புலம் பெயர் தேசத்தில் பிரான்ஸ் நாட்டில் தலைநகர் பாரிசு (லாசப்பல்) பகுதியில் கறுப்பு ஜூலை 83 நிணைவூடல் பதாகைகள் கட்டப்பட்டு இருப்பதனை அவதானிக்க கூடியதாக உள்ளது.
அனைத்துலக சக்திகளின் நலன்களுக்கு துணைபோகும் அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் நேரம் வந்துள்ளது – பேராயர் மல்கம் ரஞ்சித் காட்டம்
ஈஸ்டர் ஞாயிறு தாக்குல் ஒரு அனைத்துலக சதி என்றும் அனைத்துலக சக்திகளின் நலன்களுக்கு துணைபோன சிறிலங்கா அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் நேரம் வந்துள்ளதாகவும் கத்தோலிக்க திருச்சபையின் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் வேண்டுகோள் தெரிவித் துள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களில் சேதமடைந்த நீர்கொழும்பு கடுவாப் பிட்டிய செபஸ்தியார் தேவாலயம் மறுசீரமைக்கப்பட்ட பின்னர் திறந்து வைக்கப்பட்ட நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இந்த வேண்டுகோளை விடுத்தார்.
குண்டு தாக்குதல்களை நடத்திய இளைஞர்கள் அனைத்துலக சதிகாரர்களால் பயன்படுத்தப்பட்டுள்ளனர். அனைத்துலக சக்திகளுக்கு உலகளாவிய முஸ்லிம் கள் பலியாகி விட்டனர்.
உலகெங்கிலும் அழிவுகளை உருவாக்க இஸ்லாமிய சித்தாந்தங்களைப் பயன்படுத்தும் சதிகாரர்களுக்கு எதிராக உலகளாவிய முஸ்லிம்கள் துணை நிற்க வேண்டும்.நிறைவேற்று அதிகாரத்துக்கும் நாடாளுமன்றத்துக்கும் இடையிலான மோதலின் விளைவாக பாதுகாப்பு சபை கூட்டங்களை நடத்த முடியவில்லை.
அரசியல் தலைவர்கள் குண்டு தாக்குதல்கள் குறித்து முன் எச்சரிக்கைகளை புறக்கணித்தனர். இதன் விளைவாக கிட்டத்தட்ட 300 பேர் கொல்லப்பட்டனர்.
ஐந்து நாடுகளால் கட்டுப்படுத்தப்படுவது தான் ஐ.நா. அவர்களின் நோக்கங் களை நிறைவேற்றுவதற்காக மட்டுமே அது உள்ளது. ஐ.நா.வை யாரும் நம்ப முடியாது.
குண்டுவெடிப்பினால் பாதிக்கப்பட்டவர்களை ஐ.நா. அதிகாரிகள் யாரும் பார்வையிடவில்லை. ஆனால் சர்ச்சைக்குரிய மருத்துவர் உட்பட தாக்கு தலுக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை மட்டுமே பார்வை யிட்டனர்.
இந்த நாட்டில் தலைவர்கள் துணிச்சலான முடிவுகளை எடுக்க பயப்படு கிறார்கள். அனைத்துலக சக்திகளை சுதந்திரமாக நடமாட அனுமதித்ததே இதற்குக் காரணம். என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐ.தே.க சனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச – நாடாளுமன்றக் குழுவில் பரிந்துரை
வரும் அதிபர் தேர்தலில் ஐதேக வேட்பாளராக சஜித் பிரேமதாசவை நிறுத்தும் யோசனையை ஐ.தேக நாடாளுமன்றக் குழு உறுப்பினர்கள் பலரும் நேற்று முன்மொழிந்துள்ளனர்.
இதையடுத்து, கட்சியின் வேட்பாளர் விரைவில் அதிகாரபூர்வமான தெரிவு செய்யப்படுவார் என ஐதேக தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
நேற்று நடந்த ஐதேக நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில், சஜித் பிரேமதாசவை வேட்பாளராக நிறுத்தும் யோசனை ஒன்றை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் முன்மொழிந்துள்ளனர் என்று தனது பெயரை வெளியிட விரும்பாத உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, ஐதேக தலைவரான பிரதமர் ரணில் விக்ரமசிங்க, கட்சியின் செயற்குழு மற்றும் நாடாளுமன்றக் குழு என்பன அதிபர் வேட்பாளர் குறித்து இறுதி முடிவை எடுக்கும் என்றும், அது அதிகாரபூர்வ முடிவாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
எனினும், நேற்றைய கூட்டத்தில், ஐதேக செயற்குழுக் கூட்டத்தையோ நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தையோ எப்போது கூட்டுவது என்று முடிவெடுக்கப்படவில்லை.
