இராணுவத்தினர் கையகப்படுத்திய காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் – மாவை

இராணுவத்தினரால் யாழ்ப்பாணத்தில் கையகப்படுத்தப்பட்ட  பொது மக்களின் காணிகளை உடனடியாக விடுவிக்க வேண்டுமென கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா வேண்டுகோள் விடுத்துள்ளார். பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

30 ஆண்டுகளுக்குப் பின்னரும் யுத்தம் முடிவடைந்து 10 ஆண்டுகளின் பின்னரும் தமிழரின் நிலத்தை இராணுவம் கையகப்படுத்தியுள்ளது அநீதியான செயலாகும். இது சமாதானத்தை நிலைநாட்டாது.

குறித்த நிலங்களை விடுவிப்பதன் மூலமும், மக்களின் அரசியல் அபிலாசைகளை தீர்ப்பதன் மூலமுமே நாட்டில் அமைதி பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதனிடையே, சிறீலங்காவில் அரச தலைவர் தேர்தல் நடைபெறுவதற்கு ஏறத்தாள ஐந்து மாதங்களே உள்ள நிலையில் தமிழ் மக்களை ஏமாற்றி அவர்களின் வாக்குகளை தமக்கு விரும்பிய சிங்களத் தலைவருக்கு வழங்கி அதன் மூலம் சுயலாபம் ஈட்டுவதற்காக தமிழத் தேசியக் கூட்டமைப்பினர் தற்போது போராட்டம் மற்றும் தமிழ் மக்களின் உரிமை குறித்து அதிகம் பேசி வருவதாக மக்கள் கருதுகின்றனர்.