பட்டிருக்கின்றது.

தமிழ்த் தலைவர்கள் இந்த விடயத்தினை முறையான அணுகுமுறை ஊடாக கையாண்டிருந்தால் எப்போதோ இப்பிரச்சினைக்கு தீர்வினைக் கண்டிருக்க முடியும். ஆனால் அவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கவில்லை.

குறிப்பாக, 2015 இற்கு பின்னரான காலத்தில் தமிழ்த் தரப்புக்கள் அரசாங்கத்துடன் பேசி இந்த சிறிய விடயத்திற்கு கூட சரியான தீர்வு அளிக்கவில்லையே என்ற மனவேதனை கிழக்கு தமிழ் மக்கள் மத்தியில் அதிகமாக உள்ளது.
அத்துடன் இத்தகைய மனவிரக்தியும், நம்பிக்கையீனமும் தான் பௌத்த தேரர்களை பயன்படுத்தியாவது தமது கோரிக்கையை சாதித்துக்கொள்வோம் என்ற மனநிலையை உருவாக்கியிருக்கின்றது.

கேள்வி:- கல்முனை தமிழ் பிரிவு விடயத்தில் தீர்வு பெறுவதற்காக தமிழ் மக்கள் பௌத்த தேரர்களை நோக்கிச் சென்றிருக்கின்றமையானது, தமிழர் தாயகத்தில் திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்டு வரும், பௌத்த சிங்கள மயமாக்கல் செயற்பாடுகளை தடுத்து நிறுத்துவதற்கு அல்லது அதற்கு எதிராக போராடுவதற்கு முட்டுக்கட்டையாக அமைந்துவிடாதா?

பதில்:- இந்த விடயத்தில் யதார்த்தமான கருத்துக்கள் இல்லாமலில்லை. கல்முனை விடயத்தில் தமிழர்களுக்கு ஆதரவாக பௌத்த தேரர்கள் செயற்படுகின்றார்கள். அப்படியிருக்கையில், தமிழ் மக்கள் சொல்லொண்ணாத்துன்பங்களையும், வலிகளையும் அனுபவித்து பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துக்கொண்டிருந்த தருணத்தில் அன்பு, இரக்கம், அமைதி போன்ற கோட்பாடுகளைக் கொண்டிருக்கும் பௌத்த தேரர்கள் இந்த நாட்டின் பிறிதொரு இனமும் சமத்துவமாக இருக்க வேண்டும் என்று கருதி நடவடிக்கைகளை எடுத்திருக்க முடியும்.