அதேவேளை கட்சியின் சில உறுப்பினர்கள் சஜித் பிரேமதாசவை அதிபர் வேட்பாளராக முன்மொழிந்துள்ளனர் என்று தெரிவித்த ஐதேக பொதுச்செயலர் அகில விராஜ் காரியவசம், ஏனையவர்கள் ஓகஸ்ட் 5ஆம் நாள் தேசிய ஜனநாயக கூட்டணி உருவாக்கப்பட்ட பின்னர் முடிவெடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர் என்று கூறினார்.
பிரித்தானிய பிரதமர் வாசல் தலத்திற்கு முன்பாக நடைபெற்ற கறுப்பு யூலை நினைவு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
இன்று பிரித்தானிய பிரதமர் வாசல் தலத்திற்கு முன்பாக தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற கறுப்பு யூலை நினைவு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்.
பத்து ஆண்டுகளைப் போலவே பதினோராவது ஆண்டும் கடந்து செல்லுமா?வேல்ஸ் இல் இருந்து அருஷ்
“இந்த நூற்றாண்டின் கறை” என்பது சீனா அரசு அங்கு வாழும் உகூர் இன முஸ்லிம் மக்கள் மீது மேற்கொண்டுவரும் மத ரீதியான துன்புறுத்தலாம். கூறுவது அமெரிக்காவின் வெளிவிவகாரச் செயலாளர் மைக் பொம்பியோ.
அமெரிக்காவின் வெளிவிவகாரச் செயலாளர் இந்த வாரம் இந்த கருத்தை தெரிவிக்கும்போது சிங்கள அரசின் ஆக்கிரமிப்புக்கு எதிராக அமைதியான வழிகளில் தமது காலாச்சார பாரம்பரிய இடமான கன்னியா வெந்நீர் ஊற்றினை மீட்கப் போராடிய தமிழ் மக்கள் மீது பௌத்த துறவிகளும், சிங்களவர்களும் கொதிக்கும் நீரை ஊற்றியுள்ளனர்.
அதாவது சீனா அரசு மேற்கொள்ளும் ஒவ்வொரு நடவடிக்கையையும் உன்னிப்பாக அவதானிக்கும் அமெரிக்காவுக்கு ஏனைய நாடுகள் அங்கு வாழும் சிறுபான்மை இனங்கள் மீது மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மட்டும் கண்ணில் தெரிவதில்லை. ஆனால் அமெரிக்காவின் எந்த அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்வதற்கு சீனா தயாராகிவிட்டது. எதிர்த்து நிற்பதன் மூலமே தாம் தப்பிப்பிழைக்க முடியும் என்பது, வரலாறு சீனாவுக்கு கற்றுக்கொடுத்த பாடம். எனவே தான் அமெரிக்காவின் எதிர்ப்புக்களையும் மீறி சிறீலங்காவின் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் கப்பல்களுக்கு எரிபொருள் நிரப்பும் நிலையத்தை அமைக்கத் திட்டமிட்டுள்ளது சீனா.
அதனை சினோபெக் என்ற எரிபொருள் நிறுவனம் ஒன்றின் ஊடாக மேற்கொள்வதன் மூலம் அரசியல் நெருக்கடிகளை தவிர்த்து பொருளாதார நிறுவனம் தொடர்பான நடவடிக்கையாக அதனை மாற்றி அமைத்துள்ளது சீன அரசு. இந்தியாவின் இந்தியன் அக்கோட் குழுமம் என்ற நிறுவனம் மேற்கொண்ட ஏறத்தாழ 4 பில்லியன் டொலர்கள் பெறுமதியான எரிபொருள் சுத்திகரிப்பு நிறுவனத்திற்குப் போட்டியாக சீனா தனது நிறுவனத்தை களமிறக்கியுள்ளது.
ஆனால் சீனாவின் திட்டத்தில் இரண்டு இலாபம் உண்டு, ஒன்று உலகில் பயணம் செய்யும் சரக்கு கப்பலிகளில் மூன்றில் இரண்டு பங்கு கப்பல்கள் இந்து சமுத்திர கடற் பிரதேசத்தை அம்பாந்தோட்டை துறைமுகம் ஊடாக கடந்தே செல்கின்றன. எனவே அவ்வாறு செல்லும் பெருமளவான கப்பல்களுக்கு எரிபொருளை வழங்குவதன் மூலம் வியாபாரத்தை பெருக்குவது, இரண்டாவது தனது முத்துமாலைத்திட்டத்தில் பயணிக்கும் தனது சரக்கு மற்றும் கடற்படைக் கப்பல்களின் எரிபொருள் விநியோகத்தை பாதுகாப்பதன் மூலம் தனது வழங்கல் பாதையை உறுதி செய்வது.
சிறீலங்கா விவகாரத்தில் சீனாவும் இந்தியாவும் தமக்கான இடங்களைத் தெரிவு செய்து தமது ஆளுமைகளை வலுப்படுத்தும் அதேசமயம், அமெரிக்கா அதன் முயற்சிகளில் முன்நகரமுடியாத நிலையிலேயே தற்போதும் உள்ளது.
தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனஅழிப்பை மனித உரிமை மீறல்கள் என்ற பதத்திற்குள் சுருக்கி அதனை கையில் எடுத்து தமிழ் மக்களை ஏமாற்றியது போல சிறீலங்கா அரசையும், இந்தியாவையும் ஏமாற்றுவதன் மூலம் சிறீலங்காவில் படைத்தளம் ஒன்றை நிரந்தரமாக அமைப்பதற்கு அமெரிக்கா மேற்கொண்ட முயற்சி இந்தியாவின் நேரடியற்ற எதிர்ப்பினால் அந்தரத்தில் தொங்கி நிற்கின்றது.
ஆனால் சீனா தனது அடுத்த நகர்வை சத்தமின்றி மேற்கொண்டுள்ளது. சீனாவின் நடவடிக்கைகளை கடுமையான எதிர்க்காத இந்தியா அமெரிக்காவின் நடவடிக்கைகளை தென்னிலங்கை அரசியல்வாதிகளின் ஊடாக வெற்றிகரமாக முறியடித்துள்ளது. 1987 களில் இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் மூலம் மேற்கொண்டது போன்ற ஒரு நகர்வையே இந்தியா தற்போது விரும்புகின்றது.
ஆனால் இந்த பூகோள நலன்சார் அரசியலில் தமிழ் இனத்திற்கான ஆதாயம் என்ன என்பது தான் பிரதான கேள்வி? நாம் எமக்கான தனித்துவத்தை இந்த பிரச்சனைக்குள் உள்நுழைக்க வேண்டும் என்றால் முதலில் அதற்கு பலமான அரசியல் தளம் எம்மிடம் இருக்க வேண்டும். ஆனால் அது தற்போது எம்மிடம் இல்லை.
தாயகத்திலும் புலத்திலும் அதற்கான ஏதுநிலை ஒன்று உருவாகுவதை சிறீலங்கா அரசு தனது புலனாய்வு அமைப்புக்கள் மூலம் சிதைத்துள்ளது. இந்த நடவடிக்கைக்கு தமிழ்க் குழுக்களையே அது பயன்படுத்தியும் உள்ளது. உதாரணமாக தற்போது மாற்று அரசியல் தளம் ஒன்று தமிழ் மக்கள் மத்தியில் உருவாகுவதை தடுப்பதிலும் தமிழ்க் குழுக்களே பின்னணியில் உள்ளன.
சிங்கள அரசு அதனைச் செய்யவில்லை. தாயகத்தில் தற்போது மக்கள் போராட்டம் மெல்ல மெல்ல உக்கிரம்பெற்று வருகின்றது. நீராவியடி பிள்ளையார் கோவிலிலும், கன்னியா வெந்நீர் ஊற்றிலும், காணாமல்போனவர்களின் உறவுகள் மேற்கொண்டுவரும் தொடர் போராட்டங்களிலும் அதனை நாம் காணலாம். ஆனால் அதனை சரியான வழியில் நகர்த்துவதற்கு பலமான அரசியல் அணி ஒன்று அவசியமானது. ஆனால் அதனை உருவாக்குவதில் தான் சிக்கல் தோன்றியுள்ளது.தற்போது சிறீலங்காவுக்கு சென்றுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அமைதியாக ஒன்று கூடுவதற்கான உரிமை தொடர்பான அதிகாரி கிளெமென்ட் நயாலெட்சோசி வூல் அவர்கள் தனது அறிக்கையை எதிர்வரும் ஜுன் மாதம் நடைபெறவுள்ள ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கவுள்ளார்.
சிறீலங்காவில் தமது உரிமைகளுக்காக சிறுபான்மை இனம் அமைதியாக ஒன்று கூடுவதற்குரிய சுதந்திரம் உள்ளதா என்பதை பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை கொண்டு அவருக்கு அறிக்கை மூலமாக விளக்கம் தர யார் முயற்சிகளை எடுத்துள்ளார்கள் என்பது தான் தற்போதுள்ள வினா?
அமைதியாக தமிழ் மக்கள் கூடும் இடங்களில் ஆயுதம் தரித்த சிங்கள இராணுவம் குவிக்கப்படுகின்றது, தமிழ் மக்கள் மீது சிங்கள மதகுருக்களும், சிங்களவர்களும் கொதிநீரை ஊற்றுக்கிறனர், தமிழ் மக்கள் செல்லும் பேரூந்துகளின் சக்கரங்களில் இருந்து காற்று பிடுங்கப்படுகின்றது. தமிழ் மக்கள் கூடுவதை தடை செய்யும் சிங்கள நீதிமன்றங்கள் அதே இடத்தில் சிங்களவர்கள் கூடுவதை அனுமதிக்கின்றது.
ஆனால் இவற்றை எல்லாம் அந்த அதிகாரியிடம் எடுத்துக் கூறுவதையோ, அல்லது அதிகாரியை பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் சந்திப்பதையோ சிறீலங்கா அரசும் அதனைக் காப்பாற்றத் துடிக்கும் தமிழ் அரசியல்வாதிகளும் அனுமதிக்கமாட்டார்கள். ஆனால் அதனையும் தாண்டி அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டியது தளத்தில் உள்ள சமூக அமைப்புக்களினதும், ஏனைய தமிழ்த் தேசியம் சார்ந்த கட்சிகளினதும் கடமை. அதனை நெறிப்படுத்தி, ஆலோசனைகள் மற்றும் உதவிகளை வழங்கவேண்டியது புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் புத்திஜீவிகளின் கடமை.
ஆனால் நாம் அதனை தவறவிட்டுவிட்டு, சிங்கள அரசினால் தனக்கு சாதகமாக பயன்படுத்தப்படும் அதிகாரிகள் ஐ.நாவில் சமர்ப்பிக்கும் அறிக்கைக்கு எதிராக ஐ.நா வாசலில் நின்று கோசம் போடுவதால் எந்த பலனும் கிட்டப்போவதில்லை, மாறாக பத்து ஆண்டுகள் கடந்து சென்றதைப்போல பதினோராவது ஆண்டும் கடந்து செல்லும் என்பதே யதார்த்தம்.
கறுப்புயூலை 1983 தமிழினப்படுகொலை : பிரித்தானிய பிரதமர் வாயிற்தளத்தில் நீதிகோரிய தமிழர்கள் !!
இலங்கைத்தீவில் தமிழர்கள் மீதான திட்டமிட்ட இனப்படுகொலைகளில் ஒன்றாகவுள்ள கறுப்புயூலை 1983 தமிழினப்படுகொலையின் நீதிகோரி, பிரித்தானிய பிரதமர் வாயிற்தளத்தில் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.
எதிர்வரும் யுலை 23ம் நாளன்று, கறுப்புயூலையின் 36வது ஆண்டு நினைவு வணக்க நிகழ்வுகள் உலகெங்கும் இடம்பெற இருக்கின்ற நிலையில், முன்னராக 21ம் நாளன்று நீதிகோரும் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றிருந்தது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஒருங்கிணைப்பில் முன்னெடுக்கப்பட்டிருந்த இந்த ஒன்றுகூடலில் பெருந்திரளானவர்கள் பங்கெடுத்திருந்தனர்.
காலம் பல கடந்து சென்றாலும் ஈழத் தமிழர் தேசத்தின் அரசியல் ஆன்மாவில் ஓர் பெரும் துயர வடுவாக நிலைத்திருப்பதோடு, என்ன விலை கொடுத்தேனும் அரசியல் சுதந்திரத்தை அடைந்தே தீர வேண்டும் என்ற பற்றுறுதியை தமிழர் தேசத்திடம் கறுப்பு யூலை நினைவுகள் விதைத்திருக்கின்றன என இக்கவனயீர்ப்பு போராட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்.பல்கலையில் தடைகளை மீறி கறுப்பு ஜூலை நினைவுகூரல்
1983 இல் தமிழினம் மீது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பு நாள் இன்றாகும்.
இதனை தாயகத்தில் மட்டுமன்றி உலகெங்கும் உள்ள தமிழர்கள் துயருடன் நினைவு கூறுகின்றனர்.
இந்தவகையில் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் தடைகளையும் மீறி இந்த நாளை பல்கலைக்கழக வளாகத்தில் நினைவு கூறுகின்றனர். இதனைத்தடுக்க சிறிலங்கா படையினர் அங்கு விரைவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
தன்னாட்சி – தற்சார்பு – தன்னிறைவே எமது தாரக மந்திரங்கள்
தன்னாட்சி – தற்சார்பு – தன்னிறைவே எமது தாரக மந்திரங்கள் என்று தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளரும் முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சருமான சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் கூட்டணியின் மட்டக்களப்பு மாவட்டப் பணிமனைத் திறப்பு விழா நேற்று மாமாங்கம் சோமசுந்தரம் சதுக்கத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு பணிமனையினை திறந்துவைத்த பின்னர் உரையாற்றுகையிலேயே விக்கினேஸ்வரன் இவ்வாறு கூறினார்.
இங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது;
மட்டக்களப்பில் தமிழ் மக்கள் கூட்டணி க்கு மக்கள் தொடர்பு பணிமனை ஒன்றை உருவாக்க உதவிய சகலருக்கும் முதற்கண் என்னுடைய நன்றியறிதல்கள் உரித்தாகுக. இது சம்பந்தமாக எமது நிர்வாகத்திற்குப் பொறுப்பான இணை உபசெயலாளர் சோமசுந்தரம் எடுத்துக்கொண்ட முயற்சிகள் பாராட்டப்பட வேண்டியவை. மாமாங்கப் பிள்ளையாரின் கொடி ஏறிமுடிய எமது கொடியும் ஏற்றப்பட்டுள்ளது.
அதாவது, எமது பணிமனை திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்நாள் தொடக்கம் தேவைகள் இருக்கும் எம்மக்களும் எம்முடன் சேர்ந்து அரசியலில் பயணிக்க விரும்பும் எம் மக்களும் இங்குவந்து எமது செயற்குழு அங்கத்தவர்களைச் சந்தித்துச் செல்லலாம். அவர்களுக்கு எம்மாலான உதவிகளை நாம் புரிய கடமைப்பட்டுள்ளோம்.
நிதி நெருக்கடிகள் இருந்தாலும் அவற்றை சமாளிக்கக்கூடியவர்கள் எமது கட்சி உறுப்பினர்கள். எமது உரிமைகளை மீட்டெடுப்பதற்காகப் பல தசாப்தங்களாக நாம் போராடி வருகின்றோம். சொல்லொண்ணாத் துன்பங்களையும் துயரங்களையும் தாங்கி மாபெரும் இனவழிப்புக்கு உள்ளாக்கப்பட்டு தொடர்ச்சியாக இன நீதி மறுக்கப்பட்டு சொந்த மண்ணிலேயே அடிமைகளாக வாழ்ந்து வருகின்ற துயர் நிலையைக் கொண்டவர்களாக நாம் வாழ்ந்து வருகின்றோம்.
ஆரம்ப காலங்களில் முஸ்லிம் சகோதரர்கள் எம்முடன் இணைந்தே போராடினார்கள். என்னுடன் சட்டக் கல்விபெற்ற அக்கால சட்டமாணவரான காலஞ்சென்ற மஷூர் மௌலானா ஒரு காலத்தில் தந்தை செல்வாவின் வலது கரமாக திகழ்ந்தார். நண்பர் அஷ்ரப்கூட தமிழரசுக் கட்சியுடன் சேர்ந்தே தமது அரசியல் பணியை ஆரம்பித்தார். இன்று எம்மிடையேயான ஒற்றுமை, புரிந்துணர்வு யாவும் தேய்ந்து வருகின்றதை காண்கின்றேன். சுயநலம் எம்மை பிளவுபடுத்தியுள்ளதைக் காண்கின்றேன்.
மூன்று தசாப்தங்களுக்கு மேலான தமிழர்களின் ஆயுதம் தழுவிய உரிமை மீட்புப் போராட்டம் 2009 மே மாதத்தோடு மௌனி க்கப்பட்டு இவ்வாண்டோடு பத்தாண்டு கள் நிறைவுபெறுகின்றன. இந்நிலையி லும் இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்ட முன்மொழிவுகள் முன்வைக்கப்படாமலும், இனப்படுகொலைக்கான நீதி, போர்க்குற்ற விசாரணை, வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கான நீதி, தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை, இராணுவத்தின் பிடியிலுள்ள காணிகள் விடுவிப்பு, போர் முடிந்து இராணுவத்தினர் வெளியேறுதல் போன்ற பல விடயங்களில் ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் சற்றேனும் கவனம் செலுத்துவதாகத் தெரியவில்லை.
தனிப்பட்ட நன்மைகள்
எம்மவரும் அதுபற்றி அரசாங்கத்திற்கு நெருக்குதல் கொடுக்க வேண்டும் என்ற மனோ நிலையில் இல்லை. தமது தனிப்பட்ட நன்மைகளையே தமது பதவிகளை வைத்து பெற்றுவர எத்தனித்துள்ளார்கள்.
இதன் விளைவாகவே கொள்கையில் உறுதியோடு, இன விடுதலையை முதன்மைப்படுத்தி, நீதியின் வழி நின்று செயலாற்ற தமிழ் மக்கள் கூட்டணி என்கின்ற கட்சியை நிறுவ வேண்டியது காலத்தின் கட்டாயமாகிற்று. உங்கள் அனைவரதும் அயராத உழைப்பும், ஒத்துழைப்பும், பொறுமையுமே எமது கட்சியை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்ல வல்லன.
மதிப்புக்குரிய மட்டக்களப்பு வாழ் மக்களே, வட கிழக்கு மாகாண தமிழ் மக்களின் உரிமைகளை வென்றடுப்பதற்கான தமிழ் மக்கள் கூட்டணியின் அரசியல், பொருளாதார, சமூக ரீதியான செயற்பாடுகளில் மட்டக்களப்பு மக்கள் முழுமையான அளவில் பங்குபற்றி எம்மை பலப்படுத்துவார்கள் என்று நான் நம்புகிறேன். எமது மக்களுக்கு எதிரான இனப்படுகொலை திட்டமிடப்பட்ட வகையில் மேற்கொள்ளப்பட்ட போதும் பீனிக்ஸ் பறவை போல புத்துயிர்பெற்று இன்றைய தமிழ் மக்களின் அரசியல் போராட்டத்தின் முதுகெலும்பாக எம் மக்கள் செயற்பட்டு வருவதைக்கண்டு நான் வியப்படைந்துள்ளேன்.
போராட்டங்கள் வீண்போகாது
பல வருடங்களாக வீதிகளில் நின்று எம் மக்கள் பற்றுறுதியுடன் மேற்கொண்டுவரும் பல்வேறு போராட்டங்களைக் கண்டுகொண்டுதான் இருக்கின்றேன். அத்துடன் கண்டு நான் உள்ளக்கிளர்ச்சி அடைந்திருக்கின்றேன். உதாரணத்திற்கு திருகோணமலையில் ஆளுநர் மாளிகைக்கு முன்பாக இன்றும் காணாமற்போனோரின் உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உங்கள் போராட்டங்கள் ஒருபோதும் வீண் போகாது. உங்கள் போராட்டங்களுக்கான எம்மாலான உதவிகளை வழங்கும் வகையிலும் உரிமைகளை வென்றடுப்பதற்கான எமது செயற்பாடுகளுக்கு உங்களின் உதவிகள் மற்றும் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளும் வகையிலுமே இன்று இந்தப் பணிமனை திறந்துவைக்கப்படுகிறது.
பல கஷ்டங்கள் மத்தியில் இந்தப் பணிமனையை திறந்துவைத்து எதிர்காலத்தில் சிறந்த முறையில் மக்கள் சேவை ஆற்றுவதற்கான பல்வேறு திட்டங்களை எம்மவர்கள் வகுத்திருக்கின்றார்கள்.
மட்டக்களப்பு மாவட்ட மக்கள் எமது இந்தப் பணிமனையுடன் இணைந்து எமது மக்களின் அரசியல், சமூக, பொருளாதார மற்றும் கலாசார ரீதியான அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவார்கள் என்று நான் எதிர்பார்க்கின்றேன். அத்துடன் இந்நிகழ்விலும், கட்சி சார் செயற்பாடுகளிலும், தமிழ்த் தேசியத்தைப் பலப்படுத்தும் பணியிலும் எம்மோடு பயணிக்க அனைவரையும் அன்புரிமையுடன் அழைத்து நிற்கின்றேன்.
ஐ.நா. மனித உரிமைகள் சபையின் தீர்மானத்தினை நிறைவேற்றாமல் பல்வேறு ஏமாற்று வழிமுறைகளை இலங்கை அரசாங்கம் கையாண்டு ஏமாற்றிவந்த நிலை யில் அவற்றுக்கு எதிராக தொடர்ச்சியாக உண்மை நிலைமைகளை எடுத்துக்கூறி எம்மக்கள் நேர்கொண்ட போராட்டங்களும் அரசியல் செயற்பாடுகளுமே ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் சில சாதகமான விடயங்கள் உள்ளடக்கப்படுவதற்கு காரணமாக அமைந்திருக்கின்றன.
இலங்கையில் என்ன நடைபெற்றுவருகின்றன, உண்மை நிலைமை என்ன, மக்களின் உணர்வுகள் என்ன என்பவை பற்றி எல்லாம் சர்வதேச சமூகத்துக்கு எட்டியிருக்கின்றது என்பதையே மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் எடுத்துக் காட்டுகின்றன.
ஐ.நா.வின் கோரிக்கை
அதாவது, போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நம்பகத்தன்மையான உள்ளக விசாரணை நடைபெறவில்லை என்பதால் போர்க்குற்றம் மற்றும் ஏனைய குற்றங்களில் ஈடுபட்டவர்களை விசாரணை செய்து வழக்கு தொடரும் நடவடிக்கைகளை உறுப்பு நாடுகள் மேற்கொள்ள வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகராலயம் தனது இலங்கை தொடர்பான அறிக்கையில் உறுப்பு நாடுகளுக்கு பரிந்துரைத்திருக்கின்றது.
சித்திரவதை, வலிந்து காணாமல் செய்யப்படுதல், போர்க்குற்றங்கள் அல்லது மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்கள் ஆகியவற்றை குறிப்பாக சர்வதேச நியாயாதிக்க கோட்பாடுகளுக்கு அமைவாக விசாரணை செய்து வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், இலங்கையில் மனித உரிமைகளை கண்காணிப்பதற்கும், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர், மனித உரிமைகள் சபை, மற்றும் ஏனைய மனித உரிமைகள் பொறிமுறைகள் ஆகியவற்றின் பரிந்துரைகளை நிறைவேற்றும் பொருட்டும் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அலுவலகம் ஒன்றை அமைப்பதற்கு இலங்கை அரசாங்கம் ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகத்துக்கு அழைப்பு விடுக்கவேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளது.
எமது தீர்மானம்
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழ் மக்கள் பேரவையில் ஒரு தீர்மானத்தினைக் கொண்டுவந்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் உட்பட சம்பந்தப்பட்ட பல தரப்புக்களுக்கும் நாம் அனுப்பிய தீர்மானத்தில் இந்த விடயங்களையும் உள்ளடக்கியிருந்தோம். இவை கவனத்தில் கொள்ளப்பட்டிருக்கின்றமை மகிழ்ச்சி அளிக்கின்றது. அவர்களின் இந்தப் பரிந்துரைகளை நாம் வரவேற்கின்றோம். அதேவேளை, இலங்கை விடயத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு கொண்டுசெல்லவேண்டும் என்றும் நாம் எமது தீர்மானத்தில் வலியுறுத்தி இருக்கின்றோம்.
அண்மையில் அமெரிக்க அரசாங்க அலுவலர்கள் என்னை சந்திக்க வந்தபோதும் நான் இதை வலியுறுத்தினேன். ஐ.நா மனித உரிமைகள் சபையின் தீர்மானத்தினை இலங்கை நிறைவேற்றுவதற்கு தவறி இருக்கும் நிலையில் இந்த விடயத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு கொண்டுசெல்லவேண்டியதன் அவசியத்தை சர்வதேச நீதிபதிகள் ஆணைக்குழுவும் சில வாரங்களுக்கு முன்னர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் வலியுறுத்தியுள்ளது.
இலங்கை விடயம் தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் சபை விசேட பிரதிநிதி ஒருவரை நியமனம் செய்ய வேண்டும் எனப் பல தமிழ்க் கட்சிகள் கூட்டாக வலி யுறுத்தியுள்ளன. ஆகவே எமது இந்த வலியு றுத்தல்கள் நடைமுறைக்கு வரும் வகை யில் இங்குள்ள தமிழ் மக்களும் புலம்பெயர் தமிழ் மக்களும் தமது அரசியல், ராஜ தந்திர செயற்பாடுகளை வகுத்து செயற் படவேண்டும்.
அரசாங்கத்திற்கு நெருக்குதல் கொடுப்ப தும் எமது நிலையை உலகறியச் செய்து எமது நாட்டின் தலைவர்களை வெட்கித் தலைகுனிந்து தம்மை மாற்றும் ஒரு சூழல் ஏற்படுத்துவதுமே எமது குறிக்கோளாக இருக்க வேண்டும்.
அத்துடன் கட்சி சார் செயற்பாடுகளிலும், தமிழ்த் தேசியத்தைப் பலப்படுத்தும் பணி யிலும் கொள்கை ஒருமைப்பாடு கொண்ட அனைவரையும் எம்மோடு பயணிக்க அன் புரிமையுடன் அழைத்து நிற்கின்றேன். தன் னாட்சி – தற்சார்பு – தன்னிறைவே எமது தாரக மந்திரங்கள் என்றார்.
இங்கிலாந்தின் புதிய பிரதமர் யார்?
இங்கிலாந்தைப் பொறுத்தவரை ஆளும் கட்சியின் தலைவர் பதவியில் இருப்பவரே, நாட்டின் பிரதமர் ஆவார். அதன்படி கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான போட்டி தொடங்கியது.
ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கான “பிரெக்ஸிட்“ ஒப்பந்தத்திற்கு எம்.பி.க்களின் ஆதரவை பெற முடியாததால், பிரதமர் தெரசாமே, கடந்த மாதம் பதவி விலகுவதாக அறிவித்தார்.
இதில் முன்னாள் வெளியுறவு மந்திரி போரிஸ் ஜோன்சனுக்கும், தற்போதைய வெளியுறவு மந்திரி ஜெரோமி ஹண்டிற்கும் இடையே நேரடி போட்டி நிலவுகின்றது. கன்சர்வேட்டிவ் கட்சியின் 1 இலட்சத்து 60 ஆயிரம் உறுப்பினர்களின் தபால் வாக்குகள் தான் கட்சியின் புதிய தலைவரை தீர்மானிக்க உள்ளது.
இந்த வாக்குச் சீட்டுக்களை திருப்பி அனுப்புவதற்கான கால அவகாசம் நேற்று மாலையுடன் முடிந்தது. இதையடுத்து இன்று (செவ்வாய்) வாக்குள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும். உடனடியாக பிரதமர் தெரசாமே, பக்கிங்ஹாம் அரண்மனைக்கு சென்று ராணி இரண்டாம் எலிசபெத்தை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்குவார். அதன் பின்னர் புதிய தலைவரை நாட்டின் பிரதமராக அங்கீகிக்கும் உத்தரவை ராணி பிறப்பிப்பார். இதையடுத்து புதிய பிரதமர் பதவியேற்பார்.
தேவதாசனின் உண்ணாவிரதம் நிறைவுக்கு வந்தது ; மனோ வாக்குறுதி
மகசின் சிறைச்சாலையில் நீர் கூட அருந்தாத நிலையில் இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பணிப்பாளரான கனகசபை தேவதாசன் என்ற 62 வயதுடைய நெல்லியடியைச் சேர்ந்த அரசியல் கைதி கடந்த 15 ஆம் திகதி முதல் உண்ணாவிரதம் இருந்து வந்த நிலையில் அவரது உண்ணாவிரதத்தை நீர் கொடுத்து அமைச்சர் மனோ கணேசன் நிறைவுசெய்து வைத்துள்ளார்.
புதிய மகசீன் சிறைச்சாலைக்கு அமைச்சர் மனோ கணேசனும் தமிழத் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமாக செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் இன்று காலை விஜயம் செய்திருந்தனர்.
இந்நிலையில் கடந்த 15 ஆம் திகதி முதல் குறித்த கைதி, தன்னை பிணையில் செல்ல அனுமதிக்க வேண்டும். அரசியல் கைதிகளின் விடுதலையைத் துரிதப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து அதிகாலை முதல் நீர்கூட அருந்தாமல் உண்ணாவிரதம் இருந்து வந்துள்ளார்.
கைதியின் உண்ணாவிரதத்தை நீர் ஆகாரம் கொடுத்து நிறைவுசெய்தபின்னர் அமைச்சர் மனோகணேசன் தெரிவிக்கையில்,
அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான அமைச்சரவைப்பத்திரத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு தயாரிப்பாதாகவும் இரு வாரங்களில் குறித்த பத்திரத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து, அரசியல் கைதிகளின் விடுதலைக்கான நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அமைச்சர் மனோகணேசன் தெரிவித்தார்.
இதேவேளை, கனகசபை தேவதாசனின் கோரிக்கைகள் தொடர்பில் தான் கவனமெடுப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
கோட்டை ரயில் நிலைய குண்டுவெடிப்பு சம்பவத்துடன் தொடர்பு கொண்டிருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் கனகசபை தேவதாசன் கடந்த 2008 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.
இவருக்கு எதிராக இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. ஒரு வழக்கில் ஆயுள் தண்டனையும், மற்றைய வழக்கில் 20 வருட கடுங்காவல் தண்டனையும் விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது.
இந்த இரண்டு வழக்குகளிலும் தனக்குத் தானே வாதாடியிருந்த தேவதாசன் தீர்ப்புக்களின் பின்னர், தனக்குரிய சாட்சிகளைத் தயார் செய்து முறைப்படி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்காக தன்னை பிணையில் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கோரி இரண்டு வழக்குகளுக்கும் எதிராக மேன்முறையீடு செய்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக உரிய சட்ட ஆலோசனையைப் பெறுவதற்காக நீதி அமைச்சின் அதிகாரம் வாய்ந்த அதிகாரி ஒருவரைச் சந்திப்பதற்கான அனுமதி கோரி கடிதங்கள் எழுதியிருந்த போதிலும், அதற்கு உரிய பதில் கிடைக்காத காரணத்தினால் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை அவர் முன்னெடுத்திருந்தார்.
ஆயினும் கைதிகளின் கடிதங்களை அனுப்புவது சிறைச்சாலை அதிகாரிகளின் வேலையல்ல எனக் கூறியுள்ள சிறைச்சாலை அதிகாரிகள், உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடும்படியும், மேன் முறையீட்டு வழக்கில் பார்த்துக் கொள்ளும்படியும் உண்ணாவிரதம் இருக்கின்ற தேவதாசனை வலியுறுத்தியிருந்தனர். ஆனால் அது தனது ஜனநாயக உரிமை என்று தெரிவித்து, அவர் தனது போராட்டத்தைக் கைவிடாது தொடர்ந்த நிலையில் குறித்த உண்ணாவிரத போராட்டம் இன்று நிறைவுக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